privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்புதுச்சேரி : மேரி பிஸ்கெட் தொழிலாளிகளுக்கு பட்டினிதான் ஊதியமா ?

புதுச்சேரி : மேரி பிஸ்கெட் தொழிலாளிகளுக்கு பட்டினிதான் ஊதியமா ?

-

கமிஷனரின் ஆணை – கழிப்பறை காகிதம்! சன்பீஸ்ட் பிஸ்கட்ஸ் முதலாளியின் கொட்டம்!

புதுச்சேரி திருபுவனையில் இயங்கி வரும் சன்பீஸ்ட், மேரி கோல்டு, மேரி லைட் ஆகிய பிராண்ட்களின் பிஸ்கட்டுக்களைத் தயாரிக்கும் வேல் பிஸ்கட்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் நிர்வாகம், தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி வருகிறது.

இதை எதிர்கொள்ளும் வகையில் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரம், சட்டத்தை மதிக்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கைக எடுக்க வலியுறுத்தி தொழிலாளர் ஆணையரை முற்றுகையிட்டு “தொழிலாளியின் நெஞ்சை சுடும் வேல் பிஸ்கட்ஸ்” என்ற தலைப்பில் போராட்டம் நடத்தினோம்.

அந்த முற்றுகைக்குப் பின் தொழிலாளர் ஆணையர், நிர்வாகத்தை அழைத்து எச்சரித்தும் இன்று வரை தனது சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. நிர்வாகத்தின் இந்த அடக்குமுறைகளையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தும் வகையில் நிறுவனத்தை சுற்றியும், தொழிற்பேட்டைப் பகுதிகளிலும் முழக்கத்தட்டிகள் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நமது பிரச்சாரம், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிப் போனது.

இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம், அன்றாட வேலை நடைமுறைகளையே குற்றமாக்கி தொழிலாளர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தி கடிதம் கொடுப்பதை வழக்கமாகிக் கொண்டு விட்டது. மறுபுறம் சட்டப்படி நடப்பதாக சொல்லி முறையான காரணங்களின்றி தொழிற்சங்க முன்னணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து வருகிறது. அதன் மீதான விசாரணையைக் கூட “இயற்கை நியதிக் கோட்பாடு களுக்கு” உட்படுத்தாமல் தான் தோன்றித்தனமாக நடந்து வருகிறது.

மறுபுறம், சங்க இணைச் செயலாளர் மீதான பணியிட மாற்றம், சட்டப்படி செல்லாது என்றும், பணியிட மாற்றம் என்பதே சட்டவிரோதம் என்றும், பணியிட மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பணிவழங்க தொழிலாளர் ஆணையர் ஆணையிட்டு கடிதத்தை அனுப்பிய போதும், அதை சற்றும் மதிக்காமல் இணைச் செயலாளருக்கு பணி வழங்க மறுத்து விட்டது. தனது ஆணை செல்லாக்காசாகிப் போனதால் பொங்கி எழுவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை தொழிலாளர் ஆணையர்.

சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி, நமது தட்டி வைத்த தொடர்ச்சியான போராட்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் விளைவுகளை ஏற்படுத்தியதா இல்லையா என்பதை அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இரு பிரிவுகளாக்கி அவர்களின் கேள்விகளின் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட்டது. இறுதியில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் சென்றடைந்தது என்பதை ஏற்றுக் கொண்டதோடு, நிர்வாகம் கடிதம் கொடுக்கும் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் உற்சாக மனநிலையோடு சென்றனர் தொழிலாளர்கள்.

அடுத்த நாள் தங்களுக்கு கடிதம் கொடுக்கப்போவதை அறிந்து ஒவ்வொரு தொழிலாளியும் தாங்களே அதிகாரிகளிடம் போய்  தங்களுக்கு வரவேண்டிய கடிதத்தை கேட்டு பெற்றது நிர்வாகத்திற்கு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியதோடு, தொழிலாளர்களை பயமுறுத்தும் தனது நடவடிக்கை பலனளிக்காமல் பல்லிளித்தது.

அடுத்த தொடர் நடவடிக்கையாக, நிர்வாகத்தின் சட்டத்தை மதிக்காத போக்குகளைக் கண்டிக்கின்ற வகையில் தொழிற்சங்கத் தலைவர் தோழர் சுதாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டக்குழு தோழர்கள் செல்லக்கண்ணு, லோகநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

தலைமையுரையில், நிர்வாகத்தின் சட்டவிரோத அடக்குமுறைகளைப் பட்டியலிட்டும், ஒரு தொழிலாளர் ஆணையர் உத்திரவிட்டும் அதை துடைத்துப் போடும் காகிதமாக முதலாளி மதிப்பதைப் பற்றியும் பேசினார்.

தோழர் செல்லக்கண்ணு தனது உரையில், ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வை நகர்த்தும் வகையில் தான் நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராடுகின்றனர். அதற்கு சங்கம் வைத்தால், தடுப்பது, அதையும் தாண்டி சங்கம் வைத்துவிட்டால், குறிப்பாக இந்த சங்கத்தில் சேரக்கூடாது எனவும் சொல்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணம், சட்டப் போராட்டம் மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு அரசியல் கற்றுக் கொடுப்பதால், அரசியலுடன் இணைத்து தங்களது கோரிக்கைகளைப் பேசி மடக்கும் போது பதிலளிக்க முடியாமலும், ஏமாற்ற முடியாமலும் பணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே, நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமெனில் அரசியல் ரீதியாக அணிதிரள வேண்டியது அவசியம் என விளக்கினார்.

தோழர் லோகநாதன் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான், இதைக் கொடு, அதைக் கொடு என கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பது? ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் எங்களுக்கு தொழிற்சாலையைக் கொடுத்து விடு. லட்சம் லட்சமாக எண்ணிக்கையில் உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்ய முடிந்த எங்களால், ஒரு தொழிற்சாலையை நிர்வகிப்பது கடினமான வேலை இல்லை என்றார்.

எனவே, முதலாளிகளின் உற்பத்திச் சுரண்டலை ஒழிக்கும் படியான கோரிக்கைகள் மட்டுமே நமது உரிமைகளை மீட்க நிரந்தரத் தீர்வாக முடியும் என்பதையும், அதற்கு அரசிடம் கோரிக்கை வைத்துப் பலனில்லை. ஏனெனில், அரசின் கொள்கைகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக உள்ளது என்பதை பல்வேறு உதாரணங்களிலிருந்து விளக்கினார். எனவே, மக்களுக்கான அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை கையில் எடுப்பது தான் நம்முன் உள்ள கடமை என்று விளக்கினார்.

இந்த ஆர்ப்பாட்டம் நிர்வாகத்தின் சட்டவிரோத, சட்டத்தை மதிக்காத தன்மையை, துலக்கமாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது. நிர்வாகம், திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாயை மூடி மௌனம் காத்ததுடன், நீங்கள் செய்வதெல்லாம் சரியில்லை என ‘மென்மையாக’ கண்டித்தது.

மேலும், தொடர்ச்சியாக தொழிலாளர்களை நேரில் நின்று மிரட்டும், மேலாளர், பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஒரு மாணவியை தற்கொலைக்குத் தள்ளிய குற்றத்தில் பணியிடை நீக்கத்தில் இருக்கும் அவரது இரண்டாவது மனைவி என குடும்பமே மக்களின் எதிரியாக மாறிப்போனதையும், தொழிலாளர் துறையில் பேச்சுவார்த்தைக்கு வந்து வாயைத் திறந்தாலே பொய் சொல்லும் HR மேலாளரையும் அம்பலப்படுத்தி சுவரொட்டி போடப்பட்டது.

அந்த ஆத்திரத்தையும் வெளிக்காட்ட முடியாமல், நீங்கள் சுவரொட்டி போடுவதால் தங்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை. உங்களது பணம் தான் வீணாகிறது என தங்களது தொழிலாளர் விரோத செயல்களுக்கு மிகவும் பழக்கப்பட்டு விட்ட இந்த ‘நல்ல’ நயவஞ்சகர்கள் தங்களது கொடூர முகங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, வாட்ஸ் அப், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருக்கும் தங்களது மற்றும் தங்களது குடும்ப புகைப்படங்களை அகற்றி, தங்களது ‘துணிச்சலை’ வெளிப்படுத்தியுள்ளனர்.

முதலாளிகளின் லாபவெறிக்காக, அவர்களின் பாதந்தாங்கி சேவை செய்யும் இந்த மயிர் நீப்பின் உயிர் வாழா ‘கவரிமான்’ பரம்பரையின் வழிவந்த அதிகாரிகளின் அடுத்தடுத்த அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர் வேல் பிஸ்கட்ஸ் ஆலைத் தொழிலாளர்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801.

_____________

தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி