
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளிகள் கடந்த 9 நாட்களாக நிர்வாகத்திற்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் இந்நிறுவனத்திற்காக தங்கள் நிலம், வீடு வாசலை இழந்தவர்கள். நிலக்கரி சுரங்கத்திற்காக காலிசெய்யப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை சுமார் 22 கிராமம்.
1956 இல் நிலக்கரியை தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தியது மத்திய அரசு. முதலில் கனரக இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் வெட்டி எடுத்தனர். பிறகு ரசிய அரசின் தொழில்நுட்பம் கொண்டு நிலக்கரியை வெட்ட ஆரம்பித்தார்கள்.
அப்படி ஆரம்பிக்கும் பொழுது “உள்ளே சென்றால் பிணம், வெளியே வந்தால் பணம்” என்ற முழக்கத்தை முன்வைத்து தான் ஆரம்பித்தார்கள். அவ்வளவு ஆபத்து நிறைந்தது சுரங்க தொழில். தற்பொழுது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளி 13,000 பேரும், நிரந்தர தொழிலாளி 12,000 பேரும், எக்சிகியூட்டிவ் அதிகாரிகள் 5,000 பேரும் வேலை பார்க்கிறார்கள். இந்த அதிகாரிகளில் பெரும்பான்மையோர் வட இந்தியர்கள். பத்தாண்டுகளுக்கும் முன்பு 18,000 க்கும் மேற்பட்டோர் நிரந்தர தொழிலாளியாக இருந்தவர்கள் படிப்படியாக குறைந்து விட்டனர். அதன் தொழிலாளிகள் நிரந்தரம் என்ற நிலையே காணாமல் போய்விட்டது.
இந்த தொழிலாளிகளின் குருதி சிந்திய உழைப்பில் தான் மினி ரத்னா என்று இருந்த நிறுவனம், நவரத்னா என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டிற்கு 2490 மெகா வாட் மின்சாரமும், 1550 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டும் பெருமைக்கு பின்னால் தொழிலாளர்களின் உதிரம் சிந்திய உழைப்பில் தான் என்றால் அதை யாரும் மறுக்க முடியாது.
வீடு, வாசலை இழந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்தார்களா? என்றல் இல்லை. அனைத்தையும் பறித்துக் கொண்டு ஒப்பந்த தொழிலாளியாக்கி அவர்களின் உழைப்பையும் சுரண்டுகிறது நிர்வாகம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமைகளை போல் உழைக்கும் தொழிலாளிகளை வஞ்சிக்கிறது மத்திய அரசு.
எட்டு மாதங்களுக்கு முன்பு, சிறப்பு சுரங்கப் பிரிவு (Specialised Mining Divison-SMD), சுரங்கம்-1A பாட்டம் பெஞ்ச் (Bottem Bench/Mine-1A), எலக்ட்ரிகல் பிரிவு(Elactrical Base) ஆகிய பிரிவுகளில் மட்டும் பணி புரியம் ஒப்பந்த தொழிலாளிகளுக்கு 26 சிப்டை 19 ஆக குறைத்தார்கள். அதன் பிறகு சுரங்கம்-1A விரிவாக்கத்தில் பணிபுரிந்த அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் குறைத்தார்கள். தற்பொழுது மூன்று சுரங்கங்களிலும் பணியாற்றும் ஒட்டுமொத்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் குறைத்திருக்கிறார்கள்.
இது குறித்து மனித வளத்துறை அதிகாரியிடம் தொழிலாளர்கள் கேட்டபோது திமிராக பதில் அளித்துள்ளார். இத்தகைய நிலையில் கடந்த 11-ம் தேதி தொடங்கிய தொழிலாளர்களின் போராட்டம் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 20-ம் தேதி நேற்று புதுச்சேரியில் உள்ள உதவித் தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையிலும் தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேறவில்லை. ஆகவே, பத்தாவது நாளான இன்று தொழிலாளர்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
வீடுவாசல், நிலங்களை கொடுத்தவர்கள் சுரங்கத்தில் வேலை கிடைக்காததால் NLC அதிகாரிகளின் வீட்டிற்கு வேலையாட்களாக செல்கிறார்கள். சமையல், தோட்டவேலை, கழிப்பறை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மறைமுகமாக ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள் என்றார்களே அதன் யோக்கியதை இது தான்.
ஆண்டிற்கு 1500 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டும் இந்நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு 2002 ஆம் ஆண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு, அமைச்சரவை ஒப்புதலையும் பெற்ற நிலையில், நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார் அன்றைய பிரதமர் வாஜ்பாய். அப்பொழுது எழுந்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக அது நிறுத்தி வைக்கப்பட்டது.
மன்மோகன் சிங் ஆட்சியிலும் என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் முயற்சி தொழிலாளர்களின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. ஆனால் தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை சிறிது சிறிதாக தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியாக, சுரங்கப் பணிகள் உள்ளிட்ட அனைத்தும் அயல் பணி ஒப்பந்தம் மூலம் நிறைவேற்றி வருகிறது. நடப்பு நிதியாண்டில் என்.எல்.சி. நிறுவன பங்குகள் 20 சதவீதம் விற்பனை செய்வதற்கும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, வேலை நாட்கள் குறைப்பு என்று தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. கேடுகெட்ட இந்த அரசின் சதித் தனத்தால், காலம் காலமாக குடியிருந்த மக்களின் வாழ்க்கையையும், தொழிலாளர்களின் உழைப்பையும் சூறையாடி ஜொலிக்கிறது. அதற்காக தியாகம் செய்தவர்களின் வாழ்க்கையோ இருண்டு கிடக்கிறது. தற்பொழுது தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் நாளை மொத்த தமிழகமும் இருண்டு விடும்.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி