privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம் !

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு : செத்த பாம்பை அடித்த வீரம் !

-

“மை லார்ட்” என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தமுள்ளது. பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.  அரசியல்வாதிகளாக இருக்கக்கூடியவர்கள் பொதுவாழ்வில் எப்படித் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டக்கூடியதாகவும், வரலாற்றுச் சிறப்புக்குரிய வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.  ஊழல் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களைப் புற்றீசல் போலச் சூழ்ந்திருந்து அவர்களைச் சீரழிக்கும் நிழல் அதிகார மையங்களுக்கும் விடுவிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றே இந்தத் தீர்ப்பைக் கருத வேண்டும்.

வையெல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக ஊடகங்களும் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும் சிலாகித்துச் சூட்டியிருக்கும் புகழாரங்கள். இந்தத் தீர்ப்பின் இணைப்பாக நீதிபதி அமிதவராய் ஊழல் குறித்தும் அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் கூறியிருக்கும் தத்துவ ஞானபோதனைகளை எடுத்துப் போட்டு, ஊழலுக்கு எதிராக உச்சநீதி மன்றம் வெட்டரிவாளைத் தூக்கிவிட்டதாகவும், அதனால் ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் அஞ்சி நடுங்குவதாகவும் ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

அந்நியன், இந்தியன் பட ரசிகர்கள் வேண்டுமானால் இத்தீர்ப்புக்கு மயங்கலாம். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்துக்கு இந்த வழக்கில் நீதிமன்றங்கள் நடந்துகொண்ட விதம் வேறொரு நம்பிக்கையை அளித்திருக்கிறது. “ஊழல் வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்கலாம், அதற்குச் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் எப்படியெல்லாம் வளைத்துப் போட்டுக் கொள்ளலாம் என்பதை எடுத்துக்காட்டி, பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அஞ்சத் தேவையில்லை” என அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது இந்த வழக்கு.

“புற்றுநோயைவிட மோசமானது ஊழல். இதை நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம்தான் ஒழிக்கமுடியும்” எனத் தீர்ப்பில் அருள்வாக்கு சொல்லியிருக்கிறார், நீதிபதி அமிதவராய். இந்தியாவே கவனித்துவந்த இந்த புற்றுநோய்க் கட்டியை ஒழிப்பதற்கே 21 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றால், சமூகம் முழுவதுமே வேர்விட்டிருக்கும் ஊழலை நீதிமன்றங்கள் மூலம் ஒழிப்பதற்கு எத்தனை ஆண்டு காலம் ஆகும்? அதுவரை, “என்றாவது ஒருநாள் நீதி நிச்சயம் கிடைக்கும்” என்ற நம்பிக்கையில் மக்கள் அனைவரும் கையைக் கட்டிக்கொண்டு, நடப்பதை வேடிக்கை பார்க்க வேண்டும் போலும்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதி மன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் (இடது) மற்றும் அமிதவராய்.

“இந்தத் தீர்ப்பின் ஆவணங்கள் பருமனாக உள்ளன. இந்தப் பாரத்தை நாங்கள் எடுத்துக் கொண்டோம்” என்று இலக்கியமாய் நெகிழ்ந்திருக்கிறார் நீதிபதி அமிதவராய். பாரம் பெருத்துப் போனதற்கு இந்த வழக்கு 21 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது முக்கிய காரணமில்லையா? அந்தப் பாவத்தில் நீதிமன்றங்களுக்குப் பங்கில்லையா? இந்தக் குற்றக்கும்பலின் பாரத்தைத் தமிழக மக்கள் இத்தனை ஆண்டுகள் சுமக்கக் காரணமே நீதித்துறைதான். இந்த 21 ஆண்டுகளில் உச்சநீதி மன்றமே எத்தனை முறை ஜெயாவைக் கைதூக்கிவிட்டிருக்கிறது?

ஒரு கிரிமினல் வழக்கை எப்படியெல்லாம் இழுத்தடிக்கலாம் என்பதற்கு ஜெயாவின் வழக்கைச் சட்ட மாணவர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம் என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். அது, ஜெயாவின் சாதனை மட்டுமேயல்ல.

விசாரணை நீதிமன்றங்கள் முதல் சென்னை, பெங்களூரு உயர் நீதி மன்றங்களும் உச்சநீதி மன்றமும் எப்படியாவது ஜெயாவைக் காப்பாற்றுவதற்காக நடத்திய தகிடுதத்தங்களைப் பட்டியல் போட்டால், அது வழக்கறிஞர்களுக்கே பெரிய “பாரமாக” இருக்கும் என்பதால், உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் ஆற்றிய பாத்திரத்தை நினைவூட்ட சிலவற்றை மட்டும் சுருக்கமாகத் தந்திருக்கிறோம்.

வழக்கை இழுத்தடித்ததில் உச்சநீதி மன்றத்தின் பங்கு !

சொத்துக் குவிப்பு வழக்கை 2003-ஆம் ஆண்டின் இறுதியில் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு மாற்றிய உச்சநீதி மன்றம், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என அந்தத் தீர்ப்பில் உத்தரவிட்டது. மேலும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஒரு வருடத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்று பிறிதொரு வழக்கில் உச்சநீதி மன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஆனால், ஜெயாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தனது ஆணைகளை உச்சநீதி மன்றமே காற்றில் பறக்கவிட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை முடக்க, இலண்டன் ஹோட்டல் வழக்கையும் இதனுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுச் செய்து, சாதகமான தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பெற்றார் ஜெயா. இதனை எதிர்த்து தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்சநீதி மன்றம் அது குறித்து விசாரித்து உடனே தீர்ப்பு வழங்காமல், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிப்பதற்கே இடைக்காலத் தடை விதித்தது. இந்த இடைக்காலத் தடை காரணமாக நான்கு ஆண்டுகள் வழக்கு விசாரணை முற்றிலுமாக முடக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றமே பொறுப்பு. இது உச்ச நீதிமன்றம் ஜெயாவுக்குச் செய்த மிகப்பெரிய சேவை.

தற்போதைய தீர்ப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதாவை விடுவித்த குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் ஜூன் 2016-இல் முடிந்து விட்டது. பிப், 2017 -இல் ஜெயா இறந்த பிறகு, அரசு வழக்குரைஞர் துஷ்யந்த் தவே நினைவூட்டிய பிறகு, சசிகலா முதலமைச்சர் நாற்காலியில் உட்கார முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில்தான் தீர்ப்பை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள், நீதிபதிகள்.

குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்திருப்பதற்கு மேல் இவ்வழக்கில் புதிய வெளிச்சம் எதையும் இந்தத் தீர்ப்பு பாய்ச்சவில்லை. தண்டனையைக் கூட்டவில்லை. குமாரசாமியின் முறைகேடான தீர்ப்புக்குக் கடுமையான கண்டனங்களும் இல்லை. ஜெயா மரணமடைந்துவிட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீடு மட்டும் தணிக்கப்படுகிறது (abated) எனக் கூறுகிறது இத்தீர்ப்பு. தணிந்து விட்டது என்று கூறியிருப்பதனால் நூறு கோடி அபராதத்தைக் கட்டத் தேவையில்லை என்றும் ஒரு வாதம் கிளப்பப்படுகிறது. இதற்கு ஏன் இந்தத் தாமதம் என்று கேள்வி எழுப்பினாலே, கேட்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏவுவார்கள் நீதிபதிகள்.

உச்சநீதி மன்றம் ஜெயாவிற்கு வழங்கிய சலுகைகள் !

2001-இல் இந்த வழக்கு சென்னையில் நடந்தபோது, சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்து கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு ஜெயாவிற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. “தனக்குத் தொண்டை கட்டியிருப்பதால் நீதிமன்றத்திற்கு வந்து பதில் அளிக்க முடியாது” என அலட்சியமாக மறுத்தார், ஜெயா. நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் கேள்விகளோடு போயசு தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்படிப்பட்ட சலுகையை ஜெயாவைத் தவிர, இந்தியாவில் வேறெந்த கிரிமினலுக்கும் நீதிமன்றம் வழங்கியதாகத் தெரியவில்லை.

ஜெயாவின் திமிர் குன்ஹாவிடம் செல்லுபடியாகவில்லை. நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு அவர் ஆணையிட்டார். கோயில் கோயிலாகப் போவதற்கு நேரம் இருக்கிறது, நீதிமன்றத்துக்கு வர நேரமில்லையா என்று கேட்டார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா. உடனே உச்ச நீதிமன்றம் போனார் ஜெயா. “உங்களுக்கு எந்த தேதி வசதிப்படுமோ, அந்தத் தேதியில் நீதிமன்றத்திற்குச் சென்று பதில் அளியுங்கள்” என ஜெயாவிற்குச் சலுகை காட்டியது உச்சநீதி மன்றம்.

அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யாவிற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து, அவரைப் பதவி விலக வைத்த ஜெயா-சசி கும்பல், கர்நாடக பா.ஜ.க. அரசைப் பயன்படுத்தி அவரது இடத்தில் பவானி சிங்கை நியமித்துக் கொண்டது. பவானி சிங்கும், அச்சமயத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த பாலகிருஷ்ணாவும் கூட்டுச் சேர்ந்து, ஜெயா-சசி கும்பலுக்குச் சாதகமாக வழக்கை நடத்திச் சென்றனர்.

பவானி சிங்கின் நியமனமே முறைகேடாகச் செய்யப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டிய தி.மு.க., அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வுயர் நீதிமன்ற நீதிபதி வகேலா பவானி சிங் நியமனத்தை ரத்து செய்தார்.

“பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராகத் தொடர வேண்டும், நீதிபதி பாலகிருஷ்ணாதான் வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஜெயலலிதா. “இந்த ஏட்டய்யாவோடுதான் போவேன்” என்ற வடிவேலு காமெடியை விஞ்சிய கேலிக்கூத்து இது. தனக்கு எதிராக இந்த அரசு வக்கீல்தான் வழக்கு நடத்த வேண்டும், இந்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று ஒரு குற்றவாளி கோரிக்கை வைத்த முதல் வழக்கும் இந்தியாவிலேயே இதுவாகத்தான் இருக்கும்.

இவ்வழக்கை விசாரித்த சௌஹான்-பாப்டே அமர்வு, குற்றவாளிகள் எதைக் கோரினார்களோ அதையே உத்தரவாகப் பிறப்பித்தார்கள். பவானி சிங் நியமனம் முறைகேடானது என்பது நிரூபணமான பிறகும், “புதிய வழக்குரைஞரை நியமித்தால், வழக்கு விசாரணை தாமதப்படும்” என்று கூறி பவானி சிங் தொடருவதற்கு அனுமதி அளித்ததுடன், நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு, வழக்கு விசாரணை முடியும் வரை பதவி நீட்டிப்பு வழங்குமாறும் கர்நாடக அரசுக்கு சிபாரிசு செய்து, கூடுதலாகக் கூவினார்கள்.

ஜெயாவின் தரகராக தலைமை நீதிபதி தத்து !

நீதிபதி குன்ஹாவால் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட மறுநிமிடமே, தீர்ப்பை நிறுத்தி வைத்து பிணை வழங்கக் கோரி, கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தனர். “குற்றவாளிகளுக்கு தற்பொழுது பிணை அளிக்க வேண்டிய அவசியமில்லை” என்பதைப் பல்வேறு சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி மறுத்தார், கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி சந்திரசேகரா.

சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயா−சசி கும்பலுக்குப் பிணை வழங்க மறுத்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி சந்திரசேகரா.

இத்தீர்ப்பை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, அப்பொழுது உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தத்து தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஜெயாவுக்கு பிணை மறுத்த சந்திரசேகரா, ஊழல் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கியிருக்கும் வழிகாட்டுதல்களை விரிவாக எடுத்துக்காட்டியிருந்தார். ஆனால் தத்துவோ, அவை குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல், தடாலடியாக ஜெயாவுக்குப் பிணை வழங்கினார்.

இந்த தீர்ப்பு ஒரு அப்பட்டமான முறைகேடு என்று எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதால், அதை மறைக்கும் விதத்திலும், ஜெயலலிதாவுக்கு இன்னொரு சலுகை வழங்கும் விதத்திலும் கூடுதலாக ஒரு பித்தலாட்டமும் செய்தார் தத்து.

தத்து பிணை வழங்கிவிட்ட போதிலும், உயர்நீதி மன்றம் நிரபராதி என்று தீர்ப்பளிக்காத வரை, ஜெயாவால் மீண்டும் முதல்வராக முடியாது என்ற நிலையே இருந்தது. ஜெயா மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு ஏற்பாடு செய்து தரும் விதத்தில், மேல்முறையீட்டின் விசாரணையை மூன்றே மாதங்களில் முடிக்க வேண்டுமென்றும், இழுத்தடிக்க அனுமதிக்க முடியாது என்றும், மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு நாள் கூடப் பிணையை நீட்டிக்க முடியாது என்றும் ரொம்பவும் கண்டிப்பான பேர்வழி போலத் தீர்ப்பில் குறிப்பிட்டார் தத்து. இதைவிடத் தரம் தாழ்ந்த ஒரு மோசடி நாடகத்தை உச்சநீதி மன்றம் கண்டிருக்காது என்றே சொல்ல வேண்டும்.

இந்தப் பிணை மனு விசாரிக்கப்படுவதற்கு முன்னரே, டிராபிக் ராமசாமி தத்துவிடம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஆயிரம் கோடி ரூபாய் உங்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக கூறப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது, சம்மந்தப்பட்ட நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதுதான் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் மரபு. ஆனால் தத்துவோ, “அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அந்தப் புகாரையே அலட்சியப்படுத்தினார்.

இந்தப் பிணை வழக்கில் ஜெயாவின் சார்பாக வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். அவரது மகன் ரோஹிண்டன் நாரிமன் உச்சநீதி மன்ற நீதிபதியாகப் பணியாற்றுவதால், பாலி நாரிமன் அவ்வழக்கில் வாதாடுவது பார் கவுன்சில் வகுத்துள்ள நெறிகளுக்கு எதிரானது என்று டிராபிக் ராமசாமி புகார் செய்த போதிலும், அந்த முறைகேட்டையும் அனுமதித்தார் தத்து.

குமாரசாமி மட்டுமா எட்டப்பன்?

ஜெயாவை விடுதலை செய்ய “நாலும் மூணும் எட்டு” என்று கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு, சிரிப்பாய் சிரித்த தீர்ப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அந்த வழக்கை குமாரசாமியை வைத்து விசாரித்து, ஜெயாவுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்ற திட்டத்தோடு உச்சநீதி மன்றத்தின் துணையுடன், கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் அரங்கேறிய முறைகேடுகளை எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஜெயாவின் கைக்கூலியாகச் செயல்பட்ட அரசு வழக்குரைஞர் பவானி சிங் (இடது); சிறப்பு நீதிமன்றத்திற்கு பவானி சிங் நியமிக்கப்பட்டது முறைகேடானது எனத் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி வகேலா.

குன்ஹா தீர்ப்பு வழங்கியதோடு, பவானி சிங்கின் பணி முடிந்து விட்டதெனினும், ஜெயலலிதாவின் பிணை மனுவையும் மேல் முறையீட்டையும் எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கும் பவானி சிங்கையே நியமித்து உத்தரவு பிறப்பித்தது பன்னீரை பினாமி முதல்வராக கொண்ட ஜெயா அரசு. கர்நாடக அரசால் நடத்தப்பட்ட இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என்ற போதிலும், வேண்டுமென்றே இந்த முறைகேட்டைச் செய்தது தமிழக அரசு.

பவானி சிங் நியமனத்தை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் ஐந்து முறை அடுத்தடுத்து வழக்குகளைத் தொடுத்தார், அன்பழகன். இவ்வழக்குகளை மாறி மாறி விசாரித்த கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதிகளுள் வகேலா என்பவரைத் தவிர, மற்ற நீதிபதிகள் பவானி சிங் நியமனத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டனர்.

நீதிபதி வகேலா பவானி சிங் நியமனத்தை ரத்து செய்துவிடுவார் என்ற நிலையில் “என்னுடைய நியமனத்துக்கு எதிராக நீங்கள் ஏற்கெனவே தீர்ப்பளித்தவர் என்பதால், உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று பவானி சிங்கை வைத்து வாதாடியது ஜெயா கும்பல். வகேலா வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார். மேல்முறையீட்டு வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்று தத்து போட்டிருக்கும் உத்தரவைக் காட்டி, பவானி சிங்கே அரசு வழக்கறிஞராகத் தொடருவதை அனுமதித்துத் தீர்ப்பளித்தது, கர்நாடகா உயர்நீதி மன்றம்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்பழகன் உச்சநீதி மன்றம் சென்றார். வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான மதன் லோகூர், பவானி சிங்கின் முறைகேடான நியமனத்தை ரத்து செய்ததோடு, மேல் முறையீட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதியான பானுமதி, ஜெயலலிதாவை அரசு விழா மேடையிலேயே புரட்சித்தலைவி என்று துதிபாடியவர். இவர் பவானி சிங்கின் நியமனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவின் தரகனாகச் செயல்பட்ட உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து (இடது); சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயாவைத் தப்புக் கணக்கின் மூலம் விடுதலை செய்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமி.

இந்த  முரண்பட்ட தீர்ப்பின் காரணமாக மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது இவ்வழக்கு. “பவானி சிங்கின் நியமனம் முறைகேடானது, மேல்முறையீட்டு வழக்கை கர்நாடகா உயர்நீதி மன்றம் சட்டத்திற்குப் புறம்பாக அவசர அவசரமாக நடத்தி வருகிறது” என்பதை அந்த அமர்வு ஒப்புக்கொண்டாலும், வழக்கைத் தொடக்கத்திலிருந்து மீண்டும் விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் கூறி, குமாரசாமி நடத்திய முறைகேடான விசாரணையை நியாயப்படுத்தியது. கர்நாடக அரசால் பவானி சிங்கிற்குப் பதிலாக அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட பி.வி. ஆச்சார்யாவும், அன்பழகனும் தமது எழுத்துப்பூர்வ வாதத்தை நீதிபதி குமாரசாமியிடம் தாக்கல் செய்யலாம் எனக் கூறி, தனது கட்டைப்பஞ்சாயத்து உத்தரவுக்கு சப்பை கட்டியது. உச்ச நீதிமன்றம் நிகழ்த்திய இத்தனை முறைகேடுகளுக்குப் பின் கடைசியாக வந்த முறைகேடுதான் நாலும் மூணும் எட்டு என்று கூறிய குமாரசாமியின் தீர்ப்பு.

பஞ்சுமிட்டாய் நீதி

குற்றவாளிகளான ஜெயா உள்ளிட்ட நால்வரும், இந்த வழக்கை இழுத்தடிப்பதற்காக ஏறத்தாழ 300 மனுக்களை அடுத்தடுத்து, ஒருவர் மாற்றி ஒருவர் மாற்றி போட்டிருக்கின்றனர். இந்த அளவுக்கு நீதிமன்றத்தைக் கேலிப்பொருளாக்கியவர்கள் யாரும் இல்லை. ஆனால் நீதிமன்றங்களோ, கைப்புள்ளை கணக்காக அவற்றையெல்லாம் துடைத்துப்போட்டுவிட்டு, இக்கட்டான தருணம் ஒவ்வொன்றிலும் ஜெயாவைக் காப்பாற்றி விட்டன. கீழிருந்து மேல் வரை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு நீதிமன்றங்கள் நடத்திய இந்த கள்ள ஆட்டத்தின் தீய விளைவுகளைத் தமிழக மக்கள் அனுபவிக்க நேர்ந்தது.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த 21 ஆண்டுகளில், 2001, 2011, 2016 என மூன்று முறை குற்றவாளி ஜெயலலிதா முதலமைச்சர் ஆக முடிந்தது. சசிகலாவும், இளவரசியும் ‘துரைசாணிகளைப்’ போல, அதிகாரம் செலுத்த முடிந்தது. சிறை வாசமும், கொலை வழக்குகளும் தொழில்முறை கிரிமினல்களின் “அந்தஸ்தை” உயர்த்துவதைப் போல, இந்த ஊழல் வழக்கு ஜெயாவை, ஓட்டுப்பொறுக்கி கிரிமினல்கள் அனைவரும் கண்டு வியக்கும் “சொர்ணாக்கா” ஆக்கியது.

வழக்கிற்கு முன்னால் ஜெயா-சசி கும்பல் அடித்த கொள்ளையைக் காட்டிலும் அதற்குப் பின்னர் அடித்த கொள்ளை பன்மடங்காகப் பெருகியது. தானே நேரடியாகக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, மொத்த அ.தி.மு.க. கட்சியையும் அரசு எந்திரத்தையுமே ஒரு கொள்ளைக்கூட்டமாக ஒழுங்கமைத்து வெளிப்படையாகவே திருடியதும் இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிதான். மொத்தத்தில் ஊழலுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல நினைப்பதே முட்டாள்தனம் என்ற அனுபவத்தைத்தான் இந்த வழக்கு சமூகத்துக்கு வழங்கியிருக்கிறது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயா, குன்ஹா தீர்ப்புக்குப்பின் வெறும் 21 நாட்கள்தான் சிறைவாசத்தை அனுபவித்தார். தற்பொழுது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவோ, சிறையிலிருந்தபடியே தனது கூட்டத்தை இயக்கும் மாஃபியாத் தலைவனைப் போலத் தமிழக அரசை இயக்குகிறார். இவையனைத்தும் இந்த வழக்கில் நீதி வென்றிருப்பதையா காட்டுகின்றன?

சொத்துக் குவிப்பு வழக்கில் கண்ணுக்குத் தெரிவது நான்கு குற்றவாளிகள்தான். இவர்கள் தவிர, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், பத்திரப் பதிவு அதிகாரிகள், பொதுத்துறை வங்கி அதிகாரிகள் என ஒரு பெரும் அதிகார வர்க்கமே இந்தக் குற்றத்தின் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். மேலும், தத்து, சௌஹான், பாப்டே, செல்லமேஸ்வர், குமாரசாமி, அருணா ஜெகதீசன், பானுமதி என்றொரு நீதிபதிகளின் கூட்டமே, ஜெயாவிற்கு விசுவாசமாக நடந்துகொண்டிருப்பதை இவ்வழக்கு நெடுகிலும் காண முடியும். குற்றத்தின் பங்குதாரர்களாக இருந்த இவர்கள் அனைவருமே, இப்பொழுதும் நம்மைச் சுற்றி யோக்கியவான்களைப் போல நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, ஜெயாவிற்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதி நீதிபதிகள் சௌஹான் (இடது) மற்றும் பானுமதி.

இன்று சசிகலா கும்பல் சிறையில் இருக்கிறது என்றால், நிச்சயமாக அதற்கு உச்ச நீதிமன்றம் காரணமல்ல. கீழிருந்து மேல் வரை நீதித்துறையிலும், காங்கிரசு- பா.ஜ.க. கட்சிகளிலும், அதிகார வர்க்கத்திலும் நிறைந்திருந்த ஜெயலலிதாவின் ஆட்கள் இந்த வழக்கை ஒவ்வொரு படியிலும் முடக்கினார்கள். அதையெல்லாம் மீறி ஓட்டைகள் நிறைந்த இந்த சட்டத்தின் வழியாகவும் இப்படி ஒரு தீர்ப்பை வரவழைக்க முடிந்ததற்கு நான்கு பேரைக் காரணமாகச் சொல்லலாம்.

ஜெயா-சசி கும்பல் அடித்த கொள்ளையில் 66 கோடி என்பது ஒரு சிறு துளிதான். எனினும், தப்பிக்க முடியாத, ஓட்டைகள் இல்லாத, அசைக்க முடியாத சாட்சியங்களின் அடிப்படையிலான குற்றவியல் வழக்காக இதனைக் கட்டியமைத்த விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு,

ஜெயா-சசி கும்பல் மற்றும் கர்நாடக பா.ஜ.க. அரசின் மிரட்டல்களுக்கும் அவதூறுகளுக்கும் பணிந்து போகாமல் நேர்மையாகவும் ஈடுபாட்டுடனும் விசாரணையை நடத்திச் சென்ற அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா,

இந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைந்து கொண்டு, ஜெயாவைக் காப்பாற்ற முனைந்த நீதித்துறையின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கி, ஒவ்வொரு கட்டத்திலும் இந்த வழக்கு செத்து விடாமல் காப்பாற்றி, குன்ஹாவிடம் கொண்டு சேர்த்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் தி.மு.க.வின் வழக்கறிஞர்கள்,

அசைக்கமுடியாத ஆதாரங்களோடு குற்றவியல் வழக்காகக் கட்டியமைத்த விசாரணை அதிகார நல்லம்மா நாயுடு (இடது); நேர்மையாக விசாரணையை நடத்திச்சென்ற அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா (நடுவில்); ஜெயாவின் அதிகார பலத்துக்குப் பணிந்துவிடாமல் இரும்புப் பின்னலாகத் தீர்ப்பை எழுதிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

ஜெயாவின் அதிகார பலத்தையும் ஆணவத்தையும் பார்ப்பனத் திமிரையும் எள்ளளவும் சட்டை செய்யாத, நீதிமன்ற அறைக்குள் மற்ற குற்றவாளிகள் எப்படி நடத்தப்படுவார்களோ அதே போன்று ஜெயலலிதாவையும் நடத்தும் துணிவினை இயல்பாகக் கொண்டிருந்த, உச்சநீதி மன்றத்தின் அறிவார்ந்த நீதிபதிகள் எத்தனை முயன்றாலும் அறுக்கவியலாத இரும்புப் பின்னலாகத் தீர்ப்பை எழுதும் திறமையும் கொண்டிருந்த நீதிபதி குன்ஹா.

இந்த நான்கு பேரைத் தவிர ஜெயாவின் தண்டனைக்கு காரணமான ஐந்தாவது நபரும் உண்டு. அது ஜெயா-சசி கும்பலேதான். அறிவும் சுயமரியாதையும் உள்ளவர்கள் அண்டத்தயங்கும் ஜெயாவின் அரசவை, அதில் நிறைந்திருந்த துதிபாடிகள், பாசிசக் கும்பலுக்கே உரிய திமிர், குறுக்குப் புத்தி ஆகியவை காரணமாக வழக்கினை முடிவே இல்லாமல் இழுத்து விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு, ஆச்சார்யாவிடமும், குன்ஹாவிடமும் வந்து சிக்கிக் கொண்டார்கள்.

இந்த தீர்ப்பு ஜெயா உயிருடன் இருந்திருந்தால் வந்திருக்குமா? 21 ஆண்டு வரலாறு ஐயத்தையே தருகிறது. ஜெயாவுக்கு 100 கோடி அபராதம் என்று கூறிவிட்டு, மரணத்தின் காரணமாக அவருடைய மேல்முறையீடு தணிந்திருப்பதாகவும் இத்தீரப்பு குறிப்பிட்டிருப்பது குழப்பத்தையே விதைத்திருக்கிறது. டான்சி வழக்கில் ஜெயாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்து தீர்ப்பெழுதிய பெருமை கொண்டது உச்ச நீதிமன்றம். வேண்டுகோள் விடுவதற்குத் தகுதியான மனச்சாட்சி இல்லாமலிருப்பதும், நீதி கிடைப்பதற்கான ஒரு நிபந்தனை போலும்!

-குப்பன்

புதிய ஜனநாயகம், மார்ச் 2017