privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கோராக்பூர் குழந்தைகள் படுகொலை - மரணத்தின் நிறம் காவி

கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி

-

நாளை ஆகஸ்டு 15 -ம் தேதி. இந்தியா “சுதந்திரமடைந்து” நாளையோடு 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எழுபது ஆண்டு இந்திய சுதந்திரத்தை எழுபது பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டுக் கொண்டாடி உள்ளது பாரதிய ஜனதா. கடந்த ஒரு வாரத்திற்குள் பாரதிய ஜனதா ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு உத்திரபிரதேச மாநில அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்த மத்திய தணிக்கைத் துறை (CAG), பல்வேறு மருத்துமனைகளில் போதுமான மருத்துவ உபகரணங்களும், மருந்துப் பொருட்களும் இல்லை என அறிக்கை சமர்பித்துள்ளது. குறிப்பாக தற்போது படுகொலை நடந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2011 – 2016 காலப்பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 452.35 கோடியில் 426.13 கோடி அளவுக்கே செலவு செய்திருப்பது தெரியவந்தது.

மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை

இதே மருத்துவ மனையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச மருத்துவ உபகரணத் தேவையில் 27 விழுக்காடு பற்றாக்குறையாக இருப்பதும் கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கையில் தெரியவந்தது.

கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தற்போதைய உறுப்பினரான யோகி ஆதித்யநாத், கடந்த ஐந்து பாராளுமன்றத் தேர்தல்களில் வென்றவர் என்பதும், அவரே மாநில முதல்வராகவும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான பிறகு ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – ஆதித்யநாத் இன்னமும் அவ்வாறு செய்யவில்லை)

கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கருவிகள் மற்றும் மருத்துகளின் பற்றாக்குறையுடன், வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் (Annual Maintenance Contract) செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதையும், பல்வேறு உயிர்காக்கும் கருவிகள் செயல்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தது. அதே போல் உத்திரபிரதேச மாநிலத்தில் குறிப்பாக கோரக்பூர் பகுதியில் மூளை அழற்சி நோய் தாக்கு 1970 -களில் இருந்தே அசாதாரண எண்ணிக்கையில் உள்ளது.

இறந்த குழந்தையின் உடலைச் சுமந்து செல்லும் உறவினர் ஒருவர்

கடந்த 2010 -ல் இருந்து எடுத்துக் கொண்டால் மொத்தம் 24,678 பேர் மூளை அழற்சி நோய் தாக்குக்கு உள்ளாகியுள்ளனர் – இதில் மொத்தம் 4,093 பேர் இறந்துள்ளனர். இந்த நோயின் காரணமாக 1978 -ல் இருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில் தான் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 70 குழந்தைகளும் 13 பெரியவர்களும் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் கொல்லப்பட்டுள்ளனர். முதலில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டு மரணங்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

கடந்த பல மாதங்களாக ஆக்சிஜன் சப்ளை செய்யும் காண்டிராக்டருக்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்படாத நிலையில் காண்டிராக்டரின் தரப்பிலிருந்து பல்வேறு நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில், நிலுவைத் தொகை குறித்து எந்த தகவலும் வழங்கப்படாத நிலையில் ஆகஸ்டு 10 -ம் தேதி ஆக்சிஜன் சப்ளையை காண்டிராக்டர் நிறுத்தியதாகவும், அதன் காரணமாகவே மரணங்கள் நிகழ்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் காண்டிராக்டரின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆளும் பாரதிய ஜனதா சார்பில் நடந்த கொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது காரணமில்லை என்றும், மூளை அழற்சி நோயே காரணம் என்றும் சொல்லப்பட்டது. அப்படியே பார்த்தாலும், கடந்த பல மாதங்களாக மருத்துவ கல்லூரியின் முதல்வர் மூளை அழற்சி நோய்க்கான மருத்துவத்துக்கு போதிய நிதி ஒதுக்கப்படாதது குறித்து கடிதங்கள் எழுதியுள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் உயரதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் மூளை அழற்சி நோய் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக 37.99 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதே கடிதத்தை, மத்திய அரசின் தேசிய சுகாதாரத் துறைக்கும் அனுப்பியுள்ளார். எனினும், மத்திய மாநில அரசுகள் உயிர்காப்பதற்கு அத்தியாவசியத் தேவையான இந்த நிதியை ஒதுக்கீடு செய்யவே இல்லை.

நாடெங்கும் பதிவாகும் மூளை அழற்சி நோயில் சுமார் 60 விழுக்காடு கோரக்பூரில் தான் பதிவாகின்றது. கிட்டத்தட்ட கொள்ளை நோயைப் போல் கோரக்பூரின் குழந்தைகளைத் தாக்கும் மூளை அழற்சி நோயைக் கட்டுப்படுத்தவோ, அதற்கான போதுமான நிதியை ஒதுக்கவோ மத்திய மாநில அரசுகள் எந்த முயற்சியிலும் ஈடுபடவே இல்லை. அதோடு கூட, மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தவில்லை.

சுமார் ஐம்பது படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 300 குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவைப் பராமரிக்க குறைந்தது 149 பணியாளர்களும், 10 கோடி வருடாந்திர பட்ஜெட்டும் தேவை என மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு தெரிவிக்கப்பட்டும் இதுவரை அதற்கான ஒப்புதல் கிட்டவில்லை.

மூளை அழற்சி நோய் அதிகம் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை விவரம்

தற்போது மூளை அழற்சி நோய் தாக்குதலுக்குள்ளான குழந்தைகளைப் பராமரிக்கும் 11 ஊழியர்களுக்கான சம்பளம் கடந்த 27 மாதங்களாக வழங்கப்படாத நிலையில் பத்திரிகைகளில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்ட பின்னரே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மூளை அழற்சி நோய் சிகிச்சைக்கு அத்தியாவசியத் தேவையான ஆக்சிஜன் சப்ளை ஆகஸ்டு பத்தாம் தேதி மதியம் தீர்ந்து போயுள்ளது. இதைத் தொடர்ந்தே படுகொலைகள் அரங்கேறியுள்ளன.

நடந்திருப்பது பேரழிவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை – அதே போல் இந்தப் பேரழிவில் மத்திய மாநில அரசுகளின் பங்கு உள்ளதென்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும், நடந்த சாவுகளுக்குக் காரணம் ஆக்சிஜன் சப்ளை இல்லை என்றும், மூளை அழற்சி நோயே காரணம் என்றும் எனவே தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் பாரதிய ஜனதா தரப்பில் சொல்லப்படுகிறது.

இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆக்சிஜன் காண்டிராக்டருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமதப்படுத்தியதற்காக மருத்துவக் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் பல்வேறு நினைவூட்டல் கடிதங்களுக்குப் பின் கடந்த ஆகஸ்ட் 5 -ம் தேதி தான் நிதி ஒதுக்கீடு செய்ய்யப்பட்டுள்ளது. அது சனிக்கிழமை என்பதால் ஒதுக்கப்பட்ட நிதி 7 -ம் தேதி அன்று தான் வந்து சேர்ந்துள்ளது. இந்நிலையில், காண்டிராக்டருக்கான நிலுவைத் தொகைக்கான ஒப்புதல் வேண்டி மாநில கருவூலத்துக்கு ஆகஸ்ட் 7 -ம் தேதியன்றே கடிதம் எழுதப்பட்டு ஆகஸ்ட் 8 -ம் தேதி தான் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதிக்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 9 -ம் தேதி முதல்வர் ஆதித்யநாத் மருத்துவமனைக்கு விஜயம் செய்த நிலையில், அதிகாரிகள் முதல்வரின் வருகைக்கான வேலைகள் செய்ய பணிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆகஸ்ட் 10 -ம் தேதி வங்கியிடம் காண்டிராக்டருக்கான காசோலையை அனுப்ப கோரிக்கை அனுப்பபட்டுள்ளது. அதே நாள் நிலுவைத் தொகை வந்து சேராததால் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியுள்ளார் காண்டிராக்டர்.

ஆக, நடந்த படுகொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி மூளை அழற்சி நோய் காரணமாக இருந்தாலும் சரி – பொறுப்பேற்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கங்கள் தான்.

இந்நிலையில் கோரக்பூரில் நடந்துள்ள மனிதப் பேரழிவு உண்டாக்கும் மனவுளைச்சல் ஒருபுறமென்றால், நடந்த சம்பவம் குறித்து பாரதிய ஜனதா தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் கொலைவெறியேற்றுகின்றன.

மருத்துவமனைக்கு விஜயம் செய்த முதல்வர் ஆதித்யநாத், முந்தைய ஆண்டுகளில் நடந்துள்ள சாவுகளின் பட்டியலை வாசித்து “இதெல்லாம் சாதாரணம்” என்கிற போக்கில் பேசியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரியோ, மக்களுக்கான சுகாதாரத்தை உத்திரவாதப்படுத்த அரசு மருத்துவமனைகளால் இயலாதென்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

கோரக்பூர் மரணங்கள் நிகழ்ந்த சமயத்தில் நாவில் எச்சில் ஒழுக மதரசாக்களில் “வந்தே மாதரம்” பாடுவது குறித்த விவாதங்களில் திளைத்துக் கிடந்த “தேசிய” ஊடகங்கள், தற்போது பழியை அரசு மருத்துவமனைகளின் “கையாலாகாத்தனம்” குறித்து அங்கலாய்த்து வருகின்றன. இதன் பொருள் அரசு மருத்துவமனைகளைப் பராமரிக்கும் கடமையில் இருந்து தவறிய அரசின் அயோக்கியத்தனத்தை மூடி மறைப்பது; தனியார் மருத்துவமனைகளுக்கு ஏழை மக்களை விரட்டியடிப்பதாகும்.

இந்துத்துவத்தின் அதிகாரக் கொடி உயர்ந்து செல்லும் மட்டத்தை உயிர்களின் மதிப்பு குறைந்து வரும் மட்டத்தைக் கொண்டே புரிந்து கொள்ளலாம். விரைவில் அமையவுள்ள இந்து ராஷ்டிரத்திற்கு உத்திரபிரதேசத்தில் வரிசையாக அடுக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சடலங்களும், ஊதப்படும் சங்கின் ஒலியும் கட்டியம் கூறுகின்றன.

மரணத்திற்கு நிறமில்லை என்று யார் சொல்வது – இதோ மரணத்தின் நிறம் காவியென்பதை நம் செவுளில் அறைந்து அறிவித்துள்ளனர் மோடியும் ஆதித்யநாத்தும்.

செய்தி ஆதாரம் :

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி