privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்தலையங்கம்ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம் !

ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம் !

-

ர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. இரண்டு வேட்பாளர்களைக் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. ஒருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன். மற்றொருவர், அ.தி.மு.க. என்ற பெயரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் பி டீமைச் சேர்ந்த மதுசூதனன்.

மதுசூதனன் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற வேட்பாளர் மட்டுமல்ல, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆசிபெற்ற வேட்பாளரும்கூட. இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கிய கையோடு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு நாளும் குறித்த அதனின் வேகத்தைக் கொண்டே இதனை யாரும் புரிந்துகொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் அ.தி.மு.க.வின் பூத் ஏஜெண்டுகளைப் போலத்தான் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு படிவங்களில், அ.தி.மு.க.வின் பொதுச் செயலர் ஜெயா வைத்ததாகக் கூறப்படும் கைநாட்டை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலிருந்து வந்த கட்டளைப்படி, எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டோம் என ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி.

ஏப்ரலில் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ததற்கு பணப் பட்டுவாடாவா காரணம்? அதுவொரு சாக்கு, அவ்வளவே. அத்தேர்தலில் பா.ஜ.க.வின் ஆசிபெற்ற மிக்சர் பன்னீர் அணி வெற்றிபெற முடியாது என்று தெரிந்தவுடன், அத்தேர்தலை ரத்து செய்வதற்கு டெல்லி சுல்தான் மோடிக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அதையொட்டி சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணப்பட்டுவாடா விவகாரத்தைக் காரணமாக வைத்து அத்தேர்தலை ரத்து செய்தது, தேர்தல் ஆணையம். அந்த விவகாரத்தில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தால் குற்றஞ்சுமத்தப்பட்ட விஜய பாஸ்கர், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் இப்பொழுது மோடியின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து, அவரது அனுக்கிரஹத்தைப் பெற்றுவிட்டதால், அந்த வழக்கைத் தேர்தல் ஆணையமும் அமலாக்கத் துறையும் மறந்தேவிட்டன.

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்னும் 5,000 போலி வாக்காளர்களை நீக்காமல் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது தி.மு.க. தொடுத்துள்ள வழக்கும், நடிகர் விஷாலின் வேட்பு மனுவைப் பின்னிரவு நேரத்தில் தள்ளுபடி செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் சதியும் அ.தி.மு.க. மதுசூதனனை ஜெயிக்க வைக்க மத்திய பா.ஜ.க. அரசும் தேர்தல் ஆணையமும் எந்த எல்லை வரையும் செல்லக்கூடும் என்பதை எடுத்துக்காட்டிவிட்டன.

இரட்டை இலைச் சின்னத்தை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கி தீர்ப்பளித்துள்ள தேர்தல் ஆணையம், அத்தீர்ப்பில் அந்த அணிக்கு 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. தமிழகத்தைச் சட்டவிரோதமான முறையில் ஒரு சிறுபான்மை அரசு ஆண்டு வருவதை ஒப்புக்கொண்டுள்ள வாக்குமூலம் இது. இந்தச் சட்டவிரோத ஆட்சியை எப்படியாவது காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்கு துக்ளக் குருமூர்த்தியின் தலைமையிலான தமிழகப் பார்ப்பனக் கும்பலும், மோடி அரசும் பலவிதமான முறைகேடுகளையும் அதிகார அத்துமீறல்களையும் நடத்தி வருகிறார்கள்.

தமிழகச் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட அடாவடித்தனமாக மறுத்துவருகிறார், கவர்னர். இதோடு தொடர்புடைய மூன்று வழக்குகளை விசாரித்துவரும் சென்னை உயர்நீதி மன்றம் வாய்தாவுக்கு மேல் வாய்தா கொடுத்தே எடப்பாடி அரசைக் காப்பாற்றி வருகிறது. தினகரன் பக்கமுள்ள எம்.எல்.ஏ.க்களை எடப்பாடி பக்கம் இழுத்துவிடும் நோக்கத்தோடு, சசிகலா குடும்பத்தினர் மீது ரெய்டு நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஏவப்படுகின்றன.

ஜெயாவின் பினாமிதான் சசி குடும்பம் என்ற உண்மை சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் வழியே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தியோ, “மன்னார்குடியின் சொத்துக்குவிப்புக்கு ஜெயலலிதா உடந்தை என்கிற அடிப்படையில்தான்  நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்குத் தண்டனை கொடுத்தார். ஜெயலலிதா தன் பெயரில் தனக்குச் சொத்து சேர்த்தார் என்பதற்காக அல்ல” எனக் கூசாமல் புளுகி வருகிறார். (துக்ளக், 22.11.2017) இந்தப் புரட்டின் மூலம் கொள்ளைக்காரி ஜெயாவை அப்பாவியாகக் காட்டிவிட முயலுகிறார், அவர்.

இது மட்டுமா, ஜெயாவின் கலெக்சன் ஏஜெண்டுகளாகக் காலந்தள்ளிய பன்னீரையும், எடப்பாடியையும் உத்தமர்களாகக் காட்டும் நோக்கில், “எடப்பாடியும் ஓ.பி.எஸ்-ம் முயன்று அ.தி.மு.க. அரசில் நடக்கும் ஊழலைப் பெருமளவு குறைத்தால்தான் சின்னத்தால் அ.தி.மு.க.வுக்குப் பலன் கிடைக்கும்” என்றும்  உபதேசம் செய்கிறார். (துக்ளக், 06.12.2017)

ஜெயா உயிரோடு இருந்த காலத்திலேயே அ.தி.மு.க.வின் ஐவரணி என அழைக்கப்பட்ட பன்னீர், எடப்பாடி உள்ளிட்ட கும்பல்  மட்டும் ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்திருக்கக்கூடும் என அப்பொழுதே செய்திகள் வெளியாகின. ஐவரணியில் ஒருவராக இருந்த வைத்திலிங்கம்,  பன்னீரின் கூட்டாளி சேகர் ரெட்டி, சேகர் ரெட்டியின் கூட்டாளி முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகனராவ், ஐவரணியின் பினாமியாகச் செயல்பட்ட கரூர் அன்புநாதன் உள்ளிட்டுப் பலரின் வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.

இவை அனைத்திற்கும் மேலாக, எடப்பாடியின் அரசே, தலைக்கு இத்துணை கோடி என கூவத்தூர் ரிசார்டில் பேரம் பேசப்பட்டு உருவாக்கப்பட்ட அரசுதான். முதலமைச்சரான எடப்பாடி மீதே பணப் பட்டுவாடா குற்றத்தைச் சுமத்தியிருக்கிறது, வருமான வரித்துறை. இதுதான் கடைசி ஆட்டம் என்பதால் முடிந்தவரை கொள்ளையிடுவது என்பதைக் கொள்கையாகவே கொண்டு செயல்படுகிறது, இந்த அரசு. புதிதாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, எடப்பாடி அரசு எந்த அளவிற்குத் தமிழகத்தை மொட்டையடிக்கும் வெறியோடு செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

திட்டத்தில் ஊழல் என்பது போய் ஊழலுக்காகவே திட்டம் என்பதை நிலைநாட்டியவர் ஜெயா. அம்மா வழியில் செல்வதாகக் கூறிவரும் எடப்பாடி அரசு அதில் புதிய வரலாறையே படைத்துவருகிறது. 1,000 கோடி ரூபாய் தார் ஊழல், 400 கோடி ரூபாய் குடிமராமத்து ஊழல், 39 கோடி ரூபாய் குட்கா ஊழல், 350 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சி சாலை மேம்பாட்டு ஊழல், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல், சத்துணவுப் பணியாளர், சிறப்பு மருத்துவர்கள் நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள், நெடுஞ்சாலை துறையில் அயல்பணி ஒப்படைப்பில் நடந்துள்ள ஊழல் எனத் தினந்தோறும் ஒரு ஊழல் அம்பலமாகி, வெட்க மானம் ஏதுமற்ற ஒரு பிடுங்கித்தின்னி கும்பலிடம்  தமிழகம் சிக்கியிருப்பது தெரிய வருகிறது.

எடப்பாடி-பன்னீர் கொள்ளையர்களிடம் தமிழகத்தை அவுட் சோர்ஸ் செய்திருக்கிறது, மத்திய பா.ஜ.க. அரசு. சசிகலா இல்லாத அ.தி.மு.க.தான் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் நல்லது என இந்த அசிங்கத்திற்குக் கூச்சமேயின்றிப் பட்டுக்குஞ்சம் கட்டுகிறார், குருமூர்த்தி.

எம்.ஜி.ஆர்., அவருக்குப் பின் ஜெயாவின் வழியாகத் திராவிட அரசியலை வீழ்த்தித் தமிழகத்தை மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயன்றுவந்த தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல், தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை அருமையானதொரு வாய்ப்பாகக் கருதுகிறது. எடப்பாடி-பன்னீர் கும்பலைத் தமது கைக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சியை நடத்துவது மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் முதுகில் சவாரி செய்வதன் மூலம் பா.ஜ.க.விற்குத் தமிழகத்தில் ஒரு அடித்தளத்தை உருவாக்கிக் கொள்வது என்ற இரட்டை நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள முயன்று வருகிறது, அக்கும்பல்.

இந்தக் கூட்டணி தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். இந்தக் கும்பலை ஆர்.கே. நகர் தொகுதியிலிருந்து மட்டுமல்ல, தமிழகத்திலிருந்தே விரட்டியடிப்பதன் மூலம்தான் தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் அட்டூழியங்களுக்கும் அராஜகங்களுக்கும் முடிவு கட்ட முடியும்.

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க