Sunday, January 17, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் மித்ரோன் மீம்களுக்கு பயப்படும் மோடி !

மித்ரோன் மீம்களுக்கு பயப்படும் மோடி !

-

மோடியின் கோணல் அறம் நம்மிலும் பிரதிபலிக்கிறது !

பிரதமர் நரேந்திர மோடியின் 2017 புது வருடப் பிறப்பு உரை, அவருடைய வழக்கமான உரைகளிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகான ஐம்பது நாட்களில் பெருமளவில் கேலிக்குள்ளாக்கப்பட்டு மீம்கள் ஆக்கப்பட்ட ‘மித்ரோன்’ (நண்பர்களே) எனும் வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அவருடைய உரைகளில் பெருமளவில் உபயோகிக்கப்பட்ட ‘மித்ரோன்’ எனும் வார்த்தை தற்போது, ஏளனச் சிரிப்பை உண்டாக்குகிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

modiபொதுமக்களின் மனநிலை குறித்து நன்கு புரிந்துவைத்திருக்கும் பிரதமர், வங்கி வரிசைகளிலும், பணத் தேவையால் தற்கொலை செய்தும் மரித்த நூற்றுக்கும் மேலான மக்கள் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியது. உயர்மதிப்பு பணத் தாள்களை தடை செய்ததால் ஏற்பட்ட பணப் பற்றாக்குறை காரணமாக வேலையிழந்த, வணிகங்களை இழந்த பலர் குறித்தும் பிரதமர் ஒரு வார்த்தையும் உதிர்க்கவில்லை.

சந்தேகமேயின்றி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் படும் துயர்குறித்து சில வார்த்தைகளை பேசத்தான் செய்தார். இருப்பினும், அத்துயரின் தீவிரத்தைக் குறைக்கும்விதமாக, “இக்காலத்தில், உங்கள் சொந்தப் பணத்தை பெறுவதற்காக, நீங்கள் வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டியிருந்தது” – என்பன போன்ற எளிய வரிகளைப் பயன்படுத்தினார். அதாவது, இந்தியர்களுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த துயர், தங்கள் சக்தியையும், நேரத்தையும் செலவழித்து வங்கிக் கணக்குகளை கையாண்டது மட்டும்தான்.

தன் டிசம்பர் 31 உரையில் ‘மித்ரோன்’ எனும் வார்த்தையை பயன்படுத்தாதது, இந்திய மக்கள் படும் துயரின் தீவிரத்தை குறைத்துக் காண்பித்ததன் வழியே மோடியின் மனதை நாம் கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது. அதிகாரம், அறம் குறித்து அவருடைய எண்ண ஓட்டம் எப்படியிருக்கிறது என்பதைப் படிக்க முடிகிறது.

மித்ரோன் எனும் வார்த்தையை பயன்படுத்தாதன் வழியே, அவர் நகைச்சுவையாக்கப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. ‘மித்ரோன்’ மீம்கள், சமூக ஊடகத்துக்கு உட்பட்டவை. அதை உருவாக்குபவர்களால் மோடியை தொடர்புகொள்ள முடியாது என நாம் நினைக்கலாம். ஆனால் மோடி, சமூக ஊடகத்தை தீவிரமாக கருத்தில் கொள்கிறார், அதற்கு கதையை மாற்றி எழுத வல்லமை இருப்பதாக நம்புகிறார். அவர் குறித்த நகைச்சுவைகளை தனிப்பட்டதாக எடுத்துக் கொள்கிறார்.

people-outisde-banks-in-queueபீஹார் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு இருக்கும் துணிச்சல் மோடிக்கு இல்லை. சினிமாக்களிலும், தொலைக்காட்சி நிகழ்வுகளிலும், அவரைப்போல தோன்றும் பஃபூன் பிரதிகள் குறித்து கேட்டதற்கு, “என்னால் அவர்கள் பணம் பார்க்கிறார்கள்” என, லாலுபிரசாத் யாதவ் பதிலளித்தார். லாலு, தான் தானாக இருப்பதில் சௌகர்யமாக இருக்கிறார் என்பதற்கு இது சாட்சி.

இதற்கு நேர்எதிராக மோடி, தன் உரையில் ‘மித்ரோன்’ எனும் வார்த்தையை உபயோகிக்காதது, மக்கள் தன்னை கடுமையானவராக கருத வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அவரைப் பார்த்து சிரிப்பதனால் – மதிக்கப்பட வேண்டிய, அஞ்சப்பட வேண்டிய ஒரு தலைவர் எனும் அவருடைய பிம்பம் உடைவதாக அவர் நினைக்கிறார். ஜவஹர்லால் நேரு சங்கரிடம் கேட்டதுபோல, மோடி ஒரு கார்டூனிஸ்ட்டிடம் தன்னை விமர்சித்து வரையக் கேட்க வாய்ப்பேயில்லை.

மோடி, சுயபிம்பம் குறித்து உணர்ச்சிவசப்படுகிறவராக இருப்பதன் காரணமாகவே, தன் கொள்கைகளின் பாதக விளைவுகளை ஏற்றுக் கொள்வதில்லை. அங்கேதான் அவருடைய விமர்சகர்கள் வலிமையடைகிறார்கள் என அவர் நினைக்கிறார். உதாரணமாக, தன் உரையில் “இந்தியர்கள், மக்கள் அதிகாரத்தின் வலிமையையும் தீவிர ஒழுக்கத்தையும் புயல்போல தவறான தகவல்கள் வெளியான வேளையிலும் உண்மையைக் கண்டறியும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என்றார். குறிப்பிடப்படும் புயல், அவருடைய அரசியல் போட்டியாளர்களாலும் விமர்சகர்களாலுமே கிளப்பிவிடப்பட்டதாக இருக்க வாய்ப்புண்டு.

அவர்களின் வாயை அடைக்கவும், தவறான தகவல்கள் மக்களை அசைக்கக் கூடாது எனும் நோக்கிலும், மோடி அடிக்கடி தேசப்பற்று உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவார். கருப்புப் பணத்தின் மீதான போரை, இந்தியா வெளியிலிருந்து தாக்குதல்களைச் சந்தித்த 1962, 1965, 1971 ஆண்டு, கார்கில் போருடன் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது, குடிமக்களின் ஒருமித்த வலிமை வெளிக்காட்டப்பட்டது என்றும் கூறினார். மேலும், “வெளியிலிருந்து அச்சுறுத்தல்களை சந்திக்கும்போது, இப்படியான ஒருமித்த ஆற்றலும் தேசப்பற்றும் வெளிப்படுவதை புரிந்துகொள்ளலாம். இருப்பினும், உள்ளிருக்கும் தீமைகளுக்கு எதிராகப் போராட இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் ஒன்றுபடும்போது, அதற்கு ஈடு இணை வேறெதுவுமே கிடையாது” என்றும் அவர் கூறினார்.

நாம் போரை நினைவுகூரும்போது, வழக்கமாக, போர்க்களத்தில் இறந்தவர்கள் குறித்து நினைப்போம். பணமதிப்பு நீக்கம், கருப்புப் பணத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போர் எனில், முதல் இரண்டு நாட்களில் உயிரிழந்தவர்கள்தான் வீரத் தியாகிகள். ஆனால் மோடி, அவர்கள் குறித்து பேச மறுத்திருக்கிறார்.

வெளியிலிருந்து ஒரு தேசம் தாக்கப்படும்போது, அதை எதிர்கொண்டு, தவிர்க்க முடியாமல் சில உயிர்களை தியாகம் செய்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆனால் இந்த தவிர்க்கமுடியாத மரணங்கள், “நாட்டுக்குள்ளிருக்கும் தீமைகளை” குறிப்பாக, கருப்புப் பணத்தை எதிர்த்த காரணத்தால் நிகழ்ந்தவை கிடையாது.

கருப்புப் பணத்துக்கு எதிரான போரில், தவிர்க்கமுடியாத மரணங்கள் நிகழ்வதனால், அவை குறித்து வருத்தம் தெரிவித்தால்கூட, மோடி தன் தவறுகளை மௌனமாக ஏற்றுக்கொள்கிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறானது அல்லது மிக மோசமாக அமல்படுத்தப்பட்டது என அர்த்தம் வந்துவிடும். இதனால், மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும்.

ஆனால் மன்னிப்புக் கேட்டால், தான் தொலைநோக்குப் பார்வை இல்லாதவர், நம்பத் தகுதியானவர் அல்ல என, அவர் ஏற்றுக்கொண்டதைப் போலாகிவிடுமே. தலைவன் என்பவனுக்கு என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றில் ஒரு சந்தேகமும் இருக்கக்கூடாது. அதற்காகவே அவன் போற்றப்படுகிறான். மோடி, தான் மிகச்சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைவர் எனும் பிம்பத்தைக் கட்டமைத்து – அதை வெற்றிகரமாக 2014 மக்களவை தேர்தல்களில் மக்களிடம் விற்றிருக்கிறார்.

தான் முதலமைச்சராக இருந்தபோது, 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இஸ்லாமிய எதிர்ப்பு கலகங்களுக்காக அவர் மன்னிப்பு கேட்காததற்கும் இதேதான் காரணம். கலகங்கள் குறித்த மௌனத்தை தகர்க்க நினைத்தபோதும்கூட, 2014 மக்களவை தேர்தல்களுக்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில், செய்தி ஏஜென்சி ஒன்றிடம், “வேறு ஒருவர் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். நாம் பின்னே அமர்ந்திருக்கிறோம். அப்போது, ஒரு நாய்க்குட்டி சக்கரத்தில் வந்து விழுந்தால், நமக்கு வேதனையாக இருக்குமல்லவா? நான் ஒரு முதலமைச்சரோ, இல்லையோ! நான் ஒரு மனிதன். எங்கேயாவது, ஏதாவது மோசமாக நடந்தால் நான் கவலைப்படுவது இயல்பானது” என்றுதான் கூறினார். ஆனால் அவர் வருத்தம் தெரிவித்ததனால், அவர் குஜராத் கலகத்தை கட்டுப்படுத்தாததற்கு பொறுப்பேற்றார் என்று அர்த்தம் கிடையாது.

2015ஆம் ஆண்டு, உத்திரப்பிரதேசம், தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதற்காக கொலை செய்யப்பட்ட மொஹமத் அக்லக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சில வார காலம் மௌனமாக இருந்த மோடி, ஆனந்த்பஸார் பத்ரிகா தினசரியிடம், “தாத்ரி போன்ற சம்பவங்கள் உண்மையில் துயரகரமானவை. ஆனால் மத்திய அரசுக்கு அதில் என்ன பங்கு இருக்கிறது” என்றுதான் தெரிவித்தார்.

ஆமாம். தாத்ரி சம்பவத்துக்காக முழுமையாக மோடி அரசை குற்றம்சொல்ல முடியாது. ஆனால் மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா அரசியல்தான், கும்பல் வன்முறைக்குப் பின்புலமாக இருந்தது. தன் சொந்த கட்சிக்காரர்களை வேற்றுப்படுத்தி விடுவோமா எனும் பயத்தில், பிரதமர் இந்துத்வா வெறியர்களை கண்டிக்காமல் இருந்திருக்கலாம்.

ஊனா எச்சரிக்கை

இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக ஊனாவில் தலித்துகள் தாக்கப்பட்டபோது, மோடி நேரடியாக களத்தில் இறங்கினார். “உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், உங்களுக்கு யாரையாவது தாக்க வேண்டும்போல இருந்தால் என்னை அடியுங்கள், என் தலித் சகோதரர்களை அல்ல” என கோஷமிட்டர். “உங்களுக்கு யாரையாவது சுட வேண்டும் என்றால், என்னைச் சுடுங்கள், என் தலித் சகோதரர்களை அல்ல” என முழங்கினார். மேலும் ஒருபடி மேலே சென்று, “போலி பசு ரட்சகர்கள் குறித்து கவனமாக இருங்கள். அவர்களுக்கும் பசுக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அரசு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இது நிச்சயமாக, பசு ரட்சகர்கள் மீதான மேலோட்டமான விமர்சனம்தான். அவர்களில் பெரும்பாலானோர், மோடியின் பாரதிய ஜனதா கட்சி இருக்கும், இந்துத்வா அமைப்புகளின் குடும்பமான சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள். அப்போதுவரை தங்கள் இலக்காக இஸ்லாமியர்களை வைத்திருந்த பசு ரட்சகர்களைக் கண்டிக்க, அவர்கள் தலித்துகளைத் தாக்கும் வரை ஏன் மோடி காத்திருந்தார் என்பது பலரின் கேள்வி.

அதற்கான பதில், எளிது: தான் பிரதமரானது முதலே தன்வசப்படுத்த நினைத்திருந்த தலித்துகளை சமரசப்படுத்த வேண்டும் என மோடி நினைத்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக, இஸ்லாமியர்கள் அவருடைய கட்சிக்கு வாக்களிப்பதில்லை. அதனால், அப்போது அறம்சார்ந்து இயங்க வேண்டிய தேவையை அவர் உணரவில்லை. மோடியின் அற உலகம், வாக்குகளை பெறுவதற்கும் அதிகாரம் பெறுவதற்கும் உகந்த கருவியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைப் பொருத்து, எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.

அதைவிட மோசமானது, இப்படியான அற உலகை நாம் தழுவியிருப்பது. உதாரணமாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மோடிக்கு தேர்தல் ரீதியாக வெற்றி கிடைக்குமா என ஊடகத்தில் பெரும் விவாதங்கள் நடந்தபடி இருக்கின்றன. மோடியின் வெற்றி என்பது, கடந்த 50 நாட்களில் நிகழ்ந்த மரணங்கள், இழந்த வேலைகள், மூடப்பட்ட நிறுவனங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும்போல் இருக்கிறது. மோடியின் கோணல் அறம், நம்மிலும் பிரதிபலிக்கிறது.

அஜாஸ் அஷ்ரஃப்

நன்றி: மின்னம்பலம் (தமிழாக்கம்), scroll.in மூலக்கட்டுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க