privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்புரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு - போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் ?

புரட்சிகர தொழிற்சங்கத்தால் சிஐடியு – போலீசு கூட்டணி பயப்படுவது ஏன் ?

-

தமிழக மின் துறையில் புரட்சிகர தொழிற்சங்கம் உருவானது எப்படி ?

னியார்மயம்-தாராளமயம் – உலகமயம் அமுலாக்க தொடங்கிய பிறகு தொழிற்சங்க சுல்தான்களாகவும், தொழிலாளி வர்க்கத்தை தொழிற்சங்கவாத, பொருளாதாரவாத புதை சேற்றில் தள்ளி சந்தா மற்றும் துறை வாரியாக தேர்தல் நிதி, கட்சி வளர்சி நிதி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை எதாவது ஒரு பெயரில் மாநாடு என்று நிதி திரட்டுவதை மட்டும்  தொழிற்சங்க நடவடிக்கை என்று சீரழிவின் உச்சத்திற்கே சி.ஐ.டி.யு. – சி.பி.எம் – CITU – CPI(M) கட்சி சென்றுள்ளது.

ஆனால், கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியான மோடி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் முன்வைக்கும் இந்திய அரசியல்-பொருளாதார நிலைமைகளோ தொழிலாளர்களை மாற்றுப் பாதையில் சிந்திக்கும்படி நிர்பந்தித்துக் கொண்டே உள்ளது. சமீப பத்தாண்டுகளில் மேற்கு வங்கம், திரிபுராவில் ஓட்டுப்பொறுக்கி அரசியலை கூட நடத்துவதற்கு திராணியின்றி சிபிஎம் கட்சியினர் தோல்வியடைந்து வருகின்றனர்.

தடைகளைத் தாண்டி புரட்சிகர சங்கத்தை துவக்கிய முன்னணியாளர்கள்

தொழிற்சங்கத்திலும், அரசியலிலும் பூச்சியமாகி விட்ட இவர்களது தலைமையை உதறி தள்ளிவிட்டு வெளியேற ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளியேறும் தொழிலாளர்களை முதலாளிகளும் போலிசும் செய்யத் துணியாத பல்வேறு கீழ்த்தரமான நடவடிக்கைகளை செய்து அணிகளை தக்க வைக்க முயற்சிக்கிறார்கள். இவர்கள் செய்த எட்டப்ப வேலையை பட்டியலிட்டு மாளாது. இனியும் சிஐடியு – CITU சங்கத்தை நம்புவதற்கு ஊழியர்கள் தயாராக இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக மின்சாரவாரியத் துறையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதிய தொழிற்சங்கம் துவங்கப்பட்டுள்ளது

 

தமிழகத்தில் மின்சாரவாரியத்தை பொறுத்தவரையில் குறிப்பாக 16 மாதமாக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தள்ளிப்போடுவதோடு, 2.5 கோடி மின் இணைப்புகள் நிலுவையில் உள்ள நிலையில் வெறும் 74,000 ஊழியர்களை மட்டும் கொண்டு வேலை வாங்குகிறது நிர்வாகம். ஏற்கனவே 1.5 கோடி இணைப்புகள் நிலுவை இருந்த போது ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றினார்கள். ஆனால், இப்பொழுது வேலை அதிகம், ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் புதிய ஆட்களை நிரப்பாமல் இருப்பது குறித்து  தொழிற்சங்கம் போர்குணமாக போராடவில்லை, பணி உயர்வு என்று எதையும் பேசுவதில்லை. இந் நிலையில் சிஐடியு மீது  நம்பிக்கையிழந்து அதனை விட்டு வெளியேறி வருகின்றனர்.  சிலர் வேறு புகலிடம் தெரியாமல் அங்கேயே குமுறிக் கொண்டுள்ளனர்.

தோழர்.ஸ்ரீதர்

கடந்த 2013-ம் ஆண்டு சொத்து குவிப்பு குற்றவாளி ஜெயா ஆட்சியில்  கடும் மின்வெட்டு நிலவிய போது தமிழகம்  தழுவிய அளவில் பு.மா.இ.மு, புஜதொமு ஆகிய அமைப்புகள் சார்பாக “திட்டமிட்டே திணிக்கப்படுகிறது மின்வெட்டு! “பவரை கையில் எடுத்தால் பவர் வரும்” என்ற தலைப்பில் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம்  நடத்தப்பட்டது. இந்த  பொதுக்கூட்டங்கள் மின் துறை ஊழியர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றது.

தொடர்ந்து பு.ஜ.தொ.மு-வின் செயல்பாடுகளை, தொழிலாளர்கள் பிரச்சனையில் பு.ஜ தொ.முவின் நிலைப்பாடுகளை கவனிக்க ஆரம்பித்ததுடன் துண்டறிக்கை, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், புதிய தொழிலாளி மற்றும் புரட்சிகர அமைப்புகளின் வெளியிடுகளை தொடர்ந்து படித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பில் செயல்பட்ட தோழர்  ஸ்ரீதர், இளமின் பொறியாளர். சிஐடியு சங்கத்தின் தொழிற்சங்க  செயல்பாடுகளும், இன்றைய அரசியல் சூழலில் தொழிலாளி வர்க்கத்தை காக்கும் கொள்கை இல்லாமல் செயல்படுவதையும் பிடிக்காமல் அதிலிருந்து விலகி எமது தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை தொடர்பு கொண்டு இணைவதாக கூறினார். அவரை தொடர்ந்து முருகையன், பாவாடைசாமி, சண்முகம் மற்றும் பல தோழர்களை இணைத்து புதிய தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி  என்ற புதிய தொழிற்சங்க அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் துவக்க விழாவை முறையாக நடத்துவதென முடிவு செய்து அதற்கான பிரசுரம், சுவரொட்டிகள் அனைத்தும் தயாரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக விநியோகிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த CPM – சிபிஎம் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன்,  தோழர் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு “நீங்கள் வேறு சங்கத்திற்கு செல்ல வேண்டாம் எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம்” என்றார். அதற்கு தோழர் ஸ்ரீதர், ”நான் வெளியேறி இன்னொரு அமைப்பிற்கு வந்த பிறகு பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று பதிலளித்துள்ளார்.

அதற்கு CPM மாதவன் “சரி செல்வது என்று முடிவெடுத்து விட்டீர்கள் ஏஐடியூசி – சிபிஐ கட்சிக்கு (AITUC)  செல்லுங்கள். புஜதொமு NDLF க்கு செல்ல வேண்டாம்” கூறியுள்ளார். 0அதற்கு தோழர் ஸ்ரீதர் “நான் எங்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்ல தேவையில்லை” என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

தொடர்ந்து முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் (இவர் தொழிலாளிகளுக்கு நெருக்கமனவரா இல்லை முதலாளிகளுக்கு அனுசரணையானவரா என்பதை சிபிஎம் கட்சியினரே அறிவார்கள்) தோழர் ஸ்ரீதரை தொடர்பு கொண்டு “ஒரு விபத்து நடக்க போகிறது. அந்த விபத்தில் மாட்டிக் கொண்டால் மரணம் நிச்சயம். அந்த விபத்து தான் NDLF – புஜதொமு” என்று பதறினார். “அதனை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று தோழர் பதில் கூறவே இணைப்பை துண்டித்து விட்டார். இனிமேல் அவரிடம்  பேசி பயனில்லை என்பதை புரிந்து கொண்டு முன்னாள் மாவட்ட செயலரை அனுப்பி இந்த விழாவை தள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார்… தோழர் “முடியாது” என்றதும் சென்று விட்டார்.

பிறகு, மாட்டு வண்டி  சங்கத் தொழிலாளர்களையும், ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தொழிலாளர்களையும் தூண்டி விட்டு பேச்சுவார்த்தைக்கு  சமாதான தூது அனுப்பினார்கள். இந்த வழிமுறைகள் எல்லாம்  தோழர் ஸ்ரீதரிடம் பேசி  முடியாமல் போனதால் தோழர் முருகையனிடம் வந்து பேசியுள்ளார்கள். தொடர்ந்து வீட்டிற்க்கு செல்வது, வேலை செய்யும் அலுவலகம் செல்வது என தொடர்ந்து அவரை சந்தித்துள்ளார்கள். அவரும் உறுதியாக நிற்கவே வேறு வழியின்றி அணிகளிடம் இப்பிரச்சனையை கொண்டு சென்றனர்.

கடந்த 15-ம் தேதி அன்று சிஐடியு கூட்டம் போட்டு தோழர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டோம். அந்த விழாவிற்கு யாரும் போகக்கூடாது என்று தீர்மானம் போட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்த வேலையை செய்து கொண்டிருக்கும்பொழுதே கடலூர் மாவட்டபோலீசின் SP – CID மற்றும் கியூ பிரிவு CITU  முன் வைத்த இதே கோரிக்கைகளை மிரட்டும் தொனியிலும், ஆலோசனைக் கூறுவது போலவும் களமிறங்கினர் என்பது CITU க்கும் போலிசுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

கிராமம் தோறும் கிளை கமிட்டியை கூட்டி யாரும் கூட்டத்திற்கு செல்லக் கூடாது என்று தடை போட்டுள்ளார்கள். தொழிலாளர்களின் வீடு வீடாக சென்று இந்த கூட்டத்திற்கு செல்ல வேண்டாம். அது மோசமான சங்கம், உங்களை நடுத்தெருவில் விட்டு விடுவார்கள் என்று  அவதூறான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்கள்.

மூன்று கார்களை வாடகைக்கு பிடித்து சிதம்பரம், விருதாசலம், நெய்வேலி, தொழுதூர், திட்டக்குடி ஆகிய ஊர்களுக்கு சென்று யாரும் சிஐடியு வில் இருந்து வெளியேராதீர்கள். இது நக்சலைட் சங்கம், இதில் சேர்ந்தால் வழக்கு வரும் என பீதியூட்டி பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இவர்களின் பொய் பிரச்சாரத்தை அன்னவெளி,கூத்தப்பாக்கம் ஆகிய பகுதி தொழிலாளிகள் காறி துப்பினர். அதுமட்டுமில்லாமல்,   பிரசுரம் போட்டு இவர்களை  நீக்கி விட்டோம். இவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் விநியோகித்தனர். இந்த சம்பவம் சிஐடியு தொழிலாளர்கள் மத்தியில் எரிச்சலை எற்படுத்தியுள்ளது.

சங்கத்தில் இருந்து வெளியேறியவர்களை நீக்கிவிட்டதாக பொய்யுரைக்கும் சி.ஐ.டி.யு நிர்வாகம்

ஏற்கனவே அவர்கள் வெளியேறி விட்டார்கள். போனவர்களை பற்றி  எதற்கு நாம் பேச வேண்டும். நமது சந்தாவில்  நாமே நோட்டிஸ் போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று CITU உறுப்பினர்களே தலைமையிடம் எதிர்கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொழிலாளர்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து விலகி வெறுமனே பொருளாதர கோரிக்கை, சட்டவாதத்தை மட்டுமே முன்னிறுத்தி வளர்ப்பதால் தான் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்கிறது CITU சங்கம்.

அதன் வெளிப்பாடு தான்  உறுப்பினர்கள் பிரிந்து போகும் ஜனநாயக உரிமையை கூட மறுக்கிறது. இவர்கள் தான் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு மற்ற ஓட்டுப்பொறுக்கி கட்சிகளிடம் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க போகிறார்களாம்.

இதற்கிடையில் அரசு தரப்பில்  கியூ பிரிவு போலிசு தோழர்.ஸ்ரீதரை தொடர்பு கொண்டு அது நக்சலைட் அமைப்பு. அதில் சேராதீர்கள். உங்கள் வேலைக்கு பிரச்சனை வந்துவிடும் என்று மிரட்டியுள்ளார்கள். இந்த மிரட்டலுக்கு பயப்படாத தோழர், என் வேலை போனாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் அது மா-லெ கட்சி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டுள்ளனர்.

அதற்கு தோழர்.ஸ்ரீதர் “எல்லா கட்சியிலும் பொறுப்பாளர்கள் தான் தொழிற்சங்கத்திலும் பொறுப்பில் இருப்பார்கள். CITU செளந்தர்ராஜன் கூட அப்படி தான் என்று கூறியதும் வேறு வழியின்றி போனை வைத்து விட்டது கியூ பிரிவு போலிசு.”

ஒரு பக்கம் சிஐடியு வில் இருந்து  பிரிந்து போகக்கூடாது என்று போலிக் கம்யுனிஸ்ட்களின் மிரட்டல், மற்றொருபுறம் அரசு தரப்பில் போலிசு மிரட்டல் என்று தொடர்ந்து வந்த  தடைகளை  எல்லாம் தகர்த்து தான் புதிய சங்கம் வெற்றிகரமாக துவக்கப்பட்டது. இன்னும் வரவிருக்கும் பல்வேறு தடைகளையும் தகர்ப்போம்.

-வினவு செய்தியாளர், புதுச்சேரி
(புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உதவியுடன்)