Saturday, May 15, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பன்னீர் VS சசி : முன் விட்டையா, பின் விட்டையா ?

பன்னீர் VS சசி : முன் விட்டையா, பின் விட்டையா ?

-

ரண்டு திருடர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது? சிரித்த முகமும் அடிமைக்குரிய பணிவும் காட்டும் பன்னீரையா? மன்னார்குடி மாஃபியாவின் தலைவியான சசிகலாவையா? பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர்தான் முதல்வராக முடியும் என்ற அடிப்படையில் தன்னை ஆட்சியமைக்க அழைக்காமல், ஆளுநர் உள்நோக்கத்துடன் காலம் கடத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார் சசிகலா. தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தன்னிடமிருந்து விலகல் கடிதம் மிரட்டி வாங்கப்பட்டதாகவும் கூறிக் கண்ணீர் வடிக்கிறார் பன்னீர்.

இந்த இரு கும்பல்களில் யாரொருவரும் தன்னை யோக்கியன் என்றோ, தங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது என்றோ வாய்தவறிக் கூடச் சொல்லிக்கொள்ள இயலாதவர்கள். சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது என்றால், பன்னீர் – சேகர் ரெட்டி – நத்தம் ஆகியோருக்கு எதிராகச் சில மாதங்களுக்கு முன்னர்தான் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

யாரைத் தேர்ந்தெடுப்பது? பணிவு பன்னீரையா அல்லது அல்லிராணியின் அன்புச் சகோதரியையா?

இருந்த போதிலும், சசிகலா மட்டும்தான் ஊழல் பேர்வழி என்பதைப் போலவும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன் ஆளுநர் அவரைப் பதவியேற்க அழைப்பது நெறிகெட்ட செயல் என்பதாகவும் பாரதிய ஜனதா பேசுகிறது. ஜெயலலிதாவின் கன்டெயினர் கடத்தல் முதல் தேர்தல் தில்லுமுல்லு வரை எல்லா முறைகேடுகளுக்கும் துணை நின்ற பாரதிய ஜனதா, நல்லொழுக்கத்தின் காவலனாக நடிக்கிறது. ஜெயாவின் மரணத்தில் சசிகலா மீது விழுந்துள்ள சந்தேகத்தையும், மன்னார்குடி மாஃபியா மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பையும் பன்னீருக்கு ஆதரவாகத் திருப்பும் பணியிலும், பன்னீருக்கு ஆள் பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழக மக்களால் காறி உமிழ்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பா.ஜ.க., இப்போது நடுவர் தோரணையில் பேசுகிறது. சசிகலா மீது தமிழக மக்களுக்கு, குறிப்பாக அ.தி.மு.க. வின் வாக்கு வங்கியாகிய பெண்கள் கொண்டிருக்கும் வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இரட்டை இலைச் சின்னத்தின் வாரிசாக பன்னீர் கும்பலைக் கொண்டு வந்து, அதன் வழியாக அ.தி.மு.க.வைத் தனது கைப்பாவைக் கட்சியாக்கிக் கொள்ள முனைகிறது.

பன்னீர், சசி ஆகிய இருவரில் ஒருவரைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும்; அல்லது தி.மு.க. கூறுவதைப் போலச் சட்டமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்த வேண்டும். இவைதான் தமிழக மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள் என்று கூறப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் போலீசின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பன்னீரின் கண்ணீருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமா? கடன்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் தஞ்சை விவசாயிகளும், வறட்சியால் மடிந்து கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளும் சசிகலாவின் சட்டபூர்வ உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டுமா? இந்தக் கழிசடைகளா மக்களின் பிரதிநிதிகள்?

இவர்கள் காட்டுகின்ற கட்டத்தில் டிக் அடிப்பதைத் தவிர நமக்குத் தெரிவு இல்லை என்றோ, இவர்கள் கூறுகின்ற சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் இல்லையென்றோ சிந்தித்திருப்போமானால், மெரினா எழுச்சியே சாத்தியமாகியிருக்காது. இந்த அரசும் பணிந்திருக்காது. இவர்களில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வறட்சி, நீர்நிலைப் பராமரிப்பு, உதய் திட்டம், உணவு மானிய வெட்டு, நீட் தேர்வு, பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால், பிரச்சினைகளுக்கு காரணமானவர்களே இவர்கள்தான். இப்பிரச்சினைகளுக்கு ஏதேனும் தீர்வு உண்டென்றால், அது இவர்களுக்கு வெளியில்தான் இருக்கிறது.  இந்தக் கட்டமைப்புக்குள் சிந்திக்கும் பழக்கத்திலிருந்து நம் சிந்தனையை விடுவிப்போம். மெரினா எழுச்சியால் தலை நிமிர்ந்த தமிழகம் தலை குனிந்துவிடக் கூடாது.

-புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2017

  1. //மெரினா எழுச்சியே சாத்தியமாகியிருக்காது. இந்த அரசும் பணிந்திருக்காது//

    This so called MERINA Revolution not because of peoples awareness or protest.

    Panner as well as Sasi wants this to happen because to divert the attention from the people of “their POWER FIGHT And LOOT of Tamil nadu /JJ murder/issues of Rama mohan Rao-Sekar reddy etc”

    That is why they allowed the so called Merina gathering for this Non Issue of’JALLI KATTU’.

    Otherwise our Rowdy Police should have routed them on the first day itself.This is magnanimous of Sasi Mafia nothing else.

  2. திரு. சண்முகம் அவர்களின் பதிவில் மாணவர்-இளைஞர் போராட்டத்திற்கே இரண்டு அரசியல்வாதிகளின் தயவுதான் காரணம் என்ற செய்தி உள்ளது. நான் இதை ஏற்கவில்லை. வன்மையாக மறுக்கிறேன். அது நெறிப்படுத்தப்பட்ட போராட்டம் அல்ல என்பது உண்மை. ஆனால் இளைஞர்கள் ஆற்றல் இல்லை என்றால் ஏழுநாட்களுக்கு (போலீஸ் கலைக்காமல் இருந்தால்) மேலும்கூடத் தொடர்ந்திருக்க இயலுமா? மக்கள் எழுச்சி என்பதைப் புரிந்துகொள்ளாததால் வந்த வினை இது. மெரீனா போகட்டும், கோவை, திருச்சி, தஞ்சை, அலங்காநல்லுர் போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் திரண்டதற்கும் அவர்களுடைய தயவுதான் காரணமா?

Leave a Reply to நிறைமதி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க