Sunday, May 4, 2025
முகப்புகலைகவிதைஅந்த கொலைக்களத்திற்குப் பெயர் பணிமனை !

அந்த கொலைக்களத்திற்குப் பெயர் பணிமனை !

-

அரசு அன்றே கொல்லும்!

அந்த கல்லறைக்கு பெயர்
ஓய்விடமாம்
அந்த கொலைக்களத்திற்குப் பெயர்
பணி மனையாம்!

தினம், தினம்
செத்துப்பிழைத்த தொழிலாளர்கள்
இப்போது
செத்தே போய்விட்டார்கள்.

எந்நேரமும்
இடிந்துவிழ காத்திருந்த கட்டிடத்தில்
கண்மூட அனுமதித்த
அந்த கொலைகாரர்கள்
சொல்கிறார்கள்
இது விபத்து!

நசுங்கிய
தொழிலாளர் ரத்தத்தில்
உறைந்திருக்கும்
உலுத்துப்போன மண்ணும்
அரசின் கோரம் பார்த்து
வெளிறிக் கிடக்கிறது.

விடிந்ததும்
நீங்கள் குடும்பத்துடன்
தீபாவளி கொண்டாட
விடிய விடிய
கண்களை தீய்த்துக்கொண்டு
கால்களை எரித்துக்கொண்டு
பத்திரமாக இறக்கிவிடும்
அரசுப் போக்குவரத்து தொழிலாளிகள்
இதோ,
உருத்தெரியாமல் கிடக்கிறார்கள்.

எப்படி செத்தார்கள்
என்ற அவலத்தை அல்ல
எதனால் செத்தார்கள்?
யாரால் செத்தார்கள்?
என்ற கொடூரத்தை
தண்டிக்க வேண்டி
இடிபாடுகளுக்கிடையே
நம்மை அழைக்கின்றன
உறங்க மறுக்கும்
ஓட்டுநர்களின் விழிகள்.

எப்படி வாழ்கிறார்கள்
என்பதை கண்டுகொள்ளாதவர்கள்,
இப்படியா செத்தார்கள்!
என இரக்கப்படுவதில்
என்ன நியாயமிருக்கிறது!

தேவை,
மரணத்தின் மீதான இரக்கமில்லை
விளைவித்தவர்களின் மீதான ஆத்திரம்.
சாவு விசாரிப்பது
சடங்காபிமானம்
வாழ்வை விசாரிப்பதுதான்
உண்மையான
மனிதாபிமானம்.

எந்தச் சூழலில்
தொழிலாளி வேலை செய்கிறான்
என்பது
எத்தனை பேருக்கு தெரியும்?

கட்டாயம்
அரசுக்கு தெரியும்
அய்யோ பாவம்!
என நடிக்கும்
அதிகாரிகளுக்கு தெரியும்.

இயங்காத வைப்பர்கள்
எடுபடாத விளக்குகள்
பிடி கொடுக்காத பிரேக்குகள்
சரிப்படாத கியர் பாக்சுகள்
உருப்படாத டயர்கள்

இத்தனையோடும் போராடி
மக்களை காத்தவர்கள்
அதிகாரவர்க்கத்துடன் போராடி
தன்னை இழந்திருக்கிறார்கள்.

உதவாக்கரை நிர்வாகத்தின்
ஒவ்வொரு விளிம்பிலும் தப்பித்த
தொழிலாளர்களுக்கு
கடைசி நிறுத்தம்தான் சாவு,
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட
மரணக்கூண்டில் தான் அவர்களின் வாழ்வு!

இற்று விழக்கூடிய
இப்படி ஒரு கட்டிடத்தில்
ஒரு நிமிடம் படுப்பார்களா
இந்த
ஆட்சியாளர்களும்
அதிகாரிகளும்,

இவர்களின் கழிப்பறைக்கும்
நாய்களுக்கும் கூட ஏ.சி.
நாற்பது தொழிலாளர்கள்
படுத்துறங்க ஒரே ஒரு மின்விசிறி.

தன்னை விழாமல்
தற்காத்துக்கொள்ள
கட்டிடத்திற்க்கு கிடைத்த
ஒரே ஆதரவு,
வெளியேற திசை தேடி
முதுகெலும்பில் கசிந்தோடிய
தொழிலாளர் வியர்வையின்
ஈரப் பசை.

தெரிந்தே மவுனமாய்
காத்திருந்து கொன்றது
அந்தக்கால கட்டிடமா
அரசாங்க கட்டமைப்பா!

உருவகப்படுத்தவே
முடியாத அளவுக்கு
கொடூரமானது அதிகாரவர்க்கம்.

இரக்கமற்ற கொள்ளையர்க்கு
இசட் ப்ளஸ்,
உறக்கமற்ற தொழிலாளிக்கு
உயிரும் மைனஸ்.
சாவினும் கொடியது
ஆளும் வர்க்கம்.

தொழிலாளி என்றால்
அவர்களுக்கு பிணத்திற்கு சமம்
இந்த அரசமைப்பு
சாவுக்கு சமம்.

இற்றுவிழக் காத்திருப்பது
கட்டிடம் அல்ல,
இந்தக் கட்டமைப்பு!

மண்ணில் கலந்த தொழிலாளர்களே..
கண்கள் நனைகிறோம்
இதயம் எரிகிறோம்…

மாற்றத்திற்க்கான அரசியல் பயணத்தின்
நடத்துனர்களாய்,
ஓட்டுனர்களாய்
தலைமுறையை மாற்றுவோம்
உங்களுக்கான அஞ்சலியை
அர்த்தமுள்ளதாக்குவோம்!

– துரை. சண்முகம்

( நாகை மாவட்டம் பொறையாறில், பணிமனை இடிந்து அரசுப் போக்குவரத்து தொழிலாளர் 8 பேர் பலி! )

_____________

இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி