Thursday, October 17, 2019
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க வாழவைக்கும் ஊழலுக்கு ஜே !

வாழவைக்கும் ஊழலுக்கு ஜே !

-

வாழவைக்கும் ஊழலுக்கு ஜே! – ஜெயலலிதாவின் புதிய அரசாணை

“வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்பது தமிழ் மக்களின் காதில் புளித்துக் கிடக்கும் அடுக்குமொழி வசனங்களில் ஒன்று. அவ்வசனத்தில் சிறியதொரு திருத்தம் செய்து, வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது ஊழலாக இருக்கட்டும்” என்று புதியதொரு வசனத்தை வழங்கி யிருக்கிறார் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் ஜெ., “நான் பட்ட துன்பத்தை எதிர்காலத்தில் ஒரு டவாலி கூட அனுபவிக்கக் கூடாது” என்று தாயுள்ளத்துடன் சிந்தித்து, பிப்ரவரி 2-ஆம் தேதியன்று ஒரு அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார்.

ஊழல் முறைகேடுகள்
இனி, எந்த அரசு ஊழியர் மீது புகார் வந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படாது என்பதால், ஊழல் குற்றம் சாட்டுவோர் மீதான அவதூறு வழக்குகளும், முத்துக்குமாரசாமி போன்றோரின் தற்கொலைகளும்தான் அதிகரிக்குமே தவிர, ஊழலை பொறுத்தவரை அது அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிடும்

அம்மா போட்டிருக்கும் புதிய அரசாணை, இனி ஒரு கலெக்டர் ஆபீசு டவாலியின் மீது ஊழல் குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றாலும், அரசின் கருத்தைக் கேட்காமல், அப்படி ஒரு வழக்கைப் பதிவு செய்யவோ, விசாரிக்கவோ கூடாது” என்று ஊழல் தடுப்பு – கண்காணிப்பு ஆணை யத்துக்குத் தடை விதிக்கிறது. அதாவது, இலஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைந்திருந்து லபக் என்று பிடித்தனர்” என்று எப்போதாவது தினத்தந்தியில் செய்தி வருமே, அப்படிப்பட்ட ‘கெட்ட’ செய்திகள் இனி வரவே வராது.

ஒரு அரசு ஊழியருக்கு எதிராக ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குநரகத்திடம் (Directorate of Vigilanceand Anti Corruption – DDVAC) நீங்கள் புகார் செய்தால், அந்தப் புகார் அங்கிருந்து கண்காணிப்பு ஆணையத்துக்கு (Vigilince commission) அனுப்பப்பட வேண்டும். கண்காணிப்பு ஆணையம் அந்தப் புகாரை அரசுக்கு (அதாவது சம்பந்தப்பட்ட துறைக்கு) அனுப்பி, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று, அதன் பின்னர்தான் ஊழல் புகார் மீது வழக்கே பதிவு செய்ய வேண்டும் என கூறுகிறது, இந்த அரசாணை.

சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு தாசில்தார் ஆபீசு குமாஸ்தாவுக்கு எதிராக நீங்கள் விஜிலென்சில் புகார் கொடுத்தால், அது தலைமைச் செயலருக்குப் போய், மாவட்ட ஆட்சியர் வழியாக சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு வந்து சேரும். ஏட்டுக்கு எதிரான புகார் என்றால் இன்ஸ்பெக்டரிடம் வரும். இவர்களிடம் கருத்து கேட்டு, அதன் பின்னர்தான் நட வடிக்கை எடுக்கப்படும். அவர்கள் என்ன கருத்து சொல்வார்கள், என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கத் தேவையில்லை.

மதுவிலக்குத் துறை டாஸ்மாக் கடையை நடத்திக் கள்ளச்சாராயத்தை ஒழித்திருப்பது போலவே, இந்த அரசாணையும் ஊழலை ஒழித்து விடும்.

இனி, எந்த அரசு ஊழியர் மீது புகார் வந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படாது என்பதால், ஊழல் குற்றம் சாட்டுவோர் மீதான அவதூறு வழக்குகளும், முத்துக்குமாரசாமி போன்றோரின் தற்கொலைகளும்தான் அதிகரிக்குமே தவிர, ஊழலைப் பொருத்தவரை அது அதிகாரபூர்வமாக ஒழிக்கப்பட்டுவிடும்.

அம்மாவின் தீர்ப்பு
தனக்கு உச்சநீதி மன்றத்தில் விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அனைவரையும் ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பெழுதிவிட்டார், ஜெயா.

இந்த அரசாணை அநீதியானது என்று சிலர் கருதலாம். ஆனால், நீதியை நிலை நாட்டும் பொருட்டும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்கவும்தான் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனை விளங்கிக்கொள்ள இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்டதன் பின்புலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எத்தகைய ஊழல் பேர் வழிகளாக இருந்தாலும், அவர்கள் மீது இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலாத வண்ணம் சில சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது இலஞ்சப்புகார் வந்தால், அதற்கு முகாந்திரம் உள்ளது என்று கருதி தலைமைச் செயலரோ அல்லது மத்திய அரசின் அமைச்சரவைச் செயலரோ அனுமதி கொடுத்தால் மட்டும்தான் அவர்கள் மீது விசாரணையே நடத்த முடியும் என்ற நிலைமை இருந்தது.

இதற்கு எதிராக வினீத் நாராயண் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு இப்படி ஒரு சிறப்பு சலுகை வழங்கக் கூடாது; அவர்கள் மீது இலஞ்சப் புகார் வந்தால் ஊழல் கண்காணிப்புத் துறை (Central Vigilance Commision) உடனடியாக விசாரணை நடத்தலாம்; அதற்கு யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என 1997-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் அதிகார வர்க்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசின் இணைச்செயலர் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியில் உள்ள அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டுமானால், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்” என்றொரு விதியை 2003- இல் உருவாக்கியது வாஜ்பாய் அரசு. இந்த விதி, அரசமைப்பின் உறுப்பு 14 கூறுகின்ற ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டுக்கு எதிரானது; ஒரு அரசு ஊழியரின் பதவி அல்லது தகுதி காரணமாக அவர் எந்தவித சிறப்புச் சலுகையும் பெற முடியாது. எல்லா ஊழல் அலுவலர்களும் சமமாகத்தான் நடத்தப்படவேண்டும். அவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது” என்று உச்ச நீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மே, 2014-இல் தீர்ப்பளித்தது.

இருந்த போதிலும், இந்தத் தீர்ப்புக்கு இணங்கத் தமிழக அரசு தனது சட்டத்தைத் திருத்தவில்லை. தமிழக அதிகாரிகளுக்கு ஊழல் வழக்குகளில் காட்டப்பட்டிருந்த சலுகை அப்படியே நீடித்தது. தமிழக அரசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார் வழக்கறிஞர் புகழேந்தி.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அரசு அலுவலர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதைக் கணக்கில் கொண்டு, பொருத்தமான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறோம்” என்று ஜெ. அரசின் தலைமை வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுலிடம் மீண்டும் மீண்டும் உறுதியளித்தார். அக்டோபர் 2015-இல் இதையே ஒரு பிரமாணப் பத்திரமாகவும் ஜெ. அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து வந்திருப்பதுதான் அம்மாவின் இந்த அரசாணை.

ஊழல் வழக்குகளைப் பொருத்தவரை பியூனுக்கும் கலெக்டருக்கும் ஒரே சட்டம்தான் – பாரபட்சம் காட்டக் கூடாது என்றது உச்சநீதிமன்றம்.

பாரபட்சம் கூடாது, அவ்வளவுதானே! கலெக்டருக்கு என்ன சட்டமோ அதுதான் பியூனுக்கும் என்று மாற்றிவிடுகிறோம். கலெக்டர் மீது ஊழல் வழக்கு தொடர வேண்டுமானால் அரசு அனுமதி தேவை என்பதைப் போலவே, டவாலி மீது வழக்கு தொடர வேண்டுமென்றாலும் அரசு அனுமதி தேவை என்று திருத்தி விட்டோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலை நாட்டி விட்டோம். இந்த அரசாணை அரசமைப்பின் உறுப்பு 14-ஐ மீறியிருப்பதாக யாரும் குறை சொல்ல முடியாது” என்று நீதிமன்றத்தை எள்ளி நகையாடுகிறது ஜெயலலிதா அரசு.

தனக்கு உச்சநீதி மன்றத்தில் விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அனைவரையும் ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பெழுதிவிட்டார், ஜெயா.

– தொரட்டி

புதிய ஜனநாயகம் மார்ச் 2016

  1. ஊழல் ரத்னா (சாராய சாம்ராஜ்யம் படைத்த) புரட்சி தலைவன் எம் ஜி ஆரே ஆரம்பித்த ஊழல் பாதுகாப்பு சட்டம்! அய் ஜி மாணிக்கம் – சாராய பாட்டிலிங் லைசென்ஸ் வழக்கில் லஞசம் கொடுத்தவனுக்கே தண்டனை என்ற அவசர சட்டம் போட்டு , தன் மீது எவரும் லஞ குற்றச்சாட்டு சொல்லாமல் குடை பிடுத்து கொண்டவடர் அல்லவா, புரட்சி தலைவர்! அந்த பாரம்பரியத்தை அம்மா பின்பற்றுகிறார்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க