privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதண்டவாளத்தை புதுப்பித்து விட்டு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் மோடி அரசு

தண்டவாளத்தை புதுப்பித்து விட்டு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் மோடி அரசு

-

டுத்த ஆறு மாதங்களுக்கு, இந்தியா முழுவதும் தண்டவாளங்களை புதுப்பிக்கும் பணிக்காக மாதம் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என கடந்த அக்டோபர் 15, 2017 அன்று அறிவித்திருக்கிறார், இரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல். சமீபத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் ’செய்தித் தொடர்பாளராக’க் கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டவரும் இவரே.

வழக்கமாக ஆண்டுக்கு 2,000 கிமீ தூரம் வரை மட்டுமே தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு வந்த சூழலில், இந்த ஆண்டு 3,600 கிமீ தூரம் வரை புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளார் பியூஷ். இதுவரை, தண்டவாளங்களைப் புதுப்பிக்கும் பணிக்காக வாங்கப்படும் தண்டவாளப் பாளங்களில் சுமார் 80 முதல் 85% வரை பொதுத்துறை நிறுவனமான செயில் (SAIL) வழங்கி வந்துள்ளது. தற்போது தண்டவாளம் புதுப்பிப்பிற்கான நீளம் அதிகரிக்கப்பட்டிருப்பதை ஒட்டி, சர்வதேச நிறுவனங்களில் இருந்து தண்டவாளப் பாளங்களை வாங்க விண்ணப்பங்களை வரவேற்பதற்கும் அனுமதியளித்துள்ளார் அமைச்சர்.

இரயில் தண்டவாளங்களைச் செப்பனிடுவதும், புதுப்பிப்பதும், பொதுத்துறை நிறுவனமான இரயில்வேக்கு நலன் பயக்கக் கூடியது தானே, அரசு குறுகிய காலத்தில், சுமார் 6,000 கோடி ரூபாயை ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு ஒதுக்கியிருப்பது நல்ல விசயம் தானே என்று பலருக்கும் தோன்றலாம். பொதுத்துறை நிறுவனங்களை விற்று, நிதி திரட்டுவதை தனது நிதித்துறை அறிக்கையிலேயே ஒரு வருமான ஆதாரமாக அறிவித்தவர்கள், இரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை, சற்று அதன் பின்னணியோடு பொருத்திப் பார்க்கவேண்டும்.

மோடியின் முன்னாள் தொகுதி வதோதராவிற்கும், இந்நாள் தொகுதி வாரணாசிக்கும் இடையே புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மஹானாமா விரைவு இரயிலைக் கடந்த செப்டெம்பர் 22, 2107 அன்று துவங்கி வைத்த பின் பியூஷ் கோயல் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் “இரயில் விடும் சேவையில் தனியாரையும் அனுமதிப்பதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஒரு போட்டி இருக்கும் போது தான் பயணிகளின் ‘திருப்தி’யை அதிகரிக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

பியூஷ் கோயல்

அதாவது, பயணிகளாகிய நமது ‘திருப்தி’யை அதிகரிக்கவே தனியாருக்கு இரயில்களை இயக்க அனுமதி வழங்கப் போவதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே இதைப் போன்றே, நமது ‘திருப்தி’யை அதிகரிப்பதற்காக என்று கூறித்தான் இரயில்களில் உணவு தயாரித்து வழங்கும் சேவையில் ‘மீல்ஸ் ஆன் வீல்ஸ்’ (Meals On Wheels) போன்ற தனியார் உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு.

அதுவரை சுமாரான சுவையில் இருந்தாலும் விலை குறைவாக இருந்து வந்த இரயில் உணவுகள், அதன் பின்னர் வாயில் வைக்கமுடியாத அளவிற்கு கேவலமான தரத்தோடு அதிக விலையில் விற்கப்பட்டன என்பது வெகுதூர இரயில்களில் பயணம் செய்வோருக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். அதைப் போலவேதான் தற்போது நமது ‘திருப்தி’க்காக தனியாரிடம் இரயிலை இயக்கக் கொடுக்கப் போகிறார்களாம்.

ஆனால் முதலாளிகளுக்கு இரயில்களை இயக்கும் அனுமதி மட்டும் கிடைத்தால் போதுமா என்ன? சலுகை விலையில் தண்ணீர், சலுகை விலையில் மின்சாரம், நிலம் என பல்வேறு சலுகைகளோடு தொழிற்பேட்டைகளையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் முதலாளிகளுக்காக உருவாக்கி வழங்கியிருக்கிறது அரசு. ஆனால் முதலாளிகள் போதும் என்றார்களா ? இல்லையே !

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பளபளக்கும் சாலைகளை தங்களது சரக்கு போக்குவரத்துக்கு வசதியாக அமைத்துத் தரக் கோரினார்கள். அதன் விளைவுதான் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தங்க நாற்கரச் சாலைகள் தொடங்கி அதன் பிறகு மன்மோகனும், மோடியும் தங்களது ஆட்சிக்காலங்களிலும் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து பளபளக்கும் சாலைகள் எல்லாம்.

அது போலத் தான் தற்போதும், “இற்றுப் போன உங்களது பழைய தண்டவாளத்தில் நாங்கள் எப்படி இரயிலை விடுவது?” என்ற தனியார் முதலாளிகளின் ‘செல்ல’ முனங்கல்களைத் தவிர்க்கவே அவசர அவசரமாக தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது மோடி அரசு. அதாவது, நமது வரிப்பணத்தில் அரசு தண்டவாளம் போட, தனியார் முதலாளிகள் அதில் இரயிலை விட்டு நம்மிடமே கொள்ளை இலாபம் வைத்துச் சுரண்டுவார்கள். அதுதான் இந்த தண்டவாளப் புதுப்பிப்புத் திட்டம்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வேத்துறையை தாம் பதவியேற்ற நாள் முதல் படிப்படியாக தனியாருக்குத் தாரைவார்க்கத் தொடங்கியது மோடி அரசு. அதன் முதல்கட்டமாக தனியார் முதலாளிகளுக்கு இரயில்வேத்துறையில் கொள்ளை இலாபத்தை உறுதி செய்ய வேண்டிய அவசியம் மோடி அரசிற்கு எழுந்தது. அந்த வகையில் தனியாரின் கொள்ளை இலாபத்தை உறுதி செய்யும் பொருட்டு, இரயில் போக்குவரத்தில் இருந்து ஏழை, நடுத்தட்டு மக்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் வேலையைத் தொடங்கியது.

முதல்கட்டமாக, சுவீதா மற்றும் ப்ரீமியம் இரயில்களைக் கொண்டுவருவது, முன்பதிவற்ற பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தொடங்கியது மோடி அரசு. சமீபத்தில் கூட தமிழகத்தில் சிறு வியாபாரிகள், ஏழை, நடுத்தட்டு மக்களின் நண்பனாக விளங்கிய வைகை மற்றும் பல்லவன் இரயில்களில் இருந்து தலா ஒரு முன்பதிவற்ற பெட்டி நீக்கப்பட்டது பலருக்கும் நினைவிருக்கலாம்.

அடுத்தகட்டமாக, இரயில்வேயில் உணவு வழங்குதலைத் தனியாரின் கையில் ஒப்படைத்தது மோடி அரசு. அடுத்ததாக, இந்தியா முழுவதும் 400 இரயில் நிலையங்களை ‘மேம்படுத்தும்’ நோக்கோடு தனியார் வசம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தது. அதன் முதல்கட்டமாக, கடந்த ஜுன் மாதத்தில் இந்தியா முழுவதும் 23 இரயில் நிலையங்களை தனியார் வசம் குத்தகைக்கு விடுவதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டது மோடி அரசு.

போபாலில் உள்ள ஹபீப் கஞ்ச் இரயில் நிலையத்தை முதன் முதலாக கடந்த ஜூன் மாதம் முதல் பன்சால் குழுமத்திற்கு 45 ஆண்டுகால குத்தகைக்குத் தாரைவார்த்துள்ளது மத்திய அரசு. இப்படி தனியார்வசம் விடப்படும் நிலையங்களில் அத்தனியார் நிறுவனங்களே அங்குள்ள தங்கும் விடுதிகள், நடைமேடைகள், திரையரங்குகள், வர்த்தக ஸ்தாபனங்கள் ஆகியவற்றிற்கான கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளும்.

அதில் அரசாங்கம் துளியும் தலையிட முடியாது தற்போது தனியார்மயமாக்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 23 இரயில் நிலையங்களும், இரயில்வேத்துறைக்கு வருமானம் ஈட்டித் தந்த நிலையங்கள் ஆகும். குறிப்பாக, லோக்மனியா திலக், மும்பை, தானே, புனே, விசாகப்பட்டிணம், ஹவுரா, பெங்களூரு கண்டோன்மண்ட், ஜம்முதாவி, ஃபரிதாபாத், கான்பூர், அலகாபாத் இரயில் நிலையங்கள் ஆகியவையே முதன்மையாக தனியார்மயப்படுத்தப்பட உள்ளன.

இவை ஏற்கனவே சிறந்த முறையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி வைக்கப்பட்ட நிலையங்களாகும். உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படாத நிலையங்கள் இது போன்று குத்தகைக்கு விடப்படவில்லை. அவை அனைத்தும் நமது வரிப்பணத்தால் மேம்படுத்தப்பட்ட பின்னர் அரசாங்கத்தால் தனியாருக்குத் தாரைவார்க்கப்படும்.

நமது முன்னோர்களின் உழைப்பாலும், அவர்கள் அளித்த நிலத்தாலும், காடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், இரவு பகல் பாராது உழைத்து தங்கள் உயிரை இழந்த பல்லாயிரக்கணக்கான உழைப்பார்களின் தியாகத்தாலும் உருவாக்கப்பட்டது தான் இந்திய இரயில்வே.

இது மோடியின் அப்பன் வீட்டு சொத்தல்ல ! நமது பாட்டன், முப்பாட்டனின் சொத்து. இந்திய உழைக்கும் மக்களின் சொத்து. அதனை வளர்ச்சி, வசதி, போட்டி என்ற பெயரால், தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்குத் தாரைவார்க்கும் மோடி கும்பலின் சதித்தனத்தை முறியடிக்க வேண்டிய நேரம் இது !

– நந்தன்

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி