Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கௌரி லங்கேஷ் படுகொலை : பார்ப்பன பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !

கௌரி லங்கேஷ் படுகொலை : பார்ப்பன பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !

-

முற்போக்காளரும் பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

கடந்த 05.09.17 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 7:00 மணியளவில் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட முற்போக்காளரும், பத்திரிக்கையாளரும், களப்போராளியுமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, 10.09.2017 ஞாயிற்றுக் கிழமை அன்று  காலை 11:00  மணியளவில் ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புஜதொமு -வின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரை நிகழ்த்தினார். இறுதியாக, தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமையுரையாற்றிய தோழர் இரவிச்சந்திரன் தனது உரையில், “கர்நாடகாவில் முற்போக்காளர்கள் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. இது போன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முற்போக்காளர்கள், மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள், பார்ப்பன இந்து மதவெறியை எதிர்ப்பவர்கள் மீது தொடர்ந்து கொலைவெறித் தாக்குதல்கள் நடந்து வந்துள்ளதை பட்டியலிட்டு அம்பலப்படுத்தினார். மேலும், பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் தலித்துக்கள் அங்கப் பிரதட்சணம் செய்வது, கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டும் போது நரபலி கொடுப்பது, தலித்துக்களை இன்னும் தீண்டத்தகாதவர்களாக நடத்துவது போன்ற இந்து மதவெறியர்களின் சதிராட்டங்களை எல்லாம் யார் அம்பலப்படுத்துகின்றனரோ, அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது தான் கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தங்குதடையின்றி நிறைவேற்றும் திட்டங்கள்” என அம்பலப்படுத்திப் பேசினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் தனது கண்டன உரையில், “பார்ப்பன பயங்கரவாதம் என்று சொல்வதற்கே முற்போக்காளர்கள் அஞ்சும் வேளையில் பார்ப்பனியத்தை பெரியாருக்கே உரிய துணிவுடன் சொல்லி தோலுரித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி  ரெட்டி சகோதரர்களின் கனிம வளக் கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் சுற்றுசூழல் முறைகேடுகளை எல்லாம் தனது எழுத்தின் மூலமும், களத்திலும் போராடி அம்பலப்படுத்தி வந்துள்ளார்.

இவ்வாறான சமரசமற்ற இவரது போராட்டத்தின் காரணமாக  பல முறை இந்து மதவெறியர்களின் மிரட்டலுக்கு ஆளாகி வந்துள்ளார். இந்நிலையில்தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ்.

இந்துமத வெறியர்களின் பொய்யுரைகள் மற்றும் அவர்களது பயங்கரவாத தாக்குதல்களை எல்லாம் நாம் தெருவில் இறங்கி நேருக்கு நேர் மோதி வீழ்த்த உறுதி எடுத்துக்கொள்வதும் அதற்காக இறுதிவரை உறுதியுடன் போராடுவதே படுகொலைசெய்யப்பட்ட கௌரி லங்கேஷுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.” என்ற வகையில் பேசினார். திரளான பொதுமக்கள், வியாபாரிகள் என  பலரும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கில் துண்டறிக்கை அச்சிட்டு விநியோகித்தும், நூற்றுக் கணக்கில் சுவரொட்டிகள் ஒட்டியும்,  ஆலை வாயில்களில் பிரச்சாரம் செய்தும் அதன் இறுதியாக ஆர்ப்பாட்டமும் நடத்தி கௌரி லங்கேஷின் கனவை நனவாக்கும் நோக்கில் தோழர்கள் அவரது தியாகத்தை, இந்து மதவெறியர்களின் மிரட்டலுக்கு பணியாத அவரது துணிவை, அர்ப்பணிப்பை மக்களிடையே விதைத்துள்ளனர். ஆம்! கொளரி லங்கேஷ் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்.

***

முற்போக்காளர் கௌரி லங்கேஷ் படுகொலை: பார்ப்பன இந்து மதவெறி பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சென்ற 5 -ஆம் தேதி மாலை 7:00 மணியளவில் பத்திரிகையாளரும் முற்போக்காளருமான கௌரிலங்கேஷ் அவரது வீட்டினருகே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தகவல் அமைதிப் பூங்கா என்று ஆளும் வர்க்கம் பீற்றிக்கொள்ளும் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில்தான் இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. காரணம் என்ன, கொன்றவர்கள் யார் என்பதை கர்நாடகப் போலீசு ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளதாம்.

முற்போக்காளர்கள் கர்நாடகாவில் சுட்டுக் கொலை செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் இது முதல்முறையல்ல. தற்போது கௌரி கொல்லப்பட்ட அதேபாணியில்தான் 2015 -ஆம் ஆண்டில் பகுத்தறிவாளரும் மூத்த பேராசிரியருமான கல்புர்கி கொல்லப்பட்டார். மைசூரு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த வரலாற்றுத்துறை பேராசிரியர் கோவிந்த் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சென்ற எடியூரப்பா ஆட்சியின் பொழுது மங்களூருவில் செயல்பட்டுவந்த மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் பத்திரிகைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதுபோன்று கர்நாடக மாநிலம் முழுவதும் பல வகைகளில் முற்போக்காளர்கள், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள், பார்ப்பன இந்து மதவெறியை எதிர்ப்பவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்தத் தாக்குதல்களை எப்படிப் புரிந்து கொள்வது, இதன் பின்னணி என்ன என்பதுதான் முதன்மையான கேள்வி. கர்நாடகாவில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் தலித்துகள் உருண்டு ‘அங்கப் பிரதட்சணம்’ செய்வது; வீடு குடிபுகுவது உள்ளிட்ட பல காரியங்களுக்கு நரபலி கொடுப்பது; தலித்துகள் இன்னும் தீண்டத்தாகதவர்களாக நடத்தப்படுவது போன்ற அநீதிகள், சாதித் தீண்டாமைக் கொடுமைகள் கொடிக்கட்டி பறக்கின்றது கர்நாடகாவில்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தலைமையிலான இந்து மதவெறியர்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது; விடுதலைப் போராட்ட வீரர் திப்புவை அவமானப் படுத்துவது; ஊர்வலங்கள், கலாச்சார விழாக்கள் என்ற போர்வையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் களை நடத்துவது என்பன அன்றாட வாடிக்கையாக உள்ளன.

இரும்புத்தாது கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்கள், சட்ட மன்றத்திலேயே ஆபாச படம் பார்த்த பா.ஜ.க. எம்.எல்.ஏ., மனைவி என்று சொல்லி பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்திய பா.ஜ.க. எம்.பி, பெல்லாரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை இருப்புத்தாதுக்காக ஜிண்டாலுக்கு தாரைவார்த்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா என்று பா.ஜ.க. கும்பல் ஆட்சியில் இருந்த போது அடித்த கொள்ளைகள், செய்த சமூக விரோத செயல்கள், ஊழல்கள் ஏராளம் ஏராளம்.

கர்நாடகாவில் நிலவும் இந்த மூடத்தனங்களையும் பிற்போக்கு பாசிசத்தையும் எதிர்த்து பல தளங்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு அடைக்களமாகவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மையமாகவும் தான் ‘கௌரி லங்கேஷ்’ என்ற பெயரில் பத்திரிகையை நடத்தி வந்தார் கௌரி லங்கேஷ்.

பார்ப்பன பயங்கரவாதம் என்று சொல்வதற்கே முற்போக்காளர்கள் அஞ்சும் வேளையில் பார்ப்பனியத்தை பெரியாருக்கே உரிய துணிவுடன் தோலுரித்தார். ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தினார். தனியார்மயத்தினால் ஏற்படும் அழிவுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். சிறுபான்மை, தலித் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து களத்திலும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இவரது சமரசமற்ற போராட்டத்தின் எதிர்வினையாக இந்து மதவெறியர்களால் பலமுறை மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளார். இறுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!

சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் விரும்புகின்றவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராக கை கோர்க்க வேண்டும். எதிரிகளான இந்து மதவெறி பயங்கரவாதிகளை மோதி வீழ்த்த வேண்டும். அந்த வகையிலான முயற்சிகள் இன்றி மென்மையான அணுகுமுறைகள் அனைத்தும் இந்து மதவெறியர்களை வளர்க்கத் தான் செய்துள்ளது என்பதற்கு மேற்குவங்கம், கேரளம் போன்ற மாநிலங்களே சாட்சி. கர்நாட காவில் கூட காங்கிரசு ஆட்சியில் இருந்தும் இந்துமதவெறியர்களின் அட்டூழியங்களை தடுக்க இயலவில்லை. கண்கண்ட இந்த உண்மையை உணர்ந்து புரட்சிகர,  மதசார்பற்ற, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.

கௌரி, கல்புர்கி ஆகியோருக்கு முன்பு கோவிந்த் பன்சாரே, தாபோல்கர் போன்ற முற்போக்காளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கொலைகளையும் அழித்தொழிப்புகளையும், தீவைப்புகளையும் நிகழ்த்துவதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து பாசிசத்தை நிலை நாட்டிவிடலாமென்ற இந்து மதவெறியர்களின் கனவு என்றுமே நனவாகப் போவதில்லை.

இந்தியா முழுவதும் உழைக்கும் மக்கள் மீது பணமதிப்பிழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்ற பல்வேறு திட்டங்களைத் திணித்துவரும் கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடியும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் -ம் மக்களைப் பிளவுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதம்தான்  பிரித்தாளும் சூழ்ச்சி – இந்து மதவெறி. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் இந்து மதவெறி பொய்யுரைகளுக்கும் பலியாகாமல் இறுதிவரை உறுதியுடன் போராட ஒன்றிணைவோம்!

  • பார்ப்பன இந்துமதவெறி பயங்கரவாதத்தையும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. -யின் சமூக விரோத நடவடிக்கைகளையும் துணிவுடன் எதிர்த்த கர்நாடக பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்துமதவெறியர்களால் சுட்டுக்கொலை!
  • முற்போக்காளர்களை அழிப்பதன் மூலம் இந்துமதவெறிக்கு எதிரான உணர்வை மாய்த்துவிட முடியாது!
  • பார்ப்பன பயங்கரவாதத்தை முறியடிக்க புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784.  

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி