கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை! மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு!
கார்ட்டூனிஸ்ட் பாலாவை கடந்த நவம்பர் 05, 2017 அன்று கைது செய்தது நெல்லை போலீசு. கந்து வட்டி பிரச்சினைக்கு கலெக்டரிடம் மனு கொடுத்தும் தீர்வில்லை என இசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணமான அரசை அம்பலப்படுத்தி பாலா வரைந்த கார்ட்டூனிற்காக நெல்லைப் போலீசார் அவரை கைது செய்தனர்.

அவதூறு செய்தல் (இ.பி.கோ 501) , ஆபாசமாக சித்தரித்தல் (இ.பி.கோ 67) ஆகிய வழக்குப் பிரிவுகளின் கீழ் பாலா கைது செய்யப்பட்டார். மறுநாள் நெல்லை நீதிமன்றத்தில், இவ்வழக்கே சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதாடினார். அதனைத் தொடர்ந்து பாலா பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு நவம்பர் 15, 2017 அன்று விசாரணைக்கு வந்தது. பாலா கைது செய்யப்பட்டதும், அவர் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகளும் சட்ட விரோதமானவை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதங்களை முன் வைத்தார்.
குறிப்பாக இபிகோ 501 (அவதூறு பரப்புதல்) பிரிவின் படி, நீதிமன்றத்தில் மட்டுமே தனிநபர் வழக்குத் தொடுக்க முடியும். அந்தப் பிரிவின் படி கைது செய்வதற்கான உரிமை போலீசுக்கு இல்லை. அவ்வாறு கைது செய்திருப்பது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 199 -க்கு விரோதமானது. பாலா விவகாரத்தில் நெல்லை போலீசும், கலெக்டரும் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாலாவைக் கைது செய்திருக்கின்றனர்.

அடுத்ததாக ஆபாசமாகச் சித்தரித்தல் என்ற வகையில் தகவல் தொழில்நுட்பவியல் குற்றங்கள் (இபிகோ 67) படி இவ்வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது. கருத்துச் சுதந்திரத்தின் கீழ் ஒரு இந்தியக் குடிமகனுக்கு தனது கருத்துக்களை கலையில் வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என்பதையும், ஆபாசம் என்பது பார்ப்பவர்களைப் பொறுத்தது என்பதையும் ஏற்கனவே ஓவியர் எம்.எஃப். ஹுசைன் மீதான வழக்கினில் டில்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டி வாஞ்சிநாதன் வாதாடினார்.
வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்வதற்கு போலீசுக்கு தடையுத்தரவு பிறப்பித்தார். மேலும் போலீசின் முதற் கட்ட தகவல் அறிக்கைக்கும் நீதிமன்றம் தடை பிறப்பித்தது. இதனால் முகத்தில் பூசப்பட்ட கரியுடன் வெறுங்கையோடு திரும்பியது போலீசு.
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு