தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100 -வது இடத்தை பிடித்திருப்பதாக கடந்த அக்டோபர் மாத இறுதியில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவித்திருக்கிறது.
புதுடெல்லியில் நடந்த ”இந்தியாவின் வணிக சீர்திருத்தங்கள்” (India’s Business Reforms) என்ற நிகழ்வு ஒன்றில் இது குறித்து மோடி “நான் இங்கே கொண்டாடத்தக்க ஒரு நல்ல மனநிலையை உணர்கிறேன். எளிமையாக தொழில் நடத்துவதற்காக நாம் செய்த கடுமையான உழைப்பை உலக வங்கி பாராட்டியிருக்கிறது” எனப் பேசியுள்ளார்.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழல் மிகச் சிறப்பாக முன்னேறியிருக்கிறது என உலகவங்கி புகழாரம் சூட்டியிருப்பதற்கும், அதனை மோடி பெருமையாகச் சொல்லி புளகாங்கிதம் அடைவதற்குமான பொருள் என்ன? இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமா? அதனைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஒரு நாட்டில் ‘தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழலை’ அளவிடுவதற்கு உலகவங்கியும், ஏகாதிபத்தியங்களும் வைத்திருக்கும் அளவுகோல் என்ன?
முதலீடு செய்யும் கார்ப்பரேட்டுகளின் இலாபம் குறையாமல் பாதுகாப்பது; அவர்களது வரி ஏய்ப்புகளைக் கண்டும் காணாமல் விடுவது; பட்ஜெட்டில் பெரும் தொகையை கார்ப்பரேட் சலுகைகளுக்காக ஒதுக்குவது; தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக் கட்டுவது;
அரசு நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பது; சிறு தொழில்களை நசுக்குவது; அனைத்துத் துறையிலும் தனியார்மயத்தை நடைமுறைப்படுத்துவது; மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களை ஒழித்துக் கட்டுவது. இது தான் தொழில் தொடங்கக் கூடிய சூழலுக்கான உலகவங்கியின் அளவுகோல்.
சுருக்கமாகச் சொல்வது என்றால், கார்ப்பரேட்டுகள் கொள்ளை இலாபம் அடிக்கவும், மக்களை வகைதொகையின்றிச் சுரண்டவும் அவர்களுக்குச் சுலபமான வழிவகைகளை ஏற்பாடு செய்து தருவதுதான், உலகவங்கியின் அளவுகோல்.
சரி, இப்போது உலகவங்கியின் தரப்பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறியிருப்பதற்கு மோடி செய்த காரியம் என்ன ?. அவற்றில் முதன்மையானவை பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய இருபெரும் பொருளாதார நடவடிக்கைகள். இதன் மூலம் சிறுவணிகர்கள், சிறுதொழில் முனைவோர், முறைசாரா தொழிலாளர்கள் என அனைவரின் வாழ்வாதாரத்தையும் பிடுங்கி வீசிவிட்டார் மோடி.
சமையல் எரிவாயு மானிய ஒழிப்பு, ரேஷன் மானிய ஒழிப்பு போன்ற மக்கள் நலத்திட்ட ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு மானியங்களாகத் திருப்பிவிடுவதற்கான வேலைகளையும் செய்து முடித்துவிட்டார் மோடி. மேலும், கார்ப்பரேட்டுகள் இந்த மண்ணையும் சுற்றுச் சூழலையும், வனத்தையும், நீர்நிலைகளையும் எப்படி வேண்டுமானாலும் அழித்துக் கொள்ளும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை மாற்றிக் கொடுத்திருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளிவர்க்கம் போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகளை சட்டதிருத்தங்கள் மூலம் குழிதோண்டிப் புதைத்திருக்கிறார் மோடி. இப்படியாக கார்ப்பரேட்டுகள் நமது வளங்களையும், வரிப்பணத்தையும், உழைப்பையும் இன்னும் அதிகமாகச் சுரண்ட வழிவகை செய்து கொடுத்திருப்பதை நம்மிடமே பெருமையாகச் சொல்லும் ’தில்லு’, ”56 இன்ச் மார்பு”க்கு மட்டும் தான் இருக்க முடியும்.
மோடியின் இந்த நடவடிக்கைகளின் விலை என்ன தெரியுமா?

இந்தியாவின் பெரும் எண்ணிக்கையிலான முறைசாரா தொழிலாளர்கள், பணமதிப்பழிப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.-யின் காரணமாக வேலையிழந்து வருகின்றனர். மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்கள் வெட்டப்பட்டதன் காரணமாக விவசாயிகளும், வேலையிழந்த தொழிலாளர்களும், வணிகம் நொடித்துப் போன சிறு வணிகர்களும், பசிக் கொடுமையாலும், கந்துவட்டிக் கொடுமையாலும் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்த இலட்சணத்தில், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளின் தரப்பட்டியலில் முதல் முப்பது இடங்களுக்குள், இந்தியாவை முன்னேற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக ’நிதி ஆயோக்’-ன் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கான்ட் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பட்டியலில் நூறாம் இடத்தைப் பிடிப்பதற்கே, இந்தியா பலி கொடுத்த உயிர்களும், இழந்த வாழ்வாதாரங்களுமே தாங்கவியலாததாகி உள்ள சூழலில் முதல் முப்பது இடத்திற்குள் இந்தியாவைக் கொண்டு செல்ல நிதிஆயோக் வைத்துள்ள இலக்கிற்கு கொடுக்கப்படவிருக்கும் பலிகளைக் குறித்து எண்ணிப் பார்க்கையிலேயே நமக்கு ஈரக்குலை நடுங்குகிறது.
இந்தியாவின் இந்த ’முன்னேற்றத்திற்கு’, கார்ப்பரேட்டுகளின் மொழியில் புகழாரம் சூட்டுகிறார் உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டலினா ஜோர்ஜிவா. அவர் தனது அறிக்கையில் “இன்றைய வளர்ச்சிப்பாதையில் தொடர்ந்து செல்லுமானால் வரும் 2022 -ம் ஆண்டிற்குள் இந்தியா கடுமையான ஏழ்மையை ஒழித்துவிடும். 2047 -ம் ஆண்டிற்குள் உயர் நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரமாக உயர்ந்து விடும்” என்று கூறியுள்ளார்.
அந்த தரப்பட்டியலில் இந்தியா 30 இடம் முன்னேறிய பாதையின் இரத்தச்சுவடுகளைக் கொண்டு கிறிஸ்டலினாவின் புகழாரத்தை மொழிபெயர்த்தால் ”இதே வளர்ச்சிப் பாதையில் சென்றால் இந்தியாவில் 2022-க்குள் ஏழைகளை ஒட்டுமொத்தமாக கொன்றொழித்து, 2047-க்குள் நடுத்தரவர்க்கத்தின் கதையை முடித்துவிட முடியும்” என்றே பொருள் கொள்ளமுடியும்.
“இந்தியா வளர்கிறது, இந்தியா முன்னேறுகிறது, இந்தியா ஒளிர்கிறது” என்ற மாய்மாலங்களின் உண்மையான பொருள் ”கார்ப்பரேட்டுகள் வாழ்கிறார்கள்; அதற்காக இந்தியாவின் ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் அழிக்கப்படுகிறார்கள்; இந்தியாவின் இயற்கை வளங்களும் சுரண்டப்படுகின்றன” என்பதுதான். இந்த உண்மையை மக்களிடம் பரப்புவதுதான் நம்முன் இருக்கும் முதன்மையான கடமையாகும்.அதுவே அழிவை நோக்கிச் செல்லும் முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும்.
செய்தி ஆதாரம் :
- India leaps 30 places to 100th rank in World Bank’s ‘ease of doing business’ index
- PM Modi: Those who worked with World Bank previously raising doubts over India’s ranking