Friday, May 2, 2025
முகப்புசமூகம்சாதி – மதம்கரூர் அருகே தலித் சிறுவன் மீது ஆதிக்க சாதி வெறியாட்டம் !

கரூர் அருகே தலித் சிறுவன் மீது ஆதிக்க சாதி வெறியாட்டம் !

-

ரூர் – தும்பிவாடி கிராமம், சிவன் காலனி பகுதியில் வசிக்கும் சுமார் 100 தலித் மக்கள், கவுண்டர், நாடார் உள்ளிட்ட ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். தும்பிவாடி, 5 ரோடு, டீ கடையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனியாக டம்ளர் பயன்படுத்தும் முறை இன்றளவும் உள்ளது. பெஞ்சில் உட்காரக்கூடாது தள்ளித்தான் நிற்கவேண்டும்.

சிவன் காலனியில் உள்ள பால் சொசைட்டியில் கூட தலித் குழந்தைகளுக்கு பால் ஊற்றுவது இல்லை. அங்க பக்கத்தில் செல்லக்கூட அனுமதியில்லை. இந்த தீண்டாமை காரணமாக, சிவன் காலனியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது பாக்கெட் பால்தான்.

சிவன் காலனியில் நாடார் சமூகத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். மேற்படி பெட்டிக்கடைக்கு கடந்த 18.02.2017 அன்று தலித் சமூகத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கஜேந்திரன், கண் மை வாங்குவதற்கு சென்றுள்ளான். அப்பொழுது கையில் வைத்திருந்த 6 ரூபாய் காசை கடையில் உள்ள மிட்டாய் டாப்பாவின் மீது வைத்தபோது அது தவறி கடைக்குள் விழுந்துவிட்டது. அதனை எடுப்பதற்காக கடைக்குள்ளே காலை வைத்திருக்கிறான் அந்தச் சிறுவன். உடனே, “சக்கிலிய நாயே, எதுக்குடா கடைக்குள் வர்றே”, என கெட்ட வார்த்தைகளால் திட்டி, இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைந்து, தலையை பிடித்து சுவரில் மோதியிருக்கிறார் கடை முதலாளி சரத்குமார். வலி பொறுக்க முடியாமல் கஜேந்திரன் கத்தவே, “அடித்ததை வெளியே சொன்னால் கல்லாவிலிருந்து காசை திருடினாய் என்று கம்ப்ளெயின்ட் கொடுத்து உள்ளே தள்ளிவிடுவேன்” என்றும் மிரட்டியிருக்கிறார். “கிழக்குத் தெருக்காரன் மேற்கு தெருவிற்கு வரக்கூடாது. சக்கிலி பசங்க இந்த பக்கம் வந்தால் செருப்பாலேயே அடிவிழும்” என்று சரத்குமாரின் பெரியப்பா கணேசன், மனைவி அன்புமலர் ஆகியோர் சேர்ந்து கொண்டு அடித்திருக்கின்றனர்.

மேற்படி சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த கஜேந்திரனின் பெரியம்மா வளர்மதி, “எதற்காக எங்கள் மகனை அடிக்கீறீர்கள்” என கேட்க, “உங்களால் என்னடி செய்ய முடியும்” என்று எகத்தாளமாகப் பேசியிருக்கின்றனர்.

தலித் மக்கள் ஒன்று கூடி சின்னதாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பயனில்லை. மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு தகவல் வந்தவுடன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.சக்திவேல் மற்றும் தோழர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். மறுநாள் 19.02.2017 அன்று அப்பகுதி மக்களுடன் சின்னதாராபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று சரத்குமார் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர். புகாரை பதிவு செய்யாமல் சமரசம் செய்து திருப்பி அனுப்ப முயன்றது போலீசு. மக்களும் மக்கள் அதிகார தோழர்களும் உறுதியதாக இருந்ததால், வேறு வழியின்றி அரவக்குறிச்சி DSP வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். அடுத்த கணமே கஜேந்திரன் மீது சரத்குமார் திருட்டுப் புகார் கொடுக்க, அந்த பொய்ப்புகாரையும் பதிவு செய்து கொண்டது போலீசு. சரத்குமாரும் கணேசனும் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நாடார் சமூகத்தினர் எண்ணிக்கையில் குறைவானவர்களே என்ற போதிலும், அந்த வட்டாரத்தில் கவுண்டர் சாதியினர் செலுத்தும் ஆதிக்கத்தின் பின்புலத்தில்தான் தீண்டாமைக் கொடுமைகள் அரங்கேறுகின்றன. கடைக்குள் கால் வைத்த குற்றத்துக்காக ஒரு தலித் சிறுவனுக்கு இப்படிப்பட்ட கொடுமை! கோகுல்ராஜ் கொடூரமாக கொல்லப்பட்டதன் பின்புலம் இதுதான்.

இந்த கொங்கு மண்டலத்தின் தனியரசுதான் சபாநாயகர் தனபாலுக்காக தொலைக்காட்சிகளில் பொங்கினார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். முதல்வர் நாற்காலியில் உட்கார்வதற்காக எடப்பாடி பிடித்த கால்கள் சசிகலாவின் கால்கள் என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.

அப்புறம் அந்த மளிகைக் கடை முதலாளியின் பெயரைக் கவனித்தீர்களா? “சுயமரியாதைச் சிங்கம்” விரட்டி விரட்டி அடித்தாலும் அம்மாவின் காலையே சுற்றி வந்த சரத்குமார்!

அவருடைய கட்சியின் பெயர் “சமத்துவ” மக்கள் கட்சி!

 

 

சாதி வெறியர்களின் கொலை வெறித்தாக்குதலை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டி

தகவல்
மக்கள் அதிகாரம்
கரூர் – (9791301097)