Saturday, May 3, 2025
முகப்புசெய்திஅம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை ? களச்செய்திகள்

அம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை ? களச்செய்திகள்

-

சென்னை சேத்துப்பட்டில் அண்ணல் அம்பேத்கரின் 60 வது நினைவு தினம் !

பார்ப்பனிய எதிர்ப்பு போராளி அண்ணல் அம்பேத்கரின் 60 வது நினைவு நாளில், சென்னை மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் சேத்துப்பாட்டு அம்பேத்கர் திடலில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து படர்ந்துவரும் பார்ப்பன பயங்கரவாதத்தை வீழ்த்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்விற்கு ம.க.இ.க கிளை செயலர் தோழர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

செயற்குழு தோழர் அஜிதாவும், கிளை தோழர் பாஸ்கரும் அம்பேத்கர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பிறகு அஜிதா உரையாற்றினார். அம்பேத்கர் நினைவு நாளன்று பா.ஜ.க பார்ப்பன பயங்கரவாத கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்டித்தரப்பட வேண்டும் என்பதையும், அதற்கான நியாயத்தையும் வலியுறுத்தினார். மேலும் அம்பேத்கரின் வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்களை குறிப்பிட்டார்.

பிறகு பார்ப்பனியத்தை வீழ்த்த அம்பேத்கர் கம்யூனிஸ்டுகளுக்கு எத்தகைய ஆயுதமாக திகழ்கிறார் என்பதையும், பார்ப்பன பாசிசம் ஆட்சியிலிருக்கும் இன்றைய சூழலில், நாத்திக எதிர்ப்பு மரபு கொண்ட தமிழகத்திலேயே கலவரங்களின் மூலம் காலூன்றத் துடிப்பதையும் குறிப்பிட்டு, இந்நிலையில் அவருடைய நினைவு நாளில் பார்ப்பனியத்திற்கு எதிரான ஆயுதமாக அம்பேத்கரை உயர்த்திப்பிடித்து நெஞ்சிலேந்தி பார்ப்பன பயங்கரவாதத்தை வீழ்த்த நக்சல்பாரிகளாகிய நாம் உறுதியேற்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பிறகு தோழர் இளவரசி முழக்கமிட அவருடன் இனைந்து பிற தோழர்களும் முழக்கமிட்டனர்.

முழக்கங்கள்

தீண்டாமைக்கு எதிராக,
சாதி திமிருக்கு எதிராக
வாழ்நாள் முழுவதும் போராடிய
அம்பேத்கரின் நினைவு நாளை
நெஞ்சிலேந்துவோம், நெஞ்சிலேந்துவோம்.

குரல்கொடுப்போம் குரல்கொடுப்போம்
பாபர் மசூதியை இடித்த இடத்தில்
மீண்டும் புதிய மசூதி கட்ட
குரல் கொடுப்போம், குரல் கொடுப்போம்.

காவிரியில் நீரில் தமிழகத்திற்கு
துரோகம் செய்தது
RSS,BJP.

கருப்பு பண ஒழிப்பின் பெயரில்
மக்கள் பணத்தை சூறையாடியது
RSS,BJP.

தமிழகத்தில் படர்ந்துவரும்
ஆரிய பார்ப்பன RSS, BJP
பயங்கரவாத கும்பலை
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
சென்னை. தொடர்புக்கு : 95518 69588.

_______________________________________

தஞ்சை அம்பேத்கர் நினைவு நாளில் கலவரத்தை நடத்தத்துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் !

குருவை, சம்பா, தாளடி, கோடைபயிர் என்று வளம் கொழித்த கீழத்தஞ்சை களை இழந்து காணப்படுகின்றது. விவசாயிகளின் சாவு அன்றாட செய்தியாகி எண்ணிக்கை இருபதைத் தாண்டிவிட்டது. நூறுநாள் வேலைத்திட்ட பணம் பட்டுவாடா செய்யப்படாமல் சாலை மறியல் போராட்டம் நடத்தித்தான் பணம்பெற வேண்டும் என்ற நிலை நிலவுகிறது மயிலாடுதுறையில். இந்நிலையில் அங்கே இந்து மதவெறிக்கு வித்திடுகிறார்கள் இந்துமுன்னணி பாசிஸ்டுகள்!

விவசாயத்திற்குக் காவிரி நீர் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது சாதிமதம், அரசியல் கட்சிகளைக் கடந்து கூலிவிவசாயிகள், சிறு விவசாயிகள் ஒற்றுமை தன்னியல்பாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்து முன்னணி வானரங்கள் பிள்ளையார் கரைக்க காவிரியில் நீர்விடு என்று கோரிக்கை வைக்கிறது.

தியாகி சிவராமன் பிறந்த மண்ணான ஜாம்பவான் ஓடை கீழத்தஞ்சை மாவட்ட பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்டுகளின் தலைமையிடமாகிக் கொண்டிருக்கிறது. முத்துப்பேட்டை வினாயகர் ஊர்வலம் அரசு இயந்திரத்தின் உதவியுடன் ஒவ்வொரு வருடமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. சிறுபான்மை மக்கள் சமமாக வாழும் பகுதியைத் தேர்ந்தெடுத்து கலவரத்தைத் தூண்டி விடுவது சங்க பரிவாரங்களின் செயல்உத்தி.

முத்துப்பேட்டைக்கு அடுத்து இப்போது மயிலாடுதுறையைக் குறிவைத்துத் தன் சதித் திட்டங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிருக்கிறது. வன்னிய சாதிவெறி தூண்டப்பட்டு,  புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தலையீட்டால் சாதிக் கலவரங்கள் தடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்டமக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

பாபர்மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் ஆறு நாளை கறுப்பு தினமாக மதவெறி நாளாகக் கடைபிடிக்கப்பட்டு பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளுக்குத் தற்போது அனுமதி மறுப்பு அதிகரித்து வருகின்றது.

தற்போது ‘டிசம்பர் ஆறு வெற்றித்திருநாள்’ என்று சுவரெழுத்து மயிலாடுதுறை நகரில் முளைத்திருக்கின்றன. இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் பகுதியைத் தேர்ந்தெடுத்து பார்ப்பன இந்து மதவெறியர்கள் குறிவைக்கிறார்கள். மாட்டுக்கறிப் பிரச்சனையை முன்வைத்துப் பள்ளர் சாதியினர் மத்தியில் அருந்ததியர், பறையர்கள், இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகப் பிளவு தூண்டப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அவாள்களின் வெறிக் கருத்து செல்லாத கிராமங்கள் இல்லை என்று கூறலாம்.

ஒருபுறம் இப்படி சாதி மதவெறியைத் தூண்டிவிட்டும் டிசம்பர் ஆறு அம்பேத்கர் நினைவுதினப் பேரணி – பொதுக்கூட்டம் என்று காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. பார்ப்பன இந்துமத வெறியின் எச்.ராஜா பேசப்போவதாக விஸ்வஹிந்து பரிசத் சார்பில் சுவரொட்டி நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.

முற்போக்குச் சிந்தனையாளர்கள் தலித் அமைப்புகள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். விஸ்வஹிந்து பரிசத் நடத்த இருக்கும் அம்பேத்கார் நினைவுநாள் பேரணி – பொதுக்கூட்டத்தைத் தடைசெய் என்று குரல் எழுப்பியுள்ளனர். தடைசெய்யப்படவில்லை என்றால் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். விஸ்வஹிந்து பரிசத்துக்கும் ஜனநாயக உரிமை உண்டு என்று பேசிய காவல்துறை இஸ்லாமியர்கள் நடத்திவந்த ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளது.

ஜெயலலிதாவின் மரண அறிவிப்புச் செய்தி வெளியிடப்பட்டதால் தற்காலிக அமைதி, சட்ட ஒழுங்கு மயிலாடுதுறையில் நிலைநாட்டப்பட்டுள்ளது. தஞ்சைமாவட்ட நவக்கிரக தளங்களுக்கும் மீத்தேன் வடிவில் ஏழரை மரணச்சனி பிடித்துள்ள மறுகாலனியாக்கச் சூழலையும், பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தையும் எதிர்த்துப் போராடுவது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

_______________________________________

பறிபோகுது சேலம் உருக்காலை ! பறித்தெடுக்குது பாசிச மோடி அரசு !!

சேலம் உருக்காலை போஸ்டர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க