Friday, May 2, 2025
முகப்புசெய்திநெவாலி : மராட்டியத்தில் மீண்டும் ஒரு விவசாயிகள் எழுச்சி !

நெவாலி : மராட்டியத்தில் மீண்டும் ஒரு விவசாயிகள் எழுச்சி !

-

ராட்டியத்தின் தலைநகர் மும்பையின் வடகிழக்கில் சுமார் 45 கிமீ தொலைவில் உள்ளது நெவாலி கிராமம். இதனருகே இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்ட விமான ஓடுதளம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது இப்பகுதி முழுவதையும் சேர்த்து, சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி, புதியதாக ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைக்க மராட்டிய அரசு முயற்சித்து வருகிறது.

தங்களது விளைநிலங்கள் அபகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஏற்கனவே, உற்பத்தித் தேக்கம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது, இருக்கும் நிலத்தையும் பறிக்க விளையும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.
22.06.2017 அன்று காலை நெவாலி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 17 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் அப்பகுதியில், 10 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டங்களில் மிகப்பெரியதான ‘தானே- பட்லாப்பூர் நெடுஞ்சாலையில் நடைபெற்ற’ போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டனர். அங்கு குவிக்கப்பட்ட போலீசு, விவசாயிகளை அப்புறப்படுத்த முயற்சித்தது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

விவசாயிகளின் மீது தாக்குதல் தொடுத்த போலீசுக்கு எதிர்வினையாக, போலீசின் மீது கற்களைக் கொண்டு தாக்கினர் விவசாயிகள். அதனைத் தொடர்ந்து போலீசு தாக்குதலை தீவிரப்படுத்தியது.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசு வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். அதன் பின்னர் கலவரத் தடுப்புப் போலீசு மற்றும் கூடுதல் படைகளையும் கொண்டு வந்து குவித்தது மாநில அரசு.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது குண்டாந்தடிகளைக் கொண்டு கடுமையாக தாக்கியது போலீசு. அதனையும் எதிர்த்து உறுதியாக நின்ற விவசாயிகள் மீது ‘பெல்லட்’ துப்பாக்கியைக் கொண்டு சுட்டது போலீசு. இந்த பெல்லட் வகை குண்டுகள்தான் காஷ்மீர் மக்கள் பலரின் பார்வையை பறித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவசாயிகள் உட்பட சுமார் 26 பேர் படுகாயமடைந்தனர். தற்போது அப்பகுதி முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய விவசாயிகள், கடந்த ஜூன் 1, அன்று தொடங்கி தொடர்ச்சியாக பத்து நாட்கள் இடைவிடாது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் செய்து அரசைப் பணிய வைத்தது நினைவிருக்கலாம். விவசாயிகளின் நண்பன் பாஜக அரசு என மோடியும், தேவேந்திர ஃபட்னாவிசும் ஒரு புறம் நாடகமாடிக் கொண்டே, விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது சங்கப் பரிவார பாஜக அரசு.

தங்களது கடைசி மூச்சாக மிச்சமிருக்கும் விவசாயாத்தைக் காப்பாற்ற நாடு முழுவதும் விவசாயிகள் போர்க்குணத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். மோடி அரசின் கனவான்களோ யோகா தினத்தில் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களோடு உலா வருகின்றனர். விவசாயிகள் தொடுத்திருக்கும் இந்த போராட்டம் பாஜகவின் கொழுப்பை யோகா செய்யாமலே வெட்டி எடுப்பது உறுதி.

செய்தி ஆதாரம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க