privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாதிரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

-

ரக்கமற்ற வாழ்வில் கரை சேர வழியின்றி நீந்திக் கொண்டிருக்கும் எளிய மக்களைக் கூட, ஒரு மேட்டுக்குடி குழந்தையின் மூலம் இரங்க வைத்தார் “அஞ்சலி” திரைப்பட இயக்குநர் மணிரத்தினம். புதிய கலாச்சாரத்தில் அந்தப் படம் குறித்த விமரிசனத்தை படித்த போது, தமிழ் சினிமாவில் இதற்கு நேரெதிரான கதைக்கருவில் ஒரு படம் வருமென்று கற்பனை கூட செய்திருக்க முடியாது.

அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். வாழ்த்துக்கள் கோபி! நிச்சயம் “இது வேற தமிழ்நாடு”!

இரவுப் படுக்கையில் கதை கேட்கும் குழந்தையிடம் போட்டி போட்டுக் கொண்டு அம்மாவும், அப்பாவும் கதை சொல்வதில்லை. முழு உலகின் விசித்திரங்களை கற்கும் வாயிலைத் திறப்பதற்கு கதை ஒரு திறவு கோல் என்றாலும், பெற்றோருக்கு அந்தப் பொறுமையும் அருமையும் ஆற்றலும் இருப்பதில்லை.

ஆனால் அதே பெற்றோருக்கு ஒரு மழலையின் மூலம் வாழ்க்கை குறித்த கதை சொல்லும் போது அனேகமாக நிபந்தனைகள் ஏதுமின்றி ஒன்றிவிடுகிறார்கள். கதை என்று அல்ல, களத்திலும் இந்த விதி அதற்குரிய விளைவுகளை தோற்றுவிக்கவே செய்கிறது.

நெல்லை தீக்குளிப்பில் கையில் தின்பண்டத்தோடு தீயில் வேகும் அந்தக் குழந்தையின் மங்கலான உருவம் தமிழ் சமூகத்தின் ஆத்திரத்தையும், கையறு நிலையையும் தெளிவாகக் கிளப்பி விட்டது.

மத்திய தரைக்கடலில் குப்புற விழுந்து கிடக்கும் அய்லான் குர்தி எனும் ஒரு மழலையின் சடலம் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த வரிசையில் ஆழ்துளைக் குழியில் விழுந்து தவிக்கும் தன்ஷிகா மூலம் பார்ப்போரை பதற வைப்பதில் இயக்குநர் கோபி நயினார் வெற்றி பெற்றிருக்கிறார்.

அந்தப் பதற்றத்தை அதற்குரிய சமூக பின்னணி, இயக்கத்தோடு காட்டியிருப்பதே கோபியின் தனித்துவம். இதை வெறும் சென்டிமெண்டு சரடுகளால் பின்னியிருந்தால் அது மணிரத்தினத்தின் கிராமப்புற அஞ்சலி படமாக சரிந்திருக்கும்.

அரசு, அதிகார வர்க்கம், மக்கள் குறித்து கோபிக்கு ஒரு தெளிவான பார்வை இருக்கிறது. தமிழ் சினிமாவின் புதிய இயக்குநர்கள் பலரிடம் கதையில் நின்று கொண்டு பேசும் அரசியல் புரிதல் மட்டுமே இருப்பதால் கதைக்கு வெளியே பேசும் போது அந்த அரசியல் தெளிவின்றி திகைக்கிறது. கோபியோ இந்தப் படம் குறித்து வெளியே நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எளிமையாகவும், உறுதியாகவும், பெருமளவு சரியாகவும் பதிலளிக்கிறார். இப்படி அரசியலும், கலையும் சங்கமிக்கும் கலைஞர்கள் அபூர்வம்.

இயக்குநர் கோபி நயினார்.

ஏழைகளுக்கு இந்த அரசமைப்பில் இடமில்லை என்பது ஆரம்ப காட்சியான ராக்கெட்  பறப்பதிலிருந்து, கடைசி காட்சியான நயன்தாரா பதவி விலகும் காட்சி வரை கதையிலும், காட்சி அமைப்பிலும், குறியீடுகளிலும், உரையாடல்களிலும் நச்சென்றும், நளினமாகவும் வருகின்றது.

ராக்கெட் பறப்பதற்கு மகிழும் ஏழைகள், காசு இல்லாமல் காது டாக்டரை தவிர்த்து விட்டு மருந்துக்கடைக்கு போவது, 650 ரூபாய் கேக்குக்கு பதில் 250 ரூபாய் கேக்கை தெரிவு செய்வது, கபடி – நீச்சல் திறமைகளின் யதார்த்த நிலை, குடிநீரின் ஏற்றத்தாழ்வுகள், சோம்பிக் கிடக்கும் அதிகார வர்க்கம், கயிற்றைத் தவிர வேறு ஏதுமின்றி மீட்புப் பணிக்கு வரும் படைகள், சோகத்தை பணத்தால் பஞ்சாயத்து பண்ண விரும்பும் சுயநல அரசியல்வாதிகள், கலெக்டரை விசாரிக்கும் மேலதிகாரியின் விசாரணைக் காட்சிகள்…….

இந்தக் கதையை பலரிடம் சொன்னாலும் யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை என்று கோபி கூறியிருக்கிறார். இது ஒரு முழு முற்றான சோகம் மற்றும் ஆவணப்படக் கதையாக அந்த தயாரிப்பாளர்களுக்கு தோன்றியிருப்பதில் அதிசயமில்லை. சினிமாவின் மசாலா மட்டுமல்ல, கதை என்ற வஸ்துவில் இடம் பெறக்கூடிய வேகம், முடிச்சு, நகைச்சுவை, துள்ள வைக்கும் பாடல், திருப்பம் போன்றவை கூட இல்லையென அவர்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால் இந்த ஐயம் நயன்தாராவுக்கு ஏன் தோன்றவில்லை என்பது மற்றொரு அதிசயம். வாழ்த்துக்கள் நயன்தாரா! நம்மைப் பொறுத்த வரை இந்தப்படத்தில் நயன்தாரா சிறப்பாக நடித்திருப்பதாகத் தோன்றவில்லை. இந்தப் படத்தில் அவர் நடிக்க முன் வந்ததே சிறப்பு! எனினும் இந்த மாதிரி படங்களில் நடிக்க கூடாது என திரைத்துறை மேட்டுக்குடி வர்க்கமும், பாரதிய ஜனதாவும் நயன்தாராவை வற்புறுத்தப் போவது உறுதி.

இந்தப் படம் சமூகக் கருத்துக்களை பேசினாலும் ஒரு பிரச்சாரப் படம் போல இல்லாமல் கலை நேர்த்தியோடு இருப்பதாக கூறுகிறார் நியூஸ் 18 தமிழ் குணசேகரன். பிரச்சாரமற்ற கலை ஏதுமில்லை என பலமுறை எழுதினாலும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

உப்பரிகையில் நின்று கொண்டு மேட்டுக்குடி வாழ்வின் மனிதாபிமானப் பார்வை வழி, தூரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இலட்சிய மாந்தர்களை தேடிக் ‘கண்டுபிடித்து’, அவர்களுக்கு ஒளிவட்டம் போட்டுவிட்டு பிறகு அருகாமையில் இருக்கும் எளிய மாந்தர்களை சராசரியாக இறக்கிவிட்டு தூற்றச் சொல்லும் ஜெயமோகனின் அறம் வரிசைக் கதைகளோ, தூரத்தில் இருக்கும் மனிதர்களின் எளிய வாழ்க்கையை அருகாமையில் உணர்த்தி எவரையும் எளிய மக்களின் வாழ்வியலையோ அழகியலையோ ரசிக்க வைக்கும் கோபியின் அறம் திரைப்படமோ அனைத்தும் பிரச்சாரங்கள்தான்.

ஏற்றத்தாழ்வுகளால் பிரிந்திருக்கும் இச்சமூக்தில் நாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பதன்றி பிரச்சாரமின்றி ஒரு பக்கமோ, இலக்கியமோ இல்லை.

இந்தப் படத்தில் பிரச்சாரம் இல்லையென கூறினால் இயக்குநர் கோபியே சிரிப்பார். ஒரு கதையோ கலையோ சொல்ல வந்த பொருளை பேராற்றலுடன் கூறுவதே அதன் வெற்றியே அன்றி மேற்கண்ட பிரச்சாரம் இருக்கிறதா என்ற தவறான ஆய்வு அல்ல. சமூக அக்கறை கொண்ட கதைகளை வெற்றி பெற வைக்க தேவை ஆழமான அரசியல், தத்துவ, கலைப் பார்வையே தவிர பிரச்சாரம் தேவையல்ல என்ற நாசுக்கு அல்ல.

அனேகமாக வெறும் கலையின் பால் நின்று கொண்டு பிரச்சார வாடை அடிக்கிறது என்று தமிழின் சிறுபத்திரிக்கை மரபு செய்த பிரச்சாரத்திற்கு குணசேகரன் போன்றோர் பலியாகக் கூடாது.

நியூஸ் 18 விவாதத்தில் கலந்து கொண்ட இயக்குநர் வசந்தபாலன் இந்தப்படம் திருவள்ளூர் மாவட்ட மக்களின் வாழ்வியல், கலாச்சாரத்தை காட்டுவதாகவும், இத்தகைய எண்ணிறந்த தமிழ் வாழ்க்கையை காட்டும் படங்கள் வரவேண்டும் என அங்காடித் தெருவை சான்று கூறினார். இல்லை, இப்படத்திற்கு சப்டைட்டில் போட்டு உலகமெங்கும் போட்டுக் காட்டினால் கூட சிலியில் இருக்கும் மக்களோ, இல்லை ஈரானில் இருக்கும் மாணவர்களோ அனைவரும் திரைப்படத்தோடு ஒன்ற முடியும். அதாவது தங்களது வாழ்வை திரையில் காணமுடியும்.

இந்தப் படம் உணர்த்தும் ஏழ்மை X அதிகார வர்க்கம் – மேட்டுக்குடி எனும் முரண்பாடு உலகெங்கும் எளிதில் ஒன்றக் கூடிய கரு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பரவி நிற்கும் யதார்த்தமும் கூட.

தன்ஷிகா எனும் அந்தச் சிறுமி கறுப்பாகவோ, சாமுத்ரிகா இலட்சணங்கள் இல்லாதவாளகவோ அழகுப் போட்டிகளை ஆராதிக்கும் பியூட்டி பார்லர் கலைஞர்கள் மதிப்பிடக் கூடும். தன்ஷிகா எனும் குழந்தையை மணிரத்தினம் வகைப்படங்களில் வரும் ஹார்லிக்ஸ், அமுல் பேபி குழந்தைகளுக்கு நேரெதிராக படைத்திருப்பதை வெறுமனே அடையாள அரசியலில் காலம் போக்கும் சில ஓய்வு நேர அரசியல் போராளிகள் பாராட்டியிருக்க கூடும். இரண்டுமே தவறு.

ஆழ்துளையின் கும்மிருட்டில் ஒடுங்கிக் கொண்டு, ஜட்டியோடு சிறுநீர் கழித்தால் அம்மா திட்டும் என்று சொல்வதாகட்டும், அப்பா பயமாயிருக்கு, சீக்கிரம் கூட்டிட்டு போ என்று சொல்வதாகட்டும், இத்தகைய காட்சிகள் மூலம் தன்ஷிகா பார்வையாளர்களை கொள்ளை கொள்கிறாள்.

வேறு வகையில் சொன்னால் ஏழைகளின் வேகமான வாழ்க்கை ஓட்டமும், சோகமோ, காதலோ, வறுமையோ அவற்றில் பல்வேறு உணர்ச்சிகள், உடல் மொழிகள், வழக்குகள் ஏராளம் உண்டு. அவற்றை இன்னும் சினிமா கைப்பற்றவில்லை.  சத்யம் சினிமா வளாகத்தில் வரும் மேன்மக்களின் உடல்மொழிகள், பேசும் பாணிகள் அனைத்தையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் அரசுப் பள்ளி ஒன்றின் மாணவர்களிடம் நீங்கள் நூற்றுக்கணக்கான உடல்மொழிகள், வசனங்கள், சேட்டைகளை காணலாம்.

காலம் கடந்தும் எம்.ஆர்.ராதா இன்றும் ஒரு ஹீரோ!

அதனால்தான் சார்லி சாப்ளின், எம்.ஆர்.ராதா போன்றோர் காலம் கடந்தும் இன்றும் ஒரு ஹீரோவாக அறியப்படுகின்றனர். ரஜினியையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரது கண்டக்டர் வாழ்வின் வேகமான உடல் மொழியே அவரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகின்றன. பாட்சா படத்தில் நாற்காலியைத் திருப்பிக் கொண்டு அவர் ஏய்… ஏய்… என்று வில்லனை விசாரிக்கும் “ஸ்டைலை” உலக நாயகனால் ஒரு போதும் செய்ய முடியாது. ஜிகர்தண்டாவில் வரும் அந்த நடிப்பு மாஸ்டரைக் கொண்டு நூறு நாட்கள் பயிற்சி கொடுத்தாலும் கமலால் அப்படி நடிக்கவே முடியாது. காரணம் அவரது மேட்டுக்குடி தந்தையின் வழக்கறிஞர் குடும்பப் பின்னணி!

சிறுமி தன்ஷிகா, அவளது அம்மா, அப்பா, அண்ணன், காட்டூர், காட்டூர் மக்கள் அனைவரும் அச்சு அசலாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் கலெக்டர் என்று வரும் போது நயன்தாரா எனும் வெற்றியடைந்த ஒரு ‘அழகான’ நடிகை தேவைப்படுகிறது. ஒரு அறிமுக இயக்குநருக்கு இத்தகைய முகம் அதுவும் மசாலா அல்லாத ஒரு யதார்த்த பாணி படத்திற்கு தேவை என்றே வைப்போம். அது பிரச்சினை அல்ல.

படம் முழுக்க நயன்தாரா அதிகார வர்க்கத்தின் அலட்சியம், மெத்தனம், மக்கள் விரோத தன்மை அனைத்தையும் பார்க்கிறார், பேசுகிறார் என்றாலும் அவர் ஆரம்பத்திலிருந்தே ஒரு நல்ல கலெக்டர் என்பதாக சித்தரிக்கப்படுகிறார். பாம்புகளில் நல்ல பாம்பு, கெட்ட பாம்பு இல்லை என்பது போல கலெக்டர்களிலும் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடுக்கு அடிப்படையே இல்லை. காரணம் அரசியல் அமைப்புச் சட்டப்படி அவர் அரசு, அரசாங்கங்களின் முடிவுகளை அமல்படுத்தும் நிர்வாகியாகவும், அதற்கான அதிகாரங்களையுமே கொண்டிருக்கிறார்.

ஒரு கலெக்டர் ஊழல் செய்ய மாட்டார், ஏதோ சில ஏழைகளுக்கு சான்றிதழ் வாங்கித் தருவார், சில பல புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பார் என்பதைத் தாண்டி அவர் அரசின் கொள்கைகளையே அமல்படுத்துகிறார். சான்றாக ரேசன் கடைகளில் இனி பருப்பு வகைகள் இல்லை என அரசு உத்திரவிடும் போது, காட்டூர் மக்கள், அம்மா எங்க பிள்ளைகளுக்கு பருப்பு போடுங்கமா என்று கேட்டால் நயன்தாரா தனது ஊதியத்திலிருந்து சில பல கிலோக்களை வாங்கித் தரலாமே அன்றி அதிகாரியாக உத்தரவு போட முடியாது.

எனினும் நயன்தாரா இறுதியில் மக்களுக்கு சேவை செய்ய வழியற்ற இந்த அமைப்பில் இருந்து ராஜினாமா செய்கிறார். ஆனால் அவரது பாத்திரப் படைப்பு ஆரம்பத்தில் இருந்தே இந்த முடிவை நோக்கி பயணிப்பதால் கலெக்டர் எனும் பாத்திரத்தின் சட்டப்பூர்வ பரிமாணங்கள் இக்கதையில் பதிவு செய்யப்படவில்லை. அல்லது ஐ.ஏ.எஸ். பயிற்சி முடித்த ஒரு கலெக்டர் கறாரான வகையில் அரசு கொள்கைகளை அமல்படுத்தும் போக்கில் பிறகு அவர் இந்த அமைப்பே மக்களுக்கு பணியாற்றும் வகையில் இல்லை என்று பட்டுத் தெளிவதோ இல்லை சமரசப்படுத்திக் கொள்வதோ வந்தால் மக்கள் மாவட்ட ஆட்சியரின் இலக்கணத்தை புரிந்து கொள்வார்கள்.

இந்த அரசு செயல்படவில்லை, மக்களுக்கு எதிரானது என்று அதிகாரி வட்டத்தில் ஒரு ஸ்டேட்மெண்ட் தேவைப்பட்டதால்தான் கலெக்டர் பாத்திரத்தை வைத்தேன் என்று இயக்குநர் கூறினாலும், அந்த ஸ்டேட்மெண்ட் நடுநிலையாகவும், யதார்த்தமாகவும் வரவில்லை.

தகழியின் “ஏணிப்படிகள்” நாவலில் நல்லவனாக சேரும் அரசு குமாஸ்தா இறுதியில் தலைமைச் செயலளாராக மாறும் போது பெரும் காரியவாதியாக உருவெடுத்திருப்பான். உண்மையில் அரசு ஊழியர்களின் பரிணாம வளர்ச்சி இப்படித்தான இருக்கின்றது. ஒரு நேர்மையான கலெக்டர் நேரடியாக காசு வாங்க வில்லை என்றாலும் வரும் அரசு அதிகாரிகள் – அமைச்சரின் உண்டு விடுதி செலவுகளுக்காக துறைசார்ந்து மாவட்ட அதிகாரிகள் வசூலிப்பதையோ இல்லை மந்திரி வீட்டு மகளின் திருமணத்திற்கு அளிக்கப்படும் மாவட்ட மொய் தொகையையோ நிறுத்த முடியாது. சகாயமே ஆனாலும் கூடங்குளத்தில் அணு உலையை ஆரம்பிக்க இடிந்த கரை மக்களை ஒடுக்கவே செய்ய வேண்டும்.

அதே போன்று ஊடக விவாதம் படத்தின் சோகக் காட்சிகளிலிருந்து அவ்வப்போது மக்களை விடுவித்து கருத்துக்களை அசை போடும் நல்ல உத்திதான். என்றாலும் அங்கேயும் கலெக்டர் போன்று அனைவரும் மக்கள் சார்பில் நின்று அதுவும் கொஞ்சம் செயற்கையாக விவாதிக்கின்றனர். இதுதான் கொஞ்சம் ‘பிரச்சார’ தொனியில் இருக்கிறது என்பது அண்ணன் குணசேகரனுக்கு தெரியவில்லை.

