privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!

மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!

-

“சதிச் செயல் செய்தவன் புத்திசாலி, அதைச் சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!”- மோடியின் நர்மதா அணை பிரகடனம்

“சர்தார் சரோவர் அணையைக் கட்டுவதற்கு எழுந்த தடைகளைப் போல உலகில் வேறு எந்தவொரு திட்டத்துக்கும் இவ்வளவு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்காது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. எனினும், இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன்படி தற்போது அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.”
– இது, கடந்த செப்டெம்பர் 17 ஆம் தேதி அன்று குஜராத்தில் நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை நாட்டிற்கு ‘அர்ப்பணித்து’ மோடி ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

138 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் சரோவர் அணைக்கட்டத் தனது பிறந்தநாளில் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி

இந்த அணைக்கட்டின் பிரம்மாண்டம்  காரணமாகப் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்களும், விவசாயிகளும் தாம் பிறந்து, வளர்ந்து, பிழைத்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்பது உலகமே அறிந்த உண்மை. இந்த அணைக்கட்டால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, யார் அகதிகளாகத் துரத்தப்பட்டார்களோ, அவர்களைத்தான் சதிகாரர்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார், மோடி. காரணம், அவர்கள் அணைக்கட்டுக்கு எதிராகப் போராடினார்களாம். சொந்த பூமியை விட்டு, நிலத்தைவிட்டு வெளியேறு என அரசு உத்தரவிட்டவுடன், யாராவது எதிர்ப்புத் தெரிவிக்காமல் மூட்டைமுடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்களா?

சரோவர் அணைக்கட்டுக்கான நிதியுதவி 1985 -ஆம் ஆண்டு உலக வங்கியிடமிருந்து பெறப்பட்டு, 1987 -ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இக்காலகட்டத்தில்தான், இதற்கு எதிராக மத்தியப்பிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் வாழும் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள், நர்மதா பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் கீழ் அணிதிரண்டு, சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் போராடத் தொடங்கினர். இவ்வியக்கம் இந்த அணைக்கட்டு குறித்து முன்வைத்த உண்மை விவரங்களைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில்தான் அணைக்கட்டிற்கு வழங்கி வந்த நிதியுதவியை இரத்து செய்தது, உலக வங்கி.

இதன் பின்னர் உள்நாட்டு முதலீடுகளைக் கொண்டு அணை கட்டும் வேலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெளியேற்றப்படும் மக்களின் நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படாததைச் சுட்டிக்காட்டி, 1995 -ஆம் ஆண்டு அணை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதி மன்றம்.

இந்த இடைக்கால தடை 1999 -ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டு, கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. மேலும், அணையின் உயரத்தையும் 49 மீட்டரில் இருந்து 85 மீட்டர், அதன் பின்னர் 121 மீட்டர் எனத் தடாலடியாக உயர்த்திக்கொண்டே சென்றது அரசு. அணைக்கட்டின் உயரம் அதிகரிக்கப்பட்டதற்கு ஏற்ப பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 121 மீட்டர் உயரத்தோடு திருப்தி அடையாத குஜராத் அரசு, மோடி அம்மாநில முதல்வராக இருந்த சமயத்தில் அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்தவேண்டும் எனக் கோரியதை, அப்போதைய மத்திய அரசு (காங்கிரசு) நிராகரித்தது. 2014 -ஆம் ஆண்டு  மோடி பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த பதினேழாவது நாளில் அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சர்தார் சரோவர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்காக, சுமார் 13,542 ஹெக்டேர் வனப் பகுதியும், 12,869 ஹெக்டேர் பொதுநிலமும், 11,279 ஹெக்டேர் விளைச்சல் நிலமும் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலப்பகுதிகள் மத்தியப் பிரதேசம், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 245 கிராமங்களை உள்ளடக்கியவை. இக்கிராமங்களில் வசித்த சுமார் 2.5 இலட்சத்திற்கும் அதிகமானோர் அணை கட்டுவதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மறுகுடியேற்றம் மற்றும்  மறுவாழ்வு உதவிகளைச் செய்து தருவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்ட ம.பி., குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் முயற்சித்துள்ளன. இதனைக் கடந்த 2005 -ஆம் ஆண்டு, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிச் சாடியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட 245 கிராமங்களில் 193 கிராமங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 40,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், வெறும் 18,346 குடும்பங்களை மட்டும் கணக்கில் காட்டியிருக்கிறது ம.பி. அரசு. கணக்கில் காட்டப்பட்ட குடும்பத்தினருக்கும்கூட முழுமையான இழப்பீடு கொடுக்கப்படவில்லை. வழங்கப்பட்ட நிவாரணங்களிலும்கூட மிகப்பெரும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

பழங்குடியின மக்கள், தங்களுக்கு இழப்பீடாகப் பணம் தேவையில்லை என்றும் நிலம்தான் வேண்டும் என்றும் கோரினர். ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு இன்றளவும் நிலம் ஒதுக்கப்படவில்லை.

மறுகுடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் குடிநீர், மின்சாரம், சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்படவில்லை.  மேலும் ம.பி.யில் ஒதுக்கப்பட்ட மறுகுடியிருப்புப் பகுதிகளில் 78 இடங்கள் வசிப்பதற்குத் தகுதியற்றவை என விசாரணைக் கமிசன்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வளவுக்குப் பிறகும், பாதிக்கப்பட்ட மக்களைச் சதிகாரர்கள் எனச் சாடுவதற்கு மோடியின் நாக்கும் மனமும் கூசவில்லை. பழங்குடியின மக்களுக்கு எதிராகத் தீர்ப்பெழுதிய உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கைகளும் நடுங்கவில்லை.

***

நர்மதா பாதுகாப்பு இயக்கம் இத்திட்டத்தைக் கைவிடக் கோரி 1987 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த முப்பது ஆண்டுகளாகப்  போராடி வருகிறது. அவ்வியக்கத்தினர் மும்பை, டெல்லி உள்ளிட்டுப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, உண்ணாவிரதம் எனப் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியிருப்பதோடு, தமது கிராமங்கள் நீரில் மூழ்கிய பின்னும் அங்கிருந்து வெளியேற மறுத்து, உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்கள் எவையும் இரகசியமாகவோ, சதித்தனமாகவோ நடந்தவையல்ல. சட்டத்தின் அனுமதி பெற்று நடைபெற்றவைதான்.

சர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இதுவரை நிவாரண, மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படாததைக் கண்டித்து மத்தியப்பிரதேசம் – போபால் நகரில் நர்மதா பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் மேதா பட்கர்.

இந்தத் திட்டம் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப்  பறித்து, அவர்கள் அகதிகளாக்குகிறது என்ற அடிப்படையில் இத்திட்டத்திற்குத் தடை கோரி போடப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம், அதனை வெறும் நிவாரணத்திற்கான வழக்காகச் சுருக்கிக் கொண்டுதான் பல்வேறு தீர்ப்புகளை அளித்திருக்கிறது.

அணையின் உயரத்தை 85 மீட்டருக்கு உயர்த்திக் கொள்ள அனுமதியளித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நர்மதா பாதுகாப்பு இயக்கம் 2000-ஆம் ஆண்டில்  தொடுத்த வழக்கில், “வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம், மறுவாழ்வு வழங்குவது குறித்து மட்டுமே தாம் இனி தலையிடப் போவதாகவும், அணை கட்டுவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப் போவதில்லை” என்றுதான் நீதிபதிகள் மனச்சாட்சியின்றித் தீர்ப்பை எழுதினர்.

அணையின் உயரத்தை அதிகரித்துக் கொள்ள அனுமதித்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குற்றத்துக்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது தானே வலிய வந்து அவதூறு வழக்குத் தொடுத்தனர் உச்சநீதி மன்ற நீதிபதிகள். அவர்கள் தொடுத்த வழக்கை அவர்களே விசாரித்து, அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும், 2,000 ரூபாயும் அபராதமும் விதித்தனர். இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மூன்று மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தக் கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற அருந்ததி ராயையே சிறைக்கு அனுப்பியது மூலம், அணைக்கட்டு தொடர்பான தமது தீர்ப்புகளை விமர்சிக்க யாரும் துணியக்கூடாது என்ற அச்சுறுத்தலைக் கட்டவிழ்த்துவிட்டது உச்சநீதி மன்றம்.

இந்த அணைக்கட்டு, குஜராத் மாநில விவசாயிகளுக்கும் கட்ச் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் பெரும் பயன் அளிக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்து,  பழங்குடியின மக்கள் அவர்களது கிராமம், நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார், மோடி. ஆனால், தண்ணீரை எடுத்துச் செல்லும் கால்வாய்களில் வெறும் 30% மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அருணாச்சல பிரதேசத்திலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட அணைக்கட்டுக்களின் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைமையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

அவையும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைக்கப்படாமல்,  பெரும்பாலும் தொழிற்பேட்டைகள் மற்றும் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சதி மூடிமறைக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காகப் போராடிய மக்கள் சதிகாரர்களாகக் காட்டப்படுகின்றனர்.

ஆளுங்கும்பலே கூறிவரும் சட்டம், தர்மத்திற்கு உட்பட்டு, முப்பது ஆண்டுகளாகச் சளைக்காமல் போராடிய பிறகும் கிடைத்த பலன் இதுதான் எனும்போது, பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாத்துக் கொள்ள இந்தச்  சட்டத்தை மதித்து ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுந்து நிற்கிறது.

குறிப்பாக, பார்ப்பன பாசிசக் கும்பல், சட்டப்பூர்வமாகவும், சட்டத்தை மீறியும் மிகக் கொடூரமான பொருளாதாரத் தாக்குதல்களையும் அடக்குமுறைகளையும் மக்கள் மீது ஏவிவரும் வேளையில், மேற்கண்ட கேள்வி மிகுந்த  முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினர் சட்டம், ஜனநாயகம், நீதிமன்றம் எனப் பம்மாத்து செய்து, இந்தக் கேள்வியைப் புறந்தள்ளிவிட முயலுவது நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதற்குச் சமமானதாகும்.

-கந்தன்
-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

Leave a Reply to Ajathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க