Wednesday, January 20, 2021
முகப்பு இதர புகைப்படக் கட்டுரை சேச்சி கஷ்டப்படுதுன்னு யாரும் பிரச்சனை பண்ணமாட்டாங்க !

சேச்சி கஷ்டப்படுதுன்னு யாரும் பிரச்சனை பண்ணமாட்டாங்க !

-

உழைக்கும் மகளிர் தினம் – புகைப்படக் கட்டுரை 1

ழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பணிகள் புரியும் பெண்களை சென்னை நகரெங்கும் சந்தித்தோம். உழைப்பதற்கென்றே விதிக்கப்பட்ட அந்த பெண்களுக்கு வாழ்வில் வேலையன்றி வேறு எதுவும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. அனைவரிடமும் சொந்த வாழ்க்கை குறித்த அவலமான கதைகள் ஏராளமுண்டு. ஆண்களின் குடி, வருமானத்திற்காக விடாப்பிடியான போராட்டம், குடும்பத்தை தூக்கி நிறுத்தும் கடமை இறுதியில் செய்யும் பணிக்கேற்ற உடல் வலி… இருப்பினும் அவர்கள் அழகானவர்கள் – வலிமையான பெண்கள். மகளிர் தினம் என்னவென்றே அறியாத இப்பெண்களின் பங்கேற்பின்றி இங்கே என்ன சமூக மாற்றம் வந்து விடும்?

– வினவு


ராதா

40 வருசமா இந்த பூ வியாபாரம் பாக்குறேன். வீட்டுகாரரு இருக்கும் போது காய் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தோம். வயசு இப்போ 82 ஆவுது. ஏசப்பா ஆசீர்வாதத்துல நல்லா இருக்கேன்.

ஆண்டவர் கொடுத்த ஒடம்பு இன்னும் நல்லா இருக்கு, இப்ப வரைக்கும் என் உழப்புல தான் சோறு துன்னுறேன்.

இந்த வயசுலயும் ஏன் வேலை பாக்குறீங்க பாட்டி?

ஒரு நாள் கேக்கலாம். டேய் அன்பு டீ வாங்கி குடு, டே ஐசக்கு டீ வாங்கி குடு, தேவா டீ வாங்கி குடுன்னு தினக்கி கேக்க முடியுமா? யாராவது குடுப்பாங்களா? ஏன் நீ டீ வாங்கி குடுப்பியா? பேரப்புள்ளைங்களுக்கு நாம தா எதாவது செய்யனும் அவங்கள கேக்க முடியாது.

ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி 500 ரூபாய்க்கி பூ வாங்குவேன், காலைல பாரிஸ் பூக்கட மார்கட்ல தான் ஆட்டோவுல போய் வாங்கியாருவேன். காலையில 7 மணிக்கெல்லாம் கடைய தொறந்துடுவேன். வூட்டுக்கு போக சாயந்தரம் 7 ஆயிடும். எங்க சக்காளத்தியார் வயித்து புள்ள வீட்டுலதான் இருக்கேன். அங்க இருந்து சோறு எடுத்தாருவாங்க. என் வூட்டுகாருக்கு அவங்க ரெண்டாவது தாரம். எனக்கு பொண்னுங்க தான் பையன் இல்ல அதனால அவரு அவங்கள கட்டிகிட்டாரு.

பூ வித்தா 100, 200 கைல நிக்கும். சில நாள் எதுவும் கிடைக்காது. ஒரு நா விக்கலனா தூக்கி போடரது தான். வச்சா புள்ளயாரு வழிச்சி போட்டா சாணி அவ்வளவு தான்.


 

மினியம்மா, வயது 40 சாலை பணியாளர், திருவண்ணாமலை.

ஊர்ல விவசாயம் இல்ல, சொந்தமா காடும் இல்ல அதனால இங்க வந்து வேல பாக்குறோம். காலைல 9 மணில இருந்து சாயங்காலம் 5 மணி வரை வேலை 300 ரூபா சம்பளம், நாங்க சித்தாளு. பெரியாளுக்கு 500 ரூவா சம்பளம், ஆம்பளைங்க பெரியாளு. அரும்பாக்கத்துல காண்ட்ராக்டர் கொட்டா போட்டு குடுத்துருக்காரு.

பொழுதுபோறதுக்கு என்ன செய்வீங்கக்கா?

பொழுதா போகமாட்டீங்குது? பஸ்சுக்கு காத்திருந்து போய் சேற எப்படியும் 7 – 8 மணி ஆயிடும். அதுக்கப்பறம் எங்க….. அசதியா இருக்கும் வீட்டு வேலை செஞ்சிட்டு தூங்க வேண்டியது தான்.

காலைல 7 மணிக்கே சமச்சி முடிச்சி மத்தியானத்துக்கும் சேத்து எடுத்துட்டு வந்துடுவேன். வீட்டு வேலைய நான் தான் செய்யனும். செய்யுறதுக்கு யாருமில்லைங்க.

வீட்டுக்காரரு இருக்காருங்களே அக்கா?

வீட்டுக்காரரு அதெல்லாம் செய்யமாட்டாரு.

இங்க வேலை முடிஞ்சுருச்சுன்னா ஊருக்கு போனாலும் அங்க காட்டு வேல எதாவது இருந்தா அத செய்வோம். மகளிர் தினமா அதெல்லாம் தெரியாது பா.

______________

குமாரி, வயது 50, சலவைக் கடை.

நானும் வீட்டுகாரும் அயன் கட தான் வச்சி இருக்கோம், அவரு புரசைவாக்கம் பக்கத்துல கட வச்சிருக்காரு. இங்க காலைல 7 மணில இருந்து 10 பத்தரை வர வேல பாப்பேன். அப்புறம் வீட்டுக்கு போய் அங்க இருக்குற வேலைய முடிச்சிட்டு திரும்ப சாயங்காலம் 4 மணிக்கு வருவேன்.

பொழுதுபோக்குன்னு கேட்டா என்ன மதியானத்துல வள்ளி சீரியல் மட்டும் பாப்பேன். வீட்டுகாரு இப்பலாம் தண்ணி அடிக்கிறத கம்மி பண்ணிட்டாரு. பசங்கல்லாம் வளந்துட்டாங்க இல்லயா. பையன் வேலைக்கு போறான் பொண்ணுக்கு கல்யாணம் செய்யனும். நர்சிங் முடிச்சிட்டு வீட்டுல தான் இருக்கு.

என்ன செய்ய வருமானம் பத்தல பொம்பளைங்க வெளியவும் வேலைக்கு போகனும், வீட்டு வேலையும் செய்யனும் அது அவங்க விதின்னு போவறது தான்.

இந்த வேலைல கழுத்து, கையெல்லாம் வலி எடுக்கும், மாத்திரய வாங்கி போட்டுகிட்டு வேலைய பாக்க வேண்டியது தான். டாக்டருகிட்ட போனாலே நேரத்துக்கு சாப்படனும்னு சொல்லுவாரு. எங்க காலைல தான் கொஞ்சம் வேல பரபரப்பா இருக்கும் அந்த நேரத்துல சாப்புட்டுகிட்டு இருக்க முடியாது. 10 மணிக்கு மேல தான் கால சாப்பாடே. மூணு வேளையும் சாப்பாடு நேரம் தள்ளிப்போயிடுது.

__________

பிரசன்னா, வயது 50 டீ கடை, ஊர் கேரளா. சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல் எதிரில் டீக்கடை.

சேத்துபட்டின் மையமான இடம் இந்த அம்பேத்கர் திடல். இன்று வரை அரசியல் கூட்டங்கள் எதுவென்றாலும் இந்த பகுதியில் தான் நடக்கும். தற்போதுள்ளது போல குறைந்த செலவில் முன்னர் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு கிடைக்காது. அந்த நேரங்களில் இவர் கடையில் இருந்து தான் மின்சாரம் தருவார்.

ஒரு பெண்ணாக இருந்துகிட்டு தன்னந்தனியா டீக்கடை வச்சிருக்கீங்களே, டீக்கடையில ஆயிரத்தெட்டு பிரச்சனை வருமே எப்படி சமாளிக்குறீங்க?

நாங்க இங்க 30 வருசமா கடை வச்சிருக்கோம். பத்து வருசத்துக்கு முன்னாடி வீட்டுக்காரரு இறந்துட்டாரு. அப்புறம் நா மட்டும் நடத்துறேன். எல்லாரும் இங்க தெரிஞ்சவங்க தான். சேச்சி கஷ்டப்படுதுன்னு யாரும் பிரச்சனை பண்ணமாட்டாங்க. துணைக்கு இதோ இப்ப போனானே அவன், என் தம்பி தான் அவன் இருக்கான். சொந்த ஊரு கேரளா.. திருச்சூர் பக்கத்துல.. அங்க கொஞ்சம் தென்னை இருக்கு.. அத சொந்தக்காரங்க கிட்ட பாத்துக்க சொல்லி விட்டிருக்கோம்.

காலையில எத்தனை மணிக்குகா கடை தொறப்பீங்க?

இப்ப எல்லாம் லேட்டா காலையில 4 மணிக்கு தான் கடை தொறக்குறேன்.

விடுமுறை நாட்களில் தோழர்கள் வேலைகளுக்கு கூப்பிடும் போது, 10 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு 11 மணிக்கு போய் கூசாமல் ”லேட்டாயிடுச்சுங்க தோழர்” என்று சொல்லும் எங்களுடைய காரணத்தைப் போலவே சட்டென ”4 மணியே லேட்டுங்களா அக்கா?” என்று கேட்டேன்.

ஆமங்க, முன்ன எல்லாம் 24 மணி நேரம் எங்க கடை இருக்கும். இப்ப போலீசுக்காரங்க 11 மணிக்கு கடைய மூட சொல்றாங்க. அது கூட பிரச்சனை இல்லை. எதுனா பிரச்சனைன்னா கேசுக்கு, சந்தேகக்கேசுக்கு, ஆள் காட்டி விடச் சொல்றாங்க. நம்ப புள்ளைங்கள நாம எப்படி காட்டிக் கொடுக்குறது சொல்லுங்க..

இப்படிப்பட்ட மக்களைத்தான் சில தமிழினவாதிகள் வந்தேறீகள் என்று சொல்லி இனவெறியைத் தூண்டுகின்றனர்.அதெல்லாம் சேச்சிக்கு மட்டும்ல, சேத்துப்பட்டு மக்களுக்கும் தெரியாது.

– வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க