Friday, May 9, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கஜி.எஸ்.டி - யை அம்பலப்படுத்தி கோவை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

ஜி.எஸ்.டி – யை அம்பலப்படுத்தி கோவை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

-

லகோடி மக்களின் வாழ்வையும், லட்சக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், சிறு குறு நிறுவனங்களையும் சூறையாட வந்துள்ளது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடவடிக்கை. இதனை எதிர்த்து மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் சார்பாக பாப்பநாயக்கன் பாளையம் காய்கடை மைதானத்தில் 2017 செப் 27 அன்று பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அப்பகுதியின் C2 போலீசு நிலையத்தில் 31.08.17 அன்று முறையாக கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் சட்டஒழுங்கு கெட்டுவிடுமென காரணம் காட்டி அனுமதி தரமறுத்தது போலீசு. அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்து 11.10.2017 -அன்று கூடம் நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது (ஆணை எண் 25561/17).

ஆனால் அதற்கான அனுமதிக் கடிதத்தை தருவதற்கு 10.10.2017 வரை இழுத்தடித்து, அதையே காரணம் காட்டி திட்டமிட்டிருந்த நாளில் பொதுகூட்டத்தை நடத்தவிடாது சதி செய்தது போலீசு. கோவை மண்டலம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மேற்கண்ட பொதுக்கூட்டம் குறித்து துண்டறிக்கைகள் விநியோகித்து பேருந்து, இரயில், சிக்னல், குடியிருப்பு பகுதி, கடைவீதி என பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத, காவிக்கும்பல் – காக்கிகளின் துணையுடன் 08.10.2017 ஞாயிறு அன்று கோவை இராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எட்டு தோழர்கள் மீது IPC 384 சட்ட பிரிவின் படி வழக்கு தொடர்ந்து போலீசு நிலையத்திலேயே இரவு முழுதும் அடைத்து வைத்தது. மறுநாள் காலை தோழர்களை, நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது போலீசு. மேலும் நமது வழக்கறிஞர்களின் தொடர் வாதத்தால் நீதிபதியின் முன் காக்கி(விக)ள் முகம் தொங்கிப்போனது.

இதனிடையே 11.10.2017 -லும் பொதுக்கூட்டம் நடத்தவிடாமல் தள்ளிபோட சொன்ன C2 காவல்துறை, உயர்நீதிமன்ற ஆணைக் கடிதத்தை பார்த்தும் ஏதும் அறியாததை போல் நடித்தது. மக்கள் அதிகாரத்தின் தொடர் போராட்டத்தால் 13.10.2017 கூட்டம் நடத்த அனுமதியளித்தது. கோவை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மீண்டும் பிரச்சாரம் வலுப்பெற்றதை பார்த்த காவல்துறை, அனுமதி கேட்ட ஓரிரு நாட்களில் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில், மாநகர நிர்வாகம் சாக்கடை சீரமைப்புப்பணி என்ற பெயரில், ஒரு பெரும் குழியை வெட்டியது. இதுவே சாக்கென்று போலீசு கூட்டத்திற்கு அனுமதியை மீண்டும் மறுத்துப் பேச தொடங்கியது.

அவர்களிடம் தோழர்கள் உங்கள் ‘அக்கறையை’ பாராட்டுகிறோம். கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என கூறி பொதுக்கூட்ட வேலையை தொடங்கினர். இதனூடே பிரச்சாரம் செய்த 4 தோழர்களின் கைதை கண்டித்து ஒட்டப்பட்ட தோழமை இயக்க போஸ்டர்களை போலீசே கழுதை போல மாறுவேடத்தில் சென்று கிழித்து எரிந்தது.

13.10.17 பொதுக்கூட்ட பகுதியை சுற்றியுள்ள கடைகள், குடியிருப்புகள், கிரைண்டர் – மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்து, பொதுக்கூட்டதிற்கு அழைக்கும் பணியில் தோழர்கள் ஈடுபட்டனர். மாலை எதிர்பாராத மழையை கூட ஒரு பொருட்டாகவே எண்ணாமல் நனைந்துகொண்டே மகஇக கலைக்குழு தோழர்களின் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கியது, மழையின் காரணமாக ஆரம்பத்தில் தயங்கிய மக்கள், பின்னர் தானாக முன்வந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.

கூட்டத்திற்கு கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை தாங்கினார். பிரச்சாரத்தில் ஈடுபட்டு கைதான தோழர்களை போலீசின் சதியை அம்பலப்படுத்தி ஒரே நாளில் பிணையில் எடுத்த தோழர் பாலமுருகன் (PUCL) GST யின் சட்ட விதி மீறல்களை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்து பேசிய தோழர் கிருஷ்ணமூர்த்தி (CITU மாநில நிர்வாக குழு) GST வரி விதிப்பால் இலட்சகணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், பலநூறு சிறுகுறு நிறுவனங்கள் அழிந்து வருவதை அம்பலப்படுத்தினார்.

திரு.மாணிக்கம் (தமிழ்நாடு வணிகர் சங்கம் – தலைவர் கோவை) GST வரியினால் இலட்சகணக்கான வியாபாரிகள் தமது தொழிலை இழக்கப்போவதையும், அதன் மூலம் ஊகவணிகம், விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதையும் பற்றி விளக்கிப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் – கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் ஏற்கனவே தேயிலை தொழில் நலிவுற்றதையும், எஞ்சியதை GST வரி காவுகொள்ள காத்திருப்பதையும் விளக்கினார்.

பின்னர் பேசிய பு.ஜ.தொ.மு மாநில துணை தலைவர் தோழர் விளவை ராமசாமி GST -யின் வரிமுறையால் பஞ்சாலைகள் மற்றும் மில்கள் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியால் மூடப்படுவதையும் அதற்கு BJP அரசு துணைபோவதை அம்பலப்படுதிப் பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் மேற்கண்ட வரிவிதிப்பு நடைமுறையால் கருவாடு தொழில் முதல் கம்ப்யூட்டர் விற்பனை வரை எதுவும் தப்பாமல் அழியப்போகும் ஒரு மோசமான சூழலை எதிர்கொண்டு இருப்பதையும், அதை எதிர்க்க மாநில அரசுகள் திராணியற்றுப் போயுள்ளதையும், பணமதிப்பழிப்பு தொடங்கி GST வரையிலான தொடர் பொருளாதார தாக்குதல்களை குறிப்பிட்டு அவற்றை விளக்கி பேசினார்.

கூட்டத்தின் ஒருபகுதியாக பொதுக்கூட்டப் பிரச்சாரத்தின் போது காவிகளின் பொய்ப்புகாரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள தோழர்கள் மேடை ஏற்றப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் புத்தகங்களை போராட்ட நினைவாக வழங்கினார்.

இறுதியாக மகஇக கலைக் குழுவினரின் புரட்சிகர பாடல்களால் GST, NEET, டெங்கு ஆகியப் பிரச்சினைகளை அம்பலப்படுத்தினர். இறுதியாக தோழர் சூரியா நன்றியுரை கூற பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி