Tuesday, August 9, 2022
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?

இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?

-

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

டந்த செவ்வாய்க்கிழமை 11.04.2017 அன்று பிரதமர் மோடி அவர்கள், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஒரு யூத பண்டிகைக்காக வாழ்த்து தெரிவித்தார். எகிப்திலிருந்த யூத அடிமைகள் தமது விடுதலைக்காக போராடியதை நினைவு கூறும் நாளாம் அது. இந்த வாழ்த்துச் செய்தியைப் பார்த்து நெகிழ்ந்த நெதன்யாகு, “விடுமுறை நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்கு நன்றி நண்பா! உங்கள் வருகைக்காக இஸ்ரேல் மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்” என்று டிவிட்டரில் நன்றி தெரிவித்தார். இதை மோடி மறுபடியும் டிவிட்டினாராம்.

இருநாடுகளும் தமது தூதரக உறவுகளை முறையாக ஆரம்பித்த 1992-ம் ஆண்டிற்கு பிறகு இஸ்ரேலுக்கு செல்லும் முதல் பிரதமர் மோடிதானாம். ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் இஸ்ரேல் கதைகள் கேட்டு வளர்ந்த மோடிக்கும், ஒரு இந்து என்ற முறையில் இந்த பயணம் ஒரு புண்ணிய மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்தான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவரான செத்துப் போன கோல்வல்கர் உருகி உருகி எழுதியது யூதர்களின் இஸ்ரேலைப் பற்றித்தான். இதில்தான் முசுலீம்களை அடக்கி ஒரு யூத நாடு எப்படி ஜெயித்தது என்று கோல்வால்கர் விடைப்புடன் விளக்கியிருப்பார்.

இஸ்ரேல் பயணத்திற்கு முன்னால் 2014 செப்டம்பரில் ஐ.நா பொது மன்றத்தின் கூட்டத்திற்காக நியூயார்க் நகரம் சென்ற மோடி அங்கு நெதன்யாகுவை சந்தித்திருக்கிறார். இதுவும் கடந்த 20 வருடங்களில் முதன்முறையாக ஒரு இந்திய பிரதமர் இஸ்ரேல் பிரதமரை சந்தித்த நிகழ்வாம். இப்படி முதன் முறையான சந்திப்பு என்ற வரலாற்று சிறப்பிற்கு என்ன முக்கியம்? 90-களுக்கு முந்தைய இந்திய அரசின் மேலோட்டமான வெளியுறவுக் கொள்கைகளில் இஸ்ரேலின் அடாவடிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. பிறகு மெல்லமெல்ல உரிய அங்கீகரித்தல் நடந்து இருவரும் நட்பு நாடாகிவிட்டார்கள். வாஜ்பாய் மற்றும் மோடி காலத்தில் இந்த நட்பு பெரு நட்பாகிவிட்டது. ஆன போதிலும் இந்த நட்பு ஏதோ வெறும் சென்டிமெண்ட் பற்றியதல்ல. பொருளாதாரம் பற்றியது.

எந்த தேதியில் திருவாளர் மோடி இஸ்ரேல் செல்கிறார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லையாயினும், பயணத்திற்கான ஆயத்தங்களை இந்திய அரசு தீவிரமாக செய்து வருகிறதாம். கடந்த மார்ச் மாதம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இஸ்ரேல் சென்று மோடி அங்கே வரும் போது என்னென்ன ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவேண்டுமென்று பேசினாராம்.

இந்த ஒப்பந்தங்கள்தான் ரவுடி இஸ்ரேல் நாடு திருவாளர் மோடியை வரவேற்பதின் இரகசியமாகும். பல்வேறு அதிவுயர் இராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்வதே அந்த ஒப்பந்தங்களின் உட்கிடை. பிறகு சோழியன் குடுமி சும்மா ஆடுமா? மோடிக்குத்தான் அங்கே சிவப்பு கம்பள வரவேற்பு சும்மா கிடைத்து விடுமா?

ஸ்பைக் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை

ஸ்பைக் எனப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் இந்திய இராணுவத்திற்கும், பாரக் 8 எனப்படும் வான் தடுப்பு ஏவுகணைகள் இந்தியக் கடற்படைக்கும் வாங்குவது இந்திய இஸ்ரேல் ஒப்பந்தத்தின் மையம். இதன் மதிப்பு என்ன? 1.5 பில்லியன் டாலர் என்கிறது புளூம்பெர்க் பத்திரிகை. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய். இது போக கடந்த வாரம் இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான தரையிலிருந்து வான் சென்று தாக்கும் முன்னேறிய தொழில் நுட்பம் சார்ந்த இடைரக ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இதுதான் இஸ்ரேல் இதுவரை செய்திருக்கும் ஆயுத தளவாட ஒப்பந்தங்களில் மிகப்பெரியது.

ஏற்கனவே இந்தியா இறக்குமதி செய்யும் இராணுவத் தளவாடங்களில் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளர் இஸ்ரேல்தான். ஆகையால் மோடி அங்கு செல்லும் போது இந்த ஆண்டிற்குரிய இறக்குமதி ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும். இப்படி இந்திய மக்கள் பணம் சற்றேரக்குறைய 25,000 கோடி ரூபாயை இஸ்ரேல் எனும் அமெரிக்கா ஊட்டி வளர்க்கும் பேட்டை ரவுடிக்கு கொட்டிக் கொடுக்கப் போகிறார்கள்.

பாரக் 8 வான் தடுப்பு ஏவுகணை

இந்த ஸ்பைக்கும், பேரக்கும் வருவதால் இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பும் கிடையாது. இதற்கு நிகரான ஆயுதங்களை அமெரிக்காவிலோ இல்லை சீனாவிலோ பாகிஸ்தான் வாங்கிவிடும். ஆக இரு ஏழைநாடுகளும் மாற்றி மாற்றி மக்கள் பணத்தை விரயமாக்கி இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றன.

இப்படி இந்திய மக்களின் பணத்தை பட்டை நாமம் போடுவதன் பொருட்டே நெதன்யாகு திருவாளர் மோடியின் வருகைக்காக ஏங்குகிறார். இருப்பினும் பாஜக கும்பல் இந்த பயணத்தை இந்துத்துவத்தின் கொள்கைப் பூர்வமான கூட்டு என்று தத்துவம் பேசும்.

மேலும் திருவாளர் 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை புகழ் மோடி அவர்கள் அவர் முதலமைச்சராக இருந்த போது 2006-ம் ஆண்டிலேயே இஸ்ரேல் சென்றிருக்கிறார். ஒருவேளை பின்னர் தான் பிரதமராக வரும் போது நிறைய இறக்குமதி செய்வேன் என்று டீல் பேசினாரோ தெரியாது. 2015-ல் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி இஸ்ரேல் சென்று பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அதன் பிறகு 2016-ம் ஆண்டில் சுஷ்மா ஸ்வராஜும் சென்றிருக்கிறார். அமெரிக்காவுடன் எஜமான் விசுவாசம் காட்டும் இந்தியா அமெரிக்காவின் இயல்பான அடியாள் இஸ்ரேலுடன் கூடிக் குலாவுவது வியப்பிற்குரியதல்ல.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பத்திரிகைகள் மற்றும் பாஜக கொள்கை பேசும் கார்ப்பரேட் ஊடகங்கள் அடிக்கடி இஸ்ரேல் புராணம் பேசும். சொட்டு நீர் பாசனம், ஆர்கானிக் அற்புதம் என்று ஏகப்பட்ட இஸ்ரேல் ‘சாதனைகளை’ ஸ்வயம் சேவக் அம்பிகள் எடுத்து விட்டிருக்கிறார்கள். தற்போது என்ன சொல்வார்கள்?

மகாபாரதத்தில் இந்துக்கள் கண்டுபிடித்த  பிரம்மாஸ்திரம் இதர அஸ்திரங்களுக்கு நிகரானதுதான் இந்த ஸ்பைக்கும், பேரக்கும் என்று கதைவிடலாம். எனினும் இந்த ஆயுதங்கள் சுதேசி இல்லை, விதேசி என்பதை எடுத்துச் சொன்னால் யூதர் வேறா, ஆரியர் வேறா என்று இளிப்பார்கள். இறுதியில் இஸ்ரேல் நித்தம் குண்டு வீசி பாலாஸ்தீன மக்களை அழிப்பதற்கு ஒர பெரும் பாக்கெட் மணியை இந்தியாவில் இருந்து வெட்டியதன் பொருட்டு ஒரு மாலை நேர காக்டெயில் பார்ட்டியை ஏற்பாடு செய்யும்.

அங்கே அம்பானி, அதானி, ஆர்.எஸ்.எஸ் பிராசரகர்கள், மோடி கும்பல், ஆர்னாப் போன்ற ஊடக தூண்கள் என பலர் சியர்ஸ் சொல்லுவார்கள்.

மேலும் தகவலுக்கு :

‘My Friend, Awaiting Your Historic Visit’: Israel’s Benjamin Netanyahu To PM Narendra Modi

  1. இஸ்ரேல் அடுத்த நாட்டை அட்டை போட்ட திருடன் , RSS BJP சொந்த நாட்டு விடுதலை போரளிகளை வெள்ளைகாரனுக்கு காட்டி கொடுத்த தேச தூரேகி , திருடனும் தூரேகியும் சந்திப்பது பெரிய விசயம் இல்ல இரு நாட்டு மதவெறிபிடித்த முட்டள் மக்கள் இருக்கும் வரை இவர்கள் ஆட்டம் முடியபோவது இல்லை

  2. யூதர்களைக் கொன்றான் இட்லர்.பாலஸ்தீனர்களை நடுவாந்தரத்தில் விட்டு அந்த மக்களைக் கொன்று குவிக்கிறது இசுரேல்.பாகிஸ்தானியர்களைக் காரணம் காட்டி சொந்த நாட்டு மக்களைக் கொல்வதற்கும் ஆயுதம் வாங்குகிறார் மோடி.விவசாயிகள் நிர்வாணமாகவும்,சேலை கட்டியும்,கழுத்தை அறுத்துக் கொள்வோம் என்று எச்சரித்தும் போராடுகிறார்கள்.லட்சக் கணக்கில் விவசாயிகள் செத்து மடிகிறார்கள்.பல்லாயிரம் கோடிகளில் ஆயுதம் வாங்கிக் குவிக்கிறார் மோதி.மக்களுடைய வரிப் பணம்.யாரைக் கேட்க வேண்டும்.மக்களையா? சங்கத் தலைமையையும் கார்ப்பரேட் நண்பர்களையும் கேட்டால் போதாதா?இப்படிப்பட்ட சாதனைப் புருஷர்களுக்கு வரலாறு பல பாடங்கள் கற்பித்துள்ளது.மக்களும் பாடங் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.மக்களைவிட ஆளுகிறவர்களுக்குத் தான் அதிகம் நெருக்கடி இருக்கிறது.அப்பாவி மக்கள்தலைக்கு அதை மாற்றுகிறார்கள்.மக்கள் தலையை உதற வேண்டும்.ஆளுகிறவர்கள் அறுந்து வீழ்வார்கள்.

Leave a Reply to tamil பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க