Sunday, May 4, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககார்ட்டூன் மேல் வந்த கோபம் கந்துவட்டி மேல் வரவில்லையே ?

கார்ட்டூன் மேல் வந்த கோபம் கந்துவட்டி மேல் வரவில்லையே ?

-

கந்துவட்டி மேல் வராத கோபம் கார்ட்டூன் மேல் வருகிறதா !

ண்மையில்
எங்களை கேலிசெய்கிறது
உங்கள் ஆட்சி.

ஒரு கேலிச்சித்திரத்தை
முடிக்கும் முன்பே
அடுத்த கேலிக்குரியதை
படைத்துவிடுகிறது அரசு.

கேலிசெய்ய நீளும்
எந்தவொரு கார்டூனிஸ்ட்
கோடுகளையும்
முடிக்க இயலாவண்ணம்
வரைபவரின் கைகளை கேலிசெய்து
நீள்கிறது
அதிகார வர்க்கத்தின் ஆணவம்.

நாட்டில்
நீங்கள் நடத்தும் ஆபாசத்தை
கோட்டில் வரையும் அளவுக்கு
கூசாத இதயம்
எங்களுக்கு இல்லை.

எங்கள் கையில் இருப்பது
கண்ணாடி தான்
பிம்பம் உங்களுடையது.
ஆபாசமாய் இருப்பதாய்
அரற்றுவதால் தான் சொல்கிறோம்
கேலிக்குரியதாக்குவது
நீங்களே!

கொட்டாங்கச்சியில்
கொஞ்சம் நீர் இருந்தாலே
டெங்குவிற்கு நீங்கள்தான்
காரணம் என்று
தண்டம் விதித்தவர்கள்,

குடிசைக்குள் தண்ணீர் நிற்கும் அளவுக்கு
தெண்டமான உங்கள் ஆட்சியை
கேள்விகேட்டால்
”மழை என்றாலே
தண்ணீர் தேங்கத்தான் செய்யும்”
என்கிறீர்கள்.
இதைவிடவா ஒரு அருவருப்பை
கார்ட்டூனில் காட்ட முடியும்?

நிவாரணம் கேட்டு
நிர்வாணமாக ஓடினான் விவசாயி.
வெடித்த நிலம் பார்த்து
நெஞ்சு வெடித்துச் செத்தான்,
அதையும்,
சொந்தப் பிரச்சனைக்காக செத்தான்!
என்றீர்கள்,
இந்த ஆபாசத்தை வரைவதற்கு
எந்த கார்ட்டூனிஸ்ட்டால் முடியும்?

கார்ட்டூன் மேல் வந்த கோபம்
கந்துவட்டி மேல் வரவில்லையே!
கருகிய மழலையைக் கண்டவுடன்
‘யானே கள்வன் என்று!’
நெஞ்சு வெடித்து சாக
நீங்கள் என்ன சிலப்பதிகார பாண்டியரா!
ஊருக்கே தெரியும்
உங்கள் உத்தமம்!

ஆபாசமாக…
அருவருப்பாக…
ஆணவமாக…
ஆளத்தகுதியில்லாமல்…
வாழ்வதில் போகாத மானம்
வரைந்ததிலா போயிற்று!

இதைவிட எங்களை யார்
கேலிசெய்து விட முடியும்!

அடக்குமுறைக்கெதிராக
வாழா இருப்பதைவிட
பாலா-வாய் இருப்பதே மேல்!

-துரை. சண்முகம்