privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்தொலைதூர நட்சத்திரத்தின் நிறையை அளவிடுதல் - வானியலாளர்கள் வெற்றி

தொலைதூர நட்சத்திரத்தின் நிறையை அளவிடுதல் – வானியலாளர்கள் வெற்றி

-

வானியலாளர்கள் சூரியக் குடும்பத்திற்கு அப்பாலுள்ள தனியொரு ஒரு விண்மீனின் நிறையை, ஐன்ஸ்டீனின் நூற்றாண்டு பழமையான பொதுசார்பியல் கோட்பாட்டினைக் கொண்டு அளவிட்டுள்ளார்கள்.

தனித்த நட்சத்திரங்களின் நிறையை அளவிடுவது கடினமானது. இருமை நட்சத்திரங்கள் (binary Stars) ஒன்றை ஒன்று சுற்றி வரும் சுற்றுப் பாதைகளின் மூலம் அவற்றின் நிறையை அறிவியலாளர்களால் நேரடியாக மதிப்பிட முடியும். இப்போது, 1936 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பரிந்துரைத்த நுட்பத்தை பயன்படுத்தி தொலைதூர தனித்ததொரு நட்சத்திரத்தின் நிறையை அளவிடுவதில் வானியல் வல்லுனர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது.

நட்சத்திரங்களைப் போன்ற பெரிய நிறையுள்ள பொருட்கள் ஒளியின் பாதையை வளைக்கமுடியும் என்பது இந்த அளவிடும் முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒளி விலகல் விளைவு மீச்சிறியதாக இருந்தாலும், அந்த விலகலை அளவிடுவதன் மூலம் அதை ஏற்படுத்தும் (ஒளியை வளைக்கும்) நட்சத்திரத்தின் நிறையை அறிய முடியும்.

இந்த அளவிடலைப் பற்றி ”இது அவர்கள் செய்துள்ள மிக நேர்த்தியான வேலையாகும். மேலும், நூற்றாண்டு பழமையான பொதுசார்பியல் கோட்பாட்டின் நல்லதொரு எதிரொலியாகும்” என்கிறார் பிரிட்டன் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் மார்டின் பார்ஸ்டோ.

வானியலாளர்கள் ஈர்ப்பு விசை ஓளியை வளைப்பதற்கு பல உதாரணங்களை கண்டிருக்கிறார்கள். விண்மீன் மண்டலங்கள் தொலைதூரத்திலிருக்கும் உருவங்களின் தோற்றத்தை சிதைக்கின்றன. சில நேரங்களில் அவ்வொளியை வளைத்து ‘ஐன்ஸ்டீன் வளைவுகள்’ என்று அழைக்கப்படும் வட்டங்களை உருவாக்குகின்றன.  (ஐன்ஸ்டீன் வளைவு வீடியோ : )

நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தில் அருகாமை நட்சத்திரம் இன்று தூரத்திலுள்ள மற்றொன்றிற்கு முன் கடந்து செல்கையில் அது ஒரு ஆடியைப்(lens) போல செயல்படுகிறது; அதைக் கடந்து பூமியை நோக்கிச் செல்லும் தொலைதூர நட்சத்திரத்தின் ஒளியை வளைக்கிறது. இதனால் தொலைவில் உள்ள நட்சத்திரம் குறுகிய காலத்திற்கு சிறிது அதிகமாக பிரகாசிக்கும். இது ஈர்ப்பு நுண்ஆடியாகும் விளைவு எனப்படுகிறது. இது சூரியக் குடும்பத்திற்கு வெளிக் கோள்களை கண்டறியவும், கருந்துகள், கருந்துளை மற்றும் பழுப்பு குள்ள விண்மீன் ஆகியவற்றை தேடுவதற்கும் பயன்படுத்தபடுகிறது.

ஆனால், ஒளி தோன்றும் மூல நட்சத்திரமும் அதை வளைக்கும் நட்சத்திரமும் துல்லியமான நேர்கோட்டுக்கு சிறிது விலகியிருக்கும் போது ஒளி வளைக்கபடுதல் விளைவு, புவியின் பார்வை கோணத்தில் மூல நட்சத்திரத்தைச் சிறிது நகர்த்தி காட்சியளிக்க வைக்கும் என்று ஐன்ஸ்டீன் கணித்திருந்தார். இந்த காட்சி விலகலை அளப்பது, வளைக்கும் நட்சத்திரத்தின் நிறையை அளிக்கும். இந்த விலகல் மீச்சிறு அளவென்பதால் ஐன்ஸ்டீன் அதை அளவிட முடியாது என்று நினைத்திருந்தார்.

ஒளி தோன்றும் மூல நட்சத்திரமும் அதை வளைக்கும் நட்சத்திரமும் துல்லியமான நேர்கோட்டுக்கு சிறிது விலகியிருக்கும் போது ஒளி வளைக்கபடுதல் விளைவு நடைபெறுகிறது

ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனாடா நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு விண்வெளியிலிருக்கும் ஹப்பிள் தொலைநோக்கியின் (Hubble Space Telescope) மூலம் முனைப்புடன் பார்க்கும் போது அச்சிறிய விலகலையும் கண்டறிய முடியும் என நினைத்தனர். கைலாஸ் சந்திர சாகு தலைமையிலான குழு புவியின் பார்வை கோணத்தில் ஒன்றையொன்று நேர்கோட்டில் கடந்து செல்லும் நட்சத்திரங்களை தேடத் துவங்கினர். புவியிலிருந்து 18 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டெயின் 2051-பி (Stein 2051 B) என்ற வெள்ளைக் குள்ளன் விண்மீன் மற்றொரு தொலைதூர நட்சத்திரத்தின் முன் மார்ச் 2014-ல் கடந்து செல்லவிருப்பதை கண்டறிந்தனர். அப்படி கடக்கும் போது பின்னணியில் இருந்த தொலைதூர நட்சத்திரத்தில் ஏற்பட்ட விலகலை பதிவு செய்தனர். அந்த விலகலைக் கொண்டு ஸ்டெயின் 2051-பியின் நிறை நமது சூரியனின் நிறையில் மூன்றில் இரண்டு பங்கு (0.675 மடங்கு) இருப்பதாக கணக்கிட்டுள்ளனர். இதை அந்தக் விஞ்ஞானிகள் குழு ஜூன் 7, 2017 அன்று வெளியிட்டுள்ளது.

இது புதிய அளவிடல் நுட்பத்தின் திறமையான வெளிப்பாடு மட்டுமல்ல. ஏற்கனவே இருமை நட்சத்திரங்கள் (binary Stars) முறையைக் கொண்டு, அருகாமையிலிருக்கும் ஸ்டெயின் 2051-ஏ (Stein 2051 A) என்ற நட்சத்திரத்துடன் இணைத்து ஸ்டெயின் 2051-பி சூரியனைப் போல் அரை பங்கு நிறையுள்ளதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டிருந்தனர். இப்போது இப்புதிய முறை கணக்கிடல் ஸ்டெயின் 2051-ஏ, பி இரண்டும் இருமை நட்சத்திரங்கள் என்ற கருத்தாக்கத்தின் மீது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது சூரியன் உள்ளிட்ட 97% நட்சத்திரங்களின் எரிபொருள் தீர்ந்த எதிர்கால நிலை வெள்ளைக் குள்ளன் எனப்படுகிறது. சூரியனை ஒத்த மற்றும் அதைவிட குறைவான நிறையுள்ள விண்மீன்களில் மையக்கருவில் உள்ள எரிபொருளான ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டு தீர்ந்த பின் மேல் அடுக்கில் உள்ள ஹைட்ரஜனில் அணுப் பிணைப்பு வினை நடைபெறத் துவங்கும். நட்சத்திரத்தின் மேற்பரப்பில் இருக்கும் ஹைட்ரஜனும் தீர்ந்து மொத்தமும் ஹீலியமான பிறகு, ஹீலியம் அணுக்கரு பிணைப்பிற்கு உள்ளாகி கார்பனாக மாறத் துவங்கும். காலப்போக்கில் எல்லா ஹீலியம் எரி பொருளும் தீர்ந்த பின்னர் படிப்படியாக குளிர ஆரம்பிக்கும் போது வெள்ளைக் குள்ளன் நிலையைப் பெறும். இந்த புதிய அளவிடல், விஞ்ஞானிகளுக்கு புதிராக உள்ள வெள்ளைக் குள்ளன் விண்மீன்களைப் பற்றிய புரிதலை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த அளவிடல் நுட்பத்தின் பயன்பாடு இப்போது வரம்புக்குட்பட்டது. ஏனென்றால் நட்சத்திரங்கள் நேர்கோட்டில் வருவது கிட்டத்தட்ட மிகவும் அரிதானது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கையா (Gaia) செயற்கைகோள் பல ஆயிரம் நட்சத்திரங்களின் துல்லியமான நிலை மற்றும் இயக்கத்தை உள்ளடக்கிய தனது இரண்டாவது நட்சத்திரங்களின் அட்டவணையை வெளியிட்ட பின் கூடிய விரைவில் வானியலில் பயனுள்ள அளவிடல் நுட்பமாக மாறும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

– வினவு அறிவியில் செய்தியாளர்.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க