privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தோற்றுப்போன நீதித்துறை !

-

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்பது புகழ்பெற்ற முதலாளித்துவ மூதுரை மட்டுமல்ல, இந்திய நீதிமன்றங்களால் மிகவும் கேலிக்குள்ளாக்கப்பட்ட மூதுரையும் இதுதான். இந்திய நீதித்துறையால் சமீபத்தில் வழங்கப்பட்டிருக்கும் இரண்டு தீர்ப்புகள், இந்த மூதுரையை மீண்டும் எள்ளி நகையாடியிருக்கின்றன.

குல்சார் அகமது வானி: சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இளம் வயதில் (இடது); அவ்வழக்கில் 16 ஆண்டுகள் சிறையில் அடைத்து அவரது இளமையை அழித்த பிறகு, நிரபராதியாக நடுத்தர வயதில்.

மதிவாணன், சேலம் மாவட்டம்-ஆத்தூருக்கு அருகிலுள்ள கெங்கவல்லியைச் சேர்ந்த ஆடு, மாடுகளை வாங்கி விற்கும் தரகர். 17 வருடங்களுக்கு முன், கள்ளச் சாராயம் கடத்தியதாக இவர் மீது குற்றஞ்சுமத்திய ஆத்தூர் மதுவிலக்கு போலீசார், அவரது இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரது இருசக்கர வாகனத்தைத் திருப்பித் தருவதற்கு மதிவாணனிடமிருந்து எட்டாயிரம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டனர். அந்த இலஞ்சப் பணம் கைமாறும் சமயத்தில் சாமிநாதன், ரவி, சேகர் ஆகிய மூன்று போலீசாரை இலஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும்களவுமாகப் பிடித்தனர்.

இது தொடர்பாக, இலஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆத்தூர் மதுவிலக்கு போலீசு நிலையத்தில் ரெய்டு நடத்தியதில், அங்கிருந்து கணக்கில் காட்ட முடியாத 1.15 இலட்ச ரூபாய் ரொக்கமும், எந்தெந்த போலீசுக்கு எவ்வளவு இலஞ்சம் தரப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் அந்த போலீசு நிலையத்தைச் சேர்ந்த 22 போலீசார் மீது இலஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த பதினேழு ஆண்டுகளாக விசாரித்து வந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம், கடந்த மே மாத இறுதியில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 போலீசாரில் 12 போலீசார் விடுதலை செய்யப்பட்டனர். தற்பொழுது ஆய்வாளராகப் பணியாற்றிவரும் சேகர், உதவி ஆய்வாளர் அருள் முருகன் உள்ளிட்ட 7 போலீசாருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், தலா 17,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

மற்றொன்று, உ.பி.மாநில பாரபங்கி குற்றவியல் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த குல்சார் அகமது வானி, மொபின் ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது, அந்நீதிமன்றம்.

கடந்த 2000-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 14 அன்று, பீகார் மாநிலம் – முசாபர்பூரிலிருந்து குஜராத் மாநிலம் – அகமதாபாத் நகருக்குச் செல்லும் சபர்மதி விரைவு ரயில், உ.பி.மாநிலம் கான்பூர் நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபொழுது, அந்த ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் ஒன்பது பயணிகள் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டவர்தான் குல்சார் அகமது வானி.

பதினேழு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டபொழுது, குல்சார் அகமது வானி உ.பி.யிலுள்ள அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர். அவரை டெல்லியில் வைத்துக் கைது செய்ததாகவும், அவரிடமிருந்து வெடிபொருட்களையும், முக்கியமான ஆதாரங்களையும் கைப்பற்றியதாகவும் குற்றப் பத்திரிகையில் போலீசார் குறிப்பிட்டிருந்தனர். மேலும், சபர்மதி ரயில் குண்டு வெடிப்புக்கான சதித் திட்டத்தை, குல்சார் அகமது வானி அலிகார் முசுலீம் பல்கலைக்கழகத்திலுள்ள ஹபீப் ஹாலில் வைத்துத் தீட்டியதாகவும் போலீசார் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.

“இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகவும், சதித் திட்டத்தின் மூளையாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட குல்சார் அகமது வானி மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மொபின் ஆகிய இருவருக்கும் எதிராக போலீசாரால் ஒரு ஆதாரத்தைக்கூடக் காட்ட முடியவில்லை; சதி உள்ளிட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டு, அவ்விருவரையும் பாரபங்கி குற்றவியல் நீதிபதி எம்.ஏ.கான் விடுதலை செய்திருக்கிறார். மாணவப் பருவத்தில் சிறைக்குள் தள்ளப்பட்ட குல்சார் அகமது வானி, நடுத்தர வயதைக் கடந்த நிலையில் நிரபராதியாக விடுதலை ஆகியிருக்கிறார். எத்தகைய குரூரம் இது ?

அப்பாவியான தனது மகன் குல்சார் அகமது வானியின் விடுதலைக்காக 16 ஆண்டுகள் சலையாமல் சட்டப் போராட்டம் நடத்திய குலாம் முகம்மது வானி.

இந்த இரண்டு வழக்குகளிலும் நீதி வழங்கப்பட்டிருப்பதாக, அறிவும், மனசாட்சியும், இரக்க உணர்வும் கொண்ட எவராலும் ஒத்துக் கொள்ள முடியுமா? தீர்ப்பு தாமதமாக வழங்கப்பட்டிருக்கிற அலட்சியத்தையும் தாண்டி, நீதியை வழங்கவேண்டிய கடமையும், பொறுப்பும் மிக்க நிறுவனங்களாகக் கூறப்படும் நீதிமன்றங்களும், போலீசும், அதற்கு எதிராக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் விதத்தில் நடந்துகொண்டிருப்பதை இந்த இரண்டு வழக்குகளும் எடுத்துக்காட்டவில்லையா ?

ஆடு வியாபாரி மதிவாணன் போலீசார் மீது கொடுத்த இலஞ்சப் புகாரை விசாரித்து, பதினேழு ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதிமன்றத்தின் திருநாமம், ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றமாம். வழக்கை நடத்தியதோ தமிழக போலீசின் இலஞ்ச ஒழிப்புத் துறை. இதைக் கேட்டுச் சிரிப்பதா, இல்லை அழுவதா என்றே தெரியவில்லை.

இந்த வழக்கில் 99 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு சாட்சி என்று விசாரித்திருந்தால்கூட, வழக்கை இரண்டு ஆண்டுகளில் முடித்திருக்கலாம். ஆனால், நீதிமன்றமோ பதினேழு ஆண்டுகளை விழுங்கிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பல பத்தாயிரக் கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, ஆள், ஆனை, அம்பு, சேனை என்றபடியான அதிகாரங்களை அனுபவித்துக்கொண்டு, நீதிபதியும் போலீசு அதிகாரிகளும் இலஞ்சத்தை ஒழிக்கப் பாடுபடும் இலட்சணம் நம்மை மெய்சிலிர்க்கத்தான் வைக்கிறது.

சட்டவிரோதமான முறையில் 16 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குல்சார் அகமது வாணிக்கு உடனடியாகப் பிணை வழங்காமல், விநோதமான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர்.

இந்த இழுத்தடிப்பிற்காக வழக்கை விசாரித்த நீதிபதியையும் குற்றஞ்சுமத்த முடியாது. வழக்கை நடத்திய போலீசையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. மக்களின் வரிப் பணத்தைத் தின்று தீர்க்கும் இந்த அதிகார வர்க்கக் கூட்டத்திற்கு அப்படிபட்டதொரு பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கைத் தொடுத்த மதிவாணன் தீர்ப்பிற்கு முன்பே, அதாவது நீதி கிடைக்கும் முன்பே  இறந்து போனார். குற்றஞ்சுமத்தப்பட்ட போலீசாருள் மூவர் இறந்துபோய், தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் குற்றஞ்சுமத்தப்பட்ட எந்தவொரு போலீசுக்காரனும் இடைக்கால நீக்கம் செய்யப்படவில்லை. அது மட்டுமின்றி, குற்றஞ்சுமத்தப்பட்ட சேகர், அருள்முருகன், ரவி ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றமோ, பதினேழு ஆண்டுகள் கழித்து, எறும்பு கடிப்பது போன்று, இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது.

தமக்கு எதிரான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே, பதவி உயர்வு பெற்ற இந்த போலீசு அதிகாரிகள் இன்னும் திமிரோடும் அகங்காரத்தோடும் இலஞ்ச, ஊழல் கிரிமினல் குற்றங்களைச் செய்திருப்பார்கள் என நிச்சயமாகச் சொல்லலாம். ஒரு வழக்கைப் பதினேழு ஆண்டுகள் இழுத்தடிக்கலாம் என்ற மமதையே, அதிகார வர்க்கத்தைத் துணிந்து குற்றங்களை இழைக்கத் தூண்டுகிறது. இந்த அமைப்பு முறையைக் கொண்டு ஜெயா போன்ற பெருச்சாளிகளை மட்டுமல்ல, சாதாரண போலீசுக்காரன் உள்ளிட்ட சுண்டெலிகளைக்கூடத் தண்டிப்பது அத்துணை எளிதானதல்ல என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, பின்னர் நிரபராதியென விடுதலை செய்யப்பட்ட (இடமிருந்து) நூருல் ஹுடா, முகம்மது ஜாஹித், ரயீஸ் அகமது, டாக்டர் பரோக் மக்தூமி, டாக்டர் சல்மான் ஃபார்சி, அப்ரார் அகமது.

போலீசாருக்கு எதிராக வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு அற்பத்தனமானது என்றால், போலீசாரால் பயங்கரவாதியாக நிறுத்தப்பட்ட குல்சார் அகமது வானி வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, நியாயம் வழங்கிவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நயவஞ்சகம் கொண்டது.

சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாகத் தேடுதல் வேட்டை நடத்தி, குல்சார் அகமது வானியை போலீசு கைது செய்யவில்லை. வேறொரு வழக்கில் அவரைச் சிக்க வைத்து, அதன் பிறகு சபர்மதி ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் அவரைச் சேர்த்து விட்டிருக்கிறது, போலீசு.

டெல்லியில் வெடிகுண்டு தேடுதல் வேட்டை நடத்தியதபொழுது, காஷ்மீரி முசுலீமான குல்சார் அகமது வானி ஆயுதங்களோடு பிடிபட்டதாகத்தான் போலீசாரே கூறியிருக்கிறார்கள். வானி மீது சட்டவிரோத ஆயுதச் சட்டத்தின் கீழ்தான் முதலில் வழக்கு பதியப்பட்டது. அதன் பிறகுதான் அவர் மீது சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு வழக்கு பாய்ச்சப்பட்டது.

அந்த வழக்கில் மூன்றாவது, நான்காவது குற்றவாளியாக நிறுத்தப்பட்ட இருவர் போலீசிடம் அளித்த சாட்சியங்களின்படிதான், அதாவது போலீசு உருவாக்கி நிறுத்திய பொய்சாட்சிகளின்படிதான் குல்சார் அகமது வானி முதல் குற்றவாளியாகவும், சதித் திட்டத்தின் மூளையாகவும் காட்டப்பட்டார். கொலை, கொலை முயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல், ஆயுதங்களைச் சேகரித்து நாட்டிற்கு எதிராகக் குற்றங்களை இழைக்க சதித் திட்டம் தீட்டுதல் என்ற பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. சபர்மதி ரயில் குண்டு வெடிப்பு வழக்கு மட்டுமின்றி, அவர் மீது மேலும் பத்து வழக்குகள் ஜோடிக்கப்பட்டன.

குல்சார் அகமது வானி சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்படும் முன்பே, அவர் மீது போடப்பட்டிருந்த மற்ற பத்து வழக்குகளும் பொய் வழக்குகள் என அம்பலமாகி, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. இதிலிருந்தே போலீசின் பித்தலாட்டத்தை அறிவுள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், உ.பி.மாநில உயர்நீதி மன்றமோ வானிக்கு எதிராக இந்து மதவெறி கொண்ட நஞ்சைக் கக்கியது. சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கு தவிர, மற்றைய வழக்குகளிலிருந்து விடுதலையாகிவிட்ட தன்னைப் பிணையில் விடக் கோரி அவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அந்நீதிமன்றம், “இத்தகைய நபர்களை விடுவிப்பது சமூகத்தின் நலனுக்கு எதிரானது” எனக் கூறி, பிணை தர மறுத்தது.

இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் வானி. அவ்வழக்கு விசாரணையின்போது, “11 வழக்குகளில் பத்து வழக்குகளில் விடுதலை செய்யப்பட்ட இந்த நபரை, 16 ஆண்டுகளாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பது அவமானகரமானது” என உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி கேஹார் கடிந்து கொண்டிருக்கிறார். ஆனால், இந்த வார்த்தைகள் தலைமை நீதிபதியிடமிருந்து அத்துணை எளிதாக வந்துவிடவில்லை.

அவ்விசாரணையின்போது, “ஒரு தனி மனிதனான வானிக்கு, இர்ஷத், அஷ்ரஃப், அப்துல் ஹமீது என்று இத்துணை பெயர்கள் எதற்காக?” என வினவினார் தலைமை நீதிபதி. “அலிகர் பல்கலைக்கழகத்தின் மிகச் சிறந்த ஆராய்ச்சி மாணவனான தனக்கு, இத்துணை பெயர்களைச் சூட்டிய போலீசிடம்தான் அதனை நீங்கள் கேட்க வேண்டும்” என வானி, தனது வழக்குரைஞர் மூலம் அளித்த பதில்தான் நீதிபதிகளின் வாயை அடைத்தது.

இதன் பிறகும்கூட உச்சநீதி மன்றம் வானிக்குப் பிணை வழங்கிவிடவில்லை. “சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை அக்டோபர் 31, 2017-க்குள் முடித்துவிட வேண்டும். அதற்குள் அந்த விசாரணை முடிந்தாலும், முடிவடையாவிட்டாலும், நவம்பர் 1, 2017 அன்று வானியைப் பிணையில் வெளியே விட வேண்டும்” என்ற விநோதமான தீர்ப்பைத்தான் வழங்கியது.

வானி விடுதலையாகியிருக்கலாம். ஆனால், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமையை, கல்வியை, மனநிம்மதியை யாரால் திருப்பித் தர முடியும்? குல்சார் அகமது வானி ஜூலை 2001-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தப் பதினாறு ஆண்டுகளில் சபர்மதி குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக வெறும் 20 சாட்சிகள்தான் (மொத்த சாட்சிகள் 96) நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, வழக்கை இழுத்தடிப்பதன் மூலம் வானியைச் சட்டவிரோதமான முறையில் தண்டிப்பது என்பதுதான் நீதிமன்றத்தின், போலீசு அதிகாரிகளின் நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த வழக்கோடு, வானி மீது மேலும் பத்து பொய் வழக்குகளை ஜோடித்தது, போலீசின் காவி புத்தியையும் கிரிமினல் காலித்தனத்தையும் ஒருசேர எடுத்துக் காட்டுகிறது.

தீய நோக்கத்தோடு திட்டமிட்டு வானியைக் குற்றவாளியாக்கிய எந்தவொரு போலீசு அதிகாரியும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை. மாறாக, அந்த அதிகாரிகள் நாட்டு நலன் கருதித்தான் செயல்பட்டிருக்கிறார்களே தவிர, அவர்களுக்கு வேறெந்த தவறான உள்நோக்கமும் கிடையாது என வாக்காலத்து வாங்கி, நீதிமன்றங்களே அதிகாரிகளைக் காப்பாற்றிவிடுகின்றன. போலீசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் இந்தச் சட்டபூர்வ  பாதுகாப்புதான், அப்பாவி முசுலீம் இளைஞர்களைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி சிறையில் தள்ளும் துணிவையும், அகங்காரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த முப்பது ஆண்டுகளில் இந்த கிரிமினல் போலீசு அதிகாரிகளும், அவர்களுக்கு உடந்தையாக நடந்துகொண்ட நீதிபதிகளும் நாடெங்கும் ஆயிரக்கணக்கான வானிகளின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள்.

சபர்மதி ரயிலில் ஆகஸ்டு 14, 2000 அன்று குண்டு வெடித்தது உண்மை. அந்தக் குண்டு வெடிப்பில் ஒன்பது பயணிகள் இறந்து போனதும் உண்மை. அந்தக் குண்டு வெடிப்பிற்கும் வானிக்கும் தொடர்பில்லை என்பதும் உண்மை. அப்படியென்றால், அந்தச் சதிச் செயலுக்குத் திட்டம் தீட்டி நடத்தியது யார்? இந்தக் கேள்விக்குள் நீதிமன்றமும் நுழையவில்லை, போலீசும் அக்கறை கொள்ளவில்லை. இதன் மூலம் அந்தக் குண்டுவெடிப்பில் இறந்து போனவர்களுக்கும் நீதி மறுக்கப்பட்டுவிட்டது.

இந்த அமைப்பு முறை தோற்றுப் போய்விட்டதையும், தனது குடிமகனுக்கே எதிராகச் செயல்படுவதையும் எடுத்துக்காட்டும் சான்று இது.

-செல்வம்
புதிய ஜனநாயகம் – ஜூன் 2017