Saturday, May 10, 2025
முகப்புசெய்திமனிதகுல வரலாற்றின் அடிப்படையே விவசாயம்தான் - தோழர் மருதையன் உரை

மனிதகுல வரலாற்றின் அடிப்படையே விவசாயம்தான் – தோழர் மருதையன் உரை

-

ஞ்சையில் ஆகஸ்டு 5 2017 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயியை வாழவிடு” மாநாட்டின் கருத்தரங்கில் தோழர் மருதையன் ஆற்றிய தலைமை உரையின் சுருக்கம்:

க்கள் அதிகாரம் அமைப்பின் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி.

உணவை உற்பத்தி செய்து நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் விவசாயி இன்று நெஞ்சு வெடித்துச் சாகிறான். விளையும் இடம், விளையாத இடம் என்று எந்த விதிவிலக்குமின்றி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை அதிகரித்துள்ளது.

ஆகையால் நம்மை வாழவைத்து மடிந்து போன விவசாயிகளுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம்.

நிவாரணம் கொடு, கடன்களைத் தள்ளுபடி செய், உதவி செய் என்று விவசாயிகள் அரசை நோக்கி கொடு கொடு என்கின்றனர். ஆனால் நாம் ஏன் வாழவிடு என்கிறோம்?

விவசாயி ஒன்றும் மாத சம்பளம் வாங்கும் அரசுப் பணியாளர் அல்ல; ஆனால் மனித குல வரலாற்றின் அடிப்படையே விவசாயம் தான்; மனிதன் மனிதனானதும் விவசாயத்தினால் தான். இந்தியா உருவாவதற்கு முன்னரே வேளாண் தொழில் உருவாகிவிட்டது. விளைச்சல் இல்லையென்றால் இங்கிருக்கும் பெருவுடையார் கோவிலே இருந்திருக்காது.

ஆனால் இப்போது கீழத்தஞ்சை விவசாயிகள் மாநில, மத்திய அரசுகளிடம் கெஞ்சுகிறார்கள்; எப்படியென்றால் வழிப்பறி கொள்ளையனிடம் மாட்டிக்கொண்ட பயணியைப் போல, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் பெண், ஆண் மிருகங்களிடம் சிக்கிக் கதறுவதைப் போல விவசாயிகளும் அரசுகளை நோக்கிக் கெஞ்சுகின்றனர். எனவே தான் நாம் இப்போது விவசாயிகளை வாழவிடு என்று கோரிக்கை வைக்கிறோம்.

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று முழங்கிய மோடி அதற்காக ஒரு கமிட்டியை உருவாக்கினார். அதன் தலைவர் யார் தெரியுமா? துப்பாக்கிச் சூடு புகழ் மாநிலத்தின் முதல்வரான சிவாரஜ் சிங் சவுகான். இவர்களால் எப்படி விவசாயியை வாழவைக்க முடியும்; எனவே தான் நாங்கள் விவசாயியை வாழவிடு என்று இந்த மாநாட்டை நடத்துகிறோம்.