privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடெங்கு - கொசு - சுகாதாரத் துறை - அரசு : அதிர்ச்சியளிக்கும் செய்தி !

டெங்கு – கொசு – சுகாதாரத் துறை – அரசு : அதிர்ச்சியளிக்கும் செய்தி !

-

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பெரும் அழிவை உருவாக்கி வருகிறது. ஆனால் டெங்கு நோயை கட்டுப்படுத்த அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் 40,000 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 3,500 சுகாதார ஆய்வாளர்கள், 1,634 பூச்சியியல் வல்லுனர்கள் குழு களத்தில் இருப்பதாகவும் ஊடகங்களில் பேசுகிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜபாஸ்கர்.

மேலும் புதிய கொசு ஒழிப்பு உபகரணங்கள், மருந்துகள், விழிப்புணர்வுக்காக ரூ.13 கோடியே 95 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கியதாகவும் கூறுகிறார். இருப்பினும் கொசுவும் ஒழிந்தபாடில்லை, மக்களின் மரணங்களும் தடுத்து நிறுத்தப்படவில்லை. ஏனிந்த நிலை? ஏன் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை?

“டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் சிக்குன் குனியா போன்றவற்றை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தரமான கொசு அழிப்பு மருந்துகளை பயன்படுத்த கடந்த காலங்களில் சீன தயாரிப்பான அபேட் (கெமிஃபாஸ்ட்) பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் விலை ஒரு லிட்டர் ரூ.1,200. இந்நிலையில் சீன தயாரிப்பு நிறுவன கெமிஃபாஸ்ட் விலை அதிகமாக இருந்ததால், அதே மருந்தை தயாரித்த ஒரு உள்நாட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லிட்டர் ரூ.500க்கு வாங்கி, கொசு ஒழிக்க தெளிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.”

இந்த செய்தியை படித்ததும் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளையும், ஊழியர்களையும் சந்தித்தோம்.

சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றி வரும் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுசெயலர் சீனிவாசலு அவர்களிடம் பேசினோம்.

தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சுகாதாரப்பணி எப்படி உள்ளது?

சென்னை மாநகரட்சியில் ஒப்பந்த முறை புகுத்தப்பட்ட பிறகு மக்கள் நலன் என்பது எல்லாம் கைவிடப்பட்டு விட்டது. கடந்த 2004-ல் திமுக ஆட்சியின் போது ஓனிக்ஸ் என்ற சிங்கப்பூர் ஒப்பந்த நிறுவனத்திடம் பழைய மண்டலமாக இருந்த 6-ஐஸ்ஹவுஸ், 8-நுங்கம்பாக்கம், 10-கோடம்பாக்கம் மற்றும் அடையாரை துப்புரவு பணிக்காக ஒப்படைத்தனர். பிறகு 06.08.2010 அன்று நீல் மெட்டல் என்ற நிறுவனத்திடம் மண்டலம்-3 புளியந்தோப்பை ஒப்படைத்தனர்.

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு புதிய மண்டலாமாக விரிவடைந்த மாநகராட்சியில் இணைக்கப்பட்ட மணலி, திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகியவற்றை இணைத்தார்கள். அதில் மண்டலம் 9,10,13 ஆகியவற்றை ராம்கி என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள்.

திரு சினிவாசலு

மேலும் மாநகராட்சி துப்புரவு பிரிவை NMR, சொர்ண ஜெயந்தி, சுய உதவிக்குழு, NULM (National Urban Livelihood Mission), ஒப்பந்த தொழிலாளி என்று ஐந்தாக பிரித்தார்கள். இந்த தொழிலாளிகள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளிகள் தான். அதில் அதிகபட்சமாக NMR ல் தான் 908 பேர் இருக்கிறார்கள். மாநகராட்சியில்அதிகாரிகள் உட்பட நிரந்தர தொழிலாளிகளாக வெறும் 9,800 பேர் உள்ளனர். இது போக ராம்கி நிறுவன தொழிலாளிகள் 4,400 பேர் உள்ளனர். இவர்களை கொண்டு தான் சென்னை முழுவதும் துப்புரவு பணி நடந்து வருகிறது. அதன் இலட்சணத்தை சென்னை முழுவதும் காண முடியும்.

1978 மாநகராட்சி துப்புரவு பணிகள் விதியின்படி 500 மீட்டருக்கு ஒரு ஆள் பெருக்க வேண்டும், 250 வீட்டின் குப்பைகளை ஒரு ஆள் அகற்ற வேண்டும் என்பது தான். இதற்கான பணி உபகரணங்கள், பாதுகாப்பு சம்மந்தப்பட்ட கவசங்கள் அனைத்தும் பொது பண்டக சாலை மூலம் மாநகராட்சி வாங்கி கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதனை இழுத்து மூடி விட்டார்கள்.

2013 -ல் மாநகராட்சியை மூன்றாக பிரித்தார்கள், அதாவது 1-5 மண்டலம் வடசென்னை என்றும், 6-10 வரை மத்திய சென்னை, 11-15 தென்சென்னை என்றும் பிரித்தார்கள். அப்பொழுது ஒவ்வொரு யூனிட்டிற்கும் துடைப்பம் வாங்குவதற்காக ஐந்து லட்சம் ஒதுக்கினார்கள். ஒரு யூனிட் என்பது ஐந்து வார்டுகளை உள்ளடக்கியது. பதினைந்து மண்டலத்தில் மொத்தம் 45 யூனிட்கள் உள்ளது. இவற்றில் பெரும்பாலான இடத்தில் தொழிலாளர்களே வாங்கிக்கொள்கிறார்கள். அதாவது குப்பை காகிதங்கள், காலி பாட்டில்களை சேகரித்துக் கடையில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

குப்பைகளை வாரி செல்லும் ஒரு வண்டிக்கு (tricycle) ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.1860 ஒதுக்குகிறார்கள். ஆனால் எந்த வண்டியையும் பராமரிப்பதில்லை. பிறகு எப்படி குப்பையை எடுக்க முடியும். தலையிலா சுமக்க முடியும்? இது ஒரு சாம்பிள் தான். இந்த நிலையில் தான் சென்னை மாநகராட்சியில் இப்பொழுது துப்புரவு நடைபெற்றுவருகிறது.

மலேரியா ஒழிப்புத் துறையின் தற்போதைய நிலை என்ன? கொசுவை ஒழிக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்?

கொசுக்கள் ஒழிப்பை பொறுத்த வரையில் சுகாதாரத்துறை தான் மேற்கொண்டுவருகிறது. அதற்கென்று மலேரியா ஒழிப்பு துறை உள்ளது. இதில் ஒப்பந்த தொழிலாளியாக 1,800 பெரும் , நிரந்தர தொழிலாளியாக வெறும் சுமார் 900 பேர் இருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் வயதானவர்கள், வேலை செய்ய முடியாதவர்கள், ஆளும்கட்சி, அதிகாரிகளுக்கு தெரிந்தவர்கள் என்று வேலை செய்யாமல் இருப்பவர்கள். இவர்களை எல்லாம் கழித்து விட்டு பார்த்தால் முழுமையாக இப்பணியில் ஈடுபடுபவர்கள் 50 சதவீதம் கூட இல்லை.

மாநகரட்சி ஊழியர்கள் மாதிரிப்படம்

ஒப்பந்த தொழிலாளிகளை பற்றி சொல்லத் தேவையில்லை. வெறும் 240 ரூபாய் கூலி. அடிமாடாக பிழியப்படுகிறார்கள். இத்துறையில் பணியின் போதே இறந்து போனவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் இவர்களுக்கு மாற்றாக புதிய ஆட்களை எடுப்பதே இல்லை.

கொசு ஒழிப்பு முறையில் முதலில் லார்வாக்களை ஒழிப்பதற்கு அபேட் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை ஐந்து லிட்டர் தண்ணீரில் 5ML கலந்து அடிக்க வேண்டும். ஒரு ஆள் என்பது வீடுகளுக்கு தினந்தோறும் அடிக்க வேண்டும். வாரத்திற்கு 560 வீடுகளுக்கு அடிக்க வேண்டும். ஒரு வட்டத்திற்கு 150 முதல் 200 தெருக்கள் வரை உள்ளது.

ஒரு வட்டத்திற்கு குறைந்தது இப்பணியில் 20 பேராவது ஈடுபட வேண்டும். ஆனால் 3,4 பேர் மட்டுமே ஒரு வட்டத்தில் உள்ள எல்லாருடைய வீட்டிற்கும் அடிப்பதால் முதலில் அடித்த வீட்டிற்கு திரும்ப வருவதற்கு ஒன்றரை மாதம் ஆகி விடுகிறது. பிறகு எப்படி கொசுவை ஒழிக்க முடியும்? ஒரு யூனிட்டிற்கே வெறும் 10 பேர் தான் இருக்கிறார்கள்.

அதேபோல பறக்கும் நிலையில் உள்ள கொசுக்களை ஒழிப்பதற்கு பேட்டக்ஸ் மற்றும் பயோடக்ஸ் என்ற மருந்தை எட்டு லிட்டர் தண்ணீரில் 100ml கலந்து அடிக்க வேண்டும். அப்பொழுது தான் கொசு சாகும். ஆனால் மேற்கண்ட இந்த மருந்துகளை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.

தற்போது தரம் குறைந்த மருந்தான “விக்டோபேக்” மாதத்திற்கு இரண்டு முறை அடிக்கிறார்கள். 80 ml மருந்தை எட்டு லிட்டர் தண்ணியில் கலந்து அடிக்க வேண்டும். இது தரமான மருந்தே இல்லை. கொசு ஒழிப்பிற்கு தகுதியற்றவை.

மேலும், வேன் பாக் எனப்படும் புகைபரப்பியை கொண்டு கொசு ஒழிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் கொசுவை ஒழிக்கவே முடியாது. ஐந்து லிட்டர் டீசலுடன் 100 ml மெத்தலைன் கலந்து அடிக்கிறார்கள். இது கொசுவை மயக்கமடைய செய்யுமே தவிர ஒழிக்காது. இதனை எல்லாம் சாதாரண மக்கள் புழங்கக் கூடிய இடத்தில் தான் அடிக்கிறார்கள்.

ஆனால், ராஜ்பவன், அதிகாரிகள், அமைச்சர்கள் வீடுகள், உயர் மேட்டுக்குடி பகுதிகளான அண்ணாநகர், பெசன்ட் நகர், அடையாறு போன்ற இடத்தில் “பேகான்” என்கிற உயர் கொசு ஒழிப்பு மருந்தை பயன்படுத்துகிறார்கள். இருப்பதிலேயே இது தான் தரமான மருந்து. இங்கு “VIP டீம்” என்று போட்டு வேலை செய்கிறார்கள். இந்த பேகான் மருந்தை 1998ல் மாநகராட்சியில் இருந்து குறைந்த விலைக்கு சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதாக “அடிப்படை சுகாதார அலுவலர்” ஒருவர் மீது வழக்கும் பதியப்பட்டது. அந்த அளவிற்கு தரமான மருந்து. இந்த மருந்தை தமிழகம் முழுவதும் பயன்படுத்தினால் கொசுக்களை ஒழிக்க முடியும். ஆனால் நிதிப்பற்றாக்குறை என்று கூறி நிறுத்தி விட்டார்கள்.

குறைந்தபட்சம் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள். இந்த வருடம் அப்படி மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டதா?

கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மே-ஜூன்-ஜூலை ஆகிய மாதத்தில் இருந்து ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஆரம்பிக்க வில்லை. ஏனென்றால் மழை இல்லை. எல்லா இடங்களும் வறட்சியாக உள்ளது. கொசு தொல்லை இருக்காது என்றார்கள். முக்கியமாக “ஸ்லம்” ஏரியாவில் எல்லா வீட்டிற்கும் கொசு வலை, நொச்சி கன்றுகள் கொடுத்து விட்டோம். இனிமேல் கொசுப்பிரச்சினை இருக்காது என்று கூறினார்கள். அதனால் இத்துறையில் பணியாற்றிய பாதிபேரை வேலையிலிருந்தே நிறுத்தி விட்டார்கள்.

முன்பெல்லாம் கொசு உற்பத்தியாகும் இடமான கூவத்தை சுத்தப்படுத்துவார்கள். இப்பொழுது அந்த பணியில் சென்னை முழுவதும் பத்து பேர் தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மழை நீர் வடிகால் என்பது மழை நீர் செல்வதற்கு மட்டும் தான். ஆனால் திருட்டு கனெக்சன் மூலம் தண்ணீர் எப்பொழுதும் மழைநீர் வடிகாலில் விடப்படுகிறது. இது அதிகாரிகளுக்கும் தெரியும். இதனை பராமரிக்க ஐந்து பேர் தான் இருக்கிறார்கள்.

மேலும், கொசு உற்பத்தியை தடுக்க MLO என்ற ஆயிலை கோணியில் ஊற்றி கூவம் ஆற்றில் போடுவார்கள். இப்பொழுது அதனை செய்வதற்கு கூட ஆட்கள் இல்லை. அந்தளவிற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.

மாதிரிப்படம்

சென்னையில் பல இடங்களில் கொசு மருந்து ஊற்றுவதற்கு மக்கள் அனுமதிப்பதில்லை. காரணம் நீர் பற்றாக்குறை தான். தண்ணீரை சேமிக்கும் போது அதில் மருந்தை ஊற்றினால் பயன்படுத்த முடியாது என்று தடுத்து விடுகிறார்கள். அதற்குரிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வில்லை.

மொத்தத்தில் கொசு ஒழிப்பை பொறுத்த வரை பணி உபகரணம் இல்லை, தரமான மருந்து கொள்முதல் இல்லை, ஆட்கள் கடுமையான பற்றாக்குறை, வேன்பாக் வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சரியான பராமரிப்பும் இல்லை. ஆய்வாளர்கள் சோதனைக்கே வருவது இல்லை. மொத்த நகராட்சியுமே முடங்கி விட்டது.

சென்னையிலேயே சொற்ப நபர்கள் தான் இப்பணியில் ஈடுபடுகிறார்கள் என்றால் மற்ற மாவட்டங்களை நினைத்துப் பாருங்கள்?

மிக முக்கியமாக தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் என்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் டெங்கு என்று பதிவு செய்யக்கூடாது என்று மாநகராட்சி சார்பாக மிரட்டி வருகிறார்கள். இப்படிபட்ட மோசடி தான் நடக்கிறது.

டெங்கு கொசு ஒழிப்பை பொறுத்த வரை இது தான் நிலைமை. அரசு கூறுவதுபோல் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெங்கு பிரச்சினை தீவிரமாக முற்றிய நிலையில் மக்களை ஏமாற்றும் வேலையை தான் செய்கிறது.

இடதுசாரி சிந்தனை கொண்ட உங்கள் சங்கம் தொடர்ந்து பொருளாதார கோரிக்கைக்காக பல போராட்டங்களை மாநகராட்சிக்கு எதிராக நடத்தியுள்ளீர்கள். ஆனால் இந்த ஊழல் பிரச்சனை குறித்து ஏதேனும் போராட்டம் நடத்தியிருக்கிறீர்களா?

நாங்கள் வெளிப்படையாக இந்த பிரச்சனைக்காக எந்த போராட்டமும் நடத்தவில்லை. ஆனால் தரமற்ற மருந்து வாங்ககூடாது என்று எங்கள் சங்கம் சார்பாக கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளோம். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை அழைத்து தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை போக்க நேரம் காலம் பார்க்காமல் வேலையை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து சுகாதாரப்பணியை தீவிரப்படுத்தி வருகிறோம்.

வினவ குறிப்பு: நண்பர்களே மக்கள் உயிருடன் அரசு விளையாடுகிறது என்பதற்கு இந்த நேர்காணலே சான்று. கொசு ஒழிப்பு வேலை செய்ய தொழிலாளிகள் இல்லை, மருந்தில் தரமில்லை, தரமான மருந்தை மேட்டுக்குடி ஏரியாவிலும், தரமற்றதை நமது பகுதியிலும் தெளிக்கிறார்கள், துடைப்பம் வாங்க பணமில்லை, வண்டியைப் பராமரிப்பதில்லை, மழைக்காலத்திற்கு முன்பேயே பணியைத் துவங்கவில்லை, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு என்று பதிவு செய்யக் கூடாது…………..

இப்போது சொல்லுங்கள்! மக்கள் மரணிப்பது டெங்குவிலா? அதிமுக ஊழல் அரசின் திமிராலா?

நேர்காணல் : வினவு செய்தியாளர்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி