Thursday, May 8, 2025

விவசாயி தீராத கடனாளியாவது ஏன் ?

-

விவசாயக் கடன் தள்ளுபடி என்ற கோரிக்கை, ஆளும் கட்சிகள் தொடங்கிப் பொருளாதார வல்லுனர்கள், வங்கியாளர்கள் வரையிலான கனவான்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. ‘விவசாயக் கடன் தள்ளுபடி, மக்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் பண்பைக் கெடுத்து, கடன் தள்ளுபடிக்காகக் காத்திருக்கும் மோசமான பழக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும், ‘இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்’ என்றும் பலவாறான வாதங்களை விவசாயக் கடன் தள்ளுபடிக்கு எதிராக இவர்கள் முன்வைக்கின்றனர்.

இப்படி வாதிடுபவர்கள் யாரும் வங்கிக் கடனை விவசாயியால் ஏன் கட்டமுடியவில்லை என்பது குறித்தோ, இப்பிரச்சினையின் பின்னணி என்ன என்பது குறித்தோ பேச விரும்புவதில்லை.

விவசாயிகளுக்கு ஏற்படும் கடன் சுமை இயற்கைச் சீற்றங்களால் மட்டும் ஏற்படுவதில்லை. விளைச்சல் அதிகரிக்கும்போதும் விளைபொருட்களின் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்து கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் விலை வீழ்ச்சி மக்களிடம் முழுமையாகப் போய்ச் சேருவதில்லை. விலை வீழ்ச்சியினால் இடையில் உள்ள வணிகர்களே பலனடைகின்றனர். இங்கு வணிகர்கள் என நாம் பொதுப்படக் குறிப்பிடுவது, பன்னாட்டு வேளாண் வணிக நிறுவனங்கள், உள்நாட்டு கார்ப்பரேட்  நிதிக் கூட்டமைப்புகள் மற்றும் உள்நாட்டு வியாபாரிகளுமே ஆவர்.

விளைபொருட்களுக்கு இலாபம் தரத்தக்க விலை கோரி மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்திய சாலை மறியல் (கோப்புப் படம்)

விவசாயிகளின் கடன் பிரச்சினையைச் சுலபமாகப் புரிந்து கொள்ள ஒரு சிறு கடன் கணக்கைப் பார்ப்போம். உற்பத்தி இயல்பாக இருக்கும்போது, ஒரு விவசாயி வங்கியில் இருந்து ரூ.100 கடன் பெறுகிறார். அக்கடனைக் கொண்டு தானிய வகைகளை உற்பத்தி செய்து, அதனைச் சந்தையில் ஒரு வணிகரிடம் ரூ.100 -க்கு விற்பனை செய்கிறார். அவ்வணிகர் அச்சரக்கை நுகர்வோரிடம் விற்பனை செய்கிறார். விவசாயி, தான் பெற்ற கடன் தொகையான ரூ.100 -ஐ வங்கிக்குத் திருப்பிச் செலுத்துகிறார். இதில் வங்கிக்கடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுமுகமாக முடிகிறது.

தற்போது விளைபொருள் உற்பத்தி வழக்கத்தைவிட 10% அதிகரித்திருக்கிறது எனக் கணக்கில் கொள்வோம். தற்போது இதே கடன் கணக்கு என்னவாகிறது எனப் பார்க்கலாம்.

இம்முறையும் விவசாயி வங்கியில் ரூ.100 கடன் பெற்று, அதனைக் கொண்டுதான் விவசாயம் செய்திருப்பார். அவர் விளைவித்த சரக்கின் மதிப்பு ரூ.100. ஆனால் 10% மிகை உற்பத்தியின் காரணமாக விளைபொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 30% வரை வீழ்ச்சியடைகிறது. வணிகர் அந்த விளைபொருட்களை ரூ.70 கொடுத்து வாங்குகிறார். ஏறக்குறைய விளைபொருளின் மதிப்பான ரூ.100 -க்கு அதனை நுகர்வோரிடம் வணிகர் விற்றுவிடுகிறார். தற்போது விவசாயி தனது மூதலீடான (வங்கிக்கடன்) ரூ.100 -ல் வெறும் ரூ.70 -ஐத் தான் திரும்பப் பெற்றிருக்கிறார். அத்தொகையை விவசாயி வங்கிக்குச் செலுத்துகிறார். விளைபொருளின் மதிப்பில் மீதித் தொகையான ரூ.30 தற்போது வணிகர் கையில் இருக்கிறது.

தன்னிடம் விவசாயி பெற்ற கடன் தொகையான ரூ.100 -ல், விவசாயி செலுத்திய ரூ.70 போக, மீதிக் கடன் தொகையான ரூ.30 -ஐச் செலுத்துமாறு விவசாயியை நிர்பந்திக்கிறது வங்கி. ஆனால், அந்தப் பணம் இப்போது வணிகரிடம்தான் உள்ளது. வணிகரிடமிருந்து அந்தத் தொகையைப் பறித்தெடுக்க விவசாயிக்கும் அதிகாரமோ, சக்தியோ கிடையாது. அதேபோல, வங்கியும் வணிகரிடமுள்ள ரூ.30 -ஐப் பெற்றுக் கொள்ள சட்டத்தில் வழிவகைகளும் கிடையாது.

வங்கிகள் தாம் கொடுத்த கடனைத் திரும்பப் பெற விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல்களிலும், ஆட்களை விட்டு மிரட்டும் செயல்களிலும் ஈடுபடுகின்றன. விவசாயிக்கு இருக்கும் ஒரே வழி தற்கொலை செய்து கொள்வதேயாகும். இக்கொடுநிலையைத் தவிர்க்கவே விவசாயிகள் கடன் தள்ளுபடியைக் கோருகின்றனர்,

ஆகவே விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரிக்கையைப் பரிசீலிக்கையில், கீழ்க்கண்ட மூன்று விசயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • விவசாயிகள் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் போவதற்கான காரணம், கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற மெத்தனமோ அல்லது கடனைத் திரும்பச் செலுத்த விரும்பாத கெடுமதியோ அல்ல.
  • தற்போது விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், வெகு விரைவில் இதே நிலைமை மீண்டும் வரும். இதன் காரணம், ஒருமுறை கடன் தள்ளுபடி செய்தால், மீண்டும் மீண்டும் கடன் தள்ளுபடி கேட்கும் பேராசை அல்ல. மாறாக, இந்தப் பொருளாதாரத்தின் கட்டமைப்பே அப்படித்தான் இருக்கிறது. எப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாகிறதோ, அப்போதெல்லாம் கடன் தள்ளுபடி அவசியமானதாகிறது.
  • வங்கிகள் விவசாயிகளுக்குக் கொடுத்த கடன் காற்றில் கரைந்து மறைந்துவிடவில்லை. அவை வணிகர்களின் கையில் இலாபமாகப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அந்தப் பணத்தின் மீது வங்கிகளும் கைவைக்க முடியாது. விவசாயிகளும் கைவைக்க முடியாது

இந்தியாவில் புதிய தாராளவாதக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக, இந்திய உணவுக் கழகம் 22 வகையான பயிர்களுக்கு ஆதார விலையை நிர்ணயித்து வந்தது.

பஞ்சாபில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கக் கோரி, அம்மாநிலத்தின் பதிண்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

பணப்பயிர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப் பல்வேறு வாரியங்கள் இயங்கி வந்தன. தேயிலை வாரியம், காஃபி வாரியம், ரப்பர் வாரியம் போன்றவை தாமே கொள்முதல் மற்றும் விற்பனைப் பணியை மேற்கொண்டு, விலை வீழ்ச்சியின் போது அவை நேரடியாகத் தலையிட்டன.

புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பணப்பயிர்களுக்கான வாரியங்கள் தங்களது பணிகளை முழுமையாக நிறுத்திக் கொண்டன. இந்திய உணவுக் கழகம் தனது கொள்முதல் கொள்கையைச் சில பயிர்களுக்கு மட்டுமெனச் சுருக்கிக் கொண்டது.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும், அவர்கள் கடன் தள்ளுபடி கோருவதற்கான காரணமும் பின்னணியும் இவைதாம். இன்று விவசாயிகள் கோரும் கடன் தள்ளுபடிக்கு எதிராகக் கம்பு சுழற்றும் பொருளாதாரப் புலிகளுக்கு இவையெல்லாம் தெரியாதா என்ன?

வங்கிகளில், கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் நடத்தக் கடன் வாங்கி, அதனை வேறு தொழில்களுக்கும், தனிப்பட்ட சொத்துக்கள் வாங்குவதற்கும் திருப்பிவிடுகின்றனர். பின்னர், நட்டக்கணக்குக் காட்டிப் பொதுத்துறை வங்கிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் தயக்கம் காட்டாத அரசு, மறுபுறமோ, விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது மற்றும் அப்பொருட்களைக் கொள்முதல் செய்வது ஆகிய தமது பொறுப்பைத் தட்டிக்கழித்துவிட்டு, விவசாயிகளைக் கடன் சுமைக்குக் காவு கொடுக்கிறது.

(“The Question of Farm Loan Waiver” என்ற தலைப்பில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் சி.பி.எம். இன் கட்சிப் பத்திரிகையான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி -யில் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு.)

 -மொழியாக்கம்  குமார்.
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

விவசாயிகளின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி