Thursday, May 8, 2025
முகப்புசெய்திதாமிரபரணிக் கரையில் வால்கா : நெல்லையில் ரசியப்புரட்சி விழா !

தாமிரபரணிக் கரையில் வால்கா : நெல்லையில் ரசியப்புரட்சி விழா !

-

வம்பர் ரசிய புரட்சியின் நூற்றாண்டு விழா சிறப்பு கூட்டம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் செயல்படும் பு.மா.இ.மு. மற்றும் வி.வி.மு. சார்பாக பாளையம்கோட்டை ஏ.டி.எம்.எஸ். மகாலில் 07-11-2016 அன்று மாலை 4.00 மணி அளவில் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட பொறுப்பாளர் தோழர் சிவா வந்திருந்த அனைவருக்கும் நவம்பர் ரசிய புரட்சியின் நூற்றாண்டு விழா வாழ்த்துக்களை தெரிவித்து கூட்டத்திற்கு தலைமையேற்று தொடங்கி வைத்து தற்கால சூழலில் இந்த விழாவின் தேவை முக்கியத்துவம் குறித்து பேசினார்.

அறிமுக உரையாற்றிய மக்கள் அதிகாரம் தோழர் ஆதி உழைக்கும் மக்களுக்கு திருவிழா என்றாலே அது நவம்பர் புரட்சி தான் என்றும் அது ஒன்றுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்றும் நமது நாட்டில் தற்போது நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள், பாலியல் குற்றங்கள், டாஸ்மாக் போதை, காவல்நிலைய குற்றங்கள், நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் யோக்கியதைகள் ஆகியவற்றை விவரித்து இவற்றில் ஒன்றை கூட சரி செய்ய இயலாமல் இந்த அரசு கட்டமைப்பு தோற்றுவிட்டதையும் அதுவே மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டதையும் விவரித்த அவர் இவற்றை எல்லாம் ஒழித்துகட்டி ஒரு பூலோக சொர்க்கத்தை நடத்தி காட்டியதுதான் ரசிய நவம்பர் புரட்சியும் செஞ்சீனத்தின் கலாச்சார புரட்சியும் என்பதை சுட்டிகாட்டி நம்மிடம் உள்ள இந்த சீர்கேடுகளை சரிசெய்ய நாமும் ஒரு வர்க்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் வேறு மாற்று இல்லை என்று அறைகூவல் விடுத்தார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய ம.க.இ.க மாநில இணைச்செயலாளரும் மக்கள் அதிகார தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் காளியப்பன் நவம்பர் புரட்சி நாள் விழா ஏன் கொண்டாடபடுகிறது என்பதை ஆயிரக்கணக்கான கற்பனை கதைகளுக்காக போலித்தனமான  தத்துவங்களுக்காக கொண்டாடப்படும் தீபாவளி மற்றும் அநேக மத பண்டிகைகள் போல அல்ல இந்த விழா என்றும் நவம்பர் புரட்சி என்பது உலகம் முழுவதும் உள்ள மனித குலத்துக்கு கோடான கோடி உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு அவர்களுக்குரிய அதிகாரத்தை நிலைநாட்டிய நாள், மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுபுள்ளி வைத்த நாள், இந்த மண்ணில் தெய்வங்கள் படைக்க முடியாத சொர்க்கத்தை படைத்து காட்டிய நாள் என்றும் இது கற்பனை கதை அல்ல உண்மை வரலாறு என்றும் அந்த உண்மை வரலாற்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் அவர்  “இன்றைய எத்தியோபியா, சோமாலியா போன்ற நாடுகளின் வறுமையை போல அன்றைய ஜார் ஆட்சியில் ரசியா இருந்தது. அந்த மண்ணில் அன்றைய பாட்டாளி வர்க்கம் தோழர் லெனின் தலைமையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி சூழ்சிகள் சதிகளை முறியடித்து மக்களை ஆணாதிக்கம் சுரண்டல் வறுமை வேலையில்லா திண்டாட்டம் போன்ற சமூக தீமைகளை ஒழித்து ஒரு பூலோக சொர்க்கத்தை நடைமுறை படுத்தி காட்டினார்கள். அனால் இந்த உண்மையை மறைத்து முழு பூசணிகாயை சோற்றில் மறைப்பது போல திரும்ப திரும்ப கம்யுனிசம் தோற்றுவிட்டது என்று துரோகிகள் மூலம் தொடர்ந்து போதிக்கிறார்கள். புத்தர் தவமிருந்து பெற்ற பகுத்தறிவை அந்த சிந்தனையை மழுங்கடிக்கும் விதமாக இங்கு வரலாற்றை மாற்றி பொய்களும் அவதூறுகளும் தொடர்ந்து பரப்பபடுன்கின்றன.

சோஷலிச ரசியாவிலும் அநேக பிரச்சினைகள் இருந்தது, பஞ்சம் வந்தது ஆனால் அவை அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. குறுகிய காலத்தில் பல சாதனைகளை படைத்தது. அதன்பின் ரசியாவில் கோர்பசேவ் தலைமையில் வெளிபடையான சுதந்திரம் ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் கொண்டுவரப்பட்டது. என்ன நடந்தது? ஒழிக்கப்பட்ட லஞ்சம், ஊழல், வறுமை, விபச்சாரம், வேலையில்ல திண்டாட்டம் இவை எல்லாம் மீண்டும் வந்துள்ளது. தோற்றது கம்யுனிசமா முதலாளித்துவமா? என கேள்வி எழுப்பிய அவர் இன்று உலக முதலாளித்துவம் இன்று மீளமுடியாத நெருக்கடியில் உள்ளது. உலக வல்லரசான அமெரிக்கா அதன் சொந்த நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் உள்ளது. நமது நாட்டின் தலைநகரின் நிலைமை என்ன? மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அரசே உத்தரவிடுகிறது. கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு யார் காரணம். சுவாசிக்க முடியாத அளவிற்கு காற்றை யார் மாசுபடுத்தியது. முதலாளித்துவத்தின் லாப வெறி, நுகர்வு வெறி இதுதான் காரணம்.

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வந்தால் ஆக்சிஜன் சிலிண்டரையும் எடுத்து வருகிறார். பெண்கள் இன்று வாழ தகுதி இல்லாத நாடாக இந்தியா மாறிவருகிறது. மனித மாண்பை சீரழிக்கும் அநேக போதைகளை அரசு தொடர்ந்து மக்கள் மீது திணிக்கிறது. டி வி சீரியல்கள் விளம்பரங்களில் பெண்களை போதைபொருளாக சித்தரிப்பது, கல்யாண ஆடம்பரம், நகைக்கடை விளம்பரம்,  பெண்கள் சேலைகளை அதிகமாக வாங்கி குவிப்பது, செல்போன் இல்லையென்றால் அவன் மனிதனே இல்லை என்ற நிலைமை, இந்த தகவல் தொடர்பு யுகத்திலும் அருகாமை மனிதனோடு தொடர்பே இல்லாமல் இருப்பது, சினிமாவில் மலரினும் மெல்லிய காமத்தை காமவெறியாக மாற்றி பெண்களை ஆண்களின் அனுபவ பண்டமாக சித்தரிப்பது என எல்லா விதங்களிலும் நுகர்வு கலாச்சார வெறி திணிக்கப்படுகிறது.  இந்த நுகர்வு கலாச்சார வெறி ஏராளமான சீரழிவுகளை உருவாக்கியுள்ளது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே நுகர்வு வெறியை அடிப்படையாக கொண்டது. பி.ஜெ.பி., ஆர்.எஸ்.எஸ். இன் பொது சிவில் சட்டம், யோகா, சமஸ்கிருதம், புதிய கல்வி கொள்கை, பகுதரிவளர்கள் படுகொலை, ராமாயணம் பொய் என்றால் தாக்குவது இவை எல்லாம் மனிதன் சிந்திக்ககூடாது என்பதற்காக மனிதனுக்கு பகுத்தறிவு கூடாது என்பதற்காக ஏவப்படும் போதை வன்முறை. மனிதன் சிந்திக்க கூடாது என்பதுதான் இவர்களின் திட்டம். முதலாளிகளின் திட்டம். இந்த பூமியை மனிதகுலம் நிம்மதியாக மனித மாண்போடு வாழ தகுதி இல்லாத இடமாக இந்த முதலாளித்துவம் மாற்றிவிட்டது. தனி சொத்துடமையை பொது உடைமையாக மாற்றும் பொது மட்டும் தான் இந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியும். சுரண்டல் இல்லாத ஏற்ற தாழ்வு இல்லாத சமத்துவ சமூகம் மலர முதலாளித்துவ சுரண்டலை ஒழிக்க வேண்டும். அதற்காக நாம் விரிவாக விரைவாக வேலை செய்ய வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார். விழாவில் புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டன. இறுதியில் வி.வி.மு. தோழர் சிவசக்தி நன்றி கூற விழாவில் கலந்து கொண்ட அனைவரும் முதலாளித்துவ சுரண்டலை ஒழித்து சமத்துவ சமூகம் மலர அனைவரும் பாடுபட வேண்டும் என்ற உணர்வை வலியுறுத்தி நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க