Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்ஜி.எஸ்.டி-யை எதிர்த்து தமிழக மெழுகு தீப்பெட்டி ஆலைகள் போராட்டம் !

ஜி.எஸ்.டி-யை எதிர்த்து தமிழக மெழுகு தீப்பெட்டி ஆலைகள் போராட்டம் !

-

த்திய அரசு அமல்படுத்தியிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரியால் நாடு முழுவதும் உள்ள சிறு தொழில்கள் கடுமையாக முடங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள தீப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிலும் கடுமையாக பாதிக்கபட்டதால் ஜிஎஸ்டியை எதிர்த்து ஜுலை 1 அன்று தமிழகம் முழுதும் உள்ள தீப்பெட்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது மெழுகு தீக்குச்சி தீப்பெட்டிகள் தயார் செய்யும் தொழிற்சாலைகளும் காலவறையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளன. குறிப்பாக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மெழுகு தீக்குச்சி தீப்பெட்டிகள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இங்கு கையால் தயார் செய்யும் தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் பகுதியளவு இயந்திரங்களை பயன்படுத்தும் தீப்பெட்டி தொழிற்சாலை என 2 முறைகளில் தயாரிக்கப்படுகின்றது. ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு முன் கையால் தயார் செய்யப்படும் தீக்குச்சிகளுக்கு வரி கிடையாது. பகுதி இயந்திரங்களை கொண்டு தயார் செய்யும் தீக்குச்சிகளுக்கு மட்டும் 6 சதவீதம் மத்திய கலால் வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்பொழுது ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பகுதி இயந்திர தொழிற்சாலைகளை, முழு இயந்திர தொழிற்சாலைகளுடன் இணைத்து பட்டியலிட்டுள்ளது மோடி அரசு. இதனால் பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  முழு இயந்திரத்தை பயன்படுத்தும் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகள் இந்தியாவில் இல்லாதபோது அதனுடன் இணைத்து வரி விதித்திருப்பது மோடி அரசின் அப்பட்டமான மோசடி.

மரக்குச்சி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மட்டும் தான் முழு அளவில் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. முழு இயந்திர தொழிற்சாலைகளில் 25 பேர் மட்டும் பணியமர்த்தினால் போதும். ஆனால் பகுதியளவு இயந்திர தொழிற்சாலைகளில் 200 பேர் வேலையில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்நிலையில் 18 சதவீதம் வரியை லாபத்துடன் சேர்த்து தொழிலாளர்களின் கூலியையும் சேர்த்தே வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தீக்குச்சி தயாரிக்கும் தொழிலின் மூலப்பொருட்களின் விலை உயர்வு, சிறு தொழில்கள் பட்டியலில் இருந்து நீக்கம் போன்ற காரணத்தால் நலிந்து போய் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஆயிரக்ணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில், ஜிஎஸ்டியின் மூலம் இந்த தொழிலை நிரந்தரமாக ஒழித்துகட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்யும் தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளது மோடி அரசு.

மோடி அரசின் இந்த நடவடிக்கையால் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளை நம்பி உள்ள 5,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையை கையால் தயாரிக்கப்படும் தீப்பெட்டி தொழிற்சாலையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தற்போது (ஜூலை 2017) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால் விலைவாசி குறையும், வேலைவாய்ப்புகள் பெருகும் என்று கூச்சலிட்டது பாஜக மற்றும் அதன் ஆதரவு ஊடக கும்பல். அதற்கு நேர்மாறாக விலைவாசியும் உயர்ந்துள்ளது. பல லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழந்து வீதிக்கு வந்துள்ளனர். இப்படி சொல்லலாம். மோடி அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்த பிறகு முழு இந்தியாவும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க