Friday, May 2, 2025
முகப்புசெய்திஉ.பி முதல்வரின் ஹிந்து யுவவாகினி மீது பாலியல் வன்முறை வழக்கு

உ.பி முதல்வரின் ஹிந்து யுவவாகினி மீது பாலியல் வன்முறை வழக்கு

-

ஹிந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்தவர்கள்

த்திரப்பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தின் தலைநகர் பரெய்லியில் உள்ள கணேஷ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். கடந்த 26/06/2017 அன்று அதே பகுதியில், ஹிந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்த அவினாஷ், ஜிதேந்திரா, பங்கஜ் ஆகிய மூவரும் தொலைக்காட்சி ஒலி அதிகமாக வைத்த தகராறில் தீபக்கின் வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்துள்ளனர். அதோடு, தீபக்கின் வீட்டில் இருந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டனர். இந்நிலையில் தீபக் மறுநாள் தனது தம்பி கவுரவை அழைத்துச் சென்று வீட்டிலிருந்த அவினாஷை அடித்து இழுத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தார்.

இதனை அறிந்த ஹிந்து யுவ வாஹினியின் மண்டலத் தலைவர் ஜிடேந்திர சர்மா மற்றும் நகரத் தலைவர் பங்கஜ் ஆகியோர், ஹிந்து யுவ வாஹினியின் பலபத்து வானரங்களையும் அழைத்துக் கொண்டு போலீசு நிலையத்தின் முன்னால், அவினாஷை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடவே பாஜகவின் நகரத் தலைவர் உமேஹ் கத்தாரியாவும் அங்கு வந்து சேர்ந்தார்.

ஆட்சி அதிகாரம் தமது கையில் உள்ள போதையில் ஹிந்து யுவ வாஹினியின் வானரங்கள், பாஜக தலைவரை டம்மியாக்கிவிட்டு, அங்கிருந்த துணை ஆய்வாளர் மாயங்க் அரோராவையும் அடித்துள்ளனர். திருப்பி அடிக்க தைரியமற்ற துணை ஆய்வாளர், பணியில் இருந்த தன்னை தாக்கியதாக புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார். ஹிந்து யுவ வாஹினி கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் படி, இந்த மூவரோடு அனில் சக்சேனா என்னும் மற்றொரு ஹிந்து யுவ வாஹினி ரவுடியின் பெயரிலும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இக்கிரிமினல்களை சிறையில் அடைத்திருக்கிறது போலீசு.

ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்தவுடன், திடீர் பசுப் பாதுகாவலர்களாக மாறிய இந்தக் கும்பல், மாநிலத்தில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மாடு வெட்டும் தளங்களையும் இழுத்து மூடியது. ஆண், பெண் இருவர் ஒன்றாக அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தாலே உடனடியாக அங்கு சென்று அவர்களைத் துன்புறுத்துவதும், போலீசில் ஒப்படைப்பதும் என ரோமியோ எதிர்ப்புப் படையாக ரவுடித்தனம் செய்து வந்தது. இந்த ரோமியோ எதிர்ப்புப் படைதான் தற்போது ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது.

ஒரு போலீசை அடித்துவிட்டார்கள் என்பதால் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இல்லையேல் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் அப்பாவி தீபக் மீதுதான் வழக்கு பாய்ந்திருக்கும். எனவே இனிமேல் ஹிந்து யுவ வாஹினி குண்டர்கள் போலீசாரை தாக்காமல் ரவுடித்தனம் செய்யுமாறும் ஆதிய்நாத் அறிவறுத்துவார் என நம்பலாம்.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க