தக்காளி விலைக்கு அடுத்தபடியாக கடந்த வாரத்தில் தமிழக மக்களை பரபரப்புக்குள்ளாக்கிய விசயம், கள்ளக் கடவுச்சீட்டு விவகாரத்தில் உளவுத்துறை போலீசு ஒருவர் கைது செய்யப்பட்டது தான். அதனைத் தொடர்ந்து ஒரு தபால் அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் கீழ்நிலை ஊழியர்கள் தான் என்பது இவ்விவகாரத்தில் கூடுதல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
கள்ளக் கடவுச்சீட்டுக்கான போலியான ஆவணங்கள் (வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை, ஆதார் அட்டை) தயாரிப்பில் ஈடுபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராமு என்பவரைக் கடந்த ஜூன் மாதத்தில் கைது செய்தது மத்திய குற்றப் பிரிவு போலீசு. ராமுவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போலி ஆவணங்கள் தயாரிப்பிலும், அவருக்கு உதவியாக சிந்தாதிரிப்பேட்டை போலீசு நிலைய உளவுப் பிரிவில் ஏட்டாக பணி புரியும் முருகன் செயல்பட்டு வந்த்து தெரிய வந்தது.

கடவுச் சீட்டு வழங்குவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டு வந்த ஏட்டு முருகன், ராமு தயாரித்து அளித்த போலி ஆவணங்கள் சரிபார்ப்புக்காக வரும் போது, அவற்றை விசாரித்து சரிபார்த்து விட்டதாகச் சான்றிதழ் அளித்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஜூலை 11 அன்று முருகனைக் கைது செய்தது மத்திய குற்றப் பிரிவு போலீசு. முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கண்ணகி நகரைச் சேர்ந்த தபால்காரர் தனசேகர் என்பவரைக் கைது செய்துள்ளது. அண்ணாசாலை தலைமைத் தபால்நிலையத்தில் பணியாற்றிய இவர் போலி ஆவணங்களில் குறிப்பிடப்படும் தவறான முகவரிக்கு வரும் கடவுச் சீட்டுகளைத் தவறாமல் ஏட்டு முருகனிடம் ஒப்படைக்கும் பணியைச் செய்து வந்துள்ளார்.
இவ்வகையில் இந்தக் குற்றவாளிக் கும்பல் கள்ளக் கடவுச் சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறது. சிக்கிய மொத்த கும்பலில் வெளிப்படையாகக் கைது செய்யப்பட்டது இந்த ஏட்டும், தபால் துறை ஊழியரும் தான். ராமு என்ற கள்ளக் கடவுச் சீட்டு முகவர் சிக்குவதற்கு முன்னால் இவரைப் போன்ற இருவரையும் கைது செய்திருக்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீசு. அப்படியெனில், அந்த வலைப்பின்னலில் சிக்கியிருக்கும் உளவுப் பிரிவு போலீசு மற்றும் தபால் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக எந்த செய்தியும் இதுவரை வரவில்லையே?
இவ்வளவு பெரிய வலைப்பின்னலில் நடைபெறும் கள்ளக் கடவுச் சீட்டுக்கான போலி ஆவணங்கள் தயாரிக்கும் திருப்பணி, போலீசு உயரதிகாரிகளுக்குத் தெரியாமல் தான் நடந்திருக்கும் என்றால் அதனை சிறு குழந்தை கூட நம்பாது. சமீபத்தில் கோவில் சிலைகள் கடத்தலில், டி.எஸ்.பி பதவியில் இருந்த காதர் பாட்சா சம்பந்தப்பட்டிருப்பதும், அதற்குச் சற்று முன்பாக முறைகேடான குட்கா வியாபாரத்தில் டி.ஜி.பி. டி.கே இராஜேந்திரனும், கமிஷனர் ஜார்ஜும் நேரடியாக சம்பந்தப்பட்டுருப்பதும் சிறு உதாரணங்களே.
அதற்கும் முன்னதாக, கோவையில் ஹவாலா பணத்தை, மாஃபியா கும்பலோடு போலீசும் சேர்ந்து கடத்திய சம்பவமும், செம்மரக்கடத்தலில் நேரடியாக போலீசு டி.எஸ்.பி. ஈடுபட்ட சம்பவமும், அதற்கும் முன்னதாக முத்திரைத் தாளை போலியாகத் தயாரித்த குற்றக் கும்பலோடு போலீசு உயரதிகாரி கூட்டு வைத்துக் கொண்ட சம்பவமும் நம் கண் முன்னாலேயே தான் அரங்கேறின. இங்கே திருடர்களும் போலீசும் தனித்தனியாக இல்லை. திருட்டுப் போலீசும் அவர்களுக்கு கீழ் காக்கி உடை அணியாத அடிமைகளும் தான் இருக்கிறார்கள்.
சிறுவயதில் நாம் அனைவரும் நிலாச் சோறு சாப்பிட்டிருப்போம், திருடன் – போலீசு விளையாட்டும் விளையாடி இருப்போம். நிலவில் ஒரு கிழவி அமர்ந்து வடை சுட்டுக் கொண்டிருப்பதாக நமக்குச் சொல்லப்பட்ட கதையை அன்று நம்பினோம். திருடன் – போலீசு விளையாட்டிலும் கூட திருடனைப் போலீசு பிடிப்பான் என்றும், திருடனுக்கு எதிரி போலீசு என்றும் நம்பினோம். அவை அந்த சிறு வயதுக்கான புரிதல்கள். ஆனால் சிறு வயதுப் புரிதலே பருவம் கடந்தும் நம்மிடம் தொடர்ந்தால், நம் அறிவு வளர்ச்சியில் ஏதோ குறைபாடு இருப்பதாகவே பொருள்படும். அது நிலவு – கிழவியின் வடையைப் பற்றிய புரிதலாக இருந்தாலும் சரி!! அல்லது திருடன் – போலீசின் உறவைப் பற்றிய புரிதலாக இருந்தாலும் சரி!!