privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!

கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!

-

மிழகத்தில் கந்து வட்டி கொடுமை போலிசு, அதிகாரிகளின் ஆசியோடு தலைவிரித்தாடுகிறது என்பதற்கான சமீபத்திய சாட்சியே நெல்லை இசக்கிமுத்துவின் மரணம். இசக்கிமுத்து எரிவதை பார்த்து பதறாத மனம் இல்லை. அந்த மரணத்தின் பின்னால் இருக்கும் வலி தோய்ந்த துயரங்களைச் சொல்லி மாளாது.

திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாள் அன்று  தன் தாய் பேச்சியம்மாள், தம்பி கோபியை நெல்லை கலெக்டர் அலுவலகம் வரச் சொல்லி விட்டு அவர்கள் கண்ணெதிரேயே குடும்பமே தீக்குளித்த சம்பவத்தை என்னவென்று சொல்வது. “ஐயோ…. எறியிறது எம்மொவனும், மருமொவளும்……என் பேத்திமாருங்களும் தான்” என்று பேச்சியம்மாள் கதறியதை நம்மால் மறக்க முடியாது. அன்று எரிந்த நெருப்பில் பொசுங்கியது இசக்கி மட்டுமல்ல. இந்த அரசு குறித்த மாயையும் தான்.

தீக்குளித்த இசக்கிமுத்து கந்து வட்டி தொல்லை காரணமாக நெல்லை மாவட்ட கலெக்டரிடம் ஆறு முறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அச்சன்புதூர் போலீசும், கந்து வட்டி கும்பலோடு சேர்ந்து  இசக்கிமுத்துவை மிரட்டியுள்ளது. தன்னை பாதுகாக்க வேண்டிய அரசே கைவிட்ட நிலையில் தான், இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதிசாருன்யா, அட்ஷயபரணிகா ஆகியோருடன் தீக்குளித்தார்.

தமிழகத்திற்கு இது புதிதல்ல. சில ஆண்டுகளுக்கு  முன்பு தருமபுரியில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து, கட்ட முடியாத சுமார் 27 பெண்களை தன் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டான் சிவராஜ் என்ற காமக் கொடூரன். தனக்கு நேர்ந்த  கொடூரத்தை வெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்ற பயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் வெளியில் சொல்லவில்லை.  அன்று தருமபுரி சம்பவத்தை ஊடகங்கள் பரபரப்பாக்கி கல்லா கட்டியதை தவிர வேறெதுவும் பெரியதாக நடந்து விடவில்லை. வழக்கம் போல் “கைது நாடகம்” அரங்கேறியது அவ்வளவுதான்.

அதே போல, சமீபத்தில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் கம்பெனி உரிமையாளர் தாமரைக் கண்ணன்,  கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். அதே போல் மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் விஷம் அருந்தி ஐந்து பேர் இறந்து விட்டதாக செய்திகள் வெளியானது. விசாரணையில் கடன் பிரச்சனை என்று தெரிய வந்தது. இதுபோன்று கந்து வட்டிக் கடன் தொல்லையால் “குடும்ப தலைவர் தற்கொலை” என்பது மறைந்து “குடும்பத்துடன் தற்கொலை” செய்திதான் தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.  கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் உளவியல் காரணங்களை புரிந்து கொள்ள மேற்சொன்ன தருமபுரி சம்பவம் ஒன்றே போதும்.

கல்விக்காக கடன் வாங்கி அடைப்பதற்கு வழியில்லாமல் இளைஞர்கள் தற்கொலை, சிறு தொழில் நிறுவனர்கள் கந்து வட்டிக் கும்பலிடம் கடன் அடைக்க முடியாமல் தற்கொலை, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை, கடன் வாங்கிய தாய்மார்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கபடுவது என்று நாளுக்கு நாள் கந்து வட்டி கொடுமைகள் அரங்கேறி  வருகின்றன.

வங்கிகளில் விவசாயக்கடன், கல்விக்கடன், நகைக்கடன், வீடு கட்ட கடன், தனிநபர் கடன், தொழில் தொடங்க கடன் என்று ஏகப்பட்ட கடன்கள் ஏழை எளிய மக்களுக்கு  வழங்கப்பட்டு வருவதாவும், மக்கள் இதனை முறையாக பயன்படுத்துவது இல்லை என்ற கோணத்தில் காரசார விவாதங்களை ஊடகங்களில் நடத்துகிறார்கள். வங்கி அதிகாரிகளும் தனியாக ’அட்வைசு மழை’ பொழிகிறார்கள்.

“இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 40,000 கிராமங்களில் தான் வங்கி கிளைகளே உள்ளன.  10, 20 கிராமங்களுக்கு ஒரு வங்கி என்ற நிலைதான் தற்போது இருந்து வருகிறது. அப்படி இருந்தால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு எப்படி கடன்கள் வழங்க முடியும். சில கிராமங்களில் வங்கி எங்கு உள்ளது என்பதை தேடி அலையும் நிலையும் உள்ளது” என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொது செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். வங்கிகளையே துளாவ வேண்டிய நிலையிலுள்ள இலட்சணத்தில் ’பணமில்லா பொருளாதாரம்’ என பீலா விட்டுக்கொண்டு திரிகிறார் மோடி.

தமிழகத்தில் “தென்மாவட்டங்களை பொறுத்தவரை கந்துவட்டி தொழிலில் இருந்து அம்மக்களை தனியாக பிரிக்க முடியாது” என்ற அளவிற்கு தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பணத்தை வசூலிப்பதற்கென்று தனி பாணியை கையாளுகிறார்கள். அனைத்து இடங்களிலும் வெளிப்படையாகவே கந்து வட்டித் தொழில் நடைபெறுகிறது. எனினும், இந்த சட்டமும், நீதிமன்றமும் வட்டித்தொழிலை ஒழித்த பாடில்லை.

அருண் சக்திகுமார், நெல்லை மாவட்ட எஸ்.பி.

அதிக வட்டி வசூலிப்பது, வட்டி செலுத்தாதவர்களை மிரட்டுவது, துன்புறுத்துவதை தடுக்க கடந்த 1957 -ம் ஆண்டிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டது. அது ஏட்டளவிலேயே முடங்கிக் கிடக்கின்றது. தமிழ் சினிமா நாயகர்களின்  ஆதர்சன இயக்குனரான மணிரத்னத்தின் சகோதரரும், ஜெயா ஆட்சியில் அரசுப் பணத்தில் படம் எடுத்தவருமான தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட பின்னர், 2003 -ம் ஆண்டு கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தார் மறைந்த ‘A1’ ஜெயா. இருப்பினும் இந்த சட்டம் வெறும் ஏட்டளவில் தான் உள்ளது. முக்கியமாக இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறை அதனை கழிப்பறை காகிதமாகத் தான் பயன்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் போலீசு கும்பல் கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தையே நடத்தி வருகிறது என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கந்து வட்டியை பொறுத்தவரை காவல்துறையை குற்றம் சாட்ட முடியாது” என்று கூறி முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயல்கிறார்.

இத்தனைக்கும் கந்து வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் நெல்லையில் வெறும் 302 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. யாரும் தண்டிக்கப்படவில்லை. இந்த பிரச்சனை முன்னுக்கு வந்த பிறகு தான் பத்து பேர் மீது வழக்கு பதிந்து நான்கு பேரை சிறையில் அடைத்துள்ளது போலீசு .

அதே நாளிதழுக்கு பேட்டியளித்த ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில், “கந்து வட்டி பிரச்சனையில் நடவடிக்கை எடுக்காத போலிசு, அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்” என்கிறார்.  மேலும் அவர், “கந்து வட்டி தடுப்பு சட்டத்தை கடுமையாக கடைப்பிடிக்காத வரையில் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபோது “சட்டத்தை கடுமையாக்கினால்” இந்த குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம் என்றார்கள். என்ன நடந்தது? பெண்களுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறதே ஒழிய பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

கடந்த 2013ல் “ தி இந்து” நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், கந்து வட்டி தொடர்பாக தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்கு பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், “கந்து வட்டி கொடுமை பற்றி தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்யவும், கந்து வட்டி வசூலிப்போர் போலீஸ் கூட்டை தடுக்கவும் மாவட்ட, வட்டார அளவில் கமிட்டிகளை ஏற்படுத்துவது பற்றி அரசு ஆராய வேண்டும்.

கந்து வட்டி வசூலிப்பவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான சாத்தியம் பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி புகார்கள் தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றோர் பற்றிய விவரங்களைக் கொண்ட அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை காற்றில் பறக்க விட்டது ஜெயா அரசு. ”ஒருமணி நேரத்தில் பணிக்கு திரும்பவில்லை என்றால் “சஸ்பென்ட்” செய்யப்படும் என்று ஜாக்டோ-ஜியோவை மிரட்டிய நீதிமன்றம், தான் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதது பற்றி எந்த கண்டணமும் தெரிவிக்கவில்லை.  கந்து வட்டி விஷயத்தில் பல நூறு தற்கொலைகள் அரங்கேறிய பின்னரும் அதனை கண்டும் காணாமலும் தான் இருந்து வந்துள்ளது. இதுதான் நீதிமன்றத்தின் இலட்சணம்.

கந்து வட்டி, கடன் தொல்லையில் ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்புமே சாதாரண ஏழை எளிய மக்களுக்கு எதிராகத் தான் உள்ளது. தான் இயற்றிய சட்டத்தை தானே மீறியுள்ளது. இந்த கட்டமைப்பின் தோல்வி தான் இசக்கிமுத்துவை தீக்கிரையாக்கியது. மீண்டும் இவர்களையே நம்பினால் நம் கதி என்ன ஆகும்? மக்கள், பகுதிக் கமிட்டிகளை ஏற்படுத்தி, அதன் மூலமாக கந்துவட்டிக்காரர்களையும், அவர்களது கூட்டாளிகளான போலீசு கிரிமினல்களையும் விசாரித்து தண்டனை வழங்கினால் தான்இசக்கிமுத்துக்களின் மரணத்தை தடுக்க முடியும்.

மேலும் :