Thursday, February 27, 2020
முகப்பு உலகம் அமெரிக்கா கனடாவின் 150-ஆம் பிறந்த நாள் : யாருக்கு கொண்டாட்டம் ?

கனடாவின் 150-ஆம் பிறந்த நாள் : யாருக்கு கொண்டாட்டம் ?

-

கனடா 150 நாளானது இனவெறி, இனப்படுகொலை மற்றும் காலனித்துவம் பற்றிய ஒரு குறியீடு

ஜூலை முதல் நாள் அன்று பெருநகரங்கள், நகரங்கள், பட்டித்தொட்டியெங்கிலும் தன்னுடைய 150 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியது ஒரு முதலாளித்துவ நாடு. அதே நேரத்தில் இந்த கொண்டாட்டம் தங்களுக்கு எதிரான இனவெறி, இனப்படுகொலை மற்றும் காலனித்துவம் பற்றிய ஒரு குறியீடு என்று இந்த விழாவை புறக்கணித்து பல்வேறு இடங்களில் பேரணிகள், போராட்டங்கள் நடத்தினர் அதே நாட்டின் ஒரு பகுதி மக்கள். அவர்கள் இந்த கொண்டாட்டங்களுக்கு பன்னெடுங்காலம் முன்பிருந்தே அங்கு வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள். அந்த நாடு கனடா.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அல்லது நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகிறீர்கள், அல்லது யாரை நேசிக்கிறீர்கள் என்பது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. நீங்கள் அனைவரும் கனடாவில் வரவேற்கப்படுகின்றீர்கள்” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூயி கனடாவின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் பேசியிருந்தார்.

“கனடா 150” சின்னத்தை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அதில் சில பூஜ்ஜியங்களை சேர்க்க நான் விரும்புகிறேன் என்கிறார் போராட்டத்தில் கலந்து கொண்ட இனுவிட்டு (இன்க்) பழங்குடி இனத் திரைப்பட தயாரிப்பாளரான அலேத்தீ அர்னகுக்-பரில். “150 ஆண்டுகள் பழமையான கனடாவைக் கொண்டாட என்னிடம் கேட்டுக் கொண்டிருப்பது இந்த கண்டத்தின் 14,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றை மறுக்க என்னைக் கேட்கிறது” என்கிறார்அவர்.

“இனவெறி, இனப்படுகொலை மற்றும் காலனித்துவம் என்று நாங்கள் கருதுவதையே 150 வது ஆண்டு விழாவாக கனடா கொண்டாடுவதை அடித்தளங்களில் இருக்கும் எங்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை” என்று மோஹப் தேசியம் என்ற பழங்குடி அமைப்பின் அமைப்பாளரான ரஸ் டிபோ கூறுகிறார்.

ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே முதற் குடிமக்கள் (செவ்விந்தியர்கள்), இனுவிட், மேட்டிசு உள்ளிட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்ந்து வந்து கொண்டிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். வட அமெரிக்காவை ஐரோப்பியர்கள் கண்டெடுக்கும் முன்பே மண்ணின் மைந்தர்கள் அதற்குச் சூட்டிய பெயர் ஆமைத் தீவு.

பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்தே வட அமெரிக்க கண்டத்தில் கால்பதித்த ஐரோப்பியர்கள் அங்கிருந்த பூர்வகுடி மக்களை இனவழிப்பு செய்தனர். கனடாவை 1534 ஆம் ஆண்டில் முதலில் பிரெஞ்சு அரசும் பின்னர் 1763 ஆண்டில் ஆங்கிலேய அரசும் தம்முடைய காலனிப் பகுதிகளாக்கின.

வட தென் அமெரிக்க கண்டங்கள் மட்டுமல்ல ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா என உலகை பங்கீடு செய்ய 1754 முதல் 1763 ஆண்டு வரை பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பேரரசுகள் ஆடிய காலனியாதிக்க வெறியாட்டங்கள் ஏழாண்டுப் போர் (Seven Years’ War) என்று அழைக்கப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் இந்த போர் மூன்றாம் கர்நாடக போர் என்றழைக்கப்படுகிறது. முடிவில் பிரான்சை முறியடித்து பிரிட்டன் உலகின் வல்லாதிக்கமாக வரலாற்றில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

நூறாண்டுகளுக்குப் பிறகு 1867 ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள் தன்னுடைய காலனியப் பகுதிகளான கனடா, நோவா ஸ்காட்டியா, நியூ பிரன்சுவிக் ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்து தனி நாடாக்குவதற்காக பிரித்தானிய வட அமெரிக்க சட்டங்களை (British North American Acts) பிரிட்டன் இயற்றியது. ஆயினும் முதல் உலக போர் முடியும் தருவாய் வரையிலும் கனடாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை பிரிட்டனே கட்டுப்படுத்தி வந்தது. 1982 ஆம் ஆண்டில் தான் இங்கிலாந்திடம் இருந்து கனடா முழுமையான அரசியல் சுதந்திரம் பெற்றது.

இந்த நாள் தான் ஒரு பொது விடுமுறையாக இத்தனை ஆண்டுகளாக் கொண்டாடப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிவிட்டதை பழங்குடிகள் நீங்கலாக கனடிய மக்கள் கொண்டாடுகின்றனர்.

பழங்குடி மக்களுக்கு எதிரான ஏராளமான இனவழிப்பு குற்றங்கள் கனடா வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டன

பழங்குடி மக்களுக்கு எதிரான ஏராளமான இனவழிப்பு குற்றங்கள் கனடா வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்டன. நாகரிகத்தை கற்றுக்கொடுக்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பழங்குடி குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு கிறித்துவ திருச்சபைகளின் விடுதி பாடச்சாலைகளில் தங்கவைக்கப்பட்டனர். அங்கே தாளமுடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மடிந்தனர்.

இன்று வெறும் 0.2 விழுக்காடு நிலப்பரப்பில் தள்ளப்பட்டுள்ள கனடிய மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிகள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது சராசரி ஆயுட்காலம் ஏனைய கனடிய மக்களை விட குறைவாகவே இருக்கிறது. வேலையற்றவர்களின் எண்ணிக்கையோ அதிகம் ஆனால் பெரும் கூலியோ குறைவு. இந்த ஆறாத காயத்தை இழைத்து விட்டதற்காக கனடிய அரசு அவர்களிடம் மன்னிப்பு கேட்டாலும் நடைமுறையில் இன்னும் அது உள்ளார ஆறவில்லை.

செவ்விந்திய சமூகத்தை இனப்படுகொலை செய்ததை மறைத்து கொலம்பஸ் நாளாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். அதே போல பதினைந்தாயிரம் ஆண்டுகால பழங்குடி வரலாற்றை அழித்துவிட்டு வெறும் 150 ஆண்டு கால ஆக்கிரமிப்பையே கனடாவின் வரலாறு என்று ஏற்றிப் போற்றுகிறது முதலாளித்துவம். இதன் எதிர்வினை தான் பழங்குடி மக்களின் போராட்டங்கள்.

செய்தி ஆதாரம்:

 

 

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. இந்த கதை போல் இருந்தால், இந்தியா எப்பொது சுதந்திரம் பெற்றது ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க