Thursday, January 28, 2021
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் விவசாயிகளை சாகவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசு - தோழர் காளியப்பன்

விவசாயிகளை சாகவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசு – தோழர் காளியப்பன்

-

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி …! காவிரியை தடுத்த மோடியும்,
ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள் !
இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல்செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !

என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களும் இளைஞர்களும் பெண்களும் ஜனவரி, 2017 மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். விவசாயிகளை நேரடியாக சந்தித்து தங்கள் முழக்கங்களை அவர்களுடையதாக்கினர். நம்முடைய இன்னல்களுக்கெல்லாம் காரணம் இந்த அரசுதான் என்பதை விளக்கினர்.

people-power-protest2டெல்டா மாவட்டத்தின் நகர்ப் பகுதிகளில் பம்பரமாய் சுழன்று 50ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரசுரங்களை விநியோகித்தனர். மரத்துப் போயிருந்த பலருக்கும் புரிய வைத்தனர். இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவாரூரில் புதிய ரயில் நிலையம் அருகில், 11-1-2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. இதில் பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். பிரம்மாண்டமான இப்போராட்டம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை டெல்டா பற்றியெறியும் என்பதை அறிவிக்கும் விதமாக இருந்தது.

இந்த அரசின் வஞ்சகத்தால் இந்த அரசாங்கத்தினுடைய புறக்கணிப்பால் மாண்டு போன நம்முடைய விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தர்ணாவிற்கு மக்கள் அதிகாரத்தின் தலைமை தாங்கிய மாநில தலைமைக்குழுத் தோழர் காளியப்பன் தனது உரையில்
“இந்தியா முழுவதும் விவசாயிகளின் மரணம் பெருமளவில் நடந்து கொண்டிருந்த காலத்தில் கூட தமிழகத்தில் மிக விதிவிலக்காக ஒன்றிரண்டு சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு கடந்த இரண்டு  மாதத்தில் தற்கொலைகள் உள்ளிட்டு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணத்தை தழுவியிருக்கிறார்கள். தமிழகம் ஒரு மாபெரும் விவசாய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தினமும் எத்தனை விவசாயிகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்ற செய்தியை முதன்மை செய்தியாக தாங்கியே நாளிதழ்கள் வெளிவருகின்றன. காவிரி மட்டும் அல்லாது, தமிழகத்தில் குறுக்கும் நெடுக்குமாக கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை, கடலூர் தொடங்கி ஓசூர் வரை உள்ள ஒட்டுமொத்த தமிழகத்தில் அனைத்து  விவசாயமும் இன்று மாபெரும் அழிவை சந்தித்து வருகிறது.

டெல்டா மாவட்டத்தில் விவசாயம் மட்டுமல்ல, அதுமட்டுமில்லாமல், தென்னை விவசாயம் பாழ்பட்டு போயுள்ளது. மஞ்சள் விவசாயம் கருகிப்போய் உள்ளது. பருத்தி அழிந்திருக்கிறது. கரும்பு காய்ந்து கிடக்கிறது.  சோளம், கம்பு, தமிழ்நாட்டினுடைய மொத்த உற்பத்தியும் தேங்கிப்போய் கிடக்கின்றது. ஆனால் இன்று அதிகாரிகள் தெனாவட்டாகவும் திமிராகவும் அறிக்கைவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் கடலூரை சேர்ந்த அமைச்சர் சம்பத் சொல்கிறார், விவசாயிகளுக்கு வயதானதால் தான் இறந்துள்ளனர் யாரும் பிரச்சனையால் சாகவில்லை என்று கூறுகிறார்.

வெள்ளமண்டி நடராஜன் என்றொரு அமைச்சர் சொல்கிறார் வறட்சியால் இன்றைய விவசாயிகள் சாகவில்லை. செத்தவங்கெல்லாம் குடும்ப பிரச்சனையில் அல்லது வயது முதிர்வு காரணமாக செத்து போயிருக்கிறார்கள் என்று மிக அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். இறந்து போயிருக்கும் விவசாயிகளுடைய பின்னணியை பார்த்தால் தெரியும் முப்பது வயது விவசாயியும் செத்திருக்கிறார், எழுபது வயது விவசாயியும் செத்துப்போயிருக்கிறார். ஆக எழுபது வயது தாண்டியதாலேயே அவன் செத்து போக வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்த அ.இ.அ.தி.மு.க கும்பல் இருக்கிறேதே அதற்கு உழைப்பு என்றால் என்னவென்று தெரியாமல் வாழும் ஒரு ஒட்டுண்ணி கூட்டம்.

Kaliyappan-tiruvarur
தோழர் காளியப்பன்

ஆனால் இன்றைக்கும் கிராமத்தில் போய் பாருங்கள் 75 வயதானாலும் காலையில் எழுந்து வயலுக்கு போகும் விவசாயியை நீங்கள் பார்க்க முடியும். விவசாயி சாகும்வரை உழைப்பாளியாக தான் இருக்கிறான். உழைப்பாளியாக இருந்து இந்த சமூகத்திற்கு பலன் அளிக்கிறானே தவிர, இந்த சமூகத்தை உறிஞ்சி வாழ்கின்ற ஒட்டுண்ணியைப் போல, சம்பத்தைப் போல, வீரமணியைப் போல, வெள்ளமண்டி நடராஜனைப் போல ஒட்டுண்ணி போல வாழ்கின்ற வெட்டி கூட்டமல்ல இது. வயதின் முதிர்வு காரணமாக சாவது இயற்கை அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னால் ஜெயலலிதாவும் 68 வயதில் தான் செத்தார். நம்மூரில் 45, 55 வயதில் நிறைய பேர் இறந்துவிடுகின்றனர்.  ஆக 68 வயது கூட சாகின்ற வயது தான் எதற்கு 150 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் செலவு செய்யவேண்டும். எதற்கு உள்ளூர் மருத்துவர் பத்தாது என்று டெல்லி மருத்துவரை கூப்பிடனும், லண்டனிலிருந்து மருத்துவரை கூப்பிடனும். இதெல்லாம் போதாது என்று சொல்லி கடவுளையே மிரட்டினார்கள் அம்மாவை காப்பாற்றவில்லை என்று சொன்னால் நடப்பதே வேறு என்று. ஆகவே இவர்கள் கொள்ளையடிப்பதற்கு அந்த கொள்ளை கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு ஒருவர் நீண்ட நாள் உயிரோடுயிருக்க வேண்டும். ஆனால் இந்த சமூகத்தின் உணவு தேவையை நிறைவு செய்கின்ற இந்த நாட்டு மக்களுக்கு சோறு போடுகின்ற விவசாயி 60 வயதில் 70 வயதில் இறந்தால் அவன் இயற்கையாக செத்து போயிவிட்டான் என்றும் அதை பற்றி கவலைப்படவில்லை என்று பேசுகின்ற ஒரு அமைச்சர், அந்த அமைச்சர் அங்கம் வகிக்கின்ற ஒரு மந்திரிசபை, அந்த மந்திரிசபைக்கு தலைமை வகிக்கின்ற ஒரு கிரிமினல், பொறுக்கி, திருட்டுக்கூட்டம் தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

ஆனால் இந்த விவசாயிக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அமைப்புகள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் பல்வேறு விவசாய சங்கங்கள் தோழர் காவிரி தனபால், தோழர் பி.ஆர்.பாண்டியன் இப்படி ஏராளமான கட்சிகளெல்லாம் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக தான். இந்த அரசாங்கமே தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் வறட்சி இருக்கிறதா இல்லையா? விவசாயம் இருக்கிறதா இல்லையா? எந்தளவிற்கு பாழ்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் வருகிறார்கள். தோழர்கள் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அதிகாரிகள் வந்து எப்படி ஆய்வு செய்வார்கள், எப்படி இவர்கள் மதிப்பீடு செய்வார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியும், வருவான் வயலில் கூட இறங்க மாட்டான், வரப்பில் கூட நிற்க மாட்டான். வசதியான சாலையில் உட்கார்ந்திருப்பார்கள் அதிகாரிகள் படைசூழ, வெயில் பட கூடாது என குடை பிடித்திருப்பான். சகல வசதியுடன் எட்டி நின்று பார்த்துவிட்டு ஏதோ அதிகாரிகள் சொல்கின்ற புள்ளி விவரங்களை வைத்து கொண்டு ஒரு கணக்கை சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் 24லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருக்க கூடிய இந்த டெல்டாவை மூன்று நாள் இரண்டு நாளில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மந்திரி வந்து பார்த்து விட்டு போய் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் குழுவை அமைத்திருக்கிறோம். அந்த குழுவினுடைய அறிக்கை வந்ததற்கு பிறகு நாங்கள் உரிய நிவாரணத்தை பற்றி அறிவிப்போம் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். அதை நம்பி தான் பி.ஆர். பாண்டியன் போராட்டத்தை கைவிட்டார். ஆனால் 10-ந்தேதி காலையில் அறிக்கை வருவதற்கு முன்னால் நிவாரணம் அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 17 பேருக்கு 3 லட்சம் ரூபாய் தருவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த மூன்று லட்சம் ரூபாயை எப்படி கணக்கு போடுகிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் 3 லட்சம் என்கிறான். 17 பேருக்கு  மட்டும் 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு, மற்ற மரணங்களெல்லாம் விவசாயத்தினுடைய இழப்பால் அழிவால் ஏற்பட்டது அல்ல என்று இந்த அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இந்த அரசாங்க அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது.

யானை பசிக்கு சோளப்பொறியாக இருக்கிறது. விவசாயம் தான் இப்போதும் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறது. முதுகெலும்பு முதுகெலும்பு என்று சொல்கிறார்களே, அது வளைந்திருந்தாலும், நெளிந்திருந்தாலும் வயதானாலும், இன்றைக்கும் இந்த நாட்டினுடைய முதுகெலும்பு உற்பத்தினுடைய ஆதாரம், வாழ்வாதாரத்திற்கான அடிப்படை விவசாயம் தான். இன்றைக்கும் 60% பேர்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய வேலை வாய்ப்பை, வாழ்வாதாரத்தை தருகின்ற விவசாயத்திற்கு, அவர்கள் நட்டத்தை 5465 ரூ. இந்த அதிகாரிகள் இந்த கணக்கை எப்படி கொண்டுவந்தார்கள். 40, 50 வருடங்களுக்கு முன்னால் ஒரு சூத்திரம் வைத்துள்ளான். இழப்பீடு என்று சொன்னால் எப்படி கணக்கிடுவது என்று ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அந்த கணக்கை வைத்து கொண்டு இன்று அறிவிக்கிறார்கள்.

ரூ.5,465 நட்டஈடு கொடுக்கிறீர்கள் என்று சொன்னால் விவசாயிகளை பற்றி இந்த அரசாங்கம் என்ன கருத்து வைத்திருக்கிறது. அவர் எப்படி சாப்பிடுவது, 20கிலோ அரிசி கொடுத்தால் சரியாகிவிட்டதா? கடந்த ஒரு வாரத்தில் நம்முடைய தோழர்கள் திருவாரூர், நாகை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். நான்கு ஏக்கர், ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் விவசாயின் நிலைமை என்ன தெரியுமா ? கௌரவமாக வாழ்கின்ற ஒரு விவசாய குடும்பத்து பெண்மணி சொல்கிறார், எல்லாம் போச்சு வழியே இல்லை. ஒரே வழி தான் இருக்கிறது பிச்சையெடுப்பது தான் ஒரே வழி. பிச்சையெடுக்க கூட நாங்கள் தயார். போடுவதற்கு யாரும் தயாராக இல்லை. இப்படி ஒரு குரலை டெல்டா மாவட்டத்தில் ஒரு பெண் சொல்கிறார் என்றால் அதை விட இந்த தேசத்திற்கு அவமானம் எதுவும் கிடையாது. இந்த ஆட்சியாளர்கள் நாக்கை பிடிங்கி கொண்டு சாக வேண்டும். விவசாயிகளின் துயரம் இவ்வளவு கொடூரமானது என்று எவனுக்காவது தெரியுமா? விவசாயியை போய் பார்த்தால் தான் தெரியும், அவனிடம் போய் கேட்டால் தான் தெரியும்.

people-power-protestவிவசாய குடும்பத்தில் ஒரு பெண் சொல்கிறார், வீட்டில் காசு இல்லை, கணவரிடம் கேட்டால் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடுவேன் என்கிறார். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு விவசாய குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் தன்னுடைய குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் புருஷனுக்கு சோறு போடணும், வயதான மாமியார் மாமனாருக்கு சோறு போடணும், எல்லா பொறுப்பும் அந்த பெண்ணுக்கு இருக்கு. அந்த பெண்ணுக்கு வருமானம் கிடையாது. கணவனுடைய வருமானம் தான் புருஷனிடம் காசு கேட்டால் நீ என்னிடம் காசு கேட்டால் நான் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்கிறான்.

பதினேழு பேருக்கு மூன்று லட்சம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறாரே, குடும்ப செலவுக்கு பணம் கேட்டால் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடுவேன் என்று மிரட்டும் கணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சாகாமல் ஏன் இருக்கிறார்கள் என்பது தான் பன்னீர்செல்வத்தின் கேள்வி. இப்படி மக்கள் விரோத கேடுக்கெட்ட ஒரு அரசாங்கம் இன்று நமக்கு ஆட்சியாளர்கள் என்ற பெயரால் நம்மை ஏறி மிதித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு விவசாயி அறுவடை முடியும் வரை அவனுடைய அன்றாட செலவுகளுக்கும் கடன் வாங்குகின்றான். விவசாயத்திற்கு கடன் வாங்கியது போக, சோத்திற்கு கடன் வாங்கி இரண்டிற்கும் சேர்ந்து, இன்னும் 6 மாதத்திற்கு கடன் வாங்கி தான் செலவழிக்க வேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் நம் நாட்டில் ஒரு பண்பாடு வளர்க்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு அடித்தாலும் அடித்து விட்டு கையில் காசு கொடுத்தால் சகித்து கொள்வோம். ஆகவே இந்த மக்களை ஏமாற்றுவதற்கு ரொம்ப எளிதான வழி, அவர்களுக்கு அப்போதைக்கு அப்போது வாய்க்கரிசி போட்டால், தீனி போட்டால் போதும் அந்த தீனியை ஒரு நாள் மென்றுவிட்டு அடுத்த நாள் துயரத்தை செக்குமாடு போல் சந்தித்து வாழ்க்கையை இழுத்து கொண்டு போய்விடலாம். என்று ஒரு மந்த நிலைக்கு இந்த சமுதாயத்தை இந்த அரசாங்கங்கள் தள்ளுயிருக்கின்றன. சுயமரியாதை உணர்வு சுத்தமாக இல்லாமல் காசு கொடுத்தால் எவ்வளவு ஓட்டு வேண்டுமானாலும் வாங்கலாம். காசு இருக்கிறவன் அவன் கொள்ளையடித்தாலும் சரி ஊர் தாலியை அறுத்தாலும் சரி தமிழ்நாட்டில் கல்வி வள்ளல், ஆன்மிக செம்மல், அரசியல் வழிக்காட்டி எல்லாம் களவாணி பயலாக இருக்கிறான். அவர்கள் பின்னால் ஒரு கும்பல். தமிழ்நாட்டின் கேடுகெட்ட அரசியல் எதை காட்டுகிறது என்று சொன்னால். தமிழன் என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா?  என்று ஒரு காலத்தில் பாட்டு பாடினான். இன்று  தமிழன் என்று சொல்ல முடியவில்லை. குறிப்பாக அ.தி.மு.க அரசியலை பார்த்து வெளி மாநிலங்களில் நம்மை காரி துப்புகிறார்கள்.

ஜெயலலிதா மரணமடைந்த உடனேயே தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் அவரை புனிதவதியாக மாற்றிவிட்டார்கள். ஒரு மாபெரும் வீராங்கனை போல, துணிச்சலாக மத்திய அரசை எதிர்த்து நிற்றவர் போல, சாதாரண மக்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பதில் ஒரு முன்னோடியை போல புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஒன்றரை கோடி பேர்களை அடிமுட்டாளாக, அடிமைகளாக பொறுக்கி எடுத்து உறுப்பினராக சேர்த்திருக்கிற ஒரே கட்சி அண்ணா தி.மு.க தான். தமிழ்நாட்டிற்கு ஒரு சனியன் தொலைந்தது அவ்வளவுதான். ஒரு பீடை ஒழிந்தது என்று இருக்கும் போது சசிகலா என்னும் இன்னொரு பீடையை கொண்டு வந்து வைக்கிறான். அம்மா நீங்க தான் தலைமை ஏற்கனும். இந்த கழகத்தை காப்பாற்ற அம்மா தான் வரணும். சசிகலாவை தியாகியாக மாற்றுகிறார்கள். ஊர் முழுக்க தியாகி தியாகி என எழுதி வைக்கிறான். யார் தியாகி என்று நமக்கு தெரியவில்லை. நடராஜனா, சசிகலாவா? ஆகவே இரண்டு பேருமே தியாகிகள்தான். சசிகலாவை தியாகம் செய்ததால் நடராஜன் தியாகி, நடராஜனை தியாகம் செய்ததால் சசிகலா தியாகி. இப்படி ஒரு மானங்கெட்ட நாடு உலகில் எங்காவது இருக்குமா?

manalதமிழ்நாட்டின் சீரழிந்த இந்த பண்பாடு, தமிழ்நாட்டின் உண்மையான பிரச்சனை என்ன, விவசாயிகள் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்களே, இந்த நாட்டின் தொழிற்துறை முடங்கி போயிருக்கிறதே ! அரசு என்பது ஒன்று இல்லாமல் போய் அரசு என்பதே குற்ற கும்பலாக மாறி போயிருக்கிறதே. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை பற்றி சிந்தித்து பார்ப்பதை, பேசுவதை, விவாதிப்பதை விட்டுவிட்டார்கள். என்ன ஆனது இந்த தமிழகத்திற்கு ? ஆகவே நாம் கவலைப்பட வேண்டியது நம் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை எப்படி களைய போகிறோம் என்று யோசிப்பதற்கு முன்னால் நம் நாட்டில் களையப்பட்டிருக்கிற இந்த சுயமரியாதை உணர்வு, அரசியல் அற்ற பிழைப்புவாதம், இந்த பொறுக்கித்தனம் இந்த பண்பாட்டிற்கு எதிராகவும் நாம் போர் தொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இந்த பண்பாட்டை ஒழிக்காவிட்டால்  எதிர்காலத்தில் இந்த தமிழகமே அடிமைகளின் மாநிலமாக தான் இருக்குமே தவிர, ஒரு சுயமரியாதை மாநிலமாக இருக்காது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பகுத்தறிவு, சுயமரியாதை என்பது கொடிக்கட்டி பறந்தது. ஆனால் பெரியாரின் பெயரை சொல்லியே இன்று சுயமரியாதையை அழிக்கிறார்கள்.

உடனடியாக நீர்நிலைகளை சரிசெய்யவேண்டும்.  இல்லையென்றால் விவசாயத்தை யாரும் காப்பாற்ற முடியாது. நிதி ஒதுக்கவேண்டும் என்று புதிதாக பேசுகிறான். நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் ஏரி குளங்களை தூர்வாருவதற்கும் கால்வாய்களை தூர்வாருவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை இந்த அரசாங்கள் ஒதுக்குகின்றனவே அந்த பணமெல்லாம் எங்கே போயிற்று? இன்று PWD அதிகாரிகள் எல்லா பணத்தையும் 60 வருடங்களாக தின்றுவிட்டு இன்னமும் நிதி ஒதுக்கு என்கிறானே? அப்படி நிதி ஒதுக்கினால் மறுபடியும் வேலை செய்வார்களா? என்பது ஒரு கேள்வி. மீண்டும் இந்த அரசாங்கம் நிதி ஒதுக்கும் அந்த பணமும் மீண்டும் அவர்கள் பையில் தான் போகும் என்பது தான் அவலநிலை. நேற்று வரை இந்த நீர்நிலைகளை அழிப்பதற்கு காரணமாக இருந்தது யார்? ராம் மோகன் ராவ் என்ற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அவன் தான் தலைமை தாங்குகிறான். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்கிறார் நான் யாரிடம் பயிற்சி எடுத்தேன் என்று சொன்னால் அம்மாவிடம் தான் பயிற்சி எடுத்தேன். ஐ.ஏ.எஸ் பயிற்சி என்பது டெல்லியிலும், மிசெளரியிலும் கொடுக்கிறான் என்று நாமெல்லாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவன் சொல்றான் போயஸ் தோட்டத்தில் தான் பயிற்சி எடுத்து கொண்டேன் என்று. சரி போயஸ் தோட்டத்தில் என்ன பயிற்சியெடுக்க முடியும்? ஒரே ஒரே பயிற்சி தான் எடுக்க முடியும் ஊர் தாலியை எப்படி அறுப்பது? அதை எப்படி உலையில் போடுவது இதை தவிர போயஸ் தோட்டத்தில் எந்த பயிற்சியும் எடுக்க முடியாது. அடாவடி, ரவுடித்தனம், ஊர் சொத்தை சூறையாடுவது என்பது தான் போயஸ் தோட்டத்தில் கற்று கொள்ள முடியும்.

இந்த ராம் மோகன் ராவ் தான் தமிழகத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளிலும் உள்ள மணலை கொள்ளையடிப்பதற்கு திட்டம் வகுத்து கொடுத்த மிக பெரிய கிரிமினல். இவர் யார் தமிழகத்தின் தலைமை செயலர். அந்த அதிகாரி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த பொழுது தான் தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் இருக்கின்றன. அந்த ஆறுகளில் உள்ள மணலை எல்லாம் கொள்ளையடித்தால் எவ்வளவு கிடைக்கும் என்று அ.இ.அ.தி.மு.கவிற்கு வழிக்காட்டி தான் இந்த கிரிமினல் கும்பல்.

எந்த கிரிமினல் கும்பல் இந்த நீர்நிலைகளை அழிப்பதற்கு காரணமாக இருந்ததோ, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்தோ அந்த கும்பலுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அதிலிருந்து தான் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்கிறோம், ஜெயலலிதா கூட இதை தான் பேசினார் எனக்கு குடும்பம் என்பதே கிடையாது. நான் தனி ஆள். தமிழ்நாட்டு மக்கள் தான் என்னுடைய குடும்பம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாய்கிழிய பேசி ஓட்டு வாங்கினார். ஜெயலலிதா செத்து போயாச்சு. ஜெயலலிதா சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு தான் சொந்தம். ஆகவே கொடநாடு பங்களா பல கோடி போகும் விற்றுவிட்டு மக்களுக்கு கொடு. போயஸ் தோட்டம் ஒரு 100 கோடி ரூபாய் போகும் விற்றுவிட்டு விவசாயிகளுக்கு நட்டயீடு கொடு. சிறுதாவூர் பங்களா விற்றுவிடு, திராட்சை தோட்டத்தை விற்றுவிடு, வாரிசில்லாத சொத்து தானே. தமிழ்நாட்டு மக்கள் தானே வாரிசு. சொத்தை பறிமுதல் செய்து மக்கள் சொத்தாக மாற்று. ஆகவே நமது கோரிக்கை அரசாங்கம் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

ஒரு விவசாயிக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாயாவது தர வேண்டும். ஒரு ஏக்கருக்கு 20000ரூ வீதமும், வாழ்நாள் செலவுக்காக மேலும் 50000 வரை இழப்பீடு தர வேண்டும். 3000, 5000 ரூ என்பது ஒரு ஏமாற்று, மோசடி ஆகவே இதை விவசாயிகள் ஏற்க கூடாது என்று கேட்டு கொள்கிறோம்”

தகவல் :
மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு. 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க