கொள்ளை லாபம் காப்பீடு கம்பெனிக்கு : காப்பீட்டுப் பணம் வங்கிக்காரணுக்கு : பட்டை நாமம் விவசாயிக்கு!
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் உலக மகா மோசடி என்பது தொடக்கத்திலேயே அம்பலமாகிவிட்டது. 2016 – 17 -ஆம் ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்கள், விவசாயிகளிடமிருந்தும், மத்திய, மாநில அரசுகளிடமிருந்தும் வசூலித்த பயிர் காப்பீடு பிரீமியம் தொகை மொத்தம் 21,500 கோடி ரூபாய். இதில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை வெறும் 714.14 கோடி ரூபாய்தான்.
இது விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் புருசோத்தம் ருபாலா ஏப்ரல் 7, 2017 அன்று மாநிலங்களவையில் அளித்துள்ள விவரம். அதாவது, வசூலித்த பிரீமியம் தொகையில் வெறும் 3.3% மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கியிருக்கின்றன தனியார் காப்பீடு நிறுவனங்கள்.
இந்தப் பகல் கொள்ளையால் ஆதாயம் அடைந்த தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வருமாறு: ஐ.சி.ஐ.சி.ஐ., லோம்பார்டு, எச்.டி.எப்.சி எர்கோ, ஐ.எப்.எப்.சி டோக்கியோ, சோழமண்டலம், பஜாஜ் அல்லயன்ஸ், ரிலையன்ஸ், டாடா ஏஐஜி, ஸ்டேட் பாங்க், யுனிவர்சல் சோம்போ ஆகியவை. இவற்றில் ஸ்டேட் வங்கியைத் தவிர, மற்ற அனைத்தும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 -ஆம் ஆண்டு குறுவைப் பருவத்தில் ஒரு ஹெக்டேர் விளைச்சலுக்கு சராசரி 20,500 ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டது. 2016 -ஆம் ஆண்டில் பிரீமியம் தொகையை கூட்டிக் கொடுக்க மோடி அரசு முடிவு செய்ததால் இது 34,370 ரூபாயாக உயர்ந்து விட்டது. இதனால் பயனடைந்தவர்கள் விவசாயிகளல்ல, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்தான்.
காப்பீட்டுக் கம்பெனிகளைப் பொருத்தவரை, இழப்பீடு கொடுக்காமல் மறுப்பது எப்படி என்பதுதான் அவர்கள் அணுகுமுறை. ”மத்திய அரசும் காப்பீடு நிறுவனங்களும் சேர்ந்து வகுத்திருக்கும் கொள்கைப்படி ஒரு வட்டாரத்தில் 70% பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டும்தான் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு காப்பீடு தர முடியும்” என்று காப்பீட்டு நிறுவனங்களின் களவாணித்தனத்துக்கு கொள்கை விளக்கம் தருகிறார் மத்திய அமைச்சர் சோம்பால் சாஸ்திரி.
இப்படிப்பட்ட மோசடியான காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் ஏன் சேர்ந்திருக்கிறார்கள் என்று துருவிப் பார்த்தால் இன்னொரு மோசடி வெளியே வருகிறது.
அரியானாவைச் சேர்ந்த பன்சிலால் என்ற விவசாயியின் கிசான் கிரெடிட் கார்டிலிருந்து 2,480 ரூபாய் கழிக்கப்பட்டிருக்கிறது. விசாரித்த போது உனக்கு பயிர் காப்பீடு செய்திருக்கிறோம் என்றிருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள். நானே விண்ணப்பிக்காத போது இவர்கள் எப்படி என் பணத்தில் கை வைக்கலாம் என்று குமுறுகிறார் அந்த விவசாயி.
நாடு முழுவதும், 100 -க்கு 5 விவசாயிகள் கூட இந்தக் காப்பீடு திட்டத்திற்கு சொந்த முறையில் பிரீமியம் கட்டவில்லை. எந்த விவசாயியிடமும் பாலிசிக்கான ஆவணமும் இல்லை. 95% விவசாயிகளை அவர்களுக்கே தெரியாமல் காப்பீடு திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள், ”ஒரு மனிதனை அவனுக்கே தெரியாமல் பாலிசிதாரர் ஆக்கும் விந்தை உலகத்தில் வேறு எங்கும் நடந்திருக்காது” என்கிறார் ஸ்வராஜ் அபியான் அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ்.
வங்கிகளின் இந்த அயோக்கியத்தனம் காரணமில்லாமல் நடக்கவில்லை. ஒருவேளை காப்பீட்டுத் தொகை கிடைத்தாலும் அதில் ஐந்து காசு கூட விவசாயி கைக்குக் கிடைக்காது. அதனை வங்கி பிடித்துக் கொள்ளும். அதாவது, இது வங்கி கொடுத்த கடனுக்கான காப்பீடு.
விவசாயியின் பணம், மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் நமது வரிப்பணம் ஆகிய இரண்டையும் சேர்த்து தனியார் காப்பீட்டு கம்பெனிகளுக்கு வாரிக்கொடுத்திருக்கிறார் யோக்கியர் மோடி. இந்த ஊழலுக்குப் பெயர் பிரதமரின் ”பயிர்” காப்பீட்டுத் திட்டமாம்.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
மோடி அரசின் கார்ப்பரேட் சேவைகளை அம்பலப்படுத்தும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி