Thursday, May 1, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கரிப்பன் மாளிகையில் துப்புரவு தொழிலாளர் போராட்டம் !

ரிப்பன் மாளிகையில் துப்புரவு தொழிலாளர் போராட்டம் !

-

சென்னை ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஜூன் 14-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கிய சென்னை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் 15-ம் தேதி மாலை ஆறு மணி வரை நடந்தது. இந்த போராட்டத்தை சிஐடியு- வின் இணைப்பு சங்கமான சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் நடத்தியது. சங்கத்தின் தலைவர் சுந்தராஜன் தலைமை வகித்தார். இரண்டு பகல், ஒரு இரவு வீட்டிற்கு செல்லாமல் குடும்பத்தையே களத்தில் இறக்கி துப்புரவு பணியாளர்கள் போராடினார்கள்.

பெருநகர சென்னை மாநராட்சியில் பல்வேறு மண்டலங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் NMR – நான் மஸ்தூர் ரோல் (பதிவு செய்யப்படாத ஊழியர் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். மேலும் NMR திட்டத்தில் இறந்தவர்களுக்கு வழங்க வேண்டிய “கூட்டு காப்பீட்டு” தொகை மூன்று லட்சத்தை இதுவரை வழங்காமல் ஏமாற்றி வருகிறது மாநகராட்சி. அதேபோல் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டம் – ஸ்வர்ண ஜெயந்தி ஆகிய திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக வெறும் 320 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நிரந்தரத்த தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை மாத ஊதியமான ரூ 18,000த்தை வழங்குமாறு தொழிலாளிகள் கோருகிறார்கள்.

ஏற்கனவே மாநகராட்சியில் உள்ள மலேரியா ஒழிப்புத்துறை உள்ளிட்டவை (மணலி,அடையாறு பகுதி) தனியார்மயமாக்கப்பட்டு விட்டது. இதனால் மிகவும் குறைவான கூலிக்கு குறைவான தொழிலாளர்களை அதிக வேலை செய்ய வைத்து சுரண்டி வருகிறது CMSW ராம்கி என்ற தனியார் நிறுவனம். இந்நிலையில் மாநகராட்சியின் அனைத்து துறைகளையும் (துப்புரவு, மலேரியா,சாலை,மின்துறை,பூங்கா) ஒப்பந்த முறைக்கு மாற்ற மாநராட்சி முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களின் வாழ்வை பறிக்கும் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை நீக்க வேண்டும், 7-வது ஊதியக்குழு ஊதியம், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து துப்புரவு தொழிலாளரின் போராட்டம் நடத்தப்பட்டது.

“நாங்கள் போராட்டத்தை தொடங்கியவுடன் மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம்” என்று நைச்சியமாக பேசினார். ஆனால் ஏற்கனவே இதுபோன்ற வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்றவில்லை என்பதால் அவரின் பேச்சை தொழிலாளிகள் நம்பவில்லை.

இந்த போராட்டத்தை சீர்குலைக்க போலிசு கைது செய்யப் போவதாக மிரட்டியது. ஆனால் எதற்கும் தயாரக இருந்த தொழிலாளிகளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்றார் மாதவரம் 32 -வது மண்டலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர்.

போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த நிர்வாகம் அடுத்த நாள் 15-ம் தேதி தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சி செயலர், நிதித்துறை செயலர், மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், உடனடியாக NMR தொழிலாளிகள் 509 பேருக்கு பணிநிரந்தரம் செய்கிறோம், துப்புரவு பணியில் தனியார் ஒப்பந்த முறையை மாநகராட்சிக்குள் கொண்டு வரமோட்டோம், தற்பொழுது வழங்கும் கூலியில் 28 ரூபாய் உயர்த்தி 348 ரூபாயாக தருகிறோம் என்றும் உறுதியளித்தனர். தங்களது அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை என்றாலும், ஒரு சில மட்டும் ஏற்கப்ட்டது எனும் அடிப்படையில் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். எனினும் தமது மற்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டம் மீண்டும் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

– வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க