privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபிகினி உடையை ஹலால் ஆக்கும் சவுதி அரேபியா !

பிகினி உடையை ஹலால் ஆக்கும் சவுதி அரேபியா !

-

பிகினி உடையை ஹலால் ஆக்கவுள்ளது சவுதி அரேபியா. செங்கடலை ஒட்டிய சவுதி அரேபியாவின் மேற்குக் கடற்கரை எல்லையை ஒட்டி இயற்கையாக அமைந்துள்ள உப்புநீர் பரப்புப் பகுதியில் (Lagoon) இயற்கையாக அமைந்துள்ள சிறு சிறு தீவுகளை சுற்றுலாத் தலமாக்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள், 2019 -ம் ஆண்டு துவங்க உள்ளதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.

புதிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றுள்ள முகமது பின் சல்மான்

சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றுள்ள முகமது பின் சல்மான், சவுதியின் பொருளாதாரத்தை எண்ணை வர்த்தகச் சார்பிலிருந்து மீட்டு மாற்று பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக “மிஷன் 2030” எனும் தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தின் அங்கமாகவே சவுதி அரேபியாவை உலக சுற்றுலா மையமாக வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சவுதியின் மேற்குக் கடற்கரைப் பிரதேசத்தில் உருவாகவுள்ள கேளிக்கைத் தீவுகளுக்கென “சர்வதேச தரம் கொண்ட” புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் என சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் (Public Investment Fund) அறிவித்துள்ளது. அதாவது, இத்தீவுகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை சவுதியின் ஷரியா சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்பது இதன் பொருள்.

கடுமையான வகாபிய சட்டங்களை அமல்படுத்தி வரும் சவுதி அரேபியா, உலகளவில் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதிகளுக்கு முன்னுதாரணமான நாடாக விளங்கி வருகின்றது. ஷரியா சட்டங்களின் அடிப்படையில் அந்நாட்டின் பெண்களுக்கு வாகனங்கள் ஓட்டுவதில் இருந்து எண்ணற்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தாலே குடும்பத்தில் உள்ள ஆண்களின் துணையோடு தான் செல்ல முடியும். அதே போல் சவுதிக்குள் வரும் அயல்நாட்டு பெண்களும், உடலை முழுவதும் மூடுவது போல் உடை அணிய வேண்டும் என்கிற கட்டுப்பாடு அமலில் உள்ளது.

சரியத் சட்டப்படி சவுதிக்குள் வரும் அயல்நாட்டவர்களும், உடலை முழுவதும் மூடுவது போல் உடை அணிய வேண்டும் என்கிற கட்டுப்பாடு அமலில் உள்ளது.

இந்நிலையில் கேளிக்கைத் தீவுகளுக்கென புதிதாக உருவாக்கப்படவுள்ள “சர்வதேச தரம் கொண்ட” சட்டங்கள், பிகினி உடை அணிவதற்கு அனுமதியளிக்கப் போகின்றன. போலவே இத்தீவுகளுக்கு வரும் உல்லாசவாசிகளுக்கான வீசா கட்டுப்பாடுகளையும் தளர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுக்குடி உல்லாசவாதிகள் நேரடியாக கேளிக்கைத் தீவுகளுக்கு வந்து செல்வதை சுலபமாக்கும் வகையில் தனி விமான நிலையங்கள், ஆடம்பர ஓட்டல்கள் போன்றவைகளும் கட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியகால நிலபிரபுத்துவ கொடுங்கோன்மையின் சமகால உதாரணமாகத் திகழும் சவுதி அரேபியாவின் பொருளாதாரம், மன்னரின் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்படுகின்றது. எண்ணை வர்த்தகத்தில் மன்னரின் ஒன்று விட்ட, இரண்டு விட்ட, மூன்று விட்ட சொந்தக்கார ஷேக்குகள் சம்பாதித்த லாபத்தில் உள்நாட்டில் மாற்றுத் தொழில்துறைகளை வளர்ப்பதற்குப் பயன்படுத்தவில்லை. மாறாக, பெரும்பங்கு லாபம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யப்படுகின்றது. எஞ்சிய டாலர்களை மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆப்கான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் ஐ.எஸ், தாலிபான் போன்ற வகாபிய பயங்கரவாத இயக்கங்களை வளர்ப்பதற்காகப் பாய்ச்சுகின்றது சவுதி.

பொதுவில் பணக்கார நாடாக அறியப்பட்ட சவுதியில் சுமார் 20 சதவீத மக்கள் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக அறியப்படுகின்றது. சவுதியில் ஏழையாக வாழ்வதில் உள்ள சிக்கலில் முதன்மையானது – தனது நாட்டில் நிலவும் ஏழ்மையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவோ, கணக்கெடுக்கவோ சவுதியின் மன்னராட்சி அனுமதிப்பதில்லை. தனது ஏழ்மையை வெளிப்படையாக அறிவித்து அரசாங்கத்தைக் கேள்விக்குட்படுத்தும் வாய்ப்புகளை சவுக்கு நுனியின் கீழ் அழுத்தி வைத்துள்ளது சவுதியின் கொடுங்கோலாட்சி.

இந்நிலையில், ஷேக்குகளின் காட்டில் அடைமழையாகப் பொழிந்து கொண்டிருந்த எண்ணை வர்த்தகமும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சவுதியின் எண்ணை உற்பத்தியின் கட்டுப்பாடு பெயரளவுக்கு மன்னர் குடும்பத்திடம் இருந்தாலும், அந்நாட்டின் உற்பத்தி அளவில் இருந்து சர்வதேச விலை நிலவரம் வரை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அமெரிக்காவே வைத்துள்ளது. சர்வதேச சந்தையில் ரசிய எண்ணையின் ஆதிக்கத்தைத் தடுக்க மத்திய கிழக்கு எண்ணையின் விலையைக் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா தாழ்த்தி வைத்திருப்பது ஷேக்குகளின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டுள்ளது.

இந்தப் பின்னணியில் தான் உல்லாச விடுதிகளுக்கு அனுமதியளிக்க முன்வந்துள்ளது சவுதி. இதற்கென கொட்டப்படவுள்ள பில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு உள்நாட்டில் நிலவும் ஏழ்மை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது குறித்து அமெரிக்க அடிமைகளான சவுதி மன்னர் குடும்பத்தினர் சிந்திக்காதிருப்பது தற்செயலானதில்லை.

அடுத்ததாக, “சர்வதேச தரம் கொண்ட” சட்டங்கள் பிகினியை மட்டும் அனுமதிக்குமா, சாராயம், சூதாட்டம், விபச்சாரம் போன்ற “சர்வதேச தரம்” கொண்ட கேளிக்கைகளையும் அனுமதிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் மேட்டுக்குடி உல்லாசவாசிகளின் கேளிக்கைக் களியாட்டப் பட்டியலில் மது மாது சூது போன்றவைகளே பிரதானமானவை.

மேலும், மேற்படி லாகிரி வஸ்துக்களை துய்க்க விரும்பும் சவுதி ஷேக்குகள் அக்கம் பக்கத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்வதை சவுதியின் ஒழுக்கவாத ஷரியா சட்டங்கள் தடுப்பதில்லை. எனவே உல்லாசத் தீவுகளின் கேளிக்கைகள் அயல்நாட்டவர்களுக்கு மட்டுமா, சொந்தநாட்டு ஷேக்குகளும் அதில் கைநனைக்கலாமா என்பதையும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கென “சர்வதேச தரத்தில்” இளையபட்டம் முகமது பின் சல்மான் முடிவெடுக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.

உலகமெங்கும் உள்ள வகாபிய கடுங்கோட்பாட்டுவாதிகளும், நமது மண்ணடி மாவீரர்களும் இனிமேலாவது வகாபியத்தின் இரட்டைவேடத்தையும், மக்கள் விரோத தன்மையையும் புரிந்து கொள்வார்களா?

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி