Wednesday, January 20, 2021
முகப்பு வாழ்க்கை அனுபவம் மல்லையா குதிரையும் மாநகராட்சி பூங்காவும்

மல்லையா குதிரையும் மாநகராட்சி பூங்காவும்

-

ன்று ஞாயிற்றுக் கிழமை, மதிய நேரம். வேளச்சேரி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். மாநகராட்சி விளையாட்டுத் திடலில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். விளையாட்டுத்திடலின் பரப்பைப் பார்த்தவுடன் அதை படம் பிடிக்கத் தோன்றியது. அந்தப் படத்தைதான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.

படம்-ஒன்று
தன் குடிமக்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள விளையாட்டு திடல்.

முதல் படத்தில் விளையாட்டுத்திடலையொட்டிய மதில் சுவருக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை இரண்டாவது படத்தில் பாருங்கள்!

படம்-இரண்டு
மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சொந்தமான கிண்டி குதிரைப் பந்தைய மைதானம்.

இந்நிலம் கிட்டத்தட்ட 160 ஏக்கரில் பரவியுள்ள இந்த நிலம் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சொந்தமானதாகும். மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் அப்பல்லோ பிரதாப் ரெட்டி, செத்துப்போன எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார், அவரது தத்துப்பிள்ளை முத்தையா மற்றும் இந்தியாவில் உள்ள மேட்டுக்குடிகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எம்.ஏ.எம் ராமசாமிக்கு சொந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் இங்கு இருக்கின்றனவாம். எட்டாயிரம் கோடி ஏப்பம் விட்ட விஜய் மல்லையாவின் குதிரை கூட இந்த கிளப்பில் இருக்கிறதாம். சென்னையில் வசிக்கும் உழைக்கும் மக்களுக்கு, நகரின் மையப்பகுதியில் இவ்வளவு பெரிய இடம் குதிரைப் பந்தயத்திற்காக இருப்பது தெரியாது. ஏனெனில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் இது போன்ற கிளப் விளையாட்டுகளில் பங்கேற்றதில்லை. இந்த கிளப்பில் உறுப்பினராக சேரவேண்டும் என்றால் சந்தா மட்டுமே கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வருகிறது. மற்றபடி டாஸ்மாக்கில் காசைத் தொலைப்பது போன்று குதிரையின் மீது பந்தயம் கட்டி சூதாடித் தோற்கும் சில சூதாடிகளுக்கு இந்த நிலம் மிக பரிச்சயம். சென்னையைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள பிறபகுதியினர் இந்த நிலத்தை படிக்காதவன் படத்தில் என்னம்மா கண்ணு சவுக்கியமா பாடலில் பார்த்திருக்கலாம்.

பெரும்பான்மை மக்கள் அணுகமுடியாதபடி அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நிலம் யாருக்கு சொந்தம்? மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் உள்ள மேட்டுக்குடிகள் யாரும் வியர்வை சிந்தி உழைத்துப் பிழைக்கவில்லை. வயலுக்கு வரவில்லை; களை பறிக்கவில்லை. மக்களின் மக்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுக்கவும் இல்லை. ஆனால் நிலத்தை அனுபவிப்பவர்கள் இந்த மேட்டுக்குடிகள்! காலனி ஆட்சிக்காலத்தில் இந்த நிலம் வெள்ளைக்காரனுக்கு சொந்தமானதாக இருந்திருக்கிறது. அதற்கு முன்பு மன்னர்களிடம் இருந்திருக்கிறது.

மோடி அறிவித்த நவம்பர் 8 நடவடிக்கையைப் போன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பார்ப்பனியம் நால்வர்ணம் தர்மசாஸ்திரம் என்ற பெயரில் பார்ப்பனிய வேளாள நிலவுடமைச் சாதிகளைத் தவிர பெரும்பாலான மக்களை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டது. அப்பொழுதிலிருந்தே இந்த நிலத்தில் உழைக்கும் மக்களின் காலடித்தடம் உடமையாளனாக பட்டது கிடையாது. வெள்ளைக்காரன் தன் பொழுதுபோக்கிற்காக குதிரைப் பந்தயம் நடத்த இந்த நிலத்தைப் பயன்படுத்தியிருக்கிறான். வேல்ஸ் இளவரசர் ஏழாவது எட்வர்டு சென்னைக்கு வருகை தந்த பொழுது, மெட்ராஸ் ரேஸ் கிளப் எனும் மனமகிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளைக்காரன் இந்திய ராயல் வர்க்கத்தை எப்பொழுதும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டானாம். இந்த வருத்தத்தைப் போக்குவதற்காக இந்திய மேட்டுக்குடிகள் சென்னையில் காஸ்மாபோலிடின் கிளப்பை மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு இணையாக வைத்திருந்தார்களாம். 1947-இல் இந்தியாவிற்கு போலி சுதந்திரம் வழங்கப்பட்ட பொழுது அதிகாரம் வெள்ளைக்காரனிடமிருந்து இந்த தரகு முதலாளிகள் கும்பலுக்கு மாற்றப்பட்டது.

அரசு என்று மாய்மாலம் செய்த இந்தக்கும்பல் போலிசுதந்திரம் என்ற தந்திரத்தைக் காட்டி நிலத்தை மக்களிடமிருந்து முற்றிலுமாக பறித்துக் கொண்டது. ஆண்டுக் குத்தகை என்ற பெயரில் அஞ்சு பத்துக் காசுகளை மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு விட்டெறிந்திருக்கிறது. ஆனால் இதே மேட்டுக்குடிகள் 90-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கைகள் இந்தியாவில் புகுத்தப்பட்ட காலத்தில், பல ஏக்கர் நிலங்களை தரகுமுதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் விற்றிருக்கின்றனர். டி.எல்.ப் மற்றும் மகிந்திரே குரூப் நிறுவனங்கள் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடமிருந்து 200 முதல் 300 கோடி கொடுத்து நிலங்களை தங்கள் பெயருக்கு மாற்றியிருக்கின்றனர். அரசு இதைத்தான் தொழில் முதலீடு என்று நம்மிடம் போக்கு காட்டியது.

மக்களிடம் நிலம் பறிக்கப்பட்ட கதை வரலாற்றில் முந்தையது. ஆறுகளும், கனிமவளங்களும் இதே போன்று அரசின் சட்ட திட்டங்களால் கருப்பாக அல்லாமல் வெள்ளையாகவே தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய கும்பலுக்கு மடைமாற்றப்பட்டிருக்கிறது. இன்று மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு சொத்துவடிவமான ரொக்க கையிருப்பும் ஆளும் அதிகாரவர்க்கத்தால் களவாடப்பட்டிருக்கிறது.

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்ற கதையாக இந்த முறையும் மக்கள் சூறையாடப்பட்டிருக்கின்றனர். தற்பொழுது நவம்பர் எட்டு நடவடிக்கைப் பிறகு, கருப்புப் பணம் மற்றும் கடன் பத்திரங்கள் தொடர்பான விவாதங்கள், அரசு ஆளும் உறுப்புகளின் திருட்டு, மோடி பா.ஜ.க கும்பலின் அழுகுணி ஆட்டம், மேட்டுக்குடிகளின் வக்கிரம், பத்திரிக்கைகளின் மழுப்பலான மாய்மாலங்கள் என்று பலவற்றை பார்த்து வந்திருப்பீர்கள்.

இதோடு கூடவே சொத்து எப்படி பெரும்பான்மையின் கையிலிருந்து ஆகச்சிறும்பான்மையினரின் கைக்கு மாற்றப்படுகிறது; அதற்கு அரசின் அத்துணை உறுப்புகளும் மக்களுக்கு எப்படி எதிராக திரும்பியிருக்கின்றன? மக்களை எப்படி ஈவு இரக்கமின்றி இரத்தக் கவுச்சியுடன் சூறையாடுகின்றன என்பதைப் பரிசீலியுங்கள். அதற்கு நடைமுறையில் பணபறிப்பு என்ற அனுபவமும், நிலப்பறிப்பு என்ற வரலாறும் நம் கண்முன்னே இரத்த சாட்சியாக நிற்பதைக் கவனிக்கலாம்.

அரசு தன் குடிமக்களுக்கு ஒதுக்கியிருக்கும் விளையாட்டிற்கான நிலத்தையும் நவம்பர் எட்டாம் தேதி மோடி நாட்டின் 86% சதவீத பணப்புழக்கத்தை செல்லாது என்று ரத்து செய்ததையும் ஒப்பிட்டால் இந்த அரசு யாருக்கானது என்பது புரியும்.

அரசு, மக்களுக்கு வழங்கிய பணம் எனும் கடன்பத்திரம் செல்லாது என்று அறிவித்த பிறகு மக்கள் தங்கள் உடமையை இழந்து வங்கியையும் ஏ.டி.எம்மையும் தேடி நாயாக அலைக்கழிக்கப்படுகின்றனர். தான் சம்பாதித்த பணத்தை எடுப்பதற்கு உயிர், பொருள், ஆவி அனைத்தையும் விற்கவேண்டியிருக்கிறது.

மறுபுறத்தில் பாஜகவைச் சேர்ந்த சுரங்க ஊழல் பெருச்சாளி ஜனார்த்தன ரெட்டி 600 கோடி செலவில் தன் மகள் திருமணத்தை நடத்தியிருக்கிறார். சேகர் ரெட்டியிடம் முப்பது கோடிக்கும் மேலே புது இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் கத்தை கத்தையாக இருக்கின்றன.

கருப்புபணத்தை ஒழிப்பதாக சொன்ன இந்த நடவடிக்கை மக்களிடம் இருக்கும் கடைசி சொத்துவடிவமான பணத்தைப் பிடுங்குவதற்காகவே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை கண்கூடாக பார்த்துவருகிறோம். அதிகாரவர்க்கம், தரகுமுதலாளிகள், அரசியல்வாதிகளின் பணம் பத்திரமாக இருக்கிறது. சொல்லப்போனால் நவம்பர் எட்டு நடவடிக்கைக்கு முன்னேயும் பின்னேயும், இக்கூட்டத்தின் பணம் அனைத்தும் வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது. ‘இந்திய மக்களின் பணத்தை ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலிடம் ஒப்படைக்கிற வேலைதான் மோடி எடுத்திருக்கும் நடவடிக்கை’ என்று அறிவுஜீவிகள் இப்பொழுது அறிவுநாணயத்துடன் ஒப்புக்கொள்கிறார்கள் (ஜி.சம்பத், தி இந்து ஆங்கிலம், 14-12-2016). ஆனால் ஊடக செய்திகள் இதுவரை கருப்புப் பணம் என்றே பிலிம் காட்டிவருகின்றன.

அதிகார வர்க்கத்திடம் கத்தையாக கத்தையாக இரண்டாயிரம் ரூபாய் தாள் இருப்பதைப் பார்க்கிற பொழுது, அரசின் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை மட்டும் யோக்கியம் என்றும் அது கறாராக பிற அரசு உறுப்புகளின் ஊழல்களை கண்டுபிடித்துவிடும் என்ற மதிமயக்கத்தில் மக்கள் ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் மக்களிடம் இருந்து உடமையையும் உரிமையையும் அது நிலமாக, பணமாக எதுவாக இருந்தாலும் அபகரித்துக்கொள்ளும் நடவடிக்கையை அரசு எனும் ஒடுக்குமுறை கருவி கொண்டு கச்சிதமாக வரலாறு முழுவதும் நிறைவேற்றி வந்திருக்கிறது. அதற்கு ஓர் உதாரணமாகத்தான் வேளச்சேரி கங்கைநகர் விளையாட்டுத்திடல் இங்குபுகைப்பட ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. இந்த அரை செண்டு நிலம், மக்களிடம் இருக்கும் புது இரண்டாயிரம் ரூபாய் தாளுக்கு இணையாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது அரசு அதிகாரவர்க்கத்திடம் சிக்கியிருக்கும் பலகோடிக்கணக்கான இரண்டாயிரம் ரூபாய் தாளுக்கு இணையாக கடலளவு மலையளவு நிலமும் இருக்குமில்லையா?

இதில் நம்மிடம் இருக்கும் தீர்வு ஒன்றே ஒன்று தான். மோடி கும்பலின் பணபறிப்பு நடவடிக்கை எதிராக எப்படிப் போராடுவது, இதிலிருந்து எப்படி மீள்வது என்று கேட்பவர்கள் ஆகச் சிறும்பான்மையான தரகுமுதலாளிகள், மேட்டுக்குடிகள் (மெட்ராஸ் ரேஸ் கிளப் போன்றவை), ஆளும் அதிகார உறுப்புகள், பன்னாட்டு கம்பெனிகள் போன்ற கும்பலிடமிருந்து இதுவரை நம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட நிலம் முதற்கொண்டு பணம் ஈறாக அனைத்து உடைமைகளையும் முற்றாக பறிமுதல் செய்யும் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தைத் தொடுக்க வேண்டும் என்பதுதான் அது.

கம்யுனிசத்தில் மக்களின் சொத்துக்களை பிடுங்கிக்கொண்டுவிடுவார்கள் என்று இதுவரை முதலாளித்துவம் மரணபீதியுடன் பிரச்சாரம் செய்துவந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மார்க்சிய ஆசான்கள் கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதற்கு இப்படி பதில் அளிக்கிறார்கள்marx_1

தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்டும் எங்கள் நோக்கம் கண்டு நீங்கள் திகிலடைந்துள்ளீர்கள். ஆனால், இப்போதைய உங்கள் சமுதாயத்தில், மக்கள் தொகையில் பத்தில் ஒன்பது பங்கினரின் தனிச் சொத்துடைமை ஏற்கெனவே ஒழிக்கப்பட்டு விட்டது. ஒருசிலரிடம் தனிச்சொத்து இருப்பதற்கு ஒரே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கினரின் கைகளில் அது இல்லாமல் ஒழிந்ததுதான். ஆக, சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையினருக்கு எந்தச் சொத்தும் இல்லாத நிலையைத் தான் நிலவுதற்குரிய அவசிய நிபந்தனையாகக் கொண்ட ஒரு சொத்துடைமை வடிவத்தை ஒழிக்க எண்ணியுள்ளோம் என்று எங்களைப் பழித்துரைக்கிறீர்கள்.

சுருங்கக் கூறின், உங்களுடைய சொத்துடைமையை ஒழிக்க விரும்புகிறோம் என்று பழித்துரைக்கிறீர்கள். ஆம், அது மிகச் சரியே. உண்மையில் அதுவேதான் நாங்கள் எண்ணியுள்ளது.

உழைப்பை மூலதனம், பணம் அல்லது வாடகையாகவோ, ஏகபோகமாக்கிக் கொள்வதற்குத் தகுதியுடைய ஒரு சமூக சக்தியாகவோ இனி மாற்ற முடியாமல் போகின்ற கணம் முதற்கொண்டு, அதாவது, தனிநபரின் சொத்தினை முதலாளித்துவச் சொத்தாக, மூலதனமாக, இனி மாற்ற முடியாமல் போகின்ற கணம் முதற்கொண்டே [ஒரு தனிநபரின்] தனித்தன்மை மறைந்துவிடுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, ”தனிநபர்என்று நீங்கள் குறிப்பிடும்போது, முதலாளியைத் தவிர, நடுத்தர வர்க்கச் சொத்துடைமையாளரைத் தவிர, வேறெவரையும் குறிப்பிடவில்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். உண்மையில் இந்தத் தனிநபர் துடைதெறியப்படத்தான் வேண்டும்; இத்தகைய தனிநபர் உருவாக முடியாதபடி செய்யத்தான் வேண்டும்.”

– கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கை

– தமிழ்வேல்

 1. அரசாங்கமே அணைத்து நிலத்தையும் வைத்து கொள்ளும் என்பதன் அர்த்தம் அரசு அதிகாரிகளே அனைத்தயும் அனுபவிப்பார்கள் . பணம் இருந்தாலும் எதையும் வாங்கி அனுபவிக்க முடியாது . நல்ல இடத்தில உள்ள வீடு உங்களுக்கு தரப்பட வேண்டும் என்றால் அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தாக வேண்டும் .

  இந்தியாவில் ஜாதியை இதில் சேர்த்து கொண்டால் கம்யூனிச அரசு உடைமை எப்படி இருக்கும் என்பதை ஊகித்து கொள்ளலாம்

  • Vinavu quoted the live example for the cornering of land by the elites and how poor and middle class people are harassed due to note-ban.Since Mr Raman could not defend the exploitation,he tries to talk about an imaginary communist regime.Mr Raman,talk about India and not about your imaginary land.

   • //imaginary communist regime //

    அய்யா நீங்கள் தான் கற்பனை உலகத்தை சிருஷ்டித்து வைத்துள்ளீர்கள் .நான் கூறியது ரஷ்யாவில் நடந்தது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க