Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்மக்கள் காயத்திற்கு புள்ளிவிவர மிளகாய் பொடி போடும் மோடி !

மக்கள் காயத்திற்கு புள்ளிவிவர மிளகாய் பொடி போடும் மோடி !

-

“மூன்று வகையான பொய்கள் இருக்கின்றன : பொய், கேடுகெட்ட பொய் மற்றும் புள்ளிவிவரம்” – என்றார் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரான பெஞ்சமின் டிஸ்ரேய்லி (1804-1881). முதலாளித்துவ உலகின் நெருக்கடிகள் பல புள்ளிவிவர செட்அப் மூலம் மறைக்கப்படுவது அன்றே சாதாரண விசயம். கடைசியாக என்ரான் நிறுவனம் திவாலானது, சத்யம் கம்யூட்டர் நிறுவனம் வரை இந்த புள்ளிவிவரங்களே குற்றத்தை மறைத்து வந்தன.

இந்நிலையில் இந்தியாவின் இந்நாள் பிரதமர் திருவாளர் மோடி அவர்கள், ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். உத்திரபிரதேச தேர்தலுக்காக அம்மாநிலத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் நம்மூர் குண்டு கல்யாணம் போல புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதமர், பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசும் போது “கடும் உழைப்பு (Hard work) என்பது ஹார்வர்டை  (பல்கலைக்கழகம்) விட பலம் பொருந்தியதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இது பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்னுக்கு பதிலளிக்கும் முகமாக செய்யப்பட்ட மோடி பாணி தேர்தல் சவடால். வரலாறு, பொருளாதாரத்தில் வடக்கு தெற்கு அறியாத இப்பேரறிஞர் எழுதிக் கொடுத்த வசனங்களை வாந்தியெடுப்பது வழக்கமென்றாலும், இந்த கடும் உழைப்பு குறித்து கொஞ்சம் சோம்பேறித்தனமாகவே பார்த்தாலும் மோடி சிக்கிக் கொள்வார்.

உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் நம்மூர் குண்டு கல்யாணம் போல சந்து பொந்துகளில் பொளந்துகட்டும் மோடிஜி

மோடியின் சீரிய சிந்தனையில் உதித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரத்தின் முதுகெலும்பையே உடைத்துப் போட்டதுடன் அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடியாக மக்களின் தலையில் விடிந்தது. பாசிசம் கலந்த கோமாளித்தனமான இந்நடவடிக்கையின் விளைவாக மக்கள் அனுபவித்த – அனுபவித்து வரும் – துன்ப துயரங்களைப் புரிந்து கொள்ள பொருளாதார, அறிவியல் பூகோள அறிவெல்லாம் தேவையில்லை; பொது அறிவும் மனசாட்சியும் இருந்தாலே போதும். மோடியின் அறிவிப்புக்குப் பின் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்த எதார்த்தம் நம் கண்முன்னே நடந்தது. மக்களின் வாங்கும் சக்தியை அடியறுத்த இந்நடவடிக்கையின் காரணமாக பொருளாதாரம் சீர்குலைந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கிகளின் முன் வரிசையில் நிற்கும் போதே மரணமடைந்தனர்.

எனினும், தனது பிம்பத்தைத் தானே காமுறும் நார்சிச வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கும் மோடியோ பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்கிறார். இதற்கு ஆதாரமாக இந்திய புள்ளியியல் துறை வெளியிட்டிருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீட்டு எண்ணின் வீக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த மார்ச் 1-ம் தேதி இந்திய புள்ளியியல் துறை 2016-17 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான (அதாவது 2016-ம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களான அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதம் என அறிவித்தது. இதற்காகவே காத்திருந்த ஊடகங்களோ பெரும் ஆரவாரத்துடன் புள்ளியியல் துறையின் அறிவிப்பை கொண்டாடின. முதலாளித்துவ ஆதரவு பொருளாதார நிபுணர்கள் பலரும் சென்ற காலாண்டின் வளர்ச்சி 6 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில் நிர்வாண பேரரசர் முழு மேக்கப்பில் ஜொலிப்பதாகச் சொல்கிறார்கள் மோடியின் அரசவைக் கோமாளிகள்.

இதற்கு என்ன அடிப்படை?

சுழற்சியில் இருந்த சுமார் 86 சதவீத பணத்தாள்களை செல்லாக்காசாக்கிய மோடியின் அறிவிப்புக்குப் பின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், விவசயம் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத தொழிற்துறைகள் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கப்பட்டன என்பதே உண்மை. இந்நிலையில் அரசின் புள்ளியியல் துறை பாரதிய ஜனதாவின் தேர்தல் நலனுக்காக புள்ளிவிவரங்களை வளைத்துள்ளதை பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக் விளக்கியுள்ளார்.

புள்ளிவிவரங்களில் வேண்டுமானால் வளர்ச்சியை காட்டலாம். ஆனால் உண்மையை அறிய நமது வீட்டருகில் உள்ள சிறுகடை வியாபாரியை விசாரித்தாலே போதுமானது

முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் குறிப்பிட்ட காலாண்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி அதற்கு முந்தைய நிதியாண்டின் அதே குறிப்பிட்ட காலாண்டின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டே கணக்கிடப்படுகின்றது. கடந்த நிதியாண்டின் (2015-2016) மூன்றாம் காலாண்டின் வளர்ச்சி 7.3 சதவீதமாக (28,52,339 கோடி) கணக்கிடப்பட்டு 2016 பிப்ரவரி 9-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த வளர்ச்சி விகிதம் அதே ஆண்டு மே 31-ம் தேதி சற்றே திருத்தப்பட்டு 7.2 சதவீதமாக (ரூ. 28,51,682 கோடி) அறிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் கடந்த காலாண்டின் வளர்ச்சி விகிதம் வெறும் 6.2 சதவீதம் தான் (அரசு அறிவித்துள்ளதோ 7 சதவீதம்!)

கருப்புப்பண ஒழிப்பை நோக்கமாக கொண்டதென முதலில் அறிவிக்கப்பட்டு பின் சர்வரோக நிரவாரணியாக முன்னிறுத்தப்பட்டு படு தோல்வியடைந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வெற்றியாக காட்ட வேண்டிய நெருக்கடியும் உத்திரபிரதேச மாநில தேர்தலும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தன. வழக்கம் போல் பிராடுத்தனத்தில் இறங்கியது மோடி அரசு. குறிப்பான காரணம் ஏதுமின்றி 2015-16 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ரூ. 28,30,760 கோடிகளாக குறைத்தது மத்திய புள்ளியியல் துறை. பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌம்யா காந்தி கோஷ் இவ்வாறு கடந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பைக் குறைத்துக் காட்டுவது மர்மமாக உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் தான் கடந்த காலாண்டின் வளர்ச்சியை 7 சதவீதம் என பீற்றிக் கொண்டது மோடி அரசு – அதாவது, தன்னை உயரமானவனாக காட்டிக் கொள்ள அருகிலிருப்பவனின் காலை வெட்டுவதைப் போல.

இரண்டாவதாக, சொல்லிக் கொள்ளப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படுவதே உற்பத்தி செய்யப்பட்ட அனைத்தின் மொத்த மதிப்பல்ல – மாறாக உற்பத்தித் துறை நிறுவனங்கள் வெளியிடும் பற்று வரவு நிதியறிக்கைகளை அடிப்படையாக கொண்டது. லேத்து பட்டறைகள், தங்கப்பட்டறைகள், பவர்லூம்கள் உள்ளிட்ட சிறிய உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி ஒழுங்கமைக்கப்படாத உற்பத்தித் துறை நிறுவனங்கள் பற்றுவரவு நிதியறிக்கைகள் வெளியிடுவதில்லை.

மேலே குறிப்பிட்ட சிறு உற்பத்தித் துறை மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைகள் மட்டுமின்றி தையல் கடை, மளிகைக் கடை, சிறிய ஓட்டல்கள் உள்ளிட்டு சொந்தத் தொழில்களிலும் விவசாயத்திலுமே ஆகப் பெரும்பான்மையான மக்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பிரிவினரே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். தலையில் பட்ட காயத்துக்கு புட்டத்தில் களிம்பு தடவுவதைப் போல், தனது நடவடிக்கையால் பாதிப்படைந்த மக்களிடம் அவர்களுக்குச் சம்பந்தமில்லாத துறைகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளை அடிப்படையாக கொண்டு போலியாக கணக்கிட்ட வளர்ச்சி விகிதத்தைக் காட்டி “வெற்றி எனக்குத் தான் கோப்பையும் எனக்குத் தான்” என்று கொக்கரித்துள்ளார் மோடி.

மூன்றாவதாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு செய்யும் முறையே மோடி வந்த பிறகு 2014-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அப்போதிருந்தே உலகளவில் பல்வேறு முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் இந்தியா தனது வளர்ச்சி விகிதத்தை கணக்கீடு செய்வதில் போங்காட்டம் ஆடி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். புதிய முறையின் படி சந்தை விலைகளின் படியே (GDP at Market price) வளர்ச்சி விகிதம் கணக்கீடு செய்யப்படுகின்றது. அதாவது மொத்த பொருளாதார நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட கூட்டு மதிப்புடன் மறைமுக வரியையும் சேர்த்துக் கணக்கிட்டு பின் அதிலிருந்து மானியங்களைக் குறைப்பது. (Gross Value added (factor cost) + Indirect Tax – Subsidies given = GDP at Market price)

மானியங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவது ஒரு புறம் இருக்கட்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டவுடன், பெரிய உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களுடைய வணிக முகவர்கள் தங்களது நிலுவைத் தொகைகளை பழைய நோட்டுக்களில் சரியான காலத்திற்குள் செலுத்தியுள்ளனர். எனவே உற்பத்தியாளார்களும் தங்களது வரியை பழைய நோட்டுக்களில் செலுத்தியுள்ளனர். எனவே இந்தக் காலகட்டத்தில் அரசின் மறைமுக வரி வருவாய் அதிகரித்தது உண்மை – இவ்வாறு வசூலான வரியால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதோடு ஏற்கனவே கொடுக்கப்பட்டு வரும் மானியங்கள் மேலும் குறைக்கப்படும் என்பதே மோடியின் திட்டம்.

இம்மூன்று பிராடுத்தனமான வழிகளில் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக மரணப்படுக்கையில் விழுந்துள்ள இந்தியப் பொருளாதாரத்தின் முகத்தில் பவுடரை அப்பியுள்ளது மோடி அரசு. ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் ஏற்பட்டுள்ள கதவடைப்புகளும் வேலையிழப்புகளும் ஒருபுறம் என்றால், ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளே தடுமாறி வருகின்றன.

கடந்த காலாண்டில் சிமெண்ட் விற்பனை 13 சதவீதமாக குறைந்துள்ளது – இதோடு பிற கட்டுமான உள்ளீட்டுப் பொருட்களின் விற்பனையும் சரிந்துள்ளன. வங்கிக் கடன்களும் வீழ்ந்துள்ளதை ஒப்பிட்டால், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறை அடுத்த ஓராண்டுக்கு மந்த நிலையில் இருந்து மீள முடியாது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையும் வீழ்ந்துள்ளது. இதன் விளைவாக பெரிய உற்பத்தி ஆலைகள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

விவரங்கள் உறுதியனவை, ஆனால் புள்ளிவிவரங்களை எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ளலாம் என்பது மார்க்ட்வைனின் புகழ்பெற்ற கூற்று. மோடி அரசு மக்களை ஏமாற்ற புள்ளிவிவர மோசடியில் ஈடுபட்டது படுகேவலமாக அம்பலமாகியுள்ளது. நமது தெருமுனையில் உள்ள மளிகைக் கடைக்காரரும், தேனீர்க் கடைக்காரரும் அடைந்த துன்ப துயரங்களையும், கூலி வேலைகளுக்குச் செல்லும் மக்கள் பட்ட சிரமங்களையும் நேரில் பார்த்திருக்கிறோம். இந்த உண்மைகள் மக்களின் மனதில் தோற்றுவித்த காயங்களின் மேல் புள்ளிவிவர மிளகாய்ப் பொடியைத் தூவுயுள்ளார் மோடி. இதற்கு விளக்குப் பிடிக்கின்றன முதலாளித்துவ ஊடகங்கள்.

தான் அணிந்திருப்பதைப் பட்டாடை என பேரரசர் வேண்டுமானால் நம்பிக்கொள்ளட்டும் – நாமும் ஏன் அரசவைக் கோமாளிகளாக இருக்க வேண்டும்?

-முகில்

செய்தி ஆதாரம் :