Thursday, May 1, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஊழலை சட்டப்பூர்வமாக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு !

ஊழலை சட்டப்பூர்வமாக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு !

-

ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு கடந்த செப்டெம்பர் 7, 2017 அன்று ஒரு அவசர சட்டதிருத்த மசோதா ஒன்றை பிரகடனம் செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து நேரடியான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

பொதுவாக ஆளும்கட்சி ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரும்போது எதிர்ப்பும் ஆதரவும் கலந்துதானே வரும் என நீங்கள் எண்ணலாம். பொது ஊழியர்கள் எனக் குறிப்பிடப்படும் அரசு அதிகாரிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நீதிபதிகள் ஆகிய அனைவரின் மீதான துறைரீதியான புகார்களில் இருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டமசோதா அது.

இராஜஸ்தானில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கும் “குற்றவியல் சட்டங்கள் (இராஜஸ்தான் மாநிலத் திருத்தம்) – அவசரச்சட்டம், 2017” என்ற அவசரச் சட்ட மசோதா தான் அது.

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா

இதன்படி, இனி இராஜஸ்தானில் உள்ள முன்னாள் மற்றும் இன்னாள் பொது ஊழியர்கள் அனைவரின் பணி சார்ந்த முறைகேடு மற்றும் ஊழல் புகார்களின் மீது விசாரணை செய்வதற்கு மாநில அரசிடம் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்புகார்கள் மீது விசாரணை நடத்த மாநில அரசு அனுமதியளிக்காத பட்சத்தில் 180 நாட்கள் வரை அப்புகார்கள் மீது நடவடிக்கையோ, விசாரணையோ தொடங்கக் கூடாது.

ஒரு வேளை அந்தப்  புகாரின் மீது விசாரணையைத் தொடங்குவது குறித்து 180 நாட்கள் வரையில் மாநில அரசு எவ்வித முடிவும் சொல்லாத பட்சத்தில் 180 நாட்களுக்குப் பின்னர் அவ்வழக்கை விசாரிக்கலாம். அதாவது புகார் அளிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்க 6 மாத அவகாசத்தை உறுதி செய்கிறது இந்த சட்டத்திருத்த மசோதா.

இதைப் போன்றதொரு உத்தரவை தமிழகத்தை ஆண்ட கோமளவல்லி கடந்த 2016 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 -ம் நாள் அரசாணையாக (வாழவைக்கும் ஊழலுக்கு ஜே !) வெளியிட்டது நினைவிருக்கலாம். தனது அடிமைகளின் வாழ்வோ! சாவோ! அது தனது கையால் தான் இருக்க வேண்டும் என்பதுதான் கோமளவல்லி ஜெயாவின் விதந்தோதப்பட்ட நிர்வாகத்திறன்.

ஆனால் இராஜஸ்தானின் ‘மகாராணி’ வசுந்தரா ராஜே சிந்தியா, கோமளவல்லியை விட ஒரு படி மேலே போயிருக்கிறார். அரசு விசாரணைக்கு அனுமதி அளிக்கும் முன்னர், அந்தப் புகார் குறித்தும் கூட பத்திரிக்கைகள் எழுதக் கூடாது என்று மிரட்டுகிறது இச்சட்டத் திருத்தம். மேலும் எச்சூழலிலும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பெயர், விலாசம், புகைப்படம், குடும்ப விவரம் போன்றவற்றை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்றும் அதை மீறி புகார் குறித்தோ சம்பந்தப்பட்டவர்கள் குறித்தோ எழுதினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும் இச்சட்டதிருத்தம் மிரட்டுகிறது. மக்களை சுரண்டிக் கொழுத்த சிந்தியா மன்னர்வம்சத்தின் இரத்த வாரிசு இதைக் கூட செய்யவில்லையென்றால் எப்படி?

இச்சட்டத் திருத்தத்திற்கு பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அம்மாநில  எதிர்க்கட்சிகள், உட்பட பலரும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றனர். பாஜக -வைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வான கன்ஷியாம் திவாரி என்பவரும் இச்சட்டதிருத்த மசோதாவைத் தாக்கல் செய்த தினத்தன்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வெளிநடப்பு செய்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

எதிர்ப்பு பலமாக இருந்தாலும், இந்த அவசரச் சட்டத்தை எப்படியேனும் நிறைவேற்றிவிடத் துடிக்கிறது பாஜக அரசு. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தைக் குளிர்விக்கவே ஜெயா இத்தகைய அரசாணையைக் கொண்டு வந்தது போல, எதிர்வரும் 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நீதித்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தைக் குளிர்வித்துத் தன் கைக்குள் போட்டுக்கொள்ளவே இந்த அவசரச் சட்டதிருத்த மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறார் வசுந்தரா ராஜே.

பிரிட்டிஷ் காலை நக்கிப் பிழைத்துக் கொண்டு மக்களை சாதியரீதியில் பிரித்து ஒட்டச் சுரண்டிய ஆர்.எஸ்.எஸ். கும்பல், இன்று அதிகாரவர்க்கத்தைக் கையில் வைத்துக் கொண்டு இலஞ்ச, ஊழல் மூலம் மக்களை ஒட்டச் சுரண்டிவருகிறது.

இவ்வளவு நாள் சட்டவிரோதமான முறையில் இலஞ்ச ஊழல் கிரிமினல்களைத் தப்பவைத்த இந்தக் கும்பல், தற்போது சட்டப்பூர்வமாகவே இக்கிரிமினல்களைத் தப்பவைக்க ஏற்பாடு செய்துதர எத்தனிக்கிறது. ‘கறைபடாத’ கைகளாயிற்றே சங்கபரிவாரத்தின் கைகள் ! அதனால் கறைகளையே சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது.

மேலும் :

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க