Friday, May 2, 2025
முகப்புகலைகவிதைவெறிக்கும் விழிகளும் உறிக்கும் பார்வைகளும்

வெறிக்கும் விழிகளும் உறிக்கும் பார்வைகளும்

-

மார்ச்  8 : வேண்டும் புதிய உலகம் !

ழைக்கும் மகளிரின்
உரிமைகள் பொசுங்கையில்
திளைக்கும்
மகளிர் தின வாழ்த்து மட்டும்
தெரிவித்தால் போதுமா?

எதையும் கொண்டாடும் வர்க்கம்
இதையும் கொண்டாடினால் தீருமா?
பெண்கள்
சதையும் கிழிக்கும்
இந்த சமூகக் கட்டமைப்புக்கெதிராக
உதையைக் கொடுக்கும் அரசியலின்றி
ஒருநாளும்… பெண்நிலை மாறுமா?

போராட்டத்தின் தேவைகளை
புதைத்துவிட்டு,
கொண்டாட்டத்தின் கூத்துகள் நியாயமா?

கண்டனமும்
கருத்தும் சொன்னதற்காகவே
ஜே.என்.யு. மாணவி குர்மெகர் கவுரை
பலாத்காரம் செய்யப்போவதாக
பகிரங்கமாக மிரட்டுகிறது ஏ.பி.வி.பி.

பெண்கள் பேசினால்
கருத்தையும்
வல்லுறவு செய்யத் துடிக்கும்
அந்தக் காவி பயங்கரத்தைத் தண்டிக்காமல்
மகளிர் தினத்திற்கு
பொருள் உண்டா?

பிறப்புறுப்பை அறுக்கும்
இந்து முன்னணி கயவர்களை
இந்த ஊரில் வைத்துக்கொண்டே
எனக்கும் மகளிர் தின வாழ்த்தா!
கேட்கிறாள் அரியலூர் நந்தினி?

எதற்கு குதரறப்பட்டேன்
எனும் விவரம்
இறுதி மூச்சடங்கும் வரை தெரியாது,
என்னிடம் அந்த மிருகம்
என்ன எதிர்பார்த்தது
என்பது புரியாது,
யாரையும்
தப்பாக நினைக்கத் தெரியாமல்
நட்பாக நம்பினோம் சமூகத்தை…

சிதைக்கும் பாலியல்
ஆணாதிக்க வெறி அடிப்படையின்
சிதைக்குத் தீ மூட்டாமல்,
ஆபாச இணையம், சினிமா, நுகர்வு வெறியை
அப்படியே வைத்துக்கொண்டு
எமக்கும் மகளிர் தினமா?
கேட்கிறார்கள்
எண்ணூர் சிறுமி ரித்திகாவும்
போரூர் ஹாசினியும்.

வெறிக்கும் விழிகளைச் சேர்த்து
வெட்ட வேண்டியிருக்கிறது
இளநீர் சீவும் பெண்.

உறிக்கும் பார்வைகளையும் சேர்த்து
தூசு துடைக்க வேண்டியிருக்கிறது
பழம் விற்கும் பெண்.

உரசும் சீண்டலை இடைமறித்து
லாவகமாக பேருந்துக்குள்ளேயே
பயணிக்க வேண்டியிருக்கிறது
வேலைக்குப் போகும் பெண்.

மேஸ்திரியின் ‘பிளானுக்கு
தப்பிவரும் தருணங்களில்
தலையில் அழுத்தும் கற்களைவிட
சுமக்க முடியாததாகிறது
சுயமரியாதையுள்ள
பெண் தொழிலாளியின் மனது.

காவல் அதிகாரியே ஆனாலும்
கலெக்ட்டரே ஆனாலும்
ஏன்! கடவுளே ஆனாலும்
பெண்ணைப் பிடித்தாட்ட
சீசன் தவறாமல்
ஈசன் வருகிறான்!

மொத்த சமூகமே
பெண்ணை உற்று உற்றுப் பார்க்கும்
ஒரு பொருளாக்கி விட்ட பிறகு
போதாது வெறும் உபதேசம்…
மனித உணர்வுகளையே
பண்டமாக்கி பிண்டமாக்கும்
முதலாளித்துவ கட்டமைப்பையே
அகற்றினால்தான்
இனி பெண்ணுக்கும் சுவாசம்.

– துரை.சண்முகம்