privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பிரிட்ஜோ கொலை : மீனவர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு !

பிரிட்ஜோ கொலை : மீனவர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு !

-

டந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 6 2017) இரவு பத்து மணி அளவில் கச்சத்தீவு அருகே மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராமேஸ்வரத்தில் இருந்து 464 விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படை பிரிட்ஜோ இருந்த விசைப்படகு மீது சராமரியாக சுட்டிருக்கிறது. கழுத்தில் குண்டு பாய்ந்த பிரிட்ஜோ அங்கேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு மீனவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீன் பிடிதொழிலுக்காக ஒரு மீனவர் கொல்லப்படுவது உலகத்திலேயே இந்தியா அன்றி வேறு எங்கு இருக்கும்?

அதே மருத்துவமனையில் இருக்கும் பிரிட்ஜோவின் உடலுக்கு பிரதே பரிசோதனை முடிந்தாலும் உடலை வாங்க மக்கள் மறுப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கை இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும், இதுதான் கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும் என்பதே. இதற்கு மத்திய மாநில அரசுகள் உறுதி தரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் கொலை செய்த இலங்கை கடற்படை வீரர் கைது செய்யப்படவேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை.

சுட்டுக் கொல்லப்பட்ட பிரிட்ஜோ. இதுதான் கடைசி உயிரிழப்பாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

கடந்த ஆறு ஆண்டுகளில் யாரும் சுட்டு கொல்லப்படவில்லை என்றாலும் அன்றாடம் மீனவர்களை தாக்கும் அட்டூழியத்தை இலங்கை கடற்படை தொடர்ந்து செய்கிறது. 130க்கும் மேற்பட்ட படகுகள் மாதக் கணக்கில் இலங்கை வசம் பிடித்து வைக்கப்பட்டு 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கே சிறையில் இருக்கின்றனர். இதுநாள் வரை தமது வாழ்வாதாரம்தான் பாதிக்கப்பட்டது என்பது போய் இப்போது மீண்டும் உயிரையே பலி கொடுக்கும் நிலைமை வந்திருக்கிறது என்று கதறுகிறார்கள் மீனவர்கள்.

இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் 30 கடல் மைல் தூரம் உள்ளது. இதை சர்வதேச விதிகளின் படி சரியாக பிரித்தால் 15 கடல் மைல் அளவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும். ஆனால் 1974 இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த போதும் அதற்கு பிறகு அதே ஒப்பந்தம் 76-ம் ஆண்டில் புதுப்பிக்கப் பட்ட போதும் கடல் தூரத்தை சமமாக பிரிக்கவில்லை.

கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி தமிழக மீனவர்கள் அத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், ஆண்டு தோறும் நடக்கும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்று இரண்டு உரிமைகளை மட்டும் வழங்கியிருக்கிறார்கள். மாறாக அங்கே மீன் பிடிக்க கூடாதாம். இந்தக் குழப்பங்களோடு குறைவான தூரத்தில் எது சர்வதேச எல்லை என்று பிரித்தறிவது கடினம்.

ராமேஸ்வரத்திலிரிந்து முதல் மூன்று கடல் மைல் பரப்பில் நாட்டுப்படகுகளும், அதற்கடுத்த நான்கு கடல் மைல் பரப்பில் பாறைகள் இருப்பதால் 7 மைல்களுக்கு மேல்தான் தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும். இந்தப் பிரச்சினை தனி. ஒரு வேளை தமிழக மீனவர்கள் இந்தக் குழப்பமான சர்வதேச எல்லையை மீறுவதாகவே வைத்துக் கொண்டாலும் அவர்களை சுட்டுக் கொல்வது எப்படி சரி?

இதற்கு முன்னர் ஈழத்தமிழர் போராட்டத்தின் போது சுமார் 600 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போது புலிகளும் இல்லை, போராட்டமும் இல்லை. ஆனால் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அங்கே இராணுவம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மதயானை போல பெருத்து இருக்கிறது. மற்ற நாடுகளின் மக்கள் தொகையில் இராணுவத்தின் விகிதம் குறைவாக இருந்தால் இலங்கையில் அது அதிகம். இப்படி ஊட்டி வளர்க்கப்பட்ட் ஒரு விலங்கு தனது சுபாவத்தை கைவிடுவது கடினம்.

மேலும் புலிகளை ஒடுக்குவதற்கு பாக் நீரிணையில் மீனவர்களை அவ்வப்போது கொன்றால்தான் தமிழகத்தில் இருந்து வரும் பொருட்களை நிறுத்த முடியும் என்று இலங்கை அன்று அமல்படுத்தியது. அதை அப்போது இந்தியாவும் அங்கீகரித்தது. இப்படித்தான் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை எங்கு பார்த்தாலும்  அடித்து ஒடுக்கும் காட்டிமிராண்டித்தனத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்தியாவின் மறைமுக ஆதரவுதான் இலங்கை கடற்படை இப்படி கேட்பார் இன்றி கொல்வதற்கு முக்கியமான காரணம்.

சுட்டுக் கொல்லைவில்லை என்றால் வலைகளை சேதப்படுத்தி, படகுகளை தாக்கி அல்லது பிடித்துச் சென்று என்று அன்றாடம் எல்லா வதைகளையும் படுகிறார்கள் தமிழக மீனவர்கள். விசைப்படகுகளில் செல்லும் மீனவர்கள் அனைவரும் அன்றாட ஊதியத்திற்கு வேலை பார்க்கும் தொழிலாளிகள்தான். அவர்களைப் பொறுத்த வரை கடற் தொழில் என்பது போர் முனையில் சாகும் அபாயத்தை கொண்டிருப்பதாக மாறிவிட்டது.

இத்தாலியர்கள் அரபிக் கடலில் கேரள மீனவர்களை சுட்ட போது அவர்களை கைது செய்த இந்திய அரசு தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது ஏன் வாய் பொத்தி நிற்கிறது என்று இராமேஸ்வரம் மீனவர்கள் கேட்கிறார்கள். எதிரி நாடு எனக் கூறப்படும் பாகிஸ்தான் கூட இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. இதற்கு மேல் நாங்கள் ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும்? எங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் இலங்கையோடு கூட சேர்த்து விடுங்கள் என்று கோபமாக கேட்கிறார்கள் அவர்கள்.

மத்திய பாரதிய ஜனதா அரசோ இந்த படுகொலைக்கு வெறும் வருத்தம் மட்டுமே தெரிவித்திருக்கிறது. பெயரளவு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. இலங்கை அரசோ தமது கடற்படை சுட்டுக் கொல்லவில்லை என்று முழுப்பொய்யை அதிகாரப்பூர்வமாக கூறுகிறது. பிறகு விசாரிக்கிறோம் என்று கூறுகிறது. இறுதியில் இந்த விசாரணையை வைத்தே தான் கடுமையான நடவடிக்கை எடுத்து விட்டதாக இந்திய அரசு நாடகமாடும்.

எல்லையிலே சர்ஜிக்கல் ஸ்டிரைக், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் என்று உதார் காட்டிய மோடி இப்போது ஏன் பயந்து ஓடுகிறார் என்று மீனவர்களோடு சேர்ந்து இதர பிரிவு தமிழக மக்களும் கேட்கிறார்கள். இலங்கையிலேயே ஏராளம் முதலீடு செய்துள்ள தரகு முதலாளிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மோடி அரசு ஒரு மீனவனின் உயிருக்காக ஒன்றும் செய்யாது என்பதே யதார்த்தம். இதற்கிடையில் சிலர் இலங்கையை யார் கட்டுப்படுத்துவது என்று சீனா – அமெரிக்காவிற்கு இடையே நடக்கும் போராட்டம் என்று கண்டதையும் உளறி இந்த சம்பவத்திற்கு பயங்கரமான பின்னணி ஆய்வு தருகின்றனர்.

தமிழக் மக்களை ஒடுக்கிய இலங்கை இராணுவத்தின் கடற்படை தனது பழைய பழக்கத்தை அதாவது தமிழக மீனவர்களை ஒடுக்கும் பேட்டை ரவுடித்தனத்தை விடவில்லை. மேலும் தற்போது இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. அனைத்து பிரிவு மக்களும் அங்கே அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் குறிப்பான பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டங்களை திசை திருப்பக் கூட இலங்கை அரசு தனது கடற்படையை ஏவி இந்தக் கொலையை செய்திருக்கலாம். ஆகவே இலங்கை கடற்படை என்பது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, போராடும் இலங்கை மக்களுக்கும் எதிரிதான்.

முக்கியமாக இலங்கை அரசின் கடற்படை ரவுடித்தனத்திற்கு சோறும் சரக்கும் போட்டு வளர்த்து ஆசீர்வசித்த இந்திய அரசு இலங்கையில் ஏர்டெல், டாடாவிற்கு சேவை செய்யுமா தமிழக மீனவரின் உயிரை காக்குமா?

நெடுவாசலை அடுத்து தமிழக மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் பொருட்டு இளைஞர்களுக்கு அடுத்த போராட்டம் வந்து நிற்கிறது. களமிறங்குவோம் !