Saturday, August 15, 2020
முகப்பு செய்தி சிரியா : நெகிழிகள் உதவியோடு உயிர் வாழ ஒரு வதைப் போராட்டம்

சிரியா : நெகிழிகள் உதவியோடு உயிர் வாழ ஒரு வதைப் போராட்டம்

-

ருபுறம் அமெரிக்க-சவூதி கூட்டுப்படைகள் மற்றும் இரசியாவின் தாக்குதல்கள் மறுபுறம் ஐ.எஸ் தீவிரவாதிகள் என சிக்கிக்கொண்டு சின்னாப்பின்னமாகி வருகின்றனர் சிரிய மக்கள். இதில் மாண்டது போக மீண்டவர்களில் ஒருசாரார் மத்தியத்தரைக்கடலில் புதைந்து போகின்றனர். எஞ்சிய சிரிய மக்கள் முற்றுகை பகுதிகளில் கிடைத்ததை கொண்டு வாழ வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏகாதிபத்தியங்களின் சூதாட்டக் காடாக மாறிப் போன மத்தியக் கிழக்கின் துயரம் பாலஸ்தீனம், ஈராக், சிரியா என்று தொடர்கிறது.

“தேவையே கண்டுபிடிப்பின் தாய்” – இது அரபு மொழியின் பிரபலமான பழமொழி. சுற்றிலும் நிலப்பரப்பிருந்தும் தனித்தீவில் வாழ்வது போன்றொரு முற்றுகை சூழ்நிலையில் உயிர் பிழைத்திருப்பதற்காக உணவு, மருத்துவம், தண்ணீர் போன்ற இன்றியமையாத தேவைகளுக்காக சில புதுமையான வழிமுறைகளையும் சிரிய மக்கள் கையாளுகின்றனர்.

இங்கே புகைப்படங்களில் உள்ளவர்கள் கிழக்கு கௌடா, எர்பினை சேர்ந்த மக்கள். கிழக்கு கௌடாவின் மக்கள் தொகை எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு இலட்சம். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் வடக்கு புறநகர் பகுதியில் இது அமைந்துள்ளது.

மின் விளக்குகளை எரிக்க மின்தொற்றிகளை இயக்குவதற்கும், கிணறுகளிலிருந்து தண்ணீரை எடுக்கவும், இருசக்கர வண்டிகள் மற்றும் கார்களை இயக்குவதற்கும் நெகிழிக்கழிவுகளில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோலை பிழிந்தெடுக்கும் நுட்பத்தை கிழக்கு கௌடாவின் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இம்முறைகள் மூலம் எரிவாயுவை பிரித்தெடுப்பது எப்படி என்பதையும் அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். அவர்களது அன்றாட வாழ்க்கையை நடத்த எரிபொருள் பற்றாக்குறை முக்கிய தடைக்கல்லாக இருக்கிறது.

மின்தடைகள் மற்றும் எரிபொருட்களின் அதிக விலையானது நெகிழிக்கழிவுகளில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோலை பிரித்தெடுக்கும் நிலைக்கு மக்களை தள்ளுகின்றன.

கருப்பு பீப்பாய்களில் நெகிழிப்பொருட்களை நிரப்பி விறகு மற்றும் கிழிந்த துணிகளால் எரிக்கப்படும் அடுப்பில் வைப்பதற்கு முன்னதாக அவற்றை இறுக்கமாக மூடுகின்றனர் தொழிலாளர்கள்.

நெகிழிப்பொருட்களால் நிரப்பப்பட்ட பீப்பாய்களை அதீத வெப்பத்திற்கு ஆட்படுத்துவதை பொறுத்து டீசல் மற்றும் பெட்ரோல் தயாரிக்கும் நுட்பமானது இருக்கிறது. அவை 12 மணி நேரம் கொதிக்க வைக்கப்படுகின்றன. இதன் விளைவாக வரும் சூடான ஆவியானது பீப்பாயில் நிறுவப்பட்ட குழாயைக் கடந்து நீர் நிறைந்த இரண்டாவது குழாயினால் குளிரூட்டப்படுகிறது. கடைசியாக ஒரு மஞ்சள் நிற திரவமானது மூன்றாவது குழாயில் இருந்து வெளிவருகிறது.

நெகிழிப்பொருட்களை எரிப்பது என்பது தொழிலாளர்கள் உடல் நலத்தை கெடுக்கிறது. ஏனெனில் இந்த எரியும் செயல்முறையில் வெளிப்படும் பெரிய அளவிலான புகை மற்றும் எரிவாயுக்களால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்

அதுமட்டுமல்லாமல் வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்களும் [அடுப்பில்] சேர்ந்திருப்பதால் சில கட்டங்களில் வெடிக்க கூடும். குறிப்பாக பாதுகாப்புக் கருவிகளோ அல்லது பாதுகாப்பு வழிமுறைகளோ எதுவும் இல்லாத நிலையில் அந்த நிலைமையையும் அவர்கள் சமாளிக்க வேண்டும்.

டீசலில் இருந்தும் பெட்ரோலில் இருந்தும் எரிபொருளை உற்பத்தி செய்ய அம்மக்களுக்கு முற்றுகை சூழலின் அனுபவம் கற்றுக்கொடுத்து இருக்கிறது. பீப்பாய்களில் வடிகட்டுதல் மற்றும் இறுக்குதல் என்று தொடங்கி இந்த செயல்முறை எரிவாயுவை சேகரிப்பது மற்றும் அதை அழுத்தமாக அடைப்பது என்று முடிகிறது. கடைசியாக இயற்கை எரிவாயுவானது அங்கிருக்கும் வீடுகளுக்கு மிக குறைந்த விலையில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நெகிழிப்பொருட்களை எரிப்பதால் கிடைக்கும் எரிபொருளானது எண்ணையில் இருந்துப் கிடைக்கும் எரிபொருளைக் காட்டிலும் குறைவான தரமே கொண்டது என்பதையும் வண்டி இயந்திரங்களுக்கு நீண்டகால பிரச்சினைகளைக் கொடுக்கும் என்பதையும் மக்கள் தெரிந்து தான் உள்ளனர். ஆனால் ஒரு மோசமான நிலைமையில் வாழும் மக்களின் தேவையை இது நிறைவு செய்வது மட்டுமல்லாமல் எண்ணையில் இருந்து பெறப்படும் எரிபொருளை காட்டிலும் விலையும் மலிவாக இருக்கிறது.

சிரிய அரசு நடத்தும் வான்வழித் தாக்குதல்களாலும் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குள் நடக்கும் சண்டைகளாலும் கிழக்கு கௌடாவின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. நெருங்குவதற்கு கடினமான சூழலில், முற்றுகை பகுதிகளில் சிக்கிக்கொண்டுள்ள 46 இலட்சம் பேர் உள்ளிட்ட குறைந்தது 1 கோடியே 35 இலட்சம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை கூறுகிறது.

பாதிக்கும் அதிகமான மக்கள் தங்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் பலமுறைகள் இடப்பெயர்ச்சிக்கு ஆளாகியுள்ளதவும் ஐ.நா அவை கூறுகிறது.. இடப்பெயர்ச்சிக்கு ஆளானவர்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் எண்ணிக்கை மட்டுமே பாதிக்கும் மேல் இருக்கும். அது மட்டுமல்லாமல் பாதி மக்களுக்கு மனிதாபமான உதவிகள் தேவைப்படுகிறது.

ஹாம்ஸ், டமாஸ்கஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகள், இட்லிப் மற்றும் டீர் அஸ் ஸோர் பகுதிகளில் மட்டும் குறைந்தது 624,500 பேர்கள் முற்றுகைப் பகுதிகளில் வாழ்வதாக முற்றுகை பகுதிகளில் வாழும் மக்களைப் பற்றிய ஐ.நா அவையின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அங்குள்ள மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவம் உள்ளிட்டவைகள் மறுக்கப்படுகின்றன.

கிழக்கு கௌடா முற்றுகை பகுதிகளில் உள்ள மக்களிடையே நிலையான பெரிய அளவிலான இடப்பெயர்ச்சி நடப்பதாக நெதர்லாந்தைச் சேர்ந்த முற்றுகை கண்காணிப்புக் குழு கூறுகிறது.

22 முற்றுகை பகுதிகள் உள்ளடக்கிய கிழக்கு கௌடாவின் முழுப்பகுதியும் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து முற்றுகையின் கீழ் இருக்கிறது. ஆனால் சிரிய அரசின் படைகள் அந்த பகுதிகளைப் பிடித்த பிறகு அதன் அளவு குறைந்துள்ளதாக முற்றுகை கண்காணிப்பு குழு(Siege Watch) கூறுகிறது.

நன்றி: Aljazeera அல்ஜசீரா
மூலக்கட்டுரை : How do trapped Syrians tackle fuel shortages?

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க