Saturday, May 3, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுவிவசாயிகளுக்கு குரல் கொடுத்த பச்சைய்யப்பன் கல்லூரி மாணவர்கள் இடை நீக்கம் !

விவசாயிகளுக்கு குரல் கொடுத்த பச்சைய்யப்பன் கல்லூரி மாணவர்கள் இடை நீக்கம் !

-

கதறும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது குற்றமா ? சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்  65 பேரை இடைநீக்கம்!

திராமங்கலம் விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த 17.07.2017 அன்று காலை 9:00 மணிக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சார்பாக போராட்டம் நடத்துவதாக முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அனைத்து பேருந்து தடங்களின் வழியாக வரும் மாணவர்களும் குறித்த நேரத்துக்கு கல்லூரிக்கு வர வேண்டும் என முடிவு செய்தனர்.

அனைத்து மாணவர்களும் கல்லூரி வளாகத்துக்குள் போராட ஆயத்தமாகினர். பாரிமுனை வழித்தடத்தில் இருந்து வரும் மாணவர்கள் கல்லூரிக்கு வர தாமதமானது. இருந்தாலும் திட்டமிட்டபடி போராடத் துவங்கினர் மாணவர்கள். உடனே பதறியடித்துக் கொண்டு ஓடிவந்த கல்லூரி முதல்வர் காளிராஜ், துறைத் தலைவர்கள் மற்றும் போலீசார் மாணவர்களை விரட்ட ஆரம்பித்தனர்.

கலைய மறுத்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர் போலீசும் – நிர்வாகமும். மேலும் அவர்களின் அடையாள அட்டைகளையும் பறித்துக் கொண்டார் காளிராஜ். இந்த களேபரங்களுக்கிடையில் கல்லூரிக்கு வந்த பாரிமுனை வழித்தட மாணவர்களையும் தாக்கத் தொடங்கியது போலீசு.

மாணவர்களை கல்லூரி முதல்வரும் போலீசும் சேர்ந்து நடைபாதையில் உட்காரவைத்து அவர்களை மிரட்டியுள்ளது. இதனை கண்டித்து பு.மா.இ.மு -வின் உறுப்பினர் தோழர் வாசு கண்டித்து கல்லூரி முதல்வரிடம் விவாதித்துள்ளார்.

கல்லூரி முதல்வரும் வேறு வழியின்றி மாணவர்களின் அடையாள அட்டையை தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் அங்கிருந்த G-7 காவல்துறை ஆய்வாளர் இவர்களை எல்லாம் சும்மா விடக்கூடாது… என முதல்வர் காளிராஜிக்கு கட்டளையிட்டார். மற்ற பேராசிரியர்களும் போலீசும் சேர்ந்து பு.மா.இ.மு தோழரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வகையில் அடித்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர்.

காவல்துறை வாகனத்தில் வைத்தும் கடுமையாக தாக்கியுள்ளது போலீசு. தோழர் வாசுவுடன் சேர்த்து 65 மாணவர்களை இடை நீக்கம் செய்ததாக அறிவித்தார் காளிராஜ். தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் நுழையக்கூடாது என்றும் உத்திரவிட்டுள்ளது நிர்வாகம். மீறி கல்லூரிக்குள் நுழைந்தால் போலீசிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என மிரட்டுகிறார் காளிராஜ். போராடும் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழைத் தந்து அவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப் போவதாகவும் மிரட்டுகிறது கல்லூரி நிர்வாகம்.

நிலமை இவ்வாறு இருக்க போராடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக போலீசின் குரலை எதிரொலிக்கிறார் கல்லூரி முதல்வர் காளிராஜ்.

தமிழகம் முழுக்க போராடும் மாணவர்களை இடைநீக்கம், குண்டர் சட்டம் என மிரட்டுகிறது பாஜக-வின் கைப்பாவையாக செயல்படும் எடப்பாடி அரசு. இந்த காட்டாட்சியை எதிர்த்து அனைத்து மாணவர்களும் களமிறங்குவோம்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு : 94451 12675.

_____________

  • மற்ற ஊடகங்களில் வர இயலாத போராட்டச் செய்திகளைத் தரும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி