privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை !

ஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை !

-

ம்மா என அரிதாரம் பூசிக்கொண்ட கோமளவல்லி என்ற ஜெயலலிதா எப்படி இறந்தார், எப்பொழுது இறந்தார், எதனால் இறந்தார் என்பது அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், சசிகலா குடும்பம், நரேந்திர மோடி உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர, மற்ற அனைவருக்கும் மர்மமான புதிராகிவிட்டது. அதன் காரணமாகவே, அவரது மரணம் குறித்து சந்தேகங்களும், வதந்திகளும் இறக்கை கட்டிப் பறக்கின்றன. அதேசமயம், இந்த வதந்திகளுக்கு இணையாக, ஜெயா குறித்தும், அவரது ஆட்சி குறித்தும் அவிழ்த்துவிடப்படும் கட்டுக்கதைகளுக்கும் எந்தப் பஞ்சமுமில்லை.

சென்னை−ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயாவின் சடலம்.
சென்னை−ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயாவின் சடலம்.

தி.மு.க.வின் குடும்ப, வாரிசு அரசியலை அக்குவேறு ஆணி வேறாக அலசும் ஊடகங்கள், ஜெயா கட்சியிலும் பதவியிலும் திணிக்கப்பட்ட வரலாறை மறந்தும் எழுதுவதில்லை. ஜெயா, எம்.ஜி.ஆரோடு 20−க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் என்பதுதான் ஊர் உலகம் அறிந்த விடயம். ஆனால், எம்.ஜி.ஆர். இறந்தவுடன், தான் உடன்கட்டை ஏறப் போவதாக அறிவித்தார், ஜெயா. அவர், எம்.ஜி.ஆரின் சட்டபூர்வமான மனைவி இல்லை என்ற நிலையில் இந்த அறிவிப்பு உணர்த்தும் பொருள் என்ன என்பதை விளக்கத் தேவையில்லை.

இப்படிபட்டதொரு தகுதியை மட்டுமே கொண்டு கட்சிக்குள் நுழைந்த அவர், எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் அந்த ஒரே தகுதியைக் கொண்டே அ.தி.மு.க.வின் பொதுச்செயலர் ஆனார். ராஜீவின் சாவால் எழுந்த அனுதாப அலையைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.

தமிழகத்தைக் கொள்ளையிடும் உரிமை தனக்கு மட்டுமே உரியது என்ற தோரணையில், தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் எனத் தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். அவர் நடத்திய கொள்ளையை எதிர்த்தவர்கள் மீது அவதூறு வழக்குகள் உள்ளிட்ட அடக்குமுறைகளை ஏவிவிட்டார். இதன் காரணமாகவே தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, 1996, 2006 சட்டமன்றத் தேர்தல்களிலும் 2004 பொதுத் தேர்தலிலும் மண்ணைக் கவ்வினார்.

தேர்தலில் தோற்றாலும், ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டாலும், அவர் தனது மேட்டுக்குடி பொறுக்கித்தனத்தை மாற்றிக் கொண்டதேயில்லை. ஊழல்தான் நிர்வாகம், நிர்வாகம்தான் ஊழல் என ஆட்சி முறைக்குப் புதிய பொழிப்புரை எழுதியவர் ஜெயா.

ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி மாநில முதல்வராக முடியும் என்ற புர்ரட்ச்சசியை நடத்திக் காட்டியவரும் அவர்தான். முதலமைச்சர் பதவியில் இருந்தபோதே சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்ட முதல் முதலமைச்சரும் அவர்தான். நீதிபதிகளையும் விலைக்கு வாங்க முடியும் எனக் காட்டி, நீதித்துறையின் புனிதத்தைத் தோலுரித்துக் காட்டிய புர்ரட்ச்சித் தலைவியும் அவர்தான்.

தானே உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், மரபு ஆகியவற்றுக்கே எதிராகத் திரும்பித் தோல்வியடைந்து நிற்கிறது இந்திய அரசியலமைப்பு. இந்தத் தோல்வியின் எடுப்பான, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உதாரணமாக விளங்கியவர்தான் ஜெயா.

எனினும், பொறுக்கி அரசியலில் புதிய எல்லைகளைத் தொட்ட ஜெயாவைத் திறமைசாலி, துணிச்சல்காரி, சிறந்த நிர்வாகி என்று பார்ப்பனக் கும்பல் துதிப்பதற்கும்; ஜெயா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகள், அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த தி.மு.க. மேற்கொண்ட சதி என அக்கும்பல் உண்மையைத் திரித்துப் புளுகுவதற்கும், தமிழகத்தில் பெரியார் விதைத்துச் சென்ற பார்ப்பன எதிர்ப்பு மரபைத் துடைத்தெறிவதற்கு ஒரு பார்ப்பனத்தியே ஆயுதமாகக் கிடைத்தார் என்பதைத் தவிர வேறு காரணமில்லை.

கட்சி, அரசியல் உள்ளிட்ட பொதுவாழ்விலும், ஆட்சி நிர்வாகத்திலும் அந்தப் பார்ப்பன பீடை வளர்த்துவிட்டுச் சென்றுள்ள அருவருப்பான அலங்கோலங்களை நினைவுகூர்ந்தால், பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவின் மறைவுக்காகத் தமிழக மக்கள் அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை.

– செல்வம்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017