privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஇலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !

இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !

-

வம்பர் புரட்சியின் நூறாண்டு இது. ரசியாவில் 1917 -ல் நடந்த புரட்சி என்பது பூவுலகில் முதல் முறையாக உழைக்கும் மக்களின் அரசை நிறுவியது. அதிகாரத்தில் மட்டுமல்ல, இன்றைக்கு பேசப்படும் அத்தனை நலத்திட்டங்களுக்கும் சோவியத் அரசுதான் முன்னோடி. அங்கே மருத்துவத்துறையில் மக்களுக்கான சுகாதாரம் என்பது எப்படி நடைபெற்றது என்பதை பார்ப்போம்.

நோய் தடுப்பு, தகுதி பெற்ற மருத்துவர்கள் மூலம் உயர்ந்த சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் ஆகிய இரண்டு அடிப்படைகளை சோவியத் மருத்துவம் கொண்டிருந்தது.

உலகிலேயே முதல்முறையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல், அறுவை சிகிச்சை வரை அனைத்துமே இங்கு இலவசம் தான். ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் இருந்தன. தேவைக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தன.

இலவச மருத்துவத்தின் மூலம் கொடுக்கிற காசுக்கேற்ற வைத்தியம் என்ற ஏற்றத் தாழ்வை ஒழித்துக் கட்டியது சோவியத் அரசு. விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்சாக பயன்படுத்தப்பட்டன. பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இதன் பிறகு மருத்துவத்தை இலவசமாக்கின.

அனைத்து வகையான இலவச மருத்துவ உதவிகளையும் பெறும் உரிமை (சோவியத் சட்டத்தின்படி சோவியத் குடிமக்கள் மட்டுமின்றி சோவியத்தில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டது) முதியவர்களுக்கான ஓய்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தவற்றுள் ஒரு சில மட்டுமே, இன்னும் பல்வேறு அடிப்படை உரிமைகள் சட்டங்களாக இயற்றப்பட்டிருக்கின்றன.

இந்த உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும், இந்த உரிமைகளை மக்களிடமிருந்து பிறர் பறிக்க முடியாதவாறும், அப்படி பறிக்க எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனைகளையும் சோவியத் சட்டங்கள் உறுதி செய்தன.

ஆலைத்தொழிலாளருக்கான மருத்துவ வசதிகள்

ஆலைகள் கம்யூனிச சித்தாந்தங்களின் கோட்டை என்று கருதப்பட்டன. இது மட்டுமன்றி ஒவ்வொரு ஆலைகளுமே உடல்நலம் பேணும் மருத்துவமனைகளாக மாற்றப்பட வேண்டுமென்பதே சோவியத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.

மருத்துவ வசதிகள் என்றதும் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பது என்று கருதாமல் வேலை, ஓய்வு, கலாச்சார வளர்ச்சி என்ற எல்லா அம்சங்களையுமே மருத்துவத்தின் அங்கமாகக் கருதினர். ஏனெனில் ஏற்றத்தாழ்வான சமூகத்தின் மனநலத்தை பாதிக்கும் அம்சத்தை கலையால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது.

நோயாளிகளின் நோயின் தன்மையைப் பொருத்து கீழ்க்கண்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

  • புற நோயாளிகள் மருத்துவமனை
  • பரிசோதனை வசதிகள் கொண்ட மருத்துவமனை
  • காச நோய் மற்றும் பாலியல் சிகிச்சை தொடர்பான மருத்துவமனை
  • பல் நோக்கு வசதிகள் கொண்ட மருத்துவமனை
  • பல்கலைக்கழக மருத்துவமனை
  • காச நோய்க்கான சிறப்பு மருத்துவமனை
  • சிறப்பு இரவு நேர காச நோய் மருத்துவமனை

இரவு நேர காச நோய் மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவும், உறங்கும் வசதிகளும் செய்து தரப்பட்டன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் 60 படுக்கைகள் வரை இருந்தன. நோயின் தன்மையைப் பொருத்து ஒவ்வொருவருக்கும் இலகுவான சில வேலைகள் தரப்பட்டன; 6 முதல் 7 மணி நேரம் வேலை செய்து பின்னர் ஓய்வெடுத்துக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டன.

ஆலைகளுக்கு வேலை செய்யப்போகும் தொழிலாளர்கள் இது போன்ற இடங்களில் குளியலறை வசதிகள் செய்து தரப்பட்டன. நோய்த்தடுப்பூசிகளும் இங்கே போடப்பட்டன. தொழிலாளிகள் இங்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். இதற்கென்று சிறப்பு மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டனர்.

ஆலை வளாகத்துக்குள் இருந்த வெவ்வேறு உற்பத்திக் கூடங்களில் பெரும்பாலும் பெண் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டனர். முதலுதவி அளிப்பது இவர்களின் பிரதான வேலையாகும். ஆலை மருத்துவர்களின் பரிந்துரைகளின் பேரில் சோதனைகள் செய்து ஒவ்வொருவரைப் பற்றியும் தரவுகளைப் பராமரிப்பது இவர்களின் பணியாகும். முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களைப் பற்றிய தகவல்களும் ஆலை மருத்துவருக்குத் தெரிவிக்கப்படும். அடிக்கடி நோய்வாய்ப்படும் தொழிலாளிகள் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

மருத்துவர்கள் மட்டுமல்லாது ஆலை நிர்வாகக் குழுவும் மருத்துவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்வார்கள். நோயின் தன்மை அதிகரிக்கும் பட்சத்தில் வேலை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு சிறப்பு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

நோய்க்கான சிகிச்சை மட்டுமன்றி மனநல ஆலோசனைகளும் கூடுதலாகத் தரப்பட்டன. நோயினின்று தற்காத்துக் கொள்ளும் ஆலோசனைகளும் மருத்துவர்களால் வழங்கப்பட்டன.

குழந்தைகள் மற்றும் இளையோருக்கான சிகிச்சை

குழந்தைகளுக்கான மருத்துவம் என்பது சிகிச்சை என்பதை தாண்டி பல்வேறு வகைகளில் விரிவடைந்திருந்தது. குழந்தைகள் நல மையத்தில் தொடங்கி, திறந்த வெளிப் பள்ளிகள் மற்றும் கோடை கால சிறப்பு முகாம்கள் வரை மருத்துவப் பராமரிப்பு நீண்டிருந்தது.

இவற்றின் தரம் இங்கிலாந்தில் உள்ள உயர்வகுப்பினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வந்த உறைவிடப்பள்ளிகளின் தரத்திற்கு இணையாக இருந்தது.  இன்னும் சொல்லப்போனால் அதைவிட மேம்பட்ட வழிகளில் செழுமையடைந்திருந்தது.

கம்யூனிஸ்டுகளின் முதலாவது அகிலத்தில் உரையாற்றிய மார்க்ஸ், கம்யூனிச சமூகத்தில் தாய் சேய் நலப் பராமரிப்புகளின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை சோவியத்தில் கண்கூடாக நிறைவேற்றியது.

மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருந்து குழந்தைகள் நல மையங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மருத்துவமனையோடு எளிதில் தொடர்பு கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன.  சிகிச்சைக்குக் கொண்டு வர முடியாத குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. குழந்தை வளர்ப்பு மையங்களும், குழந்தைகள் நல மையங்களும் ஒருங்கே இணைக்கப்பட்டிருந்தன.

சோவியத் சமூகத்தின் சமூக மயமாக்கப்பட்ட உடல் நலம் என்ற நூலின் ஆசிரியர் திருமதி. ஆலிஸ் ஃபீல்டு குறிப்பிடுகையில், 1931 -ம் ஆண்டு மாஸ்கோ நகரத்தில் மட்டும் 35 குழந்தைகள் நல மையம் அமைந்திருந்தது. இவையனைத்திலும் பால் பொருட்கள் எந்நேரமும் கிடைக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரும் மையத்திலும் ஒரு வருடத்திற்கு 7,000 குழந்தைகள் வரை பயனடைந்தனர். அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் 40,000 முறை பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்குச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களைப் பொருத்தவரை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. ஒன்று நிரந்தரமாக இயங்குபவை மற்றொன்று தற்காலிக நோக்கங்களுக்காக இயங்குபவை. 1927 முதல் 1932 வரை சோவியத்தில் இயங்கி வந்த குழந்தைகள் மையங்கள் குறித்த புள்ளிவிவரம்.

குழந்தைகள் மையங்களில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை
(ஆயிரங்களில்)
வருடம்
1927-28 1931 1932
நகரம் 34 129 263
கிராமம்
         நிரந்தரமானவை 2.5 103 329
        தற்காலிகமானவை 101 1426 3501

 

பிறந்து ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதமான குழந்தைகள் அங்கே அனுமதிக்கப்பட்டன. மூன்று வயதிலிருந்து அதிகபட்டம் ஐந்து வயது வரை இங்கே அவர்கள் பராமரிக்கப்பட்டனர். உள்ளே அனுமதிக்கப்படும் குழந்தைகள் பிரத்தியேகமான சோதனைக்குட்படுத்தப்பட்டு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் குழந்தைகள் தாயுடன் வீட்டிற்குத் திருப்பியனுப்பப்பட்டு கூடவே ஒரு மருத்துவரும் அனுப்பி வைக்கப்படுவார்.

அந்த மருத்துவர் அங்கே சென்று அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமன்றி அந்தக் குழந்தை பிறந்த இடம், பெற்றோரின் உணவுப்பழக்கம் உள்ளிட்ட தகவல்களைச் சேமித்து வருவார். உடல் நிலை சரியான பின் அந்தக் குழந்தை பராமரிப்பு மையத்திற்குள் அனுமதிக்கப்படும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தையின் தாய் ஒரு நாளைக்கு மூன்று முறை தாய்ப்பாலூட்ட அனுமதி உண்டு. குழந்தைகள் வயதை வைத்து மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படுவர். சிறந்த உணவுகள், சுகாதாரமான சூழ்நிலை மற்றும் குழந்தைகளை சுயசார்புள்ள சோவியத் குடிமக்களாக மாற்றும் பொறுப்பை அங்கு உள்ள நிர்வாகிகள் உறுதிசெய்வார்கள்.

இளைஞர், இளம்பெண்களுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் சோசலிச ரஷ்யாவில் வகுக்கப்பட்டன. குறிப்பாக குடியுரிமைச் சட்டம் குறித்த வகுப்புக்கள் பரவலாக எடுக்கப்பட்டன. ஆண் பெண் பாகுபாடின்றி வகுப்புக்கள் அனைவருக்கும் சரிசமமாக வகுப்புக்கள் எடுக்கப்பட்டன.

இளைஞர், இளம்பெண்களிடையே போதைப்பொருள், மதுப்பழக்கம் குறித்த பிரச்சாரங்கள் பரவலாக எடுத்துச்செல்லப்பட்டன. உடற்கல்வி மற்றும் மனவளம் குறித்த வகுப்புக்கள் மாதந்தோறும் எடுக்கப்பட்டன. வருடாந்திர வகுப்புத் திட்டங்களும் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

பெண்களுக்கான மகப்பேறு கால மருத்துவ சேவைகள்

ஐரோப்பாவிலுள்ள இதர நாடுகளைக் காட்டிலும் சோவியத்தில் தான் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாகும். தாய்-சேய் நலத்திட்டத்திற்கென்று சோவியத் யூனியனில் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கென்று பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.

1929 -ம் ஆண்டு வாக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் (1,000 பேர் கொண்ட மக்கள் தொகையில் ) 38.6 சதவீதமாகவும் அதே நேரத்தில் இறப்பு விகிதம் 20.6 சதவீதமாகவும் குறைந்தது.

பெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர்.

இன்றைக்கு பல்வேறு நாடுளில் இருக்கும் சுகாதாரத் துறையின் முன்னோடியே சோவியத் அரசாங்கம்தான். இன்றும் கூட அமெரிக்காவில் ஊதியத்துடன் கூடிய பிரசவ கால விடுமுறை என்பது சட்டப்பூர்வமாக இல்லை. காப்பீடு மூலமே சிகிச்சை பெற முடியும் என்பதால் பல அமெரிக்க மக்கள் நோயோடு சாவை எதிர்நோக்கி இருக்கும் அவலத்தை மைக்கேல் மூரின் சீக்கோ ஆவணப்படம் அம்பலப்படுத்தியது.

நவம்பர் புரட்சி ஒன்றில்லாமல் இந்த உலகம் கடைத்தேற வழியில்லை!

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. ஏழைகள் என்ற பெரும் மக்கள்திரளை “ஏழைகளாகவே” வைத்து சத்துணவு, முட்டை,சாம்பார்சாதம்,ஒத்தருபா இட்லி என போட்டு அதையே சாதனையாக பேசியே ஓட்டூப்பொறுக்கும் இந்த “கருணை”வான்களான ஒழித்து உண்மையான மக்கள் ஆட்சியை நிறுவ இங்கே வேறு வழியே இல்லை…நவம்பர் புரட்சியைத் “தவிர”.

  2. 2017ல் பதிவ்டப்பட்ட கட்டுரை என்றாலும் இன்றைக்கு மீண்டும் பதிவிட முழுத் தகுதியுள்ள கட்டுரை என்பது எனது கருத்து. ஒரு சிறு முன்னுரையுடன் வெளியிட வேண்டும் என வேண்டுகிறேன். செய்வீர்கள் என நம்புகிறேன். நன்றி!

Leave a Reply to c.neppolian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க