Friday, December 6, 2024
முகப்புஉலகம்அமெரிக்காமுதலாளித்துவத்தின் பேரழிவு - புதிய பெட்யா வைரஸ்

முதலாளித்துவத்தின் பேரழிவு – புதிய பெட்யா வைரஸ்

-

ரான்சம்வேர் என்பது ஒரு கணினியிலிருக்கும் தகவல்களை பணயமாக வைத்து பணம் பறிக்கும் ஒரு தீய மென்பொருள்

டந்த 2017, மே மாதம் Wannacry என்ற பணயத்தொகை கோரும் வைரஸ் உலகின் 150 நாடுகளில் கணினிகளைத் தாக்கி அவற்றிலுள்ள தரவுகள் மற்றும் கோப்புகளை முடக்கியது நினைவிருக்கும். தற்போது புதியதாக Petya என்றழைக்கப்படும் பணயத்தொகை வைரஸ் உலகெங்கும் வேகமாகப் பரவிவருகிறது.

ரான்சம்வேர் என்பது ஒரு பணயத்தொகை கோரும் வைரஸ். இது கணினிக்குள் உட்புகுந்தவுடன், எல்லா தரவுகள் மற்றும் கோப்புகளையும் மறைகுறியாக்கம் (encryption) செய்து குறிநீக்கம் செய்வதற்கு பணயத் தொகையை கோரும். பணயத் தொகை கொடுக்கப்படும் வரை அத்தகவல்களை முடக்கி வைக்கும்.

மேலும், காலக்கெடுவிற்குள் பணயத்தொகையை கொடுக்காவிட்டால் கணினியிலிருக்கும் அனைத்து தகவல்களையும் முற்றிலுமாக அழிக்கவோ அல்லது இணையத்தில் கசியவிடவோ செய்யும். சுருக்கமாக சொன்னால், ரான்சம்வேர் என்பது ஒரு கணினியிலிருக்கும் தகவல்களை பணயமாக வைத்து பணம் பறிக்கும் ஒரு தீய மென்பொருள். இது சாதாரணப் பார்வைக்கு பிரச்சனையற்றதாக காட்சியளிக்கும் மின்னஞ்சல் இணைப்புகளின் உள்ளே மறைந்திருந்து பரவுகிறது. பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தில் (Windows Operating System) உள்ள ஓட்டைகளை ஊடுறுவப் பயன்படுத்திக் கொள்ளும்.

பிட் காயின் (Bit Coin) – என்ற மின்நாணயத்தை பணயத்தொகையாக கோருவதால், பணம் யாருக்குச் செல்கிறது என்பதை வைத்து இந்த வைரசை பரப்பியவர்களைக் கண்டறிய முடிவதில்லை.

முதலில் உக்ரைனில் கண்டறியப்பட்ட இந்த பெட்யா (Petya) வைரஸ், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க என உலகெங்கிலும் பரவி வருகிறது. அரசுத்துறை கணினிகள், எண்ணெய் நிறுவங்கள், மின்விநியோக அமைப்பு, செர்னோபில் அணுமின் நிலையம், தலைநகர் கீவ்வில் விமானநிலையம், மெட்ரோ ரயில் சேவை என பெரும்பாலான கணினிகள் தாக்கப்பட்டு உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்யா வைரஸ் நாட்பெட்யா (NotPatya) என்றும் அழைக்கப்படுகிறது. இது Wannacry வைரசைப் போலவே மைக்ரோசாப்ட் நிறுவன மென்பொருள்கள் மற்றும் விண்டோசில் உள்ள ஓட்டைகளை கணினிக்குள் உட்புகுவதற்குப் பயன்படுத்திக்கொள்கிறது.

ஒரு நாட்டின் அரசால் நிறுவனமயப்படுத்தப்பட்ட, முறைப்படுத்தப்பட்ட அமைப்பு இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று நேட்டோவின் (NATO) இணையப் பாதுகாப்பு குழுமம் (Cyber Security Group) தெரிவித்திருக்கிறது. உக்ரைன் அரசு இத்தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணமென குற்றம் சுமத்தியுள்ளது. உக்ரைனை கட்டுப்படுத்துவதில் அமெரிக்க தலைமையிலான ஐரோப்பிய யூனியனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நிலவும் முரண்பாடு தெரிந்ததே. சர்வதேச அளவில் நடந்துவரும் ஆயுத மோதல்கள், போர்களின் தொடர்ச்சியாகவே இத்தாக்குதல் நடந்துள்ளதாகவும், அதனால் ஆயுத மோதல்களுக்கான சட்டங்கள் இதற்கும் பொருந்தும் என நேட்டோ-வைச் சேர்ந்த தாமஸ் மினரிக் (Tomáš Minárik) தெரிவித்துள்ளார்.

ஏகாதிபத்திய நாடுகள் ஹேக்கர் (Hacker) எனப்படும் ஊடுறுவுவோர் பிரிவினை தமது இராணுவத்தில் வைத்துள்ளன

இன்றைய சூழலில் ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு மரபு வழிப்பட்ட இராணுவத் தாக்குதலை நடத்த வேண்டியதில்லை. அரசுத் துறைகள், வங்கிகள், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம், போக்குவரத்து, மருத்துவம், பங்குச் சந்தை என சகல துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு, அவை கணினி வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டுள்ளன

அந்நாட்டின் கணினி வலைப்பின்னலை முடக்கினாலே, அதன் மூலம் அந்நாட்டை முடக்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விட முடியும். இதனால் ஏகாதிபத்திய நாடுகள் ஹேக்கர் (Hacker) எனப்படும் ஊடுறுவுவோர் பிரிவினை தமது இராணுவத்தில் வைத்துள்ளன. உதாரணமாக, ஈரானின் அணு எரிபொருள் செறிவூட்டல் நிலையத்தை அமெரிக்கா குறிவைத்து வைரசால் தாக்கியதைப் பற்றிய ஆவணப்படத்தை முன்னர் வினவில் வெளியிட்டிருந்தோம்.

வரும் காலங்களில் இந்த சைபர் தாக்குதல்கள் அணுஆயுத தாக்குதல்களை ஒத்த மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற நாடுகளின் கணினி வலைப்பின்னலை குறிவைத்து ஊடுறுவித் தாக்கும் சைபர் போர் (Cyber War) எனப்படும் இணையப் போருக்கான கட்டத்தில் உலகம் நுழைந்துள்ளது. இணையப் பரவலை மட்டும் வைத்துக் கொண்டு வளர்ச்சி என்று எடை போடுகின்றனர் முதலாளித்துவ ஆதரவாளர்கள். ஆனால், அரசுகள் தமது குடிமக்களை உளவுபார்ப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தொழில்நுட்பங்கள், மறுபுறம் மொத்த நாட்டையும் நொடியில் முடக்கிவிடக்கூடிய பலவீனத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

செய்தி ஆதாரம்:

  1. இந்தியாவை தாக்கிய வைரஸ் மோடி.. இத மோடி வைரஸ்னும் சொல்லலாம், பார்பனீயம் வெர்சன் 2000.000 னும் சொல்லலாம்.

    மோடி மாதிரி ஒரு சட்டத்த போட்டு நொடியில மக்கள் வாழ்க்கையை முடக்குறதுக்கு அந்த கம்ப்யூட்டர் வைசால கூட முடியாது… 500, 1000 செல்லாதுன்னு சொன்னது, மாடு விக்கறதுக்கு தடை போட்டது, இப்ப ஜி.எஸ்.டி….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க