privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாநீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் !

நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் !

-

காஞ்சு போன நதிகளெல்லாம் வற்றாத கங்கையைப் பார்த்து  ஆறுதலடையும். அந்த கங்கையே காஞ்சுபோனா.. என்றொரு  வசனம் தங்கப்பதக்கம் திரைப்பாடலின் நடுவே வரும்.  உச்சநீதி மன்றத்தில் நவம்பர் 10 -ஆம் தேதியன்று தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா அரங்கேற்றிய காட்சிகளைக் கண்டு பல  முன்னாள் நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் தெரிவித்த  கருத்துகள் இந்தப் பாடல் வரிகளுக்கு இணையானவை.

லல்லு பிரசாத் யாதவ் மீதோ ஆ.ராசா மீதோ ஊழல் வழக்கு  என்றால், அதனை விசாரித்து உச்சநீதி மன்றம் தண்டிக்கலாம், அல்லது விடுவிக்கலாம். உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி மீதே ஊழல் குற்றச்சாட்டு என்றால், அதனை யாரிடம் முறையிடுவது? அந்த வழக்கை யார் விசாரித்துத் தீர்ப்புச் சொல்வது?

***

ழல் குற்றச்சாட்டுக்குரிய வழக்கு, உ.பி. மாநிலத்தில்  மருத்துவக் கல்லூரியொன்றுக்கு அனுமதி வழங்குவது  தொடர்பானது. உ.பி. -யைச் சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளை  என்ற அமைப்பு புதியதொரு மருத்துவக் கல்லூரி  தொடங்குவதற்கு 2015 -இல் மருத்துவக் கவுன்சிலிடம்  விண்ணப்பித்தது. கல்லூரியைப் பார்வையிட்ட பின், அது  கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். கல்லூரியைப் போன்ற ஒரு  டுபாக்கூர் கல்லூரி என்பதால், அனுமதி மறுத்தது மருத்துவக்  கவுன்சில். உடனே மேற்படி பிரசாத் அறக்கட்டளை லோதா  கமிட்டியிடம் முறையிட்டது. அடுத்த ஆண்டுக்குள் எல்லா குறைபாடுகளையும் சரி செய்வதாக உத்திரவாதமளித்து அனுமதியும் பெற்றது.

அடுத்த ஆண்டில் கல்லூரியைச் சோதனை செய்த மருத்துவக்  கவுன்சில், மருத்துவமனையில் நோயாளி இல்லை,  கல்லூரியிலும் மாணவர்கள் இல்லை என்பன உள்ளிட்ட பிரச்சினைகளைப் பட்டியலிட்டு, அடுத்த இரண்டாண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்குத் தடை விதித்தது. இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது பிரசாத் அறக்கட்டளை.

தீபக் மிஸ்ரா, கன்வில்கார், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய  அமர்வு அறக்கட்டளைக்கு அநீதி எதுவும் இழைக்கப்படாமல் தவிர்க்கும்பொருட்டு இன்னொருமுறை முடிவைப் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. அறக்கட்டளை நிர்வாகத்திடம் இன்னொரு விசாரணை நடத்தி, இன்னொரு முறை பரிசீலித்த சுகாதார அமைச்சகம், மீண்டும் பழைய முடிவையே உச்சநீதி மன்றத்தில் வலியுறுத்தியது.  அப்பவும் தீபக் மிஸ்ரா விடுவதாக இல்லை. கல்லூரியை  மீண்டும் ஒருமுறை நேரில் சென்று சோதனையிடுமாறு செப். 18 அன்று மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. தகுதியற்றவை  என்று அனுமதி மறுக்கப்பட்ட மேலும் 6 மருத்துவக்  கல்லூரிகளுக்குச் சாதகமாக ஆகஸ்டு மாத இறுதியில் தீர்ப்பு  வழங்கியிருக்கிறது இந்த அமர்வு.

பிரசாத் அறக்கட்டளைக்கு ஆதரவாக செப். 18 அன்று தீபக் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்த மறுநாளே, சி.பி.ஐ. ஒரு முதல்  தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஓய்வு பெற்ற ஒரிசா  உயர்நீதி மன்ற நீதிபதி குத்தூஸி உள்ளிடடோர் டில்லியைச் சேர்ந்த  விஸ்வநாத் அகர்வாலா என்ற நீதிமன்றத் தரகன் மூலம் பிரசாத்  கல்வி அறக்கட்டளைக்குச் சாதகமான தீர்ப்பை உச்சநீதி மன்றத்தில் வாங்குவதற்கு முயன்றனர் என்பது குற்றச்சாட்டு.  குத்தூஸி, ஹவாலா புரோக்கர்கள் மற்றும் அறக்கட்டளை  நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில்  நீதிபதிகளின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், இவர்களுடன்  பெயர் தெரியாத பொது ஊழியர்கள் சிலர் என்று கூறுகிறது சி.பி.ஐ. -இன் முதல் தகவல் அறிக்கை.

இதுவரை இந்த வழக்கில் நடந்துள்ள விசயங்களைப் படித்த  வாசகர்கள் யார் அந்தப் பொது ஊழியர்களாக இருக்கக்கூடும்  என்பதை எளிதில் ஊகிக்க முடியும். ஆனால், தலைமை  நீதிபதிக்கோ, மற்ற நீதிபதிகளுக்கோ எதிராக அசைக்க முடியாத  ஆதாரமே இருந்தால்கூட, அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு  செய்ய சி.பி.ஐ. -க்கு மட்டுமின்றி யாருக்கும் அதிகாரம் கிடையாது  என்பதுதான் தற்போது சட்டத்தின் நிலை. தலைமை நீதிபதி மீது  ஊழல் குற்றச்சாட்டு வந்துவிட்டபோது அதற்குச் சட்ட  வழிமுறைப்படி உள்ள தீர்வு என்ன என்பதுதான் அடுத்து எழும் கேள்வி.

சி.ஜே.ஏ.ஆர். Campaign for judicial accountability and reform என்ற  அமைப்பின் மூலம் நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உச்சநீதி மன்ற  வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், காமினி ஜெய்ஸ்வால் ஆகிய  இருவரும் நீதிபதி சிக்ரி மற்றும் நீதிபதி செல்லமேஸ்வர்  ஆகியோரது  தலைமையிலான அமர்வுகளில் தனித்தனியே இரு மனுக்களைத்  தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் சாரம் இதுதான்.

பிரச்சினைக்குரிய இவ்வழக்கில் நீதிபதிகள் மீது குற்றம்  இருக்காது என்றே நம்புகிறோம். எவ்வாறாயினும், இந்த  வழக்கை சி.பி.ஐ. தொடரந்து விசாரிப்பதன் மூலம் ஒட்டு மொத்த  நீதித்துறையையும் அச்சுறுத்துவதற்கு இதனை அரசு  பயன்படுத்தும். எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. -இடமிருந்து விடுவித்து, ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க  வேண்டும். அந்தக் குழுவை, தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று  நீதிபதிகளைத் தவிர்த்து, எஞ்சியுள்ள நீதிபதிகளில் மூத்தவர்களான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு  கண்காணிக்க வேண்டும்.

ஒரு வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க  வேண்டும் என்று முடிவு செய்யும் நிர்வாக அதிகாரம் தலைமை  நீதிபதிக்கு உரியது என்ற போதிலும், இந்த பிரச்சனையில்  தலைமை நீதிபதியே குற்றம் சாட்டப்பட்டவராக இருப்பதால், தன் வழக்கை விசாரிக்கின்ற நீதிபதிகள் யார் என்பதை அவர்  தீர்மானிப்பதோ, அந்த அமர்வில் ஒரு நீதிபதியாக அவரும்  இருப்பதோ தவறானது. யாரொருவரும் தனக்கு எதிரான  வழக்கில் தானே நீதிபதியாக இருக்க முடியாது என்பது மிகவும்  அடிப்படையான இயற்கை நீதிக் கோட்பாடு. எனவே, வழக்கை 5  நீதிபதிகள் அமர்வுக்கு விடவேண்டும் என்று கோரினர்.

