privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககடையை மூடினாலும் டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பது ஏன் ?

கடையை மூடினாலும் டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பது ஏன் ?

-

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

டந்த திங்களன்று 19-06-2017) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை தொடர்பான கொள்கை விளக்கக் குறிப்பில் ஒரு விசயத்தை கவனியுங்கள். நெடுஞ்சாலைகளில் இருக்கும் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், கடந்த 2016 – 2017 நிதியாண்டில் நடைபெற்றுள்ள டாஸ்மாக் விற்பனையில், கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக ரூ.1149 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் இரு முக்கிய விசயங்களை உறுதி செய்திருக்கின்றது. முதலாவதாக, தமிழகத்தில் இதுவரை பல்வேறு பகுதிகளில், டாஸ்மாக் மதுக்கடைகள் அருகருகே இருந்துள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. அதன் காரணமாகவே, நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டாலும், அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று மது அருந்தும் கூட்டத்தால் டாஸ்மாக் மது விற்பனை குறைவில்லாமல் நடைபெற்றுள்ளது.

இரண்டாவதாக, சுற்று வட்டாரத்தில் டாஸ்மாக் இல்லாத பகுதிகளில் நெடுஞ்சாலைக்கு அருகாமைப் பகுதியிலேயே கள்ளச் சந்தையில் மது விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருவதையும் இது காட்டுகிறது. இதுவரை, டாஸ்மாக் திறப்பதற்கு முன்னரும், மூடிய பிறகும் டாஸ்மாக் பார்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் மது விற்பனைக்கு ஆதரவளித்து கல்லா கட்டிய போலீசு கும்பல் தான் இத்தகைய கள்ளச் சந்தை விற்பனைக்கும் பின்னணியில் இருந்து ஆதரவு தருகிறது.

குடிபோதையினால் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு தான் இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்திரவுக்கு பின்னால் இந்தியா முழுவதும் சாலை விபத்தில் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதே பிரதான காரணம்.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டில், 73,431 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் மொத்தம் 17,128 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான சாலை விபத்துகள், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் தான் நடக்கிறது. நடப்பாண்டில், மார்ச் மாதம் வரை தமிழகத்தில் மொத்தம் 16,576 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், மொத்தம் 4,148 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களை அடுத்து வாகன ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்வதில் வேகத்தை காட்டும் அரசு ஊற்றிக் கொடுப்பதை நிறுத்த மாட்டேன் என்கிறது. இதை நிறுத்தாமல் விபத்துக்களை எப்படி தவிர்ப்பது?

தற்போது தமிழக அரசு அளித்துள்ள டாஸ்மாக் விற்பனை புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், உச்சநீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் இலட்சணமும், இதனால் குடிப் பிரச்சினை தீராது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. கள்ளச் சந்தையையும், கள்ளச்சாராயத்தையும் மட்டுமல்ல, சாராய விற்பனையை ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்றால் மதுவிலக்கை அமல்படுத்தும் அதிகாரத்தை மக்களின் கைகளில் ஒப்படைப்பதே ஒரே தீர்வாகும்! இல்லையேல் குடியினாலும் விபத்தினாலும் தமிழகத்தின் உழைக்கும் மக்களில் இறந்து போவோர் ஆண்டு தோறும் கூடிக் கொண்டே போகும்.