உண்மையில் இந்த ஊடக விவாதம் பாண்டே தலைமையில், பானு கோம்ஸ், டாக்டர் சுமந்த் சி ராமன், ராமசுப்ரமணியன் போன்ற பாஜக சமூக ஆர்வலர்களோடு நடந்திருந்தால் அதுவும் மக்களுக்கு சார்பாக பேசும் பாணியில் நைச்சியமாக அதிகார வர்க்கத்தை ஆதரித்தும், மக்களின் அறியாமையை விமர்சித்துப் பேசுவதாக இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். கீழே களத்தில் இருக்கும் பத்திரிகையாளர்கள், தலைமையில் இருக்கும் எடிட்டோரியில் கொள்கையோடு முரண்படாமல் கள நிலவரத்தை சொல்லத் திணறும் பட்சத்தில் அந்த யதார்த்தம் படத்திற்கு வலு சேர்த்திருக்கும்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இப்படிச் சொல்லலாம். இந்தப் படத்தில் அதிகார வர்க்கம், அரசு நிர்வாகம், ஊடக முதலாளிகளுக்கான ‘நியாயம்’ பொருத்தமாக வைக்கப்பட்டிருந்தால், நயன்தாராவின் நல்ல கலெக்டர் பரிமாணம் இன்னும் பல முரண்பாடுகளோடு வெளியே வந்திருக்கும்.

இதனால் இந்தப் படம் தனது பேசுபொருளில் பலவீனமாய் இருப்பதாக பொருளில்லை. அதே நேரம் பலமாக இருப்பதாகவும் தோன்றவில்லை. அடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசை செயல்படவைக்க வேண்டும் என்பதைத்தாண்டி ஒரு சிறுவனை குழியில் இறக்குவதை ஒரு  கையறு நிலை என்று குறிப்பிடலாமே அன்றி அதை மக்கள் தமது அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளாகாது.

ஏனெனில் அதே சிறுமிக்கு வெறிநாய்க் கடியோ இல்லை, பாம்புக் கடியோ நடந்து ஒரு அரசு மருத்துவமனையில் கதை நடப்பதாக வைப்போம். மருத்துவமனையில் மருந்தில்லை, பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை என்றால் மக்கள், கலெக்டர் தலைமையில் நாட்டு வைத்தியம் செய்வது சாத்தியமில்லையே?

கல்வி, சுகாதாரம், வேலை, விலைவாசி உயர்வு அனைத்திலும் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் கோலொச்சும் நாட்களில் நாம் அரசை தட்டிக் கேட்டால்தான் மேற்கண்ட மூன்று மயங்களில் இருந்து நாட்டை மீட்கும் போராட்டத்தை கண்டுபிடித்துக் கட்டியமைக்க முடியும்.

இல்லையேல் நாமே சாலை போடுவது, பள்ளி நடத்துவது, மருத்துவமனை நடத்துவது என்று என்.ஜி.வோ. டைப்பில் அப்துல் கலாம், சகாயம் பாணியில் அரசியலற்ற முறையில் மக்களை காயடிப்பதாக இருக்கும். இந்தப் படம் அப்படி சொல்லவில்லை என்றாலும், இயக்குநர் கோபிக்கும் இந்த அரசியல் தெரியுமென்றாலும் படத்தின் கதையில் அது வலுவாக வரவில்லை என்பதே நமது தோழமையான விமர்சனம். இந்தக் குறைபாடுகளோடு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியாதா எனும் பரபரப்பும் மனிதாபிமானமும் சேர்ந்து பார்வையாளர்களை கட்டிப் போடவைக்கிறது. அந்த பரபரப்பு அரசு குறித்த விமர்சனங்களில் எளிமைப்படுத்தப்பட்ட நல்லவன் – கெட்டவனாக மட்டுமே விஞ்சுகிறது.

இருப்பினும் ஒரு சிறுகதை போல ஒரு கிராமத்தின் பார்வையில் இந்த அரசு அமைப்பை இப்படம் சிறப்பாகவே அம்பலப்படுத்துகிறது. இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்!


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. ” ….கதையிலும், காட்சி அமைப்பிலும், குறியீடுகளிலும், உரையாடல்களிலும் நச்சென்றும், நளினமாகவும் வருகின்றது.” என எழுதியிருக்கும் நீங்கள், நியூஸ் 18 குணசேகரன், இப்படத்தில் பிரச்சார நெடி அடிக்கவில்லை என விவாதத்தில் கூறியதை வைத்துக்கொண்டு வகுப்பு எடுத்திருக்கிறீர்கள். நளினம் குறித்து நீங்கள் பேசலாம், குணசேகரன் பேசக்கூடாது என்பது என்ன வகை நியாயமோ? மேலும், ஒரு பத்தியில் குணசேகரனை, அண்ணன் குணசேகரன் என நையாண்டி செய்திருக்கிறீர்கள். திரு.குணசேகரன் நியூஸ் 18-இல் நடத்திவரும் விவாதங்களைத் தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில் கூறுகிறேன், உங்களது நையாண்டி தரம் தாழ்ந்த ஒன்று.

    • நண்பரே, நீங்களும் வகுப்புதான் எடுத்திருக்கிறீர்கள் என்றாலும் அது பிரச்சினை இல்லை. இங்கே குணசேகரன் கேலிசெய்யப்படவில்லை!
      // ஒரு கதையோ கலையோ சொல்ல வந்த பொருளை பேராற்றலுடன் கூறுவதே அதன் வெற்றியே அன்றி மேற்கண்ட பிரச்சாரம் இருக்கிறதா என்ற தவறான ஆய்வு அல்ல. சமூக அக்கறை கொண்ட கதைகளை வெற்றி பெற வைக்க தேவை ஆழமான அரசியல், தத்துவ, கலைப் பார்வையே தவிர பிரச்சாரம் தேவையல்ல என்ற நாசுக்கு அல்ல.

      அனேகமாக வெறும் கலையின் பால் நின்று கொண்டு பிரச்சார வாடை அடிக்கிறது என்று தமிழின் சிறுபத்திரிக்கை மரபு செய்த பிரச்சாரத்திற்கு குணசேகரன் போன்றோர் பலியாகக் கூடாது.//

      அண்ணன் குணசேகரன் என்பது வழக்கில் நெருக்கமானவர்களையும் குறிக்க பயன்படுத்தலாம். ஆகவே பதற்றம் ஏன்? இங்கே பிரச்சாரம் அன்றி ஏதுமில்லை என்பதே விசயம். அதை நேர்மறையிலும், எதிர்மறையிலும் கட்டுரை குறிப்பிடுகிறது. அவ்வளவே!

  2. படம் பார்க்கவில்லை.”நல்ல”கலெக்ட்டரை வைத்து இற்றுப்போன இந்த கட்டமைப்பை துக்கிநிறுத்தும் படமோ என்றெண்ணி போகவில்லை.சிறப்பான இந்த விமர்சனம் வழி படம் பற்றி புர்ந்து கொள்ள முடிந்தது.நன்றி.இயக்குனரை பாராட்டும் வழியில் அவர் உணர்வில் பங்குபெறும் விதமாக அறம் காண விழைகிறேன்.சினிமா தயாரிப்பாளர்கள் கோபிகள் பக்கம் நின்றால் “அறம்”மட்டுமல்ல அசோக்குமார்களும் காக்கப்படுவார்கள்.அன்புச்செழிய “சனியன்கள்”வீழ்த்தப்படுவார்கள்.

  3. //ஜிகர்தண்டாவில் வரும் அந்த நடிப்பு மாஸ்டரைக் கொண்டு நூறு நாட்கள் பயிற்சி கொடுத்தாலும் கமலால் அப்படி நடிக்கவே முடியாது. காரணம் அவரது மேட்டுக்குடி தந்தையின் வழக்கறிஞர் குடும்பப் பின்னணி!//
    அப்பப்பா!! இப்படி ஒரு அபத்தமான, மட்டமான கருத்தை வினவு தளத்திலிருந்து நான் எதிர் பார்க்க வே யில் லை..!! அப்படியென்றால், மிகச்சாதாரணப் பின்னணி யிலிருந்து வரும் ஒரு சிறந்த கலைஞன் அவன் ஆயுசுக்கும் மேல்தட்டு மக்களின் வாழ்வை பிரதிபலிக்க முடியாது, அவன் திரையில் அழுக்கானவனாகவே காட்டப்படும் போது தான் இயல்பாக இருக்குமா??? என்ன ஒரு குதர்க்கமான கருத்து இது??! நடிப்பு என்பது சகலத்தையும் மீறியது! சகலத்தையும் உள்வாங்கியது!! குணா , மகாநதி, ஒன்பது ரூபாய் நோட்டெல்லாம் நீங்கள் பார்த்ததில்லையா??? சாதிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சாடுங்கள்!! ஆனால், உயர் சாதி , மேல்தட்டு என உங்களால் சொல்லப்படுகிற வகை ஜனங்களை முட்டாளாக சித்தரிக்க வேண்டாம்!!

    • நண்பரே, மேட்டுக்குடி வாழ்க்கையில் பேச்சு பாங்கும், உடல் மொழிகளும் மிகவும் குறைவு என்பதால் அதை யாரும் கற்கலாம் – அடித்தட்டிலிருந்து வரும் கலைஞன் கூட. ஆனால் உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் கற்பதற்கு எண்ணிறந்த விசயங்கள் இருக்கின்றன. அதைத்தான் கட்டுரை சுட்டுகிறது. இப்படி யோசித்துப் பாருங்களேன்! திரு கமல்ஹாசன் சென்னை மொழியில் பேசி நடித்த படங்களையும், மெட்ராஸ், அறம், அட்டக்கத்தி (இன்னும் சில படங்களும் இருக்கலாம்) படங்களில் வரும் சென்னை மொழிகளையும் ஒப்பிட்டு பாருங்களேன். கமல்ஹாசன் அவர்கள் சித்திரிக்கும் சென்னை மொழியோ, நடிப்போ நிறைய செயற்கையாகத் தோன்றவில்லையா? நீங்கள் குறிப்பிடும் குணா, மகாநதி இன்னும் பல படங்களில் கூட திரு கமல் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு கூட நடுத்தர வர்க்கம் அல்லது தீவிர மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் அதீத சித்தரிப்பு அவ்வளவே! திரு கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்பதற்கும் அவரால் ஒரு பருத்திவீரன் போல விருமாண்டியில் நடிக்க முடியாது என்பதையும் சொல்வது குற்றமா?

      • திரு கமல்ஹாசன் சென்னை மொழியில் பேசி நடித்த படங்களையும், மெட்ராஸ், அறம், அட்டக்கத்தி (இன்னும் சில படங்களும் இருக்கலாம்) படங்களில் வரும் சென்னை மொழிகளையும் ஒப்பிட்டு பாருங்களேன். கமல்ஹாசன் அவர்கள் சித்திரிக்கும் சென்னை மொழியோ, நடிப்போ நிறைய செயற்கையாகத் தோன்றவில்லையா? /// வினவு அவர்களே கமல் நடித்த படங்களில் வசனகர்த்தவாக இருக்கிற கிரேஸி மோகனின் வாழ்வியல் பிண்ணனி பிழைகளுக்கு காரணம் என நினைக்கிறேன் கமல் அல்ல. பாரதிராசாவின் கிராமிய பட வசனங்களில் வருகிற வட்டார வழக்கு மொழிகளில் கமல் ஒன்றி போயிருப்பார். கிரேஸி மோகனின் டயாக்குகள் பழைய படங்களில் சோ மெட்ராஸ் பாஷை நடித்த அதே போலித்தனம் இருக்கும்.

      • திரு கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்பதற்கும் அவரால் ஒரு பருத்திவீரன் போல விருமாண்டியில் நடிக்க முடியாது என்பதையும் சொல்வது குற்றமா?//// பரமக்குடி ,பார்த்திபனூர், நரிக்குடி, வீரசோழன் கடந்து ஆத்துக்குள் எறங்கி போன பருத்தியூர் என்கிற குக்கிராமம் அந்த ஊரை கதைக் களமாக கொண்ட படம் பருத்திவீரன். அமீர் அதனருகிலே அந்த படம் வரும்வரை வாழ்ந்தவர் என்பதால் அப்படியே அச்சு அசலாக வந்து தொலஞ்சுருச்சு ஆனால் கமல் அப்படி இல்லீங்களே பயபுள்ள எப்பவோ சென்னைக்கு பொழைக்கப் போயிருச்சு அப்ப செயற்கையாக தானே வந்து தொலையும். அதுவும் இராமநாதபுர கதையை எடுக்க தேனியில் சூட் பன்றவர் அவர்.

  4. What about the pseudo-scientific bullshit about polio vaccine? The director wants modern equipment to rescue children while he doesn’t want vaccines to protect children? These type pf people are threat to society.

    • காயடித்தல் எனபது ஒரு உயிரினத்தின் (ஆண்) விரைகளை நீக்குவதாம். விரைகள நீக்கினால் அதன் இனபெருக்க திறனோடு எதிர்த்து போராடும் மற்றும் மூர்க்க குணம் போய் என்ன சொன்னாலும் தலையாடும் சோத்து மாடக்குவதாம், வினவில் பயன்படுத்த படுவதன் அர்த்தம் யாதெனில், மக்களுக்கு உண்மையை மறைத்து அவர்களின் எதிர்க்கும் மனநிலையை மழுங்கடிப்பதே ‘காயடித்தல்’ எனப்படுகிறதாம்.

      • மாட்டுக்கு ஓகே… ஆனால் மனிதனுக்கு அந்த வாதத்தை பயன்படுத்தும் போது அதற்கு பெயர் மூர்க்க குணம் அல்ல சின்னா போர்குணம்….! //மூர்க்க குணம் போய்// அதனை தான் மனிதனை பொறுத்தவரையில் காயடித்தல் என்பது !

        • மாட்டுக்கு தானே மூர்க்ககுணம் (Aggression) என்றேன்..மக்களுக்கு தான்’எதிர்க்கும் மனநிலை'(Resisting mindset) என தெளிவாக சொல்லியுள்ளேனே கவனிக்கவில்லையா? இல்ல வித்தியாசம் தெரியவிலையா? இரு வசனத்தை ஒழுங்காக புரிந்து கொள்ளமுடியவில்லை , எந்த சட்டக்கல்லூரியில் உங்களுக்கு சீட்டு குடுத்தாங்க..

  5. அண்ணன் குணசேகரன் என்பது வழக்கில் நெருக்கமானவர்களையும் குறிக்க பயன்படுத்தலாம்.- குப்பற விழுந்தாலும் வினவின் மீசையில் மண் ஒட்டவில்லைதான்.

  6. வாழ்த்துகள் வினவு…! நேர்திசையில் பயணிக்க தொடங்கியுள்ளன வினவின் திரைவிமர்சனங்கள்! வினவுக்கு என் மனமார்ந்த நன்றி!

  7. வல்லவனில்
    பில்லாவில் நடித்தநயந்தாரா இப்படத்தில்நடிக்க தகுதியானவரா ?

    • இந்த கதைக்கு , இந்த திரைகதைக்கு அவர் நடித்துள்ளார் என்பது மட்டுமே விவாதபொருளாக இருக்கமுடியும்!

    • உண்மையிலேயே சமூகப்பார்வை மாற்றம் ஏற்பட்டு நடித்தாரோ தெரியவில்லை ஆனால் நிச்சயம் ஸ்கிரிப்டை கேட்டவுடன் நிச்சயம் ஆளும் வர்க்கத்துக்கு பிடிக்கும் படமாக இருக்காது என்பதும் கமர்ஷியல் வெற்றி உறுத்யில்லை என்பதும் புரியாதளவு அம்மாஞ்சி அல்ல அவர்.

      முன்னமே ஆபாசமாக நடித்திருந்தால் என்ன? சிறுவயதிலிருந்தே சமூக அறிவில்லாமல் சினிமா வெற்றி ஒன்றே கருத்தாக வளர்ந்து சிம்பு பிரபுதேவா போன்ற சந்தர்ப்ப வாதிகளால் பயன்படுத்த பட்டு தற்போது கொஞ்சம் சமூகம் பக்கம் பார்வையை திருப்பியிருக்கலாம், ஏனெனில் எல்லா பயன்படுத்தப்பட்ட நடிகைகளும் சில்க்கை போல் தன்னை மாய்க்கவோ இல்ல சாமியார் பக்கம் திரும்பவோ போவதில்லை, சன்னி லியோனே கூட மக்கள் பிரச்சினையை உண்மையாகவே பேசும் படத்தில் நடித்தால் அதை வரவேற்கவே வேண்டும், அந்த படம் மூலம் தான் தீர்வு வரவேண்டுமென்று நம்பும் கோமாளித்தனம் அல்ல, கணவன் இறந்தவுடனேயே பெண்ணையும் கட்டை ஏற சொல்வது போல் ‘மாற்று சமூக பார்வைகள்’ இன்றி ஆபாச சினிமா நடித்த நடிகைகளை அப்படியே ‘இவள் சசிறுக்கி தானே’ என ஒரேயடியாக ஒதுக்கி வைக்கும் குரூரத்தனம் வேண்டாமென்றே. இன்னொரு உதாரணத்தையும் இங்கு கூறமுடியும், சமீபத்திய விவாதங்களில் போர்னோ பெண்களை கூட முற்போக்கு பேசும் சிலர் இதே போல் ஒரேயடியாக பழிசுமத்தினர்.

      சேற்றுக்குள் விழுத்துவது முதலாளித்துவமும் அதன் அடிப்பொடிகளும். சேற்றுக்குள் விழுந்தவரை தூக்கி கழுவி ஏற்று முற்செல்வது நம் கடமை.

  8. குமார் நண்பா அறம் விமர்சனம் நேர் திசை எனில் வினவின் மற்ற படங்களின் விமர்சனம் பற்றி நீங்கள் முரண் படும் விஷயம் என்ன?

  9. மக்களிடம் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் எல்லா திரைப் படங்களைப் பற்றியும் வினவு இதே பாணியிலான விமர்சனங்களை வெளியிடலாம்.திரைப்பட ரசிகர்களிடத்தில் புதிய கண்ணோட்டத்தைஉண்டாகும்.

Leave a Reply to வசிஷ்டன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க