இது  மிகவும் கவலைக்குரிய விசயம்தான் என்று கூறிய நீதிபதி செல்லமேஸ்வர், தீபக் மிஸ்ராவையும் உள்ளிட்ட 5 மூத்த  நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நவ, 13 அன்று இது பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும், சி.பி.ஐ. தன் வசமுள்ள ஆவணங்கள் அனைத்தையும் இந்த அமர்விடம்  ஒப்படைக்க வேண்டும் என்றும் நவ, 9 ஆம் தேதியன்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை முடக்கும் நோக்கத்துடன் மேற்படி வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. அதில் இரண்டு நீதிபதிகள் விலகிக் கொள்ளவே, மீதமுள்ள 5 நீதிபதிகள் முன் விசாரணை தொடங்கியது. இந்த 5 பேரில் 3 பேர் தனியார்  கல்லூரிக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தவர்கள். பணியில் உள்ள  நீதிபதிகளில் மூத்தவர்களைக் கொண்டு இந்த அமர்வு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வேறு இரண்டு நீதிபதிகள் ஒரு  தீர்ப்பினை வழங்கியிருக்கும்போது, அதனை மீளாய்வுக்கு உட்படுத்துவது என்றால், அப்படி உட்படுத்தும் அமர்வில் அந்த இரு நீதிபதிகளும் இருக்க வேண்டும் என்பது விதி. அதுவும் மீறப்பட்டது.

விசாரணை தொடங்கியது. மனுதாரராகிய பிரசாந்த் பூஷணைப் பேசவிடாமல், செட்டப் செய்து அழைத்து வரப்பட்ட ஒரு  வழக்கறிஞர் கூட்டம் ஊளையிட்டது. நீதிமன்றம் அவமதிக்கப்பட்டு விட்டதாகவும் பிரசாந்த் பூஷணின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பேசினர்.

முதல் தகவல் அறிக்கை உங்களைக் குறிப்பிடுவதால், நீங்கள்  இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று தீபக் மிஸ்ராவிடம் கூறினார் பிரசாந்த் பூஷண். என் பெயர் எப்.ஐ.ஆரில் இல்லை. உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பேன் என்றார் தீபக் மிஸ்ரா. ஒரு நீதிபதி மீது யாரும் எப்.ஐ.ஆர். போட  முடியாது எனும்போது, அப்படி எப்.ஐ.ஆர். போட்டிருந்தால், அதுவே நீதிமன்ற அவமதிப்பு குற்றம் என்றார் இன்னொரு  நீதிபதி அருண் மிஸ்ரா.

அப்படியானால் என் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை  எடுங்கள் என்றார் பிரசாந்த் பூஷண். அதற்குரிய அருகதைகூட  உங்களுக்குக் கிடையாது என்றார் தீபக் மிஸ்ரா. கூட்டம்  ஊளையிட்டது. மனுதாரராகிய என்னைப் பேசவிடாமலேயே வழக்கை நடத்துகிறீர்கள். உங்கள் விருப்பம் போலத் தீர்ப்பு  எழுதிக்கொள்ளுங்கள். நான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுகிறேன் என்று கூறி, வெளியேறினார் பிரசாந்த்  பூஷண்.

எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பதைத் தலைமை நீதிபதியைத் தவிர வேறு யாரும் முடிவு செய்ய முடியாது என்று கூறி, இவ்வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட  வேறு ஒரு அமர்வை நியமித்தார் தலைமை நீதிபதி. அத்தோடு நிற்காமல், சி.பி.ஐ. விசாரித்துவரும் வழக்கில் தங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று விசாரணை தொடங்கு முன்னரே அதன் மீது தீர்ப்பும் வழங்கி விட்டார்.

தீபக் மிஸ்ராவால் நியமிக்கப்பட்ட அந்த 3 நீதிபதிகள் அமர்வு, சி.ஜே.ஏ.ஆர். அமைப்புக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம்  விதித்திருக்கிறது. நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலே தண்டிப்போம் என்று மிரட்டுவதற்காகவே இந்த  உத்தரவு என்று இதனை விமரிசித்திருக்கிறார் பிரசாந்த் பூஷண்.

தீபக் மிஸ்ரா மீதான ஊழல் வழக்கு என்பது புதியதல்ல. அவர் மீது நிலமோசடிக் குற்றச்சாட்டு இருக்கிறது. சென்ற ஆண்டு  தற்கொலை செய்து கொண்ட அருணாசல பிரதேச முதல்வர்  கலிகோ புல், அன்றைய தலைமை நீதிபதி கேஹர், தீபக் மிஸ்ரா ஆகியோர் 49 கோடி ரூபாய் கொடுத்தால், சாதகமாகத் தீர்ப்பு  வழங்குவதாகப் பேரம் பேசினர் என்று தனது தற்கொலைக்  கடிதத்திலேயே எழுதியிருக்கிறார். அதற்கு முந்தைய தலைமை நீதிபதி தத்து மீது ஜெ. வுக்குப் பிணை வழங்கிய ஊழல், கர்நாடகத்தில் அவரது முறைகேடான சொத்துகள் குறித்து  கட்ஜு எழுப்பிய குற்றச்சாட்டுகள் ஆகியவை உள்ளன.  கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

நீதிபதிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க  வேண்டும் என்று கேட்ட குற்றத்துக்கே 25 லட்சம் அபராதம்  விதிக்கப்படும்போது, அமித் ஷா வழக்கில் விசாரணை நடத்திய லோயாவுக்கு மரணம் விதிக்கப்பட்டதில் வியப்பில்லை.  மோடிக்கு எதிராகத் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதிக்கு  மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலும் ஆச்சரியமில்லை.

இதுதான் நீதித்துறையின் யோக்கியதை. இந்த நீதிமன்றம் சோரபுதின் வழக்கு விசாரணை விவரத்தையும் ஆதித்யநாத்  வழக்கு விவரத்தையும் வெளியிடக்கூடாது என்று  ஊடகங்களுக்குத் தடை விதிப்பதில் வியப்பிருக்கிறதா? அல்லது  செவிலியர் போராட்டம், போக்குவரத்து ஊழியர் போராட்டம்,  அரசு ஊழியர் போராட்டம் உள்ளிட்ட தொழிற்சங்க  போராட்டங்களுக்குத் தடைவிதிப்பதிலும், மிரட்டுவதிலும்  வியப்பிருக்கிறதா? வாயிற்புறம் வழியே நுழைந்து மக்களை  ஒடுக்குகிறது மோடி அரசு. நீதிமன்றத்துக்கு கொல்லைப்புற வழி.

சமீபத்தில் நடைபெற்ற தேசிய சட்ட தினக் கூட்டத்தில் பேசிய  சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அணுகுண்டுப் பொத்தானை  அழுத்தும் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் பிரதமருக்கு  நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இருக்கக்கூடாதா என்று  கேள்வி எழுப்பினார்.

நீதிபதிகளை அணுகுண்டுக்கு ஒப்பிட்டுப் பேசிய நகைச்சுவையை விஞ்சியது தீபக் மிஸ்ராவின் பதிலில் பொதிந்திருந்த  நகைச்சுவை. குடிமக்களின் அடிப்படை உரிமையைப்  பாதுகாப்பதற்காகத்தான் நீதித்துறை சுதந்திரத்தை வலியுறுத்துவதாக அடக்கமாகப் பதிலளித்தார் மிஸ்ரா. பிரசாத்  அறக்கட்டளைக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய குடிமக்களின் சுதந்திரம் குறித்து அவர் சொல்லியிருக்கக்கூடும்.

-மருதையன்

